2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

மனித  உரிமைகள் பேணப்பட்டால் நாடு ஒரே நாடாக இருக்கும்

Mayu   / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம் 

இலங்கையில் இன, மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம், மதம், மொழி எனப் பிரிந்து கிடப்பதனாலும் இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள், அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து  ‘ஒரே நாடு’ என்ற கோஷத்துடன் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசில் பலமாக ஒலித்து ஓய்ந்த நிலையில்,  தற்போது அந்தக் கோஷத்தை நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்‌ஷ மீண்டும் கையிலெடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை  மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி  எம்.பி. ஹேஷா விதானகே கொண்டுவந்த தனிநபர் பிரேரணைக்குப் பதிலளித்து   உரையாற்றிய   நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்‌ஷ, இலங்கையில் இன,மத அடிப்படையில்  அரசியல்  கட்சிகள் இருக்கும்வரை நாட்டில்  ஜனநாயகம் தலைதூக்க முடியாது. எனவே,  இன,மத  ரீதியில்  கட்சிகள்  உருவாக்கப்படுவதனை  தடை செய்ய வேண்டும்.

அத்துடன், புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இனவாத,மதவாத  அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

 இலங்கையில் இன, மத பெயர்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும். பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு அமைச்சு தேவையில்லை. எல்லா மதங்களுக்கும் ஒரு அமைச்சர் இருந்தால் போதும். சிங்களப் பாடசாலை, தமிழ் பாடசாலை, இந்துப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, கிறிஸ்தவப் பாடசாலை என ஒவ்வொரு இனத்துக்கும் மதத்திற்கும் பாடசாலைகள் தனித்தனியே தேவையில்லை. அனைத்தையும் ஒன்றாக்க வேண்டுமென்பதே ‘ஒரே நாடு’ என்ற போர்வையில்  சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளினால் வலியுறுத்தப்பட்டு வரும் விடயம்.

 இலங்கையின் பெரும்பான்மை இனமாகச் சிங்களவர் உள்ளனர். இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 74 வீதமாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய 
இனமாகத் தமிழர் சனத்தொகையில்  15.4 வீதமாக உள்ளனர். இவர்கள் இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழரென இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கையின் அடுத்த முக்கிய இனமாக முஸ்லிம்கள்   10 வீதமாக உள்ளார்கள்.

அத்துடன், இதர இனங்களாகப் பறங்கியர்  1 வீதமாகவும் ஆதிவாசிகள்  0.1 வீதமாவும் உள்ளனர். இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம்  70,19 வீதமாகவும்  இந்து சமயம் 
12,61 வீதமாவும்  இஸ்லாம்  9,71 வீதமாகவும்  கிறிஸ்தவம்  7,45 வீதமாவும்  உள்ளன.

இவ்வாறான நிலையில்,  இலங்கையில்  இன, மத அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் அவசியமா?  என்பது தொடர்பில் பார்ப்போம் பிரித்தானிய ஆட்சியுடன் ஆரம்பிக்கும் இலங்கையின் அரசியற் கட்சிச் செயற்பாடுகள் சுதந்திரத்தின் பின்னர் இன, மத ரீதியான காரணங்களுடன் முனைப்புப் பெற்றன. இலங்கையின் பிரதான கட்சிகளும்  சிங்கள தேசியவாத கட்சிகளும் பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படுகின்றன. 

அதேபோல், சிறுபான்மையினக் கட்சிகள் தமது இன, மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன, மதத்தினை தமது கட்சியின் கொள்கைகளில் உள்வாங்குகின்றனர். இவ்வாறு இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றதிலும் வளர்ச்சியிலும் இனம், மதம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.

இலங்கையின் தேர்தல் செயலகத்தில் 70 அரசியல் கட்சிகள் முறையாகப்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15க்கு மேற்பட்ட கட்சிகள்  தமிழ், முஸ்லிம், மலையக இன, மத அடையாளங்களுடனும் மூன்று வரையான கட்சிகள் சிங்கள இன அடையாளங்களுடனும் உள்ளன. 

இவற்றில் இன, மத அடையாளங்களைக் கொண்ட இலங்கை தமிழரசுக்  கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை பாராளுமன்றத்தில் தனிக் கட்சிகளாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசின் பங்காளிக் கட்சிகளாகவும் உள்ளன. சிங்களக் கட்சிகளைப் பொறுத்தவரை இன, மத அடையாளமற்ற  ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

இவ்வாறான நிலையில், இலங்கையில் இன, மத அடையாளங்களுடன்  இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டால்  தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினக் கட்சிகள்தான் பாதிக்கப்படும்.

அதேவேளை, இன, மத அடையாளங்களுடன் இயங்கும் இந்த சிறுபான்மையினக் கட்சிகள் இந்த இன, மத அடையாளங்களுடன் இல்லாத அரசியல் கட்சிகள் செய்யாத எதனைச் செய்து விட்டார்கள் என்பதற்காகத் தடை செய்யப்பட வேண்டும்? இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள், மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் என்றால் இவ்வாறு இன அடையாளம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனக் கலவரம் செய்யவில்லையா.

இனப் படுகொலைகள் செய்யவில்லையா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரைக் கொண்ட கட்சி முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையில் ஈடுபடவில்லையா? மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரைக்கொண்ட கட்சி அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லையா? தம்மினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்யவில்லையா? அல்லது இந்தக் கட்சிகள் இனவாதம், மதவாதம் தான் பேசவில்லையா? தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியின் கொள்கையே இன வாதம் தானே? எனவே, இலங்கையில் இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படவேண்டுமென்பதும் ஒரு இன வாதம்தான்.

இனம் அல்லது மதம் என்பவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படும் அரசியல் கட்சிகள், தமது பெயர்களை மாற்றாவிடின், அவற்றின் பதிவுகளை ரத்து செய்யத்  தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ்  அடிப்படை உரிமை மனுவொன்றை   உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 

இனம், மதம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ள 20 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன மற்றும் மத ரீதியாக கட்சிகள் அடையாளப்படுத்தப்படுவதால், பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், இன மற்றும் மத ரீதியான அடையாளங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைத் தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை 
01-08-2016ஆம் ஆண்டு   உயர் நீதிமன்றம் விசாரணைக்கெடுத்து இரத்து செய்தது.

 ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் தாக்கல் செய்த இந்த மனுவை, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு பரிசீலித்தது.இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர், சட்ட மா அதிபர் மற்றும் 20 அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைத் தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் இந்த மனுவை இரத்துச்  செய்தது. எனவே, இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள்  தடை செய்வதென்பதனை உயர் நீதிமன்றம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

 ஆட்சிபுரிபவர்கள் இன வாதம், மதவாதம் இல்லாத நேர்மையானவர்களாக இருந்தால், நாடு ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யப்பட்டால், ஒவ்வொரு இனங்களினதும் மதங்களினதும்  உரிமைகள் மதிக்கப்பட்டால், மனித  உரிமைகள் பேணப்பட்டால் நாடு ஒரே நாடாகவும் மக்கள் ஓரின மக்களாகவும் இருப்பர். 

இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள் அமைச்சுக்கள், பாடசாலைகள்,   அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் ஒலிப்பதற்கான எந்தத் தேவைகளும் எழாது. எனவே, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், பேரினவாதிகளின் மனங்களில், குணங்களில் மாற்றம் ஏற்படவேண்டுமே  தவிர அரசியல் கட்சிகள் அமைச்சுக்கள், பாடசாலைகளின் இன, மத அடையாளங்களில்  மாற்றங்கள் ஏற்படவோ ஏற்படுத்தப்படவோ வேண்டிய எந்தத் தேவைகளும் கிடையாது.

 எனவே, இனவாத கரு மேகம் சூழ்ந்துள்ள இலங்கையில் தமிழ் ,முஸ்லிம்களிடமுள்ள எச்ச,சொச்ச உரிமைகள்,சலுகைகளையும் பறித்தெடுத்துவிட வேண்டுமென்பதில் பேரினவாதம் சந்தர்ப்பவாத அரசியலைக் கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில்தான் தற்போது “இலங்கையில் இன, மத அடிப்படையில்  அரசியல்  கட்சிகள் இருக்கும்வரை நாட்டில்  ஜனநாயகம் தலைதூக்க முடியாது. எனவே,  இன, மத  ரீதியில்  கட்சிகள்  உருவாக்கப்படுவதனை  தடை செய்ய வேண்டும்” என்ற கோஷத்திற்கு    நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்‌ஷ மீண்டும் உருவேற்றியுள்ளார். 

07.18.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X