Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 08
மலையக மக்களுக்கு எதிரான விரோதம், 1970களின் நடுப்பகுதியில் முனைப்படைந்து, பல்வேறு வழிகளில் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. குறிப்பாக, தோட்டங்களில் இருந்து அவர்களை விரட்டும் நிகழ்ச்சி நிரல், புதிய கட்டத்தை அடைந்தது.
1977ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் தாம் வெற்றிபெறுவதற்கான திட்டத்தின் ஒருபகுதியாக, நுவரெலியா மாவட்டத்தில் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கையாக, பிரதான வீதிகளின் ஓரங்களிலுள்ள தோட்டக்காணிகளில் 7,000 ஏக்கர் காணியை சுவீகரித்து, சிங்கள மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் முயற்சியை அரசாங்கம் தொடங்கியது. மக்களிடமிருந்து இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
மக்களின் எதிர்ப்பையும் மீறி, அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தது. 1977ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி, டெவன் பகுதியில் தோட்டக்காணியை அளந்து, ஒதுக்க வருகைதந்த அரசாங்க நில அளவையாளர்களுக்கும் அப்பகுதி தோட்டத்தொழிலாளர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காது, காணிகளை அளக்க முயன்ற அளவையாளர்களை, தோட்டத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பொலிஸாருடன் அவ்விடத்துக்கு மீண்டும் வந்த அளவையாளர்களை எதிர்த்து, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, பொலிஸார் நேரடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் வட்டகொட, யொக்ஸ் போர்ட் தோட்டத்தை சேர்ந்த சிவணு லெட்சுமணன் என்ற இளைஞன் கொல்லப்பட்டார்.
இந்நிகழ்வு மலையகமெங்கும் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடங்கின. இவ்வாறு, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை பொலிஸார் ஒருபுறமும் காடையர்கள் மறுபுறமும் தாக்கினார்கள். மக்கள் போராட்டம் விரிவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள் எனப் பலதளங்களில் இருந்து ஆதரவு பெருகியது.
எதிர்ப்புகளின் ஒருபகுதியாக, சிவணு லட்சுமணன் கொல்லப்பட்டதை எதிர்த்து ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினார்கள். ஹட்டன் நகரில், இந்த ஊர்வலத்தை இடைமறித்து, பொலிஸாரும் காடையர்களும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களும் தாக்கப்பட்டு, பலர் பலத்த காயமடைந்தனர். பல மாணவர்கள், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள்.
இந்தப் போராட்டத்தை அடுத்து காணி சுவீகரிப்புத் திட்டம் அரசாங்கத்தால் கைவிடப்பட்டது. மலையக மக்களின் வரலாற்றில், இது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இந்த நிகழ்வுகளை சௌமியமூர்த்தி தொண்டமான், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
காணிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்டு, அரசியல் அதிகாரமின்றி இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இது வாய்ப்பானது, குறிப்பாக, நுவரெலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காமினி திஸாநாயக்கவுக்கு, தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரானார் தொண்டமான். ஆனால், அவரால் மலையக மக்களுக்கு எதிரான காணிப் பங்கீடுகளையோ ஐ.தே.க அரசாங்கம் முன்னெடுத்த குடியேற்றத் திட்டங்களையோ நிறுத்தவோ தடுக்கவோ முடியவில்லை.
இதில் கவனிப்புக்குரியது யாதெனில், எந்த காமினி திஸாநாயக்கவோடு கூட்டுச்சேர்ந்து, சிவனு லெட்சுமணன் மரணத்தை வைத்து அரசியல் இலாபம் தேடினாரோ, அதே திஸாநாயக்கதான் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்து, காணிகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதிலும் மலையகத் தமிழர்களை நிலமற்றவர்களாக ஆக்குவதிலும் பிரதான பங்கு வகித்தார். இக்காலப் பகுதியில், மலையக மக்களைத் தொடர்ந்தும் நிலமற்றவர்களாகவும் வலுவற்றவர்களாகவும் ஆக்கும் திட்டங்கள் நடந்தேறின. உதாரணமாக, மூன்றை இங்கு குறிப்பிடலாம். அவற்றில்;
முதன்மையானது, கொத்மலை நீர்தேக்கத் திட்டம். இத்திட்டத்துக்காக 3,961 குடும்பங்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டன. இவ்விடப்பெயர்வு சொல்லொனாத் துயரங்களை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தியது.
இத்திட்டம் குறித்து, இன்றும் பெருமையாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். தேசியநலன் கருதி இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்குப் பொருத்தமான, மேலும் பயனுள்ள வாழ்விடங்கள் வழங்கப்பட்டன. இது அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தமையாலேயே சாத்தியமானது என்று இ.தொ.க நீண்டகாலமாகச் சொல்லி வருகிறது.
கொத்மலைத் திட்டத்துக்கு நிதியுதவி அளித்த சுவீடனின் அபிவிருத்தி அமைச்சு, குறித்த திட்டம் தொடர்பில் இரண்டு மதிப்பீடுகளை நடாத்தியது. முதலாவது, 1990ஆம் ஆண்டு நடத்தப்பட்ட On evacuation of people in the Kotmale Hydro Power Project: Experience from a socio-economic impact study என்ற தலைப்பில் அமைந்த ஆய்வு. இரண்டாவது, 1992ஆம் ஆண்டு வெளியான A Flowed Success: An Evaluation of SIDA Support to Kotmale Hydropowe Project என்ற அறிக்கை.
இவையிரண்டும், இந்த இடப்பெயர்வின் அவலங்களை முழுமையாக ஆவணப்படுத்துவதோடு இ.தொ.கா சொல்லிவந்த பொய்களை அம்பலப்படுத்துகிறது.
இரண்டாவது, 1988ஆம் ஆண்டு மலையகத்தில் 14,710 ஏக்கர் காணியை சிங்கள மக்களுக்குக் கொடுக்கும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் காமினி திஸாநாயக்கவே அத்திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அங்கிகாரம் பெற்றார். அமைச்சரவையில் இருந்த தொண்டமானால் எதுவும் செய்ய இயலவில்லை.
மூன்றாவது, 1988இல் மலையகத்தில் அரச காணிகளில் சட்ட விரோதமாக அத்துமீறிக் குடியேறி உள்ளவர்களுக்கு உறுதிகள் வழங்கப்பட்டன. கண்டியில் 3,000 ஏக்கரில் குடியேறியிருந்த 3,500 குடும்பங்களுக்கும் நுவரெலியாவில் 65 ஏக்கரில் குடியேறியிருந்த 150 குடும்பங்களுக்கும் பதுளையில் 200 ஏக்கரில் குடியேறியிருந்த 200 குடும்பங்களுக்கும் இரத்தினபுரியில் 1,500 ஏக்கரில் குடியேறியிருந்த 1,500 குடும்பங்களுக்கும் காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, மிகச்சொற்பமான அளவில் அத்துமீறிக் குடியேறியிருந்த மலையகத் தமிழர்களுக்கு உறுதிகள் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் அக்காணிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். உதாரணமாக, 1987இல் போகாவத்தையில் குடியிருந்த தமிழர்கள் அனைவரும், பொலிஸாராலும் குண்டர்களாலும் அடித்து விரட்டப்பட்ட பின்னர், அந்நிலங்கள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இவையனைத்தையும் தனது அமைச்சுக் கதிரைக்காக, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் தொண்டமான்.
தாங்கள் தெரிவுசெய்து அனுப்பிய பிரதிநிதிகளால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதை உணர்ந்த மலையக மக்கள், தன்னெழுச்சியாகவே தங்களது உரிமைகளுக்காகப் போராடினார்கள். இதற்கும் மூன்று உதாரணங்களைக் காட்டவியலும்.
முதலாவது, பிரதான வீதிகளை அண்மித்த காணிகளை சிங்களவர்களுக்கு வழங்கும் காமினி திஸாநாயக்கவின் திட்டத்துக்கு மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். நிலமற்ற தங்களுக்கு முதலில் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்கள். இவ்வெதிர்ப்பால் இத்திட்டங்கள் பல செயற்படுத்தப்படவில்லை.
இரண்டாவது. நானுஓயா, தலவாக்கலஓயா ஆகிய ஆற்றங்கரைகளில் மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளைக் கைவிடும்படியும் அப்பகுதியை அரசாங்கம் கையகப்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையெதிர்த்து அம்மக்கள் தொடர்ச்சியாக வீரத்துடன் போராடி, தங்கள் விவசாயக் காணிகளை பாதுகாத்துக் கொண்டார்கள்.
மூன்றாவது, கொத்மலைத் திட்டத்தைப் போன்றே தலவாக்கலையில் ஒரு நீர்த்தேக்கத்தை அமைக்கும் திட்டம் பற்றிய செய்திகள் 1988இல் வெளியாகின. இத்திட்டத்தின்படி, மலையக மக்கள் விவசாயம் செய்யும் காணிகளும் தலவாக்கல நகரமும் இல்லாமல் போவதோடு மக்களும் மீள்குடியேற்றப்படுவார்கள் என்பதாக இருந்தது. இத்திட்டத்தை எதிர்த்து, மக்கள் போராடி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது செய்தார்கள்.
இவ்வாறு மலையக மக்களின் போராட்டங்கள் வெற்றியளித்தாலும் பரந்த தளத்தில் மலையக மக்களின் சவால்கள் அதிகரித்த வண்ணமே இருந்தன. இக்காலப் பகுதியில் மலையக மக்களின் வீட்டுரிமை, காணியுரிமை, வேலைவாய்ப்பு, நியாயமான சம்பளம், கல்வி என அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்தும் அவர்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவே நிறுவியது.
அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சீரழிந்தது. மலையக மக்களைத் தேசிய இனமாக அங்கிகரிப்பது என்பது, இலங்கையின் ஏனைய இனங்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசியவாதமும் வெவ்வேறு காரணங்களுக்காக மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்கத் தயங்கின. இதை அடுத்தவாரம் பார்க்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
9 hours ago