Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 மே 05 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
தேசிய இணக்க இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில், ராஜபக்ஷர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க மாட்டோம் என்று, பௌத்த மகாசங்கம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.
இலங்கையில் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் எதிராக, பௌத்த மகாசங்கம் இவ்வாறான அறிவிப்புகளை விடுப்பது புதிதில்லை. ஆனால், அந்த அறிவிப்புகள் அதிக தருணங்களில் மறைமுகமானவையாக இருந்திருக்கின்றன. இம்முறை விடுக்கப்பட்டிருக்கின்ற அறிவிப்பு, வெளிப்படையானதாகவும் ஆணை பிறப்பிக்கும் வகையிலானதாகவும் இருக்கின்றது.
இதை ராஜபக்ஷர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏன், எதிர்க்கட்சிகள் கூட எதிர்பார்க்கவில்லை. தேசிய இணக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கத் தயாரில்லை என்றால், தம்மிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக எதிர்க்கட்சிகளும் கூட வரக்கூடாது என்பதுதான் பௌத்த மகாசங்கத்தின் எச்சரிக்கையாகும்.
இலங்கையில் ஆட்சி அதிகாரம் குறித்து கனவு காணும் எந்தத் தரப்பும், பௌத்த மகாசங்கத்தை நிராகரித்துக் கொண்டு, அரசியல் நடத்தியதில்லை. அப்படியான நிலையில், மகாசங்கத்தின் அறிவிப்பு மிக முக்கியமானது.
ராஜபக்ஷர்கள் 2019இல் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியதில், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை பெரும் பங்கு வகித்தது. கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்ற போதுகூட, தனிச்சிங்கள வாங்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி தான்தான் என, அகங்காரத்தோடு அறிவிக்கவும் செய்தார்.
கோட்டாவின் வெற்றிக்கான பௌத்த மகாசங்கத்தின் ஆதரவு என்பது அதிகமானது. ராஜபக்ஷர்களின் மீள்எழுச்சி, தென் இலங்கை கிராமங்களின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து கட்டியெழுப்பப்பட்டது. விகாரைகளில் இடம்பெறும் ஒவ்வொரு போதனையின் போதும், துட்டகைமுனு போன்ற அரசர்களின் தேவையை நாடு உணர்கின்றது. அதற்கு ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதுதான் ஒரேவழி என்கிற வகையிலான விடயங்கள் பிரதானமாக இருந்திருக்கின்றன.
ஆனால், ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்குள்ளேயே, அவர்களுக்காக கடந்த காலங்களில் யார் யாரெல்லாம் உழைத்தார்களோ அவர்கள் எல்லாமும் எதிரான பக்கத்தில் நிற்கும்படி ஆகிவிட்டது. குறிப்பாக, ராஜபக்ஷர்களுக்கு 69 இலட்சம் வாக்குகளை வாரி வழங்கியவர்களும் அவர்களைத் தயார்ப்படுத்திய பௌத்த மகாசங்கமும், ராஜபக்ஷர்களுக்கு எதிரான பக்கத்தில் நிற்கின்றார்கள்.
பௌத்த மகாசங்கமோ அதன் துணைக் கூறுகளோ, ராஜபக்ஷர்களுக்கு எதிரான தற்போதைய முடிவுக்கு, ஒரே நாளில் வந்துவிடவில்லை. அதுபோல, விரும்பியும் வந்துவிடவில்லை. அவர்களை, அந்த முடிவை எடுக்கும் நிலையை, தென் இலங்கை மக்களின் ‘ராஜபக்ஷர்களின் எதிர்ப்பு’ எடுக்க வைத்திருக்கின்றது.
எப்போதுமே மக்களிடம் ஆளுமை செலுத்தும் தரப்புகள், தங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்காக, யாரை வேண்டுமானாலும் தலையில் வைத்து கொண்டாடவும், தலையைச் சுற்றி தூக்கி எறியவும் தயாராகவே இருக்கும். தற்போது, மகாசங்கம் செயற்பட்டிருப்பது அவ்வாறான ஒன்றே! அதன்போக்கில் நோக்கினால், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோருவதும் அவ்வாறான கட்டமே!
‘ராஜபக்ஷர்களை விரட்டியடிப்போம்’ என்பதுதான் தற்போதையை போராட்டங்களின் கோசம். அதில் பிரதானமானது ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டியம்போம்’ என்பது.
ஆனால், பௌத்த மகாசங்கம் உள்ளிட்ட பல தரப்புகளும், கோட்டாவை விட்டுவிட்டு, ஏனையை ராஜபக்ஷர்களை சிறிது காலத்துக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டு ஒதுங்கியிருக்கக் கோரும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றன. இதன் மூலம், மீண்டும் ராஜபக்ஷர்கள் போன்ற ஒரு யுகத்தைத் தோற்றுவிக்கலாம் என்பது அந்தத் தரப்புகளின் எண்ணம். அதன்மூலம் தொடர்ச்சியாக, பௌத்த அடிப்படைவாத சிந்தனையுள்ள ஆட்சியாளர்களை வைத்துக் கொள்ள முடியும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
மஹிந்தவை பதவி விலகக் கோரும் மகாசங்கம் உள்ளிட்ட தரப்புகள், கோட்டா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில், சஜித் பிரேமதாஸவை அங்கம் வகிக்கக் கோரும் அழுத்தங்களை வழங்குகின்றன. இதன்மூலம், ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை, பிரதான எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மீதும் திசை திருப்பிவிடும் நோக்கமும் இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏழாமல் இல்லை.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டு, இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு, தனக்கு எச்சரிக்கை விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக, சஜித் அண்மையில் கூறியிருந்தார். அவரின் இந்த வெளிப்படுத்தலை, பலரும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்த்தனர்.
ஆட்சி அமைப்பதற்காக ஆணை கோரி, மக்களிடம் செல்லும் ஒருவர், தொலைபேசி வழியாக விடுக்கப்படும் எச்சரிக்கைக்குப் பயம் கொள்வாரா? இவ்வாறான ஒருவர்தான், நாளை எங்களை ஆளப்போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்தன.
ஆனால், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைகளை, ஆட்சிக்கு வர விரும்பும் எந்த அரசியல்வாதியும் உடனடியாக வெளிப்படுத்தமாட்டார்கள். அதனை புறந்தள்ளவே நினைப்பார்கள். ஆனால், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைகளை வெளிப்படுத்தும் சூழல் அமைகின்றது என்றால், அது முக்கியமான கட்டமாகவே இருக்கும். அவ்வாறான கட்டத்தில்தான், சஜித்தை தொலைபேசியில் மிரட்டியது யார் என்கிற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றது.
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சியும் கூட தங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வரக்கூடாது என்கிற பெளத்த மகாசங்கத்தின் மறைமுக அறிவிப்புக்கும், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.
ராஜபக்ஷர்களை விரட்டியடிக்கும் போராட்டங்கள் எழுச்சிபெற ஆரம்பித்ததும், அதனோடு சேர்த்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்கிற விடயமும் மீண்டும் மேலெழுந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலம், அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் மீண்டும் சேர்ப்பிக்கலாம் என்பது தொடர்ச்சியான வாதம்.
அப்படியான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சஜித் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்மூலம், எதிர்காலத்தில் ஜனாதிபதி என்கிற ஒருவருக்கு கட்டுப்படாத பாராளுமன்றத்துக்குக் கட்டுப்படும் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடு.
ஆனால், அவ்வாறான நிலை உருவானால், தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் வகிபாகம், ஆட்சி அதிகாரத்துக்குள் அதிகரித்துவிடும் என்பது, தென் இலங்கை இன அடிப்படைவாதிகளுக்கு பெரும் பயம். அதனால்தான், அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பேண நினைக்கிறார்கள்.
அதன் போக்கில், நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படாத வகையில், தற்போதுள்ள மக்களின் எழுச்சியை நலிவடையச் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு, கோட்டா தவிர்ந்த ஏனையை ராஜபக்ஷர்களை ஆட்சியிலிருந்து சிறிது காலம் விலகியிருக்குமாறு கோருகிறார்கள்.
அதுதான், கோட்டாவை விடுத்து மஹிந்தவை பதவி விலகுமாறு மகாசங்கம் கோரிய பின்னணியில் இருக்கும் சூட்சுமம். ஆனால், தான் பதவி விலகினால் தன்னுடைய மகன்களின் எதிர்கால ஆட்சி அதிகாரக்கனவு பாழாகிவிடும் என்பதாலேயே, மஹிந்த பதவி விலகுவதை எப்படியாவது தவிர்க்க நினைக்கிறார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகலாம். அப்படியான நிலையில், இடைக்கால அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சிகளை கொண்டு வருவது என்பது, ராஜபக்ஷர்களின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றிவிடும் திட்டமாகும். அதன்மூலம், ராஜபக்ஷர்களை எதிர்காலத்துக்காக பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது, தென் இலங்கையில் இனவாத வாளைச் சுற்றும் தரப்புகளின் எண்ணம்.
அதைப் புரிந்து கொண்டும், தென் இலங்கையில் புதிய இடைக்கால அரசாங்கத்துக்கான காட்சிக் கட்டங்களை பார்க்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024