Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 30, வியாழக்கிழமை
Mayu / 2024 நவம்பர் 29 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளைச் தண்டித்தல் என்ற விவகாரம் தென்பகுதியில் சூடுபிடித்துக் கொண்டிருக்கையில் அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே நுழைந்திருக்கிறது.
அதே போன்று, மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடக் குண்டுப்புரளியும் கிளம்பியிருந்தது. தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நம்ப வைப்பதற்கான முஸ்தீபுகள்தான் இப்போது நடைபெற்று வருகிறது.
இருந்தாலும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பானது, கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இலங்கையின் தேசியப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களினாலேயே விடப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் வெளிவருகின்றன. இருந்தாலும், இந்த அறிவிப்பானது, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடையே தேசியப் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகத்தினை ஏற்படுத்தவிருக்கிறது. இது முழுச் சுற்றுலாத் துறையையும் பாதிப்புக்குள்ளாக்கலாம்.
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்ற காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் சிலருக்குச் சாதகங்களையும் பலருக்குப் பாதகங்களையும்தான் ஏற்படுத்தும். இதற்குள் இருந்து வெளியில் வந்துவிடுவதற்கான வழிகளையே எல்லோரும் தேடுவார்கள். தேடியே ஆகவேண்டும் என்பது கட்டாயமே.
தற்போது ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையானது, அனுரகுமார திசாநாயக்க அவர்களது ஆட்சியைக் குழப்புவதற்காக அல்லது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒரு அச்சுறுத்தலான நிலைமையில் நடைபெறும் தேர்தலாகக் காண்பிப்பதற்காகவா என்று கேள்வி எல்லோர் மத்தியிலும் உருவாகிவருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதரகம் தங்களது நாட்டுப் பிரதிகள் பிரஜைகள் தொடர்பில் வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கை பெரும் கிலியை ஏற்படுத்தியிருந்தது. வெறுமனே அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே பிரதேசத்தில் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்து நாடு பூராகவும் சுற்றுலாத் துறையைப் பாதித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
சுற்றுலாத் துறை மூலம் குறிப்பிட்டளவுக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொண்டு வருகின்ற இலங்கை அந்த சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டால் எவ்வாறு சுதாரித்துக் கொள்ளும் என்பது சிக்கலான விடயம். இலங்கையில் ஒரு மாற்றம் அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற அல்லது ஜனாதிபதியான நிலைமை வெளிநாடுகளாலும் உள்நாட்டுத் தரப்பினராலும் எதிர்பார்க்காததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமானதாகும்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ரணில் தவிர வேறு யாரேனும் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களில் அவரையே தேடுவார்கள் என்கிற கருத்துக்கள் கூட வெளியிடப்பட்டிருந்தன. அது பொய்ப்பிக்கப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டியது.
ஆனால், அதையும் மீறி புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். கடந்த தடவை அரசியலில் நீண்ட கால அனுபவமுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பலரை தம்முடன் வைத்திருந்த சிறிலங்கா கட்சியினாலேயே இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் போயிருந்தது. அவர்களது கட்சியின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டிய நிலை உருவானது. வெளிநாட்டிலிருந்து சபாநாயகருக்குத் தனது இராஜினாமாவை அனுப்பவேண்டியதாயிற்று. தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்து பிரதமராகியிருந்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கவேண்டியே இருந்தது.
அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வெறுமனே ஒரு தேசியப் பட்டியலுடன் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு இடைக்கால அரசாங்கத்தை நடத்திக் கொண்டு அவசர அவசரமாகப் பாராளுமன்றத்தைக் கலைத்து தற்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக அறிவிப்பை விடுத்து இப்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றன.
ஜே.வி.பியை பிரதானமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி இம்முறை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே மூன்று விதத்தில் இருந்து 42 வீதமாக்கிய வாக்கில் நம்பிக்கை கொண்டு, நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் தங்களால் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஒன்றை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு பூராகவும் தேசிய மக்கள் சக்தியாக போட்டியிடுகிறது. பாராளுமன்ற ஆசனங்களை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் நம்பிக்கை ஜனாதிபதிக்கும் இருக்கிறது.
நடைபெறாது என்று மறுக்க முடியாது என்றாலும், நம்பிக்கைகள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை என்பது அனைத்து விடயத்திலும் சாத்தியமற்றது என்பதுதான் நிச்சயமானது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நாட்டிலுள்ள கிறிஸ்தவ மக்களை மாத்திரமல்ல, சிங்களப் பெரும்பான்மை மக்களையும் தம்முடைய பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துக்குள் தள்ளியிருந்தது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு அவர்களுடைய துப்பாக்கிகள் களவாடப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளையே சூத்திரதாரிகளாகப் பாதுகாப்புத் தரப்பினர் அடையாளம் கண்டிருந்தனர்.
ஆனால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அத் துப்பாக்கிகள் தாக்குதல் தாரிகளிடமிருந்து மீட்கப்பட்டதையடுத்து அவர்களுக்கும் அக் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று உறுதியானது. இது பாதுகாப்புத் தரப்பின், அரச புலனாய்வுத் துறைகளின் குறைபாடாகவே காணப்பட்டது.
பின்னர், நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானார்.
மிகத் தீவிரமாக நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில், சஹ்ரான் குழுவினருக்கும் மகிந்த அணியினருக்கும் இருந்த தொடர்பு, உறவு வெளிப்பட்டுத் தேர்தல் வெற்றிக்கான சூழ்ச்சியாகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. கோட்டாபய நாட்டைவிட்டுத் தப்பியோடும் அளவுக்கான எதிர்ப்பலை உருவாக இதுவும் காரணமாக இருந்தது.
ஆனால், இதுவரையில் அதன் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற கோபம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது. நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் காரணமாக இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்கு ஈஸ்டர் தாக்குதலும் மூலதனமாகப் பயன்படுத்தப்பட்டது.
இப்போது நாட்டுக்குள் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக, இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்களுக்கெதிராக உருவாக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பற்ற நிலைமை சுற்றுலாத்துறையை இலக்கு வைத்ததாக நாம் பார்க்க முயன்றாலும் வேறு கோணங்களிலும் ஆராயாதிருப்பது சரியல்ல. அது வரும் நாட்களில் வேறு நிலை நோக்கியும் நகரலாம்.
பொத்துவில் அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் வருகை தரும் பிரதேசங்களில் அவர்களையும் அவர்களது வணக்கஸ்தலங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் தொடர்பில் ஏற்பட்ட களேபரத்தின் பின்னர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள். யாழ்ப்பாணம், மாவனெல்லை, கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். பிரதான நபர் என சந்தேகிக்கப்படுபவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
கொழும்பில் கைது செய்யப்பட்டவர் மாலைத்தீவு தொடர்பு கொண்டவர். இரண்டாமவர் பாகிஸ்தான் தூதுவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு நடந்து குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர். மூன்றாவது நபர் தெஹிவளையிலுள்ள இஸ்ரேலிய கன்சியூலர் அலுவலகப் பகுதியில் நடமாடியபோது, சந்தேகத்தின் பேரில் கைதாகியிருக்கிறார்.
அறுகம்பே மாத்திரமல்ல, மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தலும் வெறுமனே சாதாரணமாக ஒதுக்கிவைத்துவிடக்கூடியதல்ல. இவ்வாறான நிலையில், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரையில் இந்தக் கிலி தொடரும் என்று மாத்திரமே சொல்லிக் கொள்ளமுடியும்.
நல்லாட்சி அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையீனமாக இருந்தமையே ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு போல, தொடராகத் தொடரும் நிலையில்லாது இது நகர்த்தப்படுமா, வவுணதீவுலு பொலிஸார் கொலை விசாரணைபோல் திசை திரும்பிய விசாரணையாக இருக்குமா இல்லையா என்பதனையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இருந்தாலும், தேர்தலிலும் இந்தப் பதற்றம் தாக்கம் செலுத்தவே செய்யும். அதே நேரத்தில் ஒரு பாதுகாப்பற்ற சூழல் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்துடனேயே தேர்தல்
நடைபெறும் என்பதும் நிச்சயம்.
10.28.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago