2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

மக்களின் இருப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம்

S.Sekar   / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தமிழர் விடுதலைக்கூட்டணி, உதய சூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி அனந்தன்.

- ச.சேகர்

நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் இனியும் தேசியம் பற்றிப் பேசி பிரிவினையை ஏற்படுத்தாமல், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வகுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக, வட பகுதி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பொருளாதார ரீதியில் உறுதியான திட்டங்களை முன்னெடுக்க வழியேற்றப்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சர்வதேச ரீதியில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள கௌரி அனந்தன், 2012 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் தமது பணிகளை முன்னெடுப்பதுடன், மக்களின் தேவைகளை இனங்கண்டு இயங்கியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, உதய சூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இலக்கம் 4 இல் போட்டியிடும் கௌரி உடன், வடக்கின் பொருளாதார நிலைமை தொடர்பில் அவரின் சிந்தனைகள், கொள்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகள் தொடர்பில் மேற்கொண்ட நேர்காணலின் போது, அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

தமிழர் இருப்பு, பொருளாதார அபிவிருத்தி என்பன எனது பிரதான கருப்பொருளாகும். கடந்த பதின்மூன்று வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றிய வண்ணமுள்ளேன். 2011 ஆம் ஆண்டில் Yarl ஐடி ஹப் எண்ணக்கரு உருவாக்கத்தில் இணைந்து யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இதன் அடுத்த கட்டமாக ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்காவினை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம்.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து, அவற்றினூடாக வட பிராந்தியத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்களிப்பு வழங்குவது என எதிர்பார்ப்பாகும்.

இலங்கையை பொறுத்தமட்டில், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த, நெகிழ்ச்சியான சூழ்நிலை இல்லை என்றே கூறலாம். குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனமொன்று இலங்கையில் தனது கிளையை அல்லது அலுவலகமொன்றை நிறுவ வேண்டுமென்றால், அவற்றுக்கான அரச அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் மிகவும் சிக்கல்கள் நிறைந்தனவாக அமைந்துள்ளன.

இதனால் எம்மால் இந்த திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில்லை. இதுவரை காலமும் இந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த விடயங்கள் தொடர்பான ஈடுபாடு மற்றும் எண்ணம் பரந்தளவில் காணப்படவில்லை. தமிழ்த் தேசியம் என்பது தொடர்பாக விடயங்களே அவர்களின் பிரதான பேசு பொருளாக அமைந்திருந்தது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், நான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியிருந்த போது, சந்தித்த பலருடன் உரையாடிய போது, அவர்களுக்கு வெளிநாடு செல்வதில் அதிகளவு ஆர்வம் காணப்பட்டது. அதே போன்று பலர் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.

தற்போதும் கூட, யாழ்ப்பாணத்தில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகள், தமது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்ததும், உயர் கல்விக்காக கொழும்பு செல்கின்றனர், அல்லது வெளிநாடு செல்கின்றனர். அனைவரும் இவ்வாறு வெளியேறிவிட்டால், எமது பகுதிகளை யார் முன்னேற்றுவது? இளைஞர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதே நிலைதான் வட பிராந்தியத்தின் பெண்களுக்கும் காணப்படுகின்றது. குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் வழியில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட முயற்சிக்கையில் அதற்கு அனுமதி பெற்றுக் கொள்வது முதல், அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பது வரையில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கி அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் திட்டம் தொடர்பான எண்ணக்கரு என்னிடம் உள்ளது. அதுபோன்று, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு வழங்கல் தொடர்பிலும் திட்டங்களைக் கொண்டுள்ளேன்.

வட பிராந்தியத்திலும் சுற்றுலாவுக்கான பல பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை மேம்படுத்தி, அந்தத் துறையினூடாக பிரதேச மக்களின் வாழ்வாதாரத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கக்கூடிய திட்டங்கள் உள்ளன.

கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பை பலப்படுத்துதல், மீனவர்களின் நிரந்தர வாழ்வாதார உரிமத்தை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு திட்டங்கள் உள்ளன.

கடந்த ஆட்சி காலங்களில் விவசாய மக்களுக்கு சேதன உரப் பயன்பாடு ஊக்குவிப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டம் தொடரவில்லை. அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அவ்வாறான பல திட்டங்களில் தொடர்ச்சித் தன்மை என்பது இல்லை.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால், அந்தத் திட்டம் முழுமை பெறும் வரையிலும், அதன் நிலைபேறாண்மையை உறுதி செய்யும் வகையிலும் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஆதரவுகள் வழங்கப்பட்டு, கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவை அனைத்துக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் குரல் பாராளுமன்றத்தில் அவசியம். துரதிர்ஷ்டவசமாக, இதுவரையில் அவ்வாறான குரல்கள் எதுவும் பாராளுமன்றத்தில் ஒலித்ததில்லை. எனது எதிர்பார்ப்பு, அந்தக் குரலாக திகழ்ந்து, எமது மக்களின் இருப்பையும், வட பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கும் குரலாக திகழ்வதாகும். அதற்காக அனைவரும் என்னை தெரிவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.

கௌரி இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியும் அமெரிக்காவின் திட்ட மேலாண்மை நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட திட்ட மேலாண்மை நிபுணரும் ஆவார். அவர் நியூ பக்கிங்ஹாம்ஷயர் பல்கலைக்கழகத்தில் (யுகே) தனது இளமானி சட்டப்படிப்பை முடித்தத்துடன், தற்போது சர்வதேச மனித உரிமைகள் சம்பந்தமாக சட்ட முதுநிலைமானி மாணவராக இருக்கிறார்.

அவர் தனது சமூகப் பணிகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகள் மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான சர்வதேச ஆணையத்தின் (ICDRHRP) சிறப்பு விருதைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X