2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மக்களிடம் இருந்து துருவப்படும் அரசியல்வாதிகள்

Johnsan Bastiampillai   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

ஓர் ஊரில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் உரையாற்றும்போது, “இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த, இந்தப் பெயருடைய அரசியல்வாதி இல்லையென்றால் கூட, இந்தக் கட்சி வளரும்” என்று கூறுகின்றார். இன்னுமோர் ஊரிலும் அவர் இவ்விதமான கருத்தைக் கூறுகின்றார்.

அநேகமான முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும், இப்படித்தான் உரையாற்றுவதைக் கேட்கமுடிகின்றது. இதனால், அங்குள்ள ஆதரவாளர்களையும் வாக்களித்த மக்களையும் தரக்குறைவாக எடை போடுகின்ற நிலையும் உருவாகியுள்ளது. இது முஸ்லிம் அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது; இன்னும் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்தில், முஸ்லிம்கள் பெருந்தேசியக் கட்சிகளை முழுமையாகச் சார்ந்தே அரசியல் செய்தனர். பின்னர், தமிழ்த் தேசியத்தோடு இணைந்தும் சிறு தூரம் பயணித்தனர்.

தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் ஏற்கெனவே அரசியல் மயப்படுத்தப்பட்டு இருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்துக்குப் பின்னரான அரசியல்மயப்படுத்தல் என்பது, வேறு விதத்தில் அமைந்திருந்தது.

இது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டிருந்தாலும், மறைந்த எம்.எச்.எம் அஷ்ரப் கோலோச்சிய காலத்தில், அது கொழும்பைக் கூட அதிரவைக்கும் வல்லமை பெற்றிருந்தது.

இதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி எனச் சொல்ல முடியாது. அந்தக் காலத்தில், யார் இவ்வாறான ஒரு கட்சியை ஆரம்பித்திருந்தாலும் அது, கணிசமான வெற்றியைப் பெறும் களநிலை இருந்தது என்பதே நிதர்சனமாகும்.  

உண்மையில், அதன் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், மக்களை சார்ந்து அரசியல் செய்ததும், அவருக்குத் துணையாக அக்காலத்தில் இருந்தவர்களின் அணுகுமுறைகளும் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.  

ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஒவ்வொரு பொதுமகனும், கட்சிக்கு அவசியமானவர் என்று அவர் கருதினார். ஆயிரம் பேர் நிறைந்த கூட்டத்திலும் கூட நிற்கின்ற ஆதரவாளர்களை, தனித்தனியாக அடையாளம் காணும் ஆற்றல் அவருக்கு இருந்ததாகச் சொல்வார்கள்.
அதுமட்டுமன்றி, ஏதோ ஓர் அடிப்படையில் மக்களை அடிக்கடி சந்திக்கக் கூடியவராகவும், விரும்பும் வேளையில் மக்கள் சென்று சந்திக்க முடியுமான ஓர் அரசியல் தலைவராகவும் இருந்தார்.

பின்வந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்,  தளபதிகள் போன்றவர்களிடத்தில் இந்தப் பண்பு அடிப்படையில் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் காலத்தில் அல்லது தமக்கு தேவையான காலத்தில், ‘எங்கவீட்டுப் பிள்ளை’ எம்.ஜிஆர் போல ஆகிவிடுகின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், காரியம் முடிந்த பிறகு ‘மாடிவீட்டு மைனர்’ போல மாறி விடுகின்றமை வழக்கமாகி விட்டது.

தேர்தல் முடிந்த பிறகு, தலைவர்களையோ எம்.பிக்களையோ மக்களால் காணக் கிடைப்பதில்லை. திடீரென அவர்கள் ஒருநான் கடற்கரையோரமாக நடந்து வருவார்கள்; வயலில் உள்ள தேநீர் கடைகளுக்கு வருவார்கள்; திருமண வீடுகளில் தலை காட்டுவார்கள். இன்னுமொரு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் போதுதான் பெரும்பாலும் இந்தக் காட்சிகளை காணலாம்.  

ஆனால், பிறகு தேவை ஏற்படும் போது, மக்கள் அவர்களை தேடிச் சென்று சந்திக்க முடியாது போய்விடுகின்றது. மக்களுடன் கிரமமான தொடர்புகளைப் பேணக்கூடிய சரியான ஏற்பாடுகளை, முஸ்லிம் எம்.பிக்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள் பற்றிய சரியான ஆவணங்கள், தரவுகள் என்பன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருப்பதற்கான அத்தாட்சிகள் இல்லை. அப்பிரச்சினைகளை தொடராக வலியுறுத்தி வருவதன் மூலம், அவற்றுக்கான தீர்வுகளை பெறவும் இல்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மோடு அறிவார்ந்தவர்களை, சமூக சிந்தனையாளர்களை, விமர்சகர்களை வைத்திருந்த காலம் மறையேறிப் போய்விட்டது.
இப்போதுள்ள எம்.பிக்களில் அநேகர், தாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் கூட்டத்தையும், சமூக வலைத்தளங்களில் தமக்கு வக்காளத்து வாங்கக் கூடியவர்களையுமே புடம்போட்டு வைத்திருக்க விளைவதைக் காண முடிகின்றது.

அதுமட்டுமன்றி, அவர்களைச் சுற்றியுள்ள கூட்டம் தங்களுக்கென்றே ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு, வெளியாட்கள் யாரும் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படித்தான் மக்கள் சார்பு அரசியலில் இருந்து பல முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் தூர விலகிப் போனார்கள்; இப்போதும் தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால், மக்களும் அவர்களது வாக்குகளும் ‘கறிவேப்பிலை’ போல பாவிக்கப்படுகின்றன. ஆற்றைக் கடந்த பிறகு நீ யாரோ நான் யாரோ என்று, மக்களை கழற்றி விடுகின்ற போக்கை நெடுகிலும் அவதானிக்க முடிகின்றது. இதன் தொடர் விளைவாக, மக்கள் மனங்களில் இருந்து தலைவர்களும் தளபதிகளும் துருவப்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே, சில கட்சித் தலைவர்கள் ‘யார் இல்லாவிட்டாலும் இந்தக் கட்சி வளர்ச்சியடையும்’ என்று மேடைகளில் கூறுவதைக் கேட்க முடிகின்றது. இதன்மூலம் அந்தப் பிரதேசத்தில் தன்னுடன் முரண்பட்டுள்ள அரசியல்வாதிக்கு ‘ஏதோ ஒரு செய்தியை’ அவர்கள் மறைமுகமாக சொல்ல விளைகின்றார்கள்.

இதனை அவதானித்த ஒரு பொதுமகன் இப்படிக் கூறினார். “தலைவரை கொஞ்சக்காலம் விலகச் சொல்லுங்களேன். கட்சி வளர்ச்சியடைகின்றதா, இல்லை வீழ்ச்சியடைந்து விடுமா என்று பார்ப்போம்”  என்று ஹாஸ்யமாக!

அவரது வாதத்தில் உண்மை இருக்கின்றது.

ஓர் அரசியல் கட்சிக்கு அல்லது அணிக்கு, அனைவரதும் பங்களிப்பு அவசியமானது. ஒவ்வொரு வாக்காளனும் ஆதரவாளனும் முக்கியமானவன். மர்ஹூம் அஷ்ரப் அவ்வாறுதான் அரசியல் செய்தார். சேகு இஸ்ஸதீன் போன்றோரின் பிரிவுகள் இதில் விதிவிலக்கு என்றாலும், அவர் ஆதரவாளர்களை மதிப்பவராக இருந்தார்.

அதற்கு மாற்றமான போக்கே அவருக்குப் பின்வந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை, மக்களுக்கான அரசியலில் தோல்வியடைந்தவர்களாக ஆக்கியுள்ளது. ‘இந்தக் கட்சிக்கு எல்லோரும் தேவை’ என்று கூற வேண்டிய அரசியல்வாதிகள், ‘யார் இல்லாவிட்டாலும் கட்சி வளரும்’ என்று கூறுகின்ற எகத்தாளப் போக்கால், ஒரு கட்டத்தில் மக்கள் சலிப்படைந்து போய்விடுகின்றனர்.

முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டள்ள பின்னடைவுக்கு அரசியல்வாதிகளும் அவர்களுக்குக் கூடவேயிருந்து அறிவுரை சொல்கின்ற அதிமேதாவிகளுமே முழுமுதல் காரணமாகும். முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்த தரப்புகள் இதைத் தட்டிக் கேட்க தவறியமையால், அவர்கள் இதனை ஒரு நவீன அரசியல் மாதிரியாக, வழித்தடமாக மாற்றுவதற்கான தைரியத்தை வழங்கியது.

முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை காலமும் வழங்கிய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கவில்லை.

ஜம்மியத்துல் உலமா சபை உள்ளடங்கலாக, தலைப்பிறை பார்ப்பதற்காக ஒன்றுகூடுகின்ற முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் விட்ட தவறுகளைத் தட்டிக் கேட்கத் தவறிவிட்டன. ஒவ்வோர் ஊரில் உள்ள பள்ளிவாசல்களுக்கும் இதில் தார்மீகப் பொறுப்புள்ளது.  

அதுபோல, பொன்னாடைகளுக்காகவும் சமாதான நீதிவான் பதவிகளுக்காகவும் விருதுகளுக்காகவும் அலைகின்ற பிரிவினர், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சீரழியக் காரணமானவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க தைரியம் கொள்ளவில்லை.

கல்விமான்கள், புத்திஜீவிகள், புதுமை படைக்கப் போவதாகக் கூறுகின்ற தரப்பினர் யாரும், அரசியல் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கத் துணியலில்லை. சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது கூட, ‘தெய்வக் குற்றம்போல’ மாற்றப்பட்டிருப்பதை என்னசொல்ல?

மிக முக்கியமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை பெரும் எதிர்பார்ப்புகளோடு மறைந்த தலைவர் எம்.எச். எம் அஷ்ரப் நிறுவினார். ஆனால், அவரது கனவுப் பாதையில் அப்பல்கலைக்கழகம் செல்கின்றதா என்ற கேள்வி, பலருக்கும் உள்ளது.

இலங்கை அரசியலில், பல்கலைக்கழகங்களின் வகிபாகம் அளப்பரியது. சிங்கள மக்கள் சார்பு அரசியல் கருத்தியல்களின் விளைநிலங்களாக தென்னிலங்கை பல்கலைக்கழகங்கள் இன்னும் இருக்கின்றன.

சமகாலத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவை தமிழர் அரசியலை வழிநடத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தை எடுத்திருக்கின்றன. ஓர் அழுத்த சக்தி போலவும் விமர்சகர் குழு போலவும் அவை செயற்படுகின்றன.

இதனையொத்த கனவுகளோடு, முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஆரம்பத்தில் முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு தாக்கத்தை செலுத்த முற்பட்டதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆயினும், கடந்த 20 வருடங்களாக முஸ்லிம் அரசியலை ஒழுங்குமுறைப்படுத்துவதில், அதற்கான வழிகாட்டியாக செயற்படுவதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவ, ஆசிரியர் சமூகமானது, குறிப்பிடத்தக்க பணியை ஆற்றியதாக ஆறுதலடைய முடியாத நிலையே உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, மக்களை மறந்த அரசியல்வாதிகள் பெருவளர்ச்சி கண்டிருப்பதுடன், ‘லீடர்’களை விட ‘டீலர்’கள் அதிகளவில் உருவாகியுள்ளதையும் காணமுடிகின்றது. இது முஸ்லிம் அரசியலை இன்னும் கெடுத்து, குட்டிச்சுரவாக்கியுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் மக்களை மறந்த அரசியல் போக்கிற்கு, அவர்களது தவறுகளைக் கண்டுகொள்ளாத சமூகத்தின் மௌனமும் மிக முக்கிய வினையூக்கியாக அமைந்திருக்கின்றது. இந்த மௌனம் பலமாக கலையப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .