Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 10 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
விலை அதிகரிப்புகள், வரி விதிப்புக்கள் பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியுடனேயே இந்தப் புதுவருடம் பிறந்துள்ளது. புதுவருட வாழ்த்துச் செய்திகளை விட வாழ்க்கை சுமை அதிகரிப்பு பற்றிய அறிவித்தல்களே மேவி நிற்கின்றன.
வழக்கமாக பண்டிகைக்காலம், புதுவருடம் வந்து விட்டால் அரசாங்கங்களும் நிறுவனங்கள் விலைக் குறைப்புக்களை, கழிவுகளை அறிவிக்கும். ஆனால், இந்தமுறை அது வழக்கத்திற்கு மாற்றமாக இருந்தது.
வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் படி அரசாங்கம் 95 வகையான பொருட்களுக்கான பெறுமதி சேர் வரியை அதிகரித்துள்ளது. 15 சதவீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக நேற்று முதல் அதிகரித்துள்ளது. இவற்றுள் பெற்றோல், டீசல் போன்ற பொருட்கள் புதிதாக இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகவே, மக்களைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சிகரமானதாக மனநிலையுடன் நேற்றைய பொழுது விடியவில்லை. இந்த நிலையில், முழுப் பூசணிக்காயை ஒரு பிடிச் சோற்றில் மறைக்க முற்படும் பாங்கிலான அரசாங்கத்தின் இது குறித்த வியாக்கியானங்கள் மக்கள் மத்தியில் பலிக்கவில்லை.
உண்மையில் 95 பொருட்களுக்கான வற் வரியே அதிகரித்திருந்தாலும், அதனால் மேலும் பல பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இந்தப் பொருட்களை உள்ளீடுகளாகப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இனி அதிகரிக்கப்படும். அதேபோல், எரிவாயு விலை அதிகரிப்பதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
புதுவருடத்தின் முதல் நானான நேற்று விடியற்காலை 5 மணி என்ற நல்லநேரம் பார்த்து அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல், டீசலின் விலையுயர்வானது போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கும். இதனால் பல பொருட்கள், சேவைகளின் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகரித்தே தீரும்.
ஏற்கெனவே நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இவ்வரிவிதிப்பும் விலை அதிகரிப்பும் இன்னும் பொதுவிலை மட்டத்திலும் பணவீக்கத்திலும் மேல்நோக்கிய நகர்வை ஏற்படுத்தும் என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்ற விடயமாகும். ஆனால், அரசாங்கமோ, எதிர்க்கட்சிகளோ அரசியல்வாதிகளோ பெரிதாக இது குறித்து கரிசனை கொண்டதாகத் தெரியவில்லை.
மாறாக, பெருந்தேசியக் கட்சிகளும் சரி, சிறுபான்மைக் கட்சிகளும் சரி, தமது அடுத்த கட்ட அரசியலிலும், நடைபெறப்போகின்ற தேர்தல்களை எதிர்கொள்வதிலுமே குறியாக இருப்பதாகத் தெரிகின்றது.
மக்கள் எப்பாடுபட்டாலும் பரவாயில்லை எங்களுக்குத் தேர்தல் வெற்றியே வேண்டும் என்ற மனநிலையை இது குறிப்புணர்த்துவதாக உள்ளது.
நாட்டின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வற் வரி விதிப்பும் அதிகரிப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியம் போன்ற உதவி வழங்கும் தரப்பினரின் அறிவுரை என்றும் கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் இவ்வாறு வரி விதிக்கப்படுவது பொருளாதார நடைமுறைகளில் சர்வ சாதாரணமானது என்பதையும் மக்கள் அறிவார்கள்.
ஆனால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியாலும் வாழ்க்கைச் சுமையாலும் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் வறிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் திணறிக் கொண்டிருக்கின்றனர். இப்படியொரு சூழ்நிலையில், வரி வருமானம் என்ற பெயரில் கணிசமான பொருட்களுக்கு வரி விதிப்பதும், அதனைப் பயன்படுத்தி மேலும் நூற்றுக்கணக்கான பொருட்கள், சேவைகளின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதும் எந்த வகையில் நியாயம் என்று தெரிவில்லை.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது அவசியமான விடயம்தான். ஆனால், மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான எந்த வழியும் இல்லாத ஒரு காலகட்டத்தில், நாட்டைக் கொள்ளையடித்தவர்களிடம் இருந்து நஷ்டஈடுகளைக் கோராமல், கறுப்புப் பணத்தை வெளியில் எடுக்காமல், மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்து விடுவதென்பது வினோதமான ஒரு உத்தியாகும்.
‘நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கின்றோம் என்று கூறும் இவர்கள், அப்படியென்றால் மக்கள் நாசமாகப் போகட்டும் என்று இவர்கள் நினைக்கின்றார்களா?’ என்று தேநீர்க் கடையில் ஒரு பெரியவர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.
2024இல் தேர்தல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பு அடுத்த தேர்தலில் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். அப்படியிருப்பினும் எதனையும் பொருட்படுத்தாமல் ‘பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துதல்’ என்ற பெயரில் இதுவெல்லாம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
‘தேர்தல்களை நடத்தப் போகின்றோம்’ என்று அறிவித்துக் கொண்டே மக்கள் மீது சுமையேற்றி மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதற்கு ஒரு அசட்டுத் துணிச்சல் வேண்டும். அது இந்த அரசாங்கத்திடம் இருப்பதாகவே கருத முடிகின்றது. ஒருவேளை, தேர்தலுக்கு முன்னர் அதாவது ஏப்ரல், மே மாதமளவில் மக்களுக்கு சில சலுகைகளை அறிவிக்கும் மாற்றுத் திட்டமும் அவர்களுக்கு இருக்கலாம் என்பதை மறுக்கவியலாது.
எது எப்படியிருப்பினும், இன்று நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற பொதுவான பொருளாதார நெருடிக்கடி வாழ்க்கைச் சுமை பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், தேர்தலை நோக்கி அரசியல் செய்கின்ற அபத்தம் பகிரங்கமாகவே நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
ஆளும் தரப்பில் உள்ள கட்சிகள் மட்டுமன்றி எதிர்க்கட்சிகளும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் இதற்கு விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்காமல் அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுப்பதிலேயே குறியாக இருக்கின்றன.
புதிய அரசியல் கூட்டணிகள், பொது வேட்பாளர்கள் மற்றும் தேர்தலை வெற்றி கொள்ளுதல் பற்றிய கதைகள் இப்போது பரவலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடுத்த தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று மொட்டு அணி அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என்ற என்ற தோரணையில் ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை விட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தமது சரிவுகளைச் சீரமைத்து புது வியூகங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி பிரசார நகர்வுகளை ஆரம்பித்து விட்டது.
சிறுபான்மை அரசியலைப் பொறுத்தமட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்குப் பின்னர் கூட்டமைப்பு அல்லது கூட்டணி என்ற கருத்தியல் தமிழர் அரசியலில் வலுவிழந்து விட்டதெனலாம். இந்நிலையில், பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழர்கள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். அது கூடாது என்றும் தேர்தலைப் புறக்கணிப்பதே நல்லது என்றும் ஒருசிலர் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கின்றனர். ஆக, தமிழ் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளை விடத் தேர்தல் பற்றியே அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதேவேளை எல்லா விவகாரங்களிலும் சற்று தாமதித்தே தமது நிலைப்பாட்டை எடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் இப்போது அடுத்த தேர்தல் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
முதலில் தமது சொந்த வெற்றி, பிறகு கட்சியின் வெற்றி என்ற அடிப்படையிலேயே முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் சிந்திப்பதாக தெரிகின்றது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் கட்சிகள் தேர்தல் காலத்தில் கடைவிரிப்பதற்காக தமது கூடாரங்களைப் பழுதுபார்க்கத் தொடங்கியுள்ளன.
மறுபுறத்தில், முஸ்லிம் கூட்டணி ஒன்று உருவாவப்போவதாக ஒரு கதை உலா வருகின்றது. குறிப்பிட்ட பெரும்பான்மை அரசியல் தலைவரை ஆதரிக்கும் நோக்கில் முஸ்லிம் கூட்டணி ஒன்று அமைப்பது பற்றிக் கலந்துரையாடப்படுவதாக ஒரு செய்தி வந்திருக்கின்றது. சம்பிக்க போன்றோரும் முஸ்லிம் கட்சிகளுடன் கைகோர்ப்பது பற்றிய கதையொன்றைக் கூறியுள்ளனர்.
தமிழருக்குச் சொந்தமான வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இரு அரசியல் கட்சிகளைக் கையகப்படுத்தி அதனூடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் எம்.பி. அந்த நிறுவனம் சார்ந்தவர்கள் என நம்பப்படும் முக்கியஸ்தர்களுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைக் கூட்டுப் பலத்துடன் முன்வைப்பதற்கு ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு வேண்டும் என்று இப்பக்கத்தில் நாம் பலமுறை இதற்கு முன்னர் எழுதியுள்ளோம். ஆனால், அது தேர்தலில் வெற்றி கொள்வதற்காக மட்டும் அமையப் பெறும் ஒரு கூட்டு அல்ல.
சமூகத்தின் அபிலாசைகளை முன்கொண்டு செல்வதற்காக அல்லாமல், போக்கிடமற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கருவியாக வடிவமைக்கப்படும் எந்தக் கூத்தணியும மன்னிக்கவும் கூட்டணியும் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை.
ஆக மொத்தத்தில் மக்கள் எப்பாடுபட்டாலும் பரவாயில்லை எங்களது காரியம் முடிந்தால் போதும் என்ற அடிப்படைச் சிந்தனையுடன்தான் பெருந்தேசியக் கட்சிகள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் கட்சிகளும் மக்கள் மீது அரசியல் செய்கின்ற அபத்த நாடகத்தின் அடுத்த அங்கம் இப்போது ஆரம்பமாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago