Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ன்று தசாப்தங்கள் நீண்ட இலங்கையின் உள்நாட்டுப்போரை ஆய்வுரீதியாக ஆய்வோர் பலருக்கு எழுகின்ற இரண்டு கேள்விகளை மையமாகக் கொண்டு கடந்த வாரக் கட்டுரை அமைந்தது. முதலாவது கேள்வி,விடுதலைப் புலிகள் ஏன் அரசியல் சமரசத்தைப் பல தடவைகள் மறுத்தனர்? இரண்டாவது வினா விடுதலைப் புலிகள் அழிக்கப்படும் அபாய நிலையிலும் ஏன் தமது போர் உத்தியைத் தொடர்ந்தனர்? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை ஆய்ந்த கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரை அமைகிறது.
2002இல் தொடங்கி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது, இராணுவ அதிகார சமநிலையின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்பதைப் புலிகள் நம்பினர். எனவே, இராணுவ வலிமை மூலம் பிரிவினை சாத்தியம் என்பது புலிகளின் மூலோபாயத்தின் மையமாக இருக்கலாம். அது உண்மையில் மாயையானதாகவும் அரசியல் நிலைவரங்கள் புரியாத அப்பாவித்தனமாகவும் மாறியது.
2002 முதலான காலப்பகுதியில் பெருமளவிற்கு, விடுதலைப் புலிகளும் அரை-அரசு வலையில் சிக்கினர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகள் உறுதியான இராணுவ பிரசன்னத்தை நிலைநாட்ட முடிந்தது, அது தனது சொந்த வற்புறுத்தல், நிர்வாகம் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு பிராந்திய குட்டி அரசாக நிறுவனங்களையும் நடைமுறைகளையும் அமைத்தது. விடுதலைப் புலிகள் தனியான நீதித்துறை, பொலிஸ் படை, உள்ளக வரிவிதிப்புக்கான இயந்திரம் மற்றும் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான இயந்திரங்களைப் பராமரித்து வந்தனர்.
இவை அரசு அதிகாரத்தின் பழமையான நிறுவனங்களாக இருந்தன, இது அடிப்படையில் இராணுவத் திறனை மையமாகக் கொண்ட அரசின் சமமான பழமையான கருத்தாக்கத்தால் ஆதரிக்கப்பட்டது. எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒருவேளை, அவை அரசமைப்பிற்கான ஆயுதப் போராட்டத்தின் உறுதியான சாதனைகள் என்று நினைத்திருக்கலாம். ஆனால், இந்த ‘சாதனைகளின்’ பிரச்சினை என்னவென்றால், அவை விடுதலைப் புலிகளை அரசியல் சமரசம் என்ற அதிகாரப்பகிர்வு அல்லது கூட்டாட்சி முறை பற்றிச் சிந்திக்க விடாமல் தடுத்தது.
2002-2004 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிடிவாதமான நடத்தையின் ஒரு முக்கிய விளைவு சர்வதேச அனுதாபத்தை மொத்தமாக இழந்தமையாகும்.
2003 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புலிகள் ஒருதலைப்பட்சமாக சமாதான பேச்சுக்களிலிருந்து விலகிச் செல்லும் வரை மேற்குலக அரசாங்கங்களுக்கிடையில் இருந்த மனோபாவம் விடுதலைப் புலிகளை - ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை இருந்தபோதிலும் - ஒரு சட்டபூர்வமான கட்சியாகவும் சமாதான முன்னெடுப்புகளில் பங்காளியாகவும் கருதுவதாகும்.
இதே அரசாங்கங்கள் புலிகளின் நடத்தையால் அவர்களைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்தன. உலக முன்னணிஅரங்காடிகளின் முறையீடுகளுக்கு பலமுறை பதிலளிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்குப் புலிகள் பிடிவாதமாக மறுத்ததால், இலங்கையில் சமாதானத்திற்குப் புலிகளே முக்கிய தடையாக இருப்பதாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முடிவுக்கு வந்தன. அதற்கான வழியை விடுதலைப் புலிகளே ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
மஹிந்த தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது பாரிய இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தபோது,பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்திற்கான விருப்பத்தை ஆராயுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு உலகளாவிய செயற்பாட்டாளர்கள் ஆர்வமாக இருக்கவில்லை.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்துடன் இணக்கம் அடைந்ததாகத் தோன்றுகிறது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகித்த இணைத்தலைமை நாடுகளைப் பொறுத்தவரைச் சாத்தியமான தீர்வுக்கு விடுதலைப் புலிகளைப் பங்காளி இல்லாமல் செய்வது தவிர்க்கவியலாதது என்று நினைத்தார்கள். அதன்படி, அவர்களை முழுமையாக அகற்றுவதற்கான நடைமுறைத் தேவையை அவர்கள் முன்னிறுத்தினர்.
அந்த யதார்த்தத்தை உண்மையாக்க ராஜபக்ஷ அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியால் சர்வதேச சமூகம் வெளிப்படையாகக் கலக்கமடையவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
இனி இரண்டாவது வினாவுக்குத் திரும்புவோம். மேலே முன்வைக்கப்பட்ட இரண்டாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், விடுதலைப் புலிகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகத் தொலைவில் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் ஏன் போரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதுதான் உண்மையான புதிர். இதே புதிர் இலங்கை அரசாங்கத்திற்கும் பொருந்தும். புலிகளால் விலையுயர்ந்த இராணுவ முட்டுக்கட்டைக்குள் தள்ளப்படும் அபாயத்தை எடுத்துக் கொண்டு, ராஜபக்ஷ ஆட்சி ஏன் போரைத் தேர்ந்தெடுத்தது? இந்த புதிருக்குப் பல விளக்கங்கள் உள்ளன.
ஒன்று, இரு தரப்பும் சூழ்நிலைகளின் தர்க்கத்தால் ஒரு புதிய கட்ட போருக்குள் தள்ளப்பட்டது. கடும்போக்கு சிங்கள தேசியவாத கட்சிகள் மற்றும் சித்தாந்த சக்திகளின் கூட்டணியாக இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு, புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கான உண்மையான முயற்சியானது தவிர்க்கமுடியாத அரசியல் நிர்ப்பந்தமாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கும், யுத்தத்திற்குத் திரும்புவது முற்றிலும் அவசியமானது. குறிப்பாக இடைக்கால பிராந்திய அரசாங்கத்திற்கான அதன் முயற்சி தோல்வியடைந்த பின்னர் அவர்கள் அதையே விரும்பினர். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் மீதான நிரந்தர அவசரகாலச் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் தேவைப்பட்டது.
அரசியல் ஈடுபாட்டிற்கான இடமும் விருப்பங்களும் கிடைக்காதபோது, ஒவ்வொரு தரப்பும் தங்கள் சொந்த நிபந்தனைகளின்படி மகிழ்ச்சியுடன் போரைத் தொடங்குவதற்கான தர்க்கம் இருந்தது.
இரண்டாவது விளக்கம் இராணுவ நோக்கங்களைப் பற்றியது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இலங்கை அரசைப் போரில் ஈடுபடுத்துவதே புலிகளின் நோக்கமாக இருந்தது என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் தேர்தல் வெற்றி மற்றும் புதுடில்லியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவதைப் புலிகள் கணக்கிட்டதாகத் தெரிகிறது. அந்தச் சூழ்நிலை, புதுடில்லியில் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தின் அரசியல் ஆதரவுடன், இலங்கை அரசாங்கத்தின் மீது இராணுவ முட்டுக்கட்டையை வலுக்கட்டாயமாகத் திணிக்க அவர்களுக்கு உதவும் என்று புலிகள் நினைத்திருந்தார்கள்.
இச்சூழலின் மூலம் புலிகள் என்ன சாதிக்க விரும்பினர் என்பது தெளிவாக இல்லை. எவ்வாறாயினும், பாரிய அளவிலான போரால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடியின் பின்னணியில், இலங்கையின் மோதலில் இந்தியா மீண்டும் நுழைவதை விடுதலைப் புலிகள் விரும்பியிருக்கலாம் என்பது ஓரளவு தெளிவாகிறது. எனவே, அந்நிய மனிதாபிமானத் தலையீடு என்பது புலிகள் ஒருவேளை, எதிர்பார்த்த ஒரு முக்கிய விளைவு. ஆனால், விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தது.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அதன் அதிகாரத்தை உறுதியான நிலையில், மீண்டும் நிறுவியது. புலிகளால் எதிரியின் ஆதரவுடன் ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்க முடிந்தது. ஆனால், அதைத் தடுப்பதற்கு அல்லது நிர்வகிப்பதற்குக் குறிப்பிடத்தக்கச் சர்வதேச பதில் எதுவும் இருக்கவில்லை. அது சர்வதேசத்தின் கவலைக்குரியதாக இல்லை.
இலங்கையின் மோதல் தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளின் நடத்தை மற்றும் நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது.
எந்தவொரு அரசியல் அல்லது மனிதாபிமானப் பாதிப்புக்களையும் பொருட்படுத்தாமல், ஒருதலைபட்ச இராணுவ வெற்றிக்கான இலங்கை அரசியல் மற்றும் இராணுவத் தலைமையின் விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் அது குறைத்து மதிப்பிட்டுள்ளது. இலங்கை அரசின் கணக்கிடப்பட்ட இராணுவ சூதாட்டம், அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் மீது வெற்றி பெற்றது.
இது மற்றொரு முக்கியமான புள்ளியை நிரூபித்தது: 9/11க்குப் பிந்தைய உலகில், ஒரு பிராந்திய அல்லது உலகளாவிய பெரிய சக்தியால் ஆதரிக்கப்படும் வரை,அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தக்கவைக்கச் சாதகமான சூழ்நிலைகள் இல்லை.
போருக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் இலங்கையின் அரசியல் சமன்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாததால், அரசியல் செயல்பாட்டில் என்ன நடக்கும் என்பது முக்கிய வினாவானது. இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் மையத்தில் மூன்று பரந்த பிரச்சினைகள் இருந்தன. அவற்றை ஜனநாயகமயமாக்கல், இராணுவமயமாக்கல் மற்றும் அதிகாரப்பகிர்வு என மூன்றாகக் குறிக்கலாம்.
பெருமளவிலான உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் குடிமக்களை மீள் குடியேற்றுவது, அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவை உடனடி முன்னுரிமைகளாகக் குறிக்கப்பட்டன. பரந்த மற்றும் உடனடி பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
இவை அனைத்தும் உள்நாட்டுப் போரிலிருந்து உள்நாட்டு அமைதிக்கான மாற்றத்தை அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் நிர்வகித்தல் என்ற வடிவில் அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக அமைந்தன. போரில் வெற்றி பெறுவதும் அமைதியை வெல்வதும் சமமான அதேவேளை, மிகவும் வேறுபட்ட சவால்கள். முதலாவது தானாக இரண்டாம் நிலைக்கு வழிவகுக்காது. போரை வெல்வதானது சமானத்திற்கு வழிசெய்யாது என்பதை இலங்கை அனுபவம் மீண்டுமொருமுறை நிரூபித்தது.
07.05.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago