Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபிராமி விமலாதித்தன்
(வலுவாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
இலங்கை வலுவாதார அபிவிருத்தி சபை)
வலுவாதார அபிவிருத்திக்கான உலகளாவிய 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலானது, அபிவிருத்திச் செயன்முறையின் மத்தியில் மக்களை செயற்பட வைக்கின்றது. தற்போது உலகம் எதிர்நோக்கியுள்ள பல சவால்களை எதிர்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையானது (UN), உலக நாடுகளை வலுவாதார அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றுவதற்கு முனைகின்றது. வலுவாதார அபிவிருத்தி என்பது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளில் இடையூறை ஏற்படுத்தாத வகையில் தற்போதைய தேவைகளுக்கு இடமளிக்கும் அபிவிருத்தியாகும். பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றாடல் என்பவை வலுவாதார அபிவிருத்தியின் மூன்று தூண்களாக ஐக்கிய நாடுகள் சபையினால் இனங்காணப்பட்டுள்ளது.
அனைத்தையும் உள்ளடக்கிய செயன்முறை மூலம் தயாரிக்கப்பட்ட 2030 நிகழ்ச்சி நிரலானது 17 வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் (SDGs) மற்றும் 169 தொடர்புடைய அடைவுகளை உள்ளடக்கியுள்ளது.
எமது சமகால நிலைமைகளில் காலநிலை மாற்றம் என்பது நாம் எதிர்நோக்குகின்ற மிகப்பெரும் சவால்களில் ஒன்றாகும் இது இலக்கு 13இனால் உற்று நோக்கப்படுகின்றது. உலக வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு, கடல் அமிலமயமாதல் மற்றும் பிற காலநிலை மாற்ற தாக்கங்கள் கடலோரப் பகுதிகளையும் தாழ்வான கடலோர நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கையானது 2018ஆம் ஆண்டின் உலகளாவிய தரவரிசையில் 2வது மற்றும் 2019ஆம் ஆண்டில் 6வது இடத்தில் பட்டியலிடப்பட்டு காலநிலை அபாயக் குறியீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் காலநிலையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட அனர்த்தங்கள் உட்பட நாட்டிற்கு முகங்கொடுக்க நேர்ந்த அதிகரித்துச் செல்லும் சுற்றாடல் சவால்களையும் கவனத்திற் கொள்ளும் போது, பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement) மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சன்டாய் சட்டகம் (Sendai Framework) உட்பட சுற்றாடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் என்பன வாயிலாக வலுவாதார அபிவிருத்திக்கான பூகோள ஊக்குவிப்புக்களை இலங்கை வெற்றி கொள்ள முயல்கின்றது.
உலகில் 120ற்கும் அதிகமான நாடுகளில் சதுப்பு நில கண்டல் தாவர பரம்பல்கள் காணப்படுகின்றன. உலகில் 73 வகை கண்டல் தாவர இனங்கள் 152,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது. இவ்வகைக் கண்டல் தாவரங்கள் வெப்பவலய, இடைவெப்ப வலய, நாடுகளிலேயே பெருமளவில் காணப்படுகின்றது. கண்டல் சதுப்பு நில காடுகள் (mangrove) இலங்கையின் பெருமளவிலான கடனீரேரிகள், மற்றும் நதிமுகத்துவாரங்கள் போன்ற பகுதிகளில் அதிகளவிலான கடலோர சூழற்றொகுதியை உருவாக்குகின்றன.
2011ல் இலங்கையில் கண்டல் தாவர வனங்கள் 16,037 ஹெக்டயர் காணப்படுகின்றது என இலங்கையின் வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது, இது மொத்த நிலப்பரப்பில் 0.24% ஆகும். இலங்கையில் 21 வகை கண்டல் தாவர இனங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேல் மற்றும் வடமேற்கு மாகாண கடற்கரை ஓரங்களில் பரந்து காணப்படுகின்றன. இவை உவர் நீரில் மட்டுமன்றி நன்னீரிலும் வளரக்கூடிய இவ்வகைத் தாவரங்கள் சதுப்பு நிலங்களிலேயே வளர்கின்றன.
மேலும் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு தொடர்பான ‘ரம்சார் கொள்கையானது’ (Ramsar Convention) இலங்கையில் ‘ரம்சார்' சதுப்பு நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக, புந்தள வனம், மடு ஆறு பிரதேசம், குமண வனம், ஆனவிழுந்தாவ (சிலாபம்) பகுதி மற்றும் வங்காலை (மன்னார்) ஆகியவற்றை பிரகடனப்படுத்தியுள்ளது.
இச்சதுப்பு நில தாவரங்களானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வகைத் தாவரங்களானது வளியிலுள்ள கார்பன்டை ஒக்சைட்டை உறுஞ்சுதல் மற்றும் பிரித்தெடுத்தல், வடிகட்டுவதன் ஊடாக கரையோர வளிமண்டலத்தை பாதுகாத்து அபாயகரமான காலநிலைமாற்ற அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைக்கின்றதுடன் கரையோர மண்ணரிப்பினையும் தடுக்கின்றது. இச் சுற்றுச்சூழல் தொகுதி கடல் நீர் மற்றும் அலை நடவடிக்கைகளின் செல்வாக்கிற்கு அடிக்கடி உட்படுத்தப்படுகின்றமையால் பல்வகை உயிரினங்கள், தாவர இனங்கள் போன்ற உயிர்ப்பல் வகைமைகள் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடமாக உருவாகின்றது. மேலும் சுற்றுலாத்துறைக்கு அதிகளவிலான பங்களிப்பை வழங்கிகரையோர மக்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களையும் இவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அதிகளவிலான கழிவுகளை கொட்டுவதன் மூலம் இவ்வகை நிலங்கள் மாசடைவதுடன்விறகுத் தேவைக்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், சட்ட விரோத நில அத்துமீறல்கள், கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், குடியேற்றங்களுக்கான ஆக்கிரமிப்புக்கள், கழிவு நீர் கலப்பு, அந்நிய நுண்ணுயிர்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் இக் கண்டல் சதுப்பு நிலங்கள் தமது சிறப்பு தன்மையை இழந்து அழிவை எதிர்நோக்கி வருகின்றன.
இலங்கையின் காலநிலை மாற்றத்தாக்கங்களைக் குறைவடைய செய்யவும் கடலோர சமூகங்களின் வலுவாதார வளர்ச்சிக்கு உதவவும் கண்டல் தாவரபரம்பலை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகின்றது. சதுப்புநில கண்டல் தாவர மீள் நடுகைகளை ஊக்குவித்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் என்பவை புதிய தாவரப்பரம்பலை அதிகரிக்க உறுதி செய்கின்றது. சதுப்பு நில கண்டல் தாவரங்கள் தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாக கல்வியறிவூட்டல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் செயல்திறன்மிக்க திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான, பெண்கள், இளைஞர்கள் சமூகங்களை மையமாகக் கொண்ட, காலநிலை நடவடிக்கைகளின் திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை இலக்கு 13 இனை அடைவதற்கு வழிகோலும்.
மேலும் 2030 க்குள் அதிக முன்னுரிமையாக தீவிர வறுமையை ஒழித்தல் மற்றும் அனைத்து வகையான வறுமையையும் குறைக்கும் இலக்குகளுடன் கூடிய மேம்பாட்டுத் திட்டங்கள் கரையோர மக்களது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதன் மூலம் இலக்கு ஒன்றினை அடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். காலநிலை தொடர்பான தீவிர நிகழ்வுகள் உட்பட பேரழிவுகளால் பாதிக்கப்படக் கூடிய கரையோர ஏழை சமூகங்களிடையே, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளடங்கலாக உறுதியான அம்சங்களை கட்டமைக்க இது உதவும். இலங்கை மத்திய வங்கியின் 2019ம் வருட ஆண்டறிக்கைக்கு அமைய இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது, தனிநபர் வருமானமாக 2018இல் 4,079 அமெரிக்க டொலர் உயர்மட்ட நடுத்தர வருமான நிலையை அடைந்து, முழுமையான வறுமையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு உதவியது. இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4% வரை குறைந்திருப்பதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் வறுமைப்பட்டவர்களின் எண்ணிக்கை (poverty head count index) விகிதம் படிப்படியாக குறைந்து ஏராளமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதை நிரூபணமாக்கியுள்ள போதிலும், நாட்டில் குறிப்பிடத்தக்க வறுமை காணப்படும் பகுதிகள் இன்னும் உள்ளன.
மேலும் 2020இல் புதிய நெருக்கடியாக உருவெடுத்த கொவிட் தொற்றுக்களால் சிறியளவில் வளர்ச்சியை எதிர்நோக்கிய சுற்றுலாத்துறையானது மீண்டும் பாரியதொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கண்டல் தாவர சதுப்பு நிலங்களானது அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்கின்றமையினால் சிறப்பானதொரு சுற்றுலாத்துறை சார் கொள்கை திட்டமிடலுக்கு வழிகோலுகின்றது. பல்வேறு சட்ட திட்டங்கள், அரச நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றால் கண்டல் தாவர நிலம் சார் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு நியாயமான, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஓர் அணுகுமுறையை மேற்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், எமது மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக வலுவாதார அபிவிருத்தியை நோக்கிய அதிக நன்மைகளைப் பெற முடியும். நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியானது, அனைவருக்குமான சுகாதார வசதிகள், கல்வி அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான அபிவிருத்தி கொள்கைகள், நிலைபேறான விவசாய திட்டங்களை முன்னிறுத்துவதன் மூலமாக பசியை ஒழித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்தல், பால்நிலை சமத்துவத்தை அடைதல்; நிலைபேறான நவீன சக்தியினை உறுதி செய்தல்; கௌரவமான அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு வசதிகளையும் நிலைபேறான நகரங்களையும் அமைத்தல்; கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களையும் சூழலியலையும் பாதுகாத்தல் போன்ற SDGக்களின் குறிக்கோள்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக இலங்கையை வலுவாதார அபிவிருத்தியுடனான ஒரு நாடாக உருவாக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago