Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் சமூக அரசியலில்
பல்கலைக்கழகமும் புத்திஜீவிகளும் செய்யாத பணி
இலங்கை அரசியலில் கல்விச் சமூகத்தின் செல்வாக்கு குறிப்பாக பல்கலைக்கழகங்களின் வகிபாகம் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. இளவயது இளைஞர்களை மொத்தமாக ஒரே தளத்தில் அணுகக் கூடிய இடமாகவும் ஒன்றுதிரட்டிக் கையாளக் கூடிய தளமாகவும் பல்கலைக்கழகங்கள் இருப்பது அரசியலைப் பொறுத்தமட்டில் முக்கியமான சாதக நிலையாகும்.
இந்த அடிப்படையில், நாட்டில் பெரும்பாலான ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் தங்களுக்கு வேண்டிய நகர்வுகளைச் செய்வதற்குப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.
அதற்கு நாமே நேரடியாகவே கண்ட உதாரணமாக, இன்று என்.பி.பியாக
தன்னை முன்னிறுத்தியுள்ள மக்கள்
விடுதலை முன்னணியின் மாணவ வலையமைப்பை கொள்ளலாம்.
தெற்கில் இவ்வாறு சிங்கள இளைஞர்கள் தங்களது தேவைகளுக்காக அரசியல் தரப்பினரால் கையாளப்பட்டது மட்டுமன்றி, அரசியல் அரங்கில் மறைமுகமாக ஒரு அழுத்தக் குழுவாகவும் இயங்கினர் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
பிற்காலத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் உள்ளடங்கலாக புத்திஜீவிகளும் இதில் ஒரு வகிபாகத்தை எடுத்தனர் எனலாம். தென்னிலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் பேராதனை, கொழும்பு, களனி போன்ற பல்கலைக்கழகங்கள் எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்தது என்பதைச் சரித்திரக் குறிப்புக்களைப் படிப்பதன் மூலம், குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோன்று, வடக்கை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்திருக்கின்றது. இன்று வரை செய்து கொண்டும் வருகின்றது. தமிழர் விடுதலை உணர்வுக்கு வலு சேர்ப்பதிலும், தேவையான போது தமிழ் மக்களுக்கான அரசியலை வழிப்படுத்துவதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் பணி முக்கியமானது.
பின்னாளில் இந்த ஒழுங்கில் கிழக்குப் பல்கலைக்கழகமும் கொஞ்சம் இணைந்து கொண்டது என்று கூறலாம். இதற்கு சமாந்திரமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என் சமயவாதிகளும் கூட அச் சமூகத்தின் அபிலாஷைகளை வலியுறுத்துவதில் ஒரு அழுத்தக் குழுவாகவும், அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் வெளித்தரப்பாகவும் இன்னும் இருக்கின்றனர்.
யுத்த நிலைமையைப் பபன்படுத்தி கணிசமான தமிழர்கள் மேற்கத்தேய நாடுகளில் தஞ்சம் புகுந்து, பிறகு நிறைய உழைத்துக் கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. அதேபோன்று
வடக்கு, கிழக்கு தமிழர்களை வைத்து இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கும் டயஸ்போராக்களும் உள்ளனர். அது வேறு விடயம்.
ஆனால், இந்த புலம்பெயர் சமூகம் கூட தமிழர்கள் விடயத்தில் ஒரு வெளிப்புற அழுத்தக் குழுவாக இப்போது இருக்கின்றது. அதைவிட முக்கியமாக உள்நாட்டில் மேற்குறிப்பிட்ட யாழ்ப்பாண, வந்தாறுமூலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அதிகளவான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள்.
சில தருணங்களில் விடுதலைப் புலிகளை, தமிழ் ஆயுதக் குழுக்களை ஒழுங்குபடுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிப் போயிருந்தாலும், சிங்கள அரசியலில் பல்கலைக்கழக மாணவர்கள், பௌத்த பீடங்கள் எடுத்ததற்குச் சமமான வகிபாகத்தை தமிழர் அரசியலில் புத்திஜீவிகளும் பல்கலைக்கழகங்களும் எடுத்தன என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இந்த நாட்டில் மிக நீண்டகாலமாகப் பட்டவர்த்தனமாக வஞ்சிக்கப்பட்டு வருகின்ற மலையகத்தில் வாழும் மூவின மக்கள் தொடர்பிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு விமோசனம் கிடைப்பதற்கு இப்படியான ஒரு அழுத்தக் குழுவோ கனதியான பல்கலைக்கழக மாணவர்கள்pன் அல்லது படித்தவர்களின் கட்டமைப்போ இல்லை என்பது ஒரு வரலாற்றுத் துயரன்றி வேறில்லை.
இதேநிலைமையில்தான் இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால், நாம் இப்படியான ஒரு கையறுநிலையில் இருக்கின்றோம் என்பதைக் கூட முஸ்லிம் சமூகத்தில் உள்ள கல்விக் கூடங்களும், புத்திஜீவிகளும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களும் தெளிவுற விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
இது விடயத்தில் பல முஸ்லிம் தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். அதிலும் குறிப்பாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், அதன் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் தூரதிர்ஷ்டியான கனவுகளை உயிர்ப்பிப்பதிலும், முஸ்லிம்களுக்கான அரசியலைச் சீரமைப்பதிலும் ஒரு சரியான பங்களிப்பை வழங்கவில்லை.
அதேபோன்று, முஸ்லிம்களுக்குள் வேறு எந்த அடிப்படையிலும் ஸ்திரமான ஒரு அழுத்தக் குழுக்கள் உருவாகவில்லை. அப்படியான தோற்றப்பாட்டை வெளிப்படுத்திச் செயற்பட்ட சில தனிநபர்கள், குழுக்கள் அரசியல் சாக்கடைக்குள் ஏற்கெனவே விழுந்து விட்டன. மீதமிருந்த சிலவும் இந்த மாற்றத்தின் அலைக்குள் அள்ளுண்டு சென்று விட்டன.
இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக ஒரு சூனியத்திற்குள் வந்து நிற்கின்றது. முஸ்லிம் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் சிவில் சமூகம் ஏதோ ஒரு அடிப்படையில் நெறிப்படுத்தத் தவறியதால் ஹக்கீம், றிசாட், அதாவுல்லா மட்டுமன்றி, பெரும்பான்மைக் கட்சிகளில் அரசியல் செய்த முஸ்லிம் எம்.பிக்களும் தாம் விரும்பியதைச் செய்து கொண்டிருந்தனர்.
இவர்களது அரசியல் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை வெல்வதற்கான பாதையாக இருக்கவில்லை. அந்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. அதற்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கான அரசியலும் சரிவர சீரமைக்கப்படவில்லை. இதனால் வெறுப்புற்ற மக்கள் இந்தத் தேர்தலில் எடுத்த முடிவு நமக்குத் தெரியும்.
இனிவரும் காலத்தில் முஸ்லிம்கள் தனித்துவமான, தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை, என்.பி.பி. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள்ளேயே உணரப்படுகின்றது. ஆனால், முன்னோக்கிச் செல்ல முடியாத ஒரு முட்டுச் சந்தில் முஸ்லிம்களுக்கான அரசியல் இப்போது இறுகி நிற்கின்றது.
மறைந்த தலைவர் அஷ்ரப் வெறுமனே பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்று நினைத்தவரல்ல. ஒலுவிலில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைச் சிருஷ்டிப்பதற்கான மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
அங்கு முஸ்லிம் சமூகம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமூகத்தின் அரசியல் இருப்பும், உரிமைகளும் ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்துவதற்கான ஒரு வெளிச்ச வீடாக அது அமைய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஆனால், தமிழர் அரசியலில் இரு பல்கலைக்கழகங்கள் எடுத்த வகிபாகத்தை ஏன் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அரசியலில் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருப்பதாக யாராவது செர்னனால் அது எந்தக் கட்டத்தில் உள்ளது. அதன் வெற்றியின் அடைவு மட்டம்தான் என்ன என்று கூற வேண்டும்.
அதேபோன்று, அஷ்ரபின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிய அவரின் செல்லப் பிள்ளைகளான அரசியல்வாதிகள் கூட ஏன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஒரு சமூக அரசியல் மாற்றத்திற்கான மையப்புள்ளியாக மாற்றுவதற்கு விரும்பவில்லை?
தறிகெட்டு ஓடிய, ஓடும் முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்துவதில் தென்கிழக்குப் பல்கலைக்கழமோ முஸ்லிம் சமூகத்தின் சமய கட்டமைப்புக்களோ அல்லது புத்திக் குழுக்களோ ஒரு சரியான அழுத்தக் குழுவாக இருந்து சமூகத்தை வழிநடத்தவில்லை. முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களின் தவறுகளை தட்டிக்
கேட்ட வரலாறும் இல்லை.
தேர்தல் காலத்தில் முஸ்லிம்
சமூகத்திற்கான பிரத்தியேக அரசியலை மழுங்கடிப்பதற்கான அலைகள் எழுந்த
போது, உண்மையில் முஸ்லிம் சமூகம் யாரை ஆதரிக்க வேண்டும்? என்ன முடிவை எடுப்பது நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பானது என்று ஆராய்ந்து சமூகத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் சொல்வதற்கும் இன்று வரை யாருமில்லை.
தம்மீதுள்ள இந்த தார்மீக
வரலாற்றுப் பணியை நாம்
இதுவரை நிறைவேற்றவில்லை என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவ, ஆசிரிய, ஊழியர் சமூகங்களும் அதேபோன்று, முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஏனைய பல்துறை புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், பொன்னாடைகளுக்காகவும்
போலிப் பட்டங்களுக்காகவும் அலைகின்ற கூட்டம் என்ற பலதரப்பட்டோரும் சிந்தித்ததாவது உண்டா? இந்தக் கேள்விக்கு விடை ‘ஆம்’ என்று கூறக் கூடிய நிலைமை இருக்குமென்றால் கூட, எதிர்காலத்திலாவது முஸ்லிம் சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கும்
என ஓரளவுக்கு ஆறுதல் கொள்ளலாம்.
மொஹமட் பாதுஷா
04.02.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago