Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஐயூப்
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது.
ஆனால், இனப்பிரச்சினை தீரவில்லை. மாறாக, அரசியல்வாதிகள் இனப்பிரச்சினையை தமது அரசியலுக்காக பாவிக்கிறார்கள் என்பது இந்தக் காலக்கெடுக்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக, ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார். அவ்விவாதம் முடிவடைந்ததன் பின்னர், இப்பிரச்சினையைப் பற்றி பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் அப்போது கூறினார்.
அதன்படி டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் பேச்சுவார்ததைக்கு அழைத்தார். சில கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. அக்கூட்டத்தின் போது தமிழ் கட்சிகள் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்குமாறு கூறின. ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டார். தீர்வைத் தேடி ஜனவரி மாதத்தில் தொடர்சியாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் வாக்குறுதியளித்தார்.
பின்னர், அவர் ஜனவரி ஐந்தாம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனவரி 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இனப்பிரச்சினையைப் பற்றி சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவாக அப்போது அவர் கூறினார். எனினும் தமிழ்க் கட்சிகள் அப்போதே இது வெறும் ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்து கொண்டனர்.
உடனடியாகத் தீர்ப்பதாக ஜனாதிபதி ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் நிறைவேறறப்படாமையே அதற்குக் காரணமாகும். அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், போர்க் காலத்தில் படையினர் மக்களிடம் பறித்த காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். 10ஆம் திகதி கூட்டத்தைப் பற்றியும் அவர்கள் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. அக்கூட்டத்துக்கு நிகழ்ச்சி நிரல் ஒன்று இல்லாமை அதற்கு பிரதான காரணமாகியது. கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவின் போது உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பூரணமாக நிறைவேற்றுவதாக கூறினார். கடந்த 26ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளினதும் கூட்டமொன்றை அவர் கூட்டிய போதிலும், அதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் வரவில்லை.
இச்சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி, சகலரும் அறிந்தவை தான். ஆயினும், அவற்றை ஒன்று திரட்டிப் பார்ககும் போதே என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதியின் திட்டங்கள் நடைமுறை சாத்தியமற்றதாகவே தென்பட்டன. 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று ஜனாதிபதி கூறும் போது, அதற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்தன. எனவே அதை எவரும் நம்பவில்லை.
அதனாலோ என்னவோ, டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி ‘சர்வகட்சி’ கூட்டத்தின் போது, கடந்த காலங்களில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக இருந்தவர்களும் ஜனாதிபதியின் திட்டங்களை எதிர்த்துப் பேசவில்லை.
ஜனவரி ஐந்தாம் திகதியாகும் போது, தமிழ் கட்சிகள் தமது நம்பிக்கையின்மையை ஜனாதிபதியின் முகத்துக்கே கூறினர். தைப்பொங்கலன்று ஜனாதிபதியே தமது வாக்குறுதியை மாற்றிக் கொன்டார். இரண்டு மாதங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று முன்னர் கூறியவர், அன்று அதனை தீர்ப்பதற்காக தமிழ்க் கட்சிகள் முன்வைத்த மூன்று கட்ட திட்டத்தில் இரண்டாவது கட்டமான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பூரணமாக நிறைவேற்றுவதை மேலும் இரண்டு வருடங்களில் செய்வேன் என்றார். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பேன் என்ற பேச்சு இப்போது இல்லை.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை மேலும் இரண்டு வருடங்களில் பூரணமாக நிறைவேற்றுவேன் என்பது முன்னைய வாக்குறுதியைப் பார்க்கிலும் யதார்த்தபூர்வமானதாகும். அதையாவது அவர் நிறைவேற்றுவாரா என்பது வேறு விடயம். இதனை அடிப்படையாக வைத்தே கடந்த 26 ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் போதும் எத்தனை கட்சிகள் நேர்மையாக நடந்து கொண்டன என்பது கேள்விக்குறியாகும்.
‘யுத்துகம’ (கடமை) என்ற அமைப்பின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க மட்டும், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்து பேசினார். அப்போது ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு அவ்வதிகாரங்கள் அமலாக்கக்கூடிய வகையில் வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அது பாராட்டக்கூடிய விடயமாகும். அரசியலமைப்பின் மூலம் அவ்வதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை அமலாக்குவதற்கான நடைமுறை பொறிமுறைகளை உருவாக்குவது மட்டுமே மீதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அது உண்மை தான். காணி, பொலிஸ் அதிகாரங்கள் அரசியலமைப்பில் மாகாண அதிகார பட்டியலில் இருக்கின்றன. ஆயினும் மாகாண சபைகள் அவ்வதிகாரங்களை பாவிப்பதாயின் அதற்காக மாகாண பொலிஸ் பிரிவொன்றையும் காணி ஆணைக்குழு ஒன்றையும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதி உருவாக்க வேண்டும்.
இதற்குத் தான் ஜனாதிபதி இப்போது இரண்டு வருடங்கள் தேவை என்கிறார். எதற்காக அவ்வளவு காலம்? நாம் ஏற்கெனவே பிரிதொரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல், இனப்பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் இதுவே சிறந்த தருணமாகும்.
ஏனெனில், இப்போது தெற்கில் இனவாத சக்திகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருக்கின்றன. அவர்கள் பலமாக இருந்த காலத்தில், ஜனாதிபதி ஒருவர் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தால், அவர்கள் இந்நேரம் எத்தனை பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி பெரும்பான்மையின மக்களை தூண்டிவிட்டு இருப்பார்கள்?
சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பூரணமாக அமலாக்கி, இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றையும் காண்பேன் என்று நடைமுறை சாத்தியமற்றதையும் கூறியவர் நடைமுறை சாத்தியமானதை நிறைவேற்ற இரண்டு வருடங்களை கேட்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க, தந்திரங்களில் அவரது மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவையும் விஞ்சியவர் என்று கூறினாலும் பிழையாகாது. 2017ஆம் ஆண்டு அவருக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை ஏற்பட்டது. அப்போது அவர் சகல அரசியல் கட்சிகளும் ஏற்றும் கொண்ட கலப்பு தேர்தல் முறையை மாகாண சபைகள் விடயத்திலும் அறிமுகப்படுத்தி அதனை சாதித்துக் கொண்டார்.
இப்போது அவருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திப் போடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர் முதலில் எவரும் மறுக்காத அம்மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை 8,000 இருந்து 4,000 வரை குறைக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
தேர்தலை பிற்போடவே அவர் இதனை முன்வைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறவே அவர் தேர்தல் சட்ட திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முயன்றார். அதுவும் எவரும் மறுக்க முடியாத விடயமாகும்.
அதற்குள் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு இருப்பதாக கூறினார். அதை அவ்வாணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா மறுத்தார்.
அதேபோல் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தேர்தல் பிரசாரங்கள் தடையாக அமையலாம் என்றார். ஆனால், தேர்தல் ஆணைக்குழு அதையும் பொருட்படுத்தவில்லை. இப்போது தேர்தலுக்கு பணம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அதுவும் மிகவும் பலமான வாதமாகும். அத்தோடு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே இப்போது பிளவுகளும் உருவாகி இருக்கின்றன.
எனவே, தமிழ்த் தலைவர்களும் அக்கறைகாட்டாத ஒரு சந்தர்ப்பத்தில் தாமாக முன்வந்து இனப்பிரச்சினையை தீர்க்கப்போகிறேன் என்று கூறி, காலத்தை வீணடிக்கும் வகையில் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதும் வேறு காரணங்களுக்காகவா என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது, அரசாங்கம் இந்தப் பிரச்சினையை பாவித்து பெரும்பான்மை சமூகத்திடையே குழப்பத்தை ஏற்படுத்தி பொருளாதார பிரச்சினைகளிலிருந்து அவர்களது கவனத்தை திருப்பவா முயல்கிறது?
அல்லது, இந்திய உதவி மிகவும் அவசியமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய தலைவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்வதை இலகுவாக்கி, அதன் மூலம் அவர்களது மனதை வெல்லவா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது? சிலவேளை, அண்மைக்கால அடக்குமுறைகள் காரணமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கும் அரசாங்கம் மனித உரிமை அமைப்புகளின் மனதை வெல்ல முயல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
காலத்துக்குக் காலம் அரசியல்வாதிகள் இவ்வாறு செய்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் ‘தேர்டீன் பிளஸ்’ (13+) திட்டமும் அதுபோன்ற ஒன்றாகும். அதுவும் அடிக்கடி வெளியே எடுத்து காட்டிவிட்டு மீண்டும் பெட்டிக்குள் போட்டுக் கொள்ளும் ஒரு கருவியாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்திலும், அவர் சில சிறிய தமிழ் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, இந்த வாக்குறுதியை அளித்திருந்தார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago