2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

மக்கள் விரும்பும் தமிழ்த் தேசிய நிலைப்பாடு

Mayu   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை நடத்திவருபவர்கள், கட்சிகளின் மீதான நம்பிக்கையும் ஆதரவும் மக்கள் மத்தியில் சரிந்து வருவதனை அவதானித்துவந்த நாம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அது விழுந்துவிட்டதனை கண்டோம்.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்பும் வீழ்ச்சியைச் சரி செய்வதற்கான வேலைப்பாடுகள் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும். அது போன்றதல்லாது, இம்முறை தூக்கியே நிறுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அதற்கான வழிகளை அவர்கள் இப்போது தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமந்திரன் மீண்டும் தம் கட்சியினை தூக்கிப்பிடித்து புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் எமது நிலைப்பாட்டையே தமிழ் மக்கள் ஏற்றுள்ளனர் என்று தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். 

அவர்களால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான செயற்பாடுகள் பற்றிய பேச்சையே யாரும் எடுத்திருக்கா நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறானதொரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார். இது தான் பெரிது என்கிற இறுமாப்பினையே காட்டிநிற்கிறது.

அதே வேளை, இலங்கையில் ஒற்றையாட்சியை மீறிய அரசியலமைப்பொன்று உருவாவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாக இருக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவின் அடிப்படையில் முன்னெடுப்புக்கள் நடைபெறவேண்டும் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

அண்மையில் அக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 
இந்தத் தருணத்தில் அவர்கள் ஏலவே மைத்திரி - ரணில், கூட்டாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

குறித்த இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை. அது ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒன்றாகும். குறித்த இடைக்கால அறிக்கையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

என்று தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள கட்சிகளின் ஒருமிப்பு, ஒற்றுமையின்  அவசியம் பற்றிக் கடந்த பல தேர்தல்களின் பின்னர் ஏற்பட்டு வந்த கோரிக்கையே என்ற வகையில் கஜேந்திரகுமாரினுடைய அறிவிப்பு நல்லதே.  

ஆனால், பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான முடிவுகளுக்கும் செல்லமுடியும்.
அது தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே இருக்கும் என்பதும் தற்போது அனைவராலும் உணரப்படுகிறது.  இந்த நிலையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்த் தரப்பின் கோரிக்கையாக வருகின்ற தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவினை அடிப்படையாக வைத்து அரசியலமைப்புச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடன்படுமா என்பது கேள்விக்குறியானது.

அது இருக்க, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டச் செயற்பாட்டில் சுமந்திரன் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தார்கள். இந்த நிலையில் அவர் குறிப்பிட்டிருக்கின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் எமது நிலைப்பாட்டையே தமிழர்கள் ஏற்றுள்ளார்கள் என்ற கருத்து முட்டுக் கட்டையாகவே தெரிகிறது.

நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வாக, தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும், அதற்கு இழுத்தடிப்புகளையும் தட்டிக் கழிப்புகளையும் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள்  செய்து வந்திருக்கின்றன. 

அதில் சில தமிழ் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்டும், அனுசரணைகளை வழங்கியும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான தீர்வினை பெறல், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தல் என்கிற நோக்கத்தில் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒருமித்துப் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சுமந்திரனுடைய கருத்து கருத்திலெடுக்கப்படவேண்டிய தேவையற்றதே.

தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், சி.சிறிதரன், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆசன எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இணைவதை விடுத்து கொள்கை ரீதியில் ஒன்றுபட்டுச் செயலாற்றவேண்டியது மிக அவசியம். குறிப்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று வருகிறபோது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அது இருக்க  வேண்டும் என்பதே தொடக்கத்திலிருந்து எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது. 13ஆவது திருத்த விடயத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

 நாம் எத்தகைய விட்டுக்கொடுப்புகள், தியாகங்களைச் செய்தாயினும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட வரைபு, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது பற்றி ஆராய வேண்டும். 

அவற்றின் அடிப்படையில் புதியதொரு திட்டத்தை வகுத்துச் செயற்படுவதே தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானதாகவும், ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அமையும் 
என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைவு விடயத்தில் அத் திட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதனை யார் கையாள்வது? எப்படி? பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது யார்? அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவது யார்? என்பன குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் போன்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் கட்சிகளுடைய கொள்கையும் செயற்பாடுகளும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதாகவே இருக்கின்றன.

அந்தவகையில் சிதறிப் போயிருக்கின்ற ஏனைய கட்சிகளும் இந்த தீர்வுத்திட்ட விடயத்தில் இணைத்துக் கொள்ளப்படவும் வேண்டும். ஒரு தீர்மானமானது 

அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். மாறாக, ஒருவர் தீர்மானங்களை எடுத்து விட்டு, மற்றவர்கள் மீது திணித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை இதில் கடைப்பிடிக்கப்படுதல் சிறப்பானது. வெறுமனே முன்வைப்புகளோடு நின்று விடாமல் அரசாங்கத்துடன் அணுகுதல், நகர்த்துதல், இறுதி வரை திடமாக நிற்றல் என அனைத்துவிதமான விடயங்களும் கவனத்திலெடுக்கப்படுதல் வேண்டும்.

எது எவ்வாறானாலும், தமக்குக் கிடைத்த பெரும்பான்மை மற்றும் வடக்கு, கிழக்கில் பெற்றுக் கொண்டு ஆசனங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் அவர்களது உரிமைகள் அனைத்தையும் கைவிட்டிருக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கே தேசிய மக்கள் சக்தி முயன்றுவருகிற நிலையில் தமிழ்த் தரப்பினுடைய முயற்சி பலனளிக்குமா என்பது ஆராயப்படவேண்டியதாகவே இருக்கிறது.

கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் வீணே இறுமாப்புகளையும், விட்டுக் கொடுப்பின்மையையும், தனிப்பட்ட கோப, தாப, விருப்பு வெறுப்புக்களையும், பொறாமையினையும், மேலாதிக்கத் தனத்தையும், கைக்கொண்டு 

தமிழ் மக்களின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மறந்து செயற்பட்டுவந்ததன் விளைவாக ஏற்பட்டிருக்கும் நிலையானது, தமிழ்த் தேசிய அரசியல் நீக்கத்திற்கே வழிவகுத்திருக்கிறது என்பது மறக்கப்படாதிருப்பது சிறந்ததாகும். அந்தவகையில், அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த  முயற்சி மக்களின் நிலைப்பாடறிந்து அவர்களின் விருப்பத்தினை முதன்மைப்படுத்தியதாக இருக்கட்டும்.

 

12.02.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X