Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
மொஹமட் பாதுஷா / 2020 மார்ச் 20 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மக்கள், இரண்டு விவகாரங்களைச் சமகாலத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். ஆகவே, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் மருந்துதேடும் ஒரு இக்கட்டான தருணம் இதுவென்றும் குறிப்பிடலாம்.
முதலாவது, கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘கொவிட்-19’ வைரஸ் தொற்றுநோய்.
இரண்டாவது, நமது அரசியல் கலாசாரமும் மோசமான மக்கள் பிரதிநிதிகளும் என்ற நாள்பட்ட தொற்றுநோய்.
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே, உலகில் பரவத் தொடங்கியிருந்த கொரோனா வைரஸ், இங்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகிய ஒரு வாரத்திலேயே, உள்நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது.
மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால், பேரவலம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மருத்துவச் சிகிச்சைகளுக்கு மேலதிகமாக, கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், வைரஸ் பயத்தின் காரணமாக, இலங்கையில் வாழும் இரண்டு கோடி மக்களும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையில் இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒருவர் மாத்திரம் குணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பத்தி எழுதப்படும் வரை, குறைந்தது 243 பேர், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இங்கு மரணங்கள் எதுவும் இதுவரை நிகழவில்லை என்றாலும், ‘கொவிட்-19’ இன் வேகமாகப் பரவும் போக்கு, சந்தோசமான அறிகுறிகள் அல்ல.
கிறிஸ்துவுக்கு முன் - பின் என, பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம், எத்தனையோ கொள்ளை நோய்களைக் கண்டிருக்கின்றது; பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனால், கடந்த ஐம்பது வருடங்களில் இப்படியான ஒரு வேகமான நோய்த்தொற்று ஏற்பட்டதில்லை; மூன்றே மாதங்களுக்குள் உலகம் பூராவும் பரவும் (பென்டமிக்) தொற்றுநோயாகி, உலக நாடுகளில் இத்தனை உயிரிழப்புகளை ஏற்படுத்தியதும் இல்லை.
சீனாவின் வூஹான் மாநிலத்தில், 2019 டிசெம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட கொரோனா எனப்படும் ‘கொவிட் 19’ வைரஸ், இந்தப் பத்தி எழுதி முடிக்கப்படும் வரை, 173 நாடுகளில் பரவியிருக்கின்றது. மரணங்கள் ஒன்பதாயிரத்தைத் தொட்டுள்ளன. உலகளவில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வினாடியும், இந்தத் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. ‘கொவிட்-19’இன் பாரதுரத்தை இதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம்.
சீனாவால், வேறு ஏதாவதொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காக அன்றேல், பொருளாதார, சமூக நலன்களை அடைந்து கொள்வதற்காக இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதா?
1981ஆம் ஆண்டில், டீன் கூன்ஸ் எழுதிய நாவலில், குறிப்பிடப்பட்டுள்ள ‘வூஹான்-400’ வைரஸ் இதுதானா? 2008இல் பிரபல தீர்க்கதரிசியான சில்வியா பிரவுண், முன்னறிந்து கூறியதே இப்போது நடந்து கொண்டிருக்கின்றதா? இது ஒரு மருத்துவ வியாபாரமா, உயிரியல் யுத்தமா? இவ்வாறான ஏகப்பட்ட கேள்விகளுக்கு, இவ்வுலகம் விடை தேட வேண்டியிருக்கின்றது.
அதற்கெல்லாம் முன்னதாக, ‘கொவிட்- 19’ என்பது, மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒரு வைரஸ் என்ற அடிப்படையில், முதலில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்த ஒழுங்கில், இலங்கையும் இணைந்து, கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும், இந்த வைரஸை முற்றாக இல்லாதொழிப்பதற்குமாக, முழு மூச்சாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
கொரோனா குறித்து, “பெரிதாக அச்சப்படத் தேவையில்லை; பதற்றமடைய அவசியமில்லை” என்று சிலர் கூறினாலும், அது மிகவும் வீரியம் கொண்ட, நோய்த் தொற்று என்பதை, அவர்கள் மறுக்கவில்லை.
இந்நிலையில், இலங்கையில் இன்னும் மரணங்கள் நிகழவில்லை என்பதை வைத்துக் கொண்டு, நாம் வெற்றிகரமான முறையில் ‘கொவிட்-19’ வைரஸைக் கட்டுப்படுத்தி வருகின்றோம் என்ற நினைப்பில், நமது நடவடிக்கைகள் மந்தமடைந்து விடக் கூடாது.
நமது நாட்டிலும், கொரோனா பரவல் போக்கில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது பரவும் வேகம் அதாவது, ‘எல்லை அதிகரிப்பு’ (கடைசி அதிகரிப்புக்கும் அதற்கு முன்னைய அதிகரிப்புக்கும் இடையிலான வேறுபாடு) உயர்வடைந்து வருவதைக் காண முடிகின்றது.
அதுமட்டுமன்றி, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த நோய், உள்நாட்டில் உள்ள மக்களுக்கு இடையிலும், ஆங்காங்கே பரவத் தொடங்கியிருக்கின்றது என்பது, நல்ல அறிகுறியல்ல.
இது, இந்த வைரஸ் பரவலின் இன்னுமொரு கட்டம் எனத் துறைசார்ந்தோர் கூறுகின்றனர். உள்நாட்டில் வாழும் மனிதர்களில் இருந்து, மற்றவர்களுக்கு வேகமாகப் பரவத் தொடங்கிவிடுமாக இருந்தால், நிலைமைகள் இன்னும் மோசமடையலாம் என்ற அச்சத்தை, மருத்துவ உலகம் முன்வைத்துள்ளது.
அப்படிப் பார்த்தால், இலங்கையில் இவ்வாறாக, நோய்ப்பரவல் வேகமாக ஏற்பட்டு, அதிக எண்ணிக்கையிலான உயிர்களைப் பலிகொடுக்க நேரிடுமாக இருந்தால், அபிவிருத்தியடைந்து வரும், சிறிய சனத்தொகையைக் கொண்ட நாடு என்ற வகையில், இலங்கையால் அந்நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகுவது மட்டுமன்றி, அதன் தாக்கம், இன்னும் பல தசாப்தங்களுக்கு இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான பாரதுரமான நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே, அரசாங்கம் மக்கள் கூடும் இடங்களை மூடியுள்ளதுடன், பொது விடுமுறையையும் வழங்கியுள்ளது. ஆனாலும், ஒரு தேர்தல் காலத்தில், இந்த நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய ஒரு சிக்கலான சூழல், இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இங்கு, மக்களின் உயிரா, ஆட்சியா முக்கியம் என்று கேட்டால், உயிர்தான் முன்னுரிமைக்குரியது என்பதே, சிறுபிள்ளையின் நிலைப்பாடாகவும் இருக்கும்.
‘கொரோனா’ அல்லது ‘கொவிட்-19’ வைரஸ் நச்சுயிரியின் பரவலானது, நமக்குப் புதிதானது. எனவே, அதைத் தடுத்து நிறுத்தவும், அதனால் ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து மீளவும் வேண்டிய காலமாக, இக்காலத்தைக் குறிப்பிடலாம்.
ஆனால், நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த அரசியல் கலாசாரமும் ஒரு வகையான வைரஸ் என்றே கூற வேண்டியுள்ளது. இனவாதம், முதலாளித்துவம், மேட்டுக்குடி சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட, மக்களுக்கு முன்னுரிமை அளிக்காத இலங்கையின் அரசியல் கலாசாரத்தில், முற்போக்கான திருத்தங்கள் அத்தியாவசியமாகின்றன.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் அரசியலை நீண்டகாலமாகப் பீடித்துள்ள தலைமைத்துவ வெறி, பதவி மோகம், பணத்தாசை, ஊருக்கோர் எம்.பி கோஷம், வியாபாரத் தன்மையுள்ள அரசியல் போக்கு போன்ற, வைரஸ்களை அடையாளம் காண வேண்டியுள்ளது.
அத்துடன், தேர்தலின் ஊடாக, முஸ்லிம் அரசியலுக்குள் நுழைய முனையும் பழைய, புதிய ஆபத்தான மக்கள் பிரதிநிதிகளுக்கும், மருந்து கட்ட வேண்டிய ஒரு தார்மிகப் பொறுப்பு, முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள், மேலும் பிளவுபட்டுள்ளதைப் போல, முஸ்லிம் அரசியலிலும் ஏகப்பட்ட கட்சிகளும் அணிகளும் என... வாக்காளப் பெருமக்கள் துண்டங்களாக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தமிழர் அரசியலிலும் முன்பிருந்த ஒற்றுமை சீர்குலைந்து, வெகுகாலமாயிற்று.
இந்நிலையில், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தமட்டில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைந்துள்ளன. தேசிய காங்கிரஸ் கட்சி வழக்கம் போல மொட்டு அணியின் ஆசிர்வாதத்துடன், இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றது எனலாம்.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும், ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீனும் சஜித் அணியில் அங்கம் வகித்தாலும், சஜித் அணி தத்தமது கட்சிக்கு வழங்குகின்ற ‘அந்தஸ்து’ தொடர்பில், அவர்களுக்கும் நிறையவே அதிருப்திகள் இருப்பதாகவே அரசல் புரசலாகத் தெரியவருகின்றது.
அதேநேரம், ஹக்கீமும் ரிஷாட்டும் எல்லாப் புள்ளிகளிலும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர முடியாத, யதார்த்த நிலை தொடர்கின்றது.
புத்தளத்தில் ஓரணியில் இணைந்து போட்டியிடுவதற்கு எடுத்த முடிவை, நாட்டின் எல்லா இடங்களிலும் அமுல்படுத்த முடியவில்லை. குறைந்தபட்சம், அம்பாறை (திகாமடுல்ல) தேர்தல் மாவட்டத்தில் சஜித்தின் தொலைபேசிச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு, முடியாமல் போயிருக்கின்றது.
அந்த மாவட்டத்தில், தான் விரும்பிய சிலரை மட்டும் வெற்றிபெற வைப்பதற்காக, ஹக்கீம் வகுத்த சாணக்கிய திட்டமும், ஒருவரையாவது எம்.பியாக்க வேண்டும் என்று, ரிஷாட் விடாப்பிடியாக இருந்ததும், பல வேட்பாளர்கள் ஏற்கெனவே தயாராக இருந்ததும் இந்த ஒற்றுமைப்படுதலுக்குத் தடையாக இருந்தன.
இந்தப் பின்னணியில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் உள்ளடங்கலாகப் பல மாவட்டங்களில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பில் தனித்துக் களமிறங்கியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை, நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்திய முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், மீளக் கட்சியுடன் இணைந்ததால், சின்னம் தொடர்பான சர்ச்சை நீங்கியுள்ளது. இந்நிலையில், திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் அக்கட்சி மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. ஏனைய மாவட்டங்களில் தொலைபேசிச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பொதுஜனப் பெரமுன இம்முறை முஸ்லிம் வேட்பாளர்கள் சிலரைத் தேடிப்பிடித்து வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள போதும், முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில், மொட்டுச் சின்னத்தில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியே, ஆரம்பத்திலிருந்தே ஆளும் தரப்பு சிந்தித்தது.
ஆனாலும், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மொட்டு பட்டியலில் இடம் கிடைக்கும் என, கடைசி வரையும் அக்கட்சிக்கு நம்பிக்கையிருந்தது.
ஆனால், காரணங்கள் பல சொல்லி, அம்பாறை மாவட்டத்தில் அக்கோரிக்கை தட்டிக் கழிக்கப்பட்டதையடுத்து, மனமுடைந்த அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ், தனது குதிரைச் சின்னத்தில் தனியாக வேட்பாளர்களை இம்மாவட்டத்தில் களமிறக்கியிருப்பதுடன், இன்னும் இரு மாவட்டங்களில் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இப்படியாக, பெருந்தேசியத்துக்கு எப்போதும் முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு எல்லாப் பெரும்பான்மைக் கட்சிகளிலும் நாம் எதிர்பார்த்த கௌரவமும் இடமும் கிடைக்காமலேயே இந்தத் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றன.
அத்துடன், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டு அரசியலும் எம்.பிகளின் தொகைகளை மட்டுமே கணக்கில் எடுத்து வகுக்கப்படும் வியூகங்கள், சாணக்கியங்களும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைச் சிதிலமாக்கவே வழிவகுக்கப் போகின்றன.
முஸ்லிம் கட்சிகளின் சில வியூகங்களைப் பார்த்தால், அது மக்களுக்கு நன்மை தராது எனத் தெரிகின்றது. அதுபோல, சில வேட்பாளர்களைப் பார்த்தால், எம்.பி ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது என்று எண்ணத் தோன்றுகின்றது.
மீண்டும் அதே பதவியாசை, பணத்தாசை பிடித்த மோசமான அரசியல் கிருமிகளால் இந்த முஸ்லிம் அரசியல் களம் இட்டு நிரப்பப்படப் போகின்றதா என்ற வினா தவிர்க்க முடியாமல் மேலெழுகின்றது.
எனவே, முஸ்லிம்கள் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன், இத்தேர்தல் ஊடாக அரசியல் வைரஸ்களுக்கும் மருந்து தேட இப்போதே தயாராக வேண்டியுள்ளது.
தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? கேள்விக்கு விடை கிடைத்தது
கடந்த ஒரு வாரகாலமாக, நாட்டு மக்கள் மனங்களில் மட்டுமன்றி, அரசியல்வாதிகள் மனங்களிலும் எழுந்திருந்த கேள்விக்கு, நேற்று நண்பகலுக்குப் பின்னர், விடை கிடைத்திருக்கின்றது.
இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு, தேர்தலுக்கான வாக்கெடுப்பை, திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (19) நண்பகலுடன் முடிவடைந்த பிறகு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.
இதற்கமைய, மார்ச் 26ஆம் திகதியன்று, தேர்தல் நடைபெறும் புதிய திகதி அறிவிக்கப்படும். அநேகமாகக் குறைந்த பட்சம் இரு வாரங்களுக்கு, வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டு, மே மாத நடுப்பகுதிக்கு முன்னதாக, புதிய திகதி குறிக்கப்பட வாய்ப்புள்ளதாக இப்போதைக்குத் தெரிகின்றது.
2020 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, நாட்டில் அதுபற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்பாராத விதமாக கொரோனா (கொவிட்-19) வைரஸ் பரவியதாலும், தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருவதாலும், இவ்வாறாக உரிய திகதியில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருந்தது.
இப்போது மக்கள் தமது ஆரோக்கியம், நோய்த் தொற்று இல்லாத தன்மையை விட, வேறு எதிலும் ஆர்வமற்றவர்களாக இருக்கின்றனர். இந்த நோய்த்தொற்று நிலை நாட்டில் நீடிக்குமாக இருந்தால், தேர்தல் பிரசாரங்களில் மக்கள் ஈடுபாடு காட்ட மாட்டார்கள் என்பதுடன், வாக்களிப்பும் மந்தமடைய வாய்ப்பிருக்கின்றது.எனவே, இதேவேகத்தில் ‘கொவிட்-19’ பரவுமாக இருந்தால், தேர்தலை நடத்துவதென்பது நோய்த்தொற்றுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதற்கு ஒப்பானதாக அமையலாம்.
ஆகவேதான், அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் தனிப்பட்ட அரசியல்வாதிகளும் கோரி வந்தனர். ஆனால், திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடைபெறும் என, அரசாங்கம் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டே இருந்தது. இவ்விடயமும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.
சட்டத்தின் ஊடாகத் தனக்குக் கிடைத்த ஓர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒருவர் (ஜனாதிபதி) ஓர் அறிவிப்பை மேற்கொண்டால், அதை வாபஸ் பெறுகின்ற அதிகாரமும் அதில் உள்ளது என்ற கருத்தும், அவசரகால நிலைமை ஏற்படுகின்ற போது, தேர்தல் அறிவிக்கப்பட்டு 14 நாள்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்கெடுப்பை ஒத்திவைக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
எது எவ்வாறாயினும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு முடிவடைந்த பிறகு தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று விடும் என்ற அடிப்படையில், தேர்தல்கள் ஆணைக்குழு வாக்கெடுப்பு தினத்தை ஒத்திவைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று பிற்பகல் வேளையில், தேர்தல் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
நாட்டில், கொரோனா நோய்த் தொற்று நிலைமைகள் எப்படிப் போகும் என ஊகிக்க முடியாதுள்ளளது. அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அடுத்த நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய சட்டத் தேவைப்பாடும் காணப்படுகின்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago