Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஐயூப்
கடந்த நான்காம் திகதி நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், முன்னைய வருடங்களின் சுதந்திர தின நிகழ்வுகளைப் போல் ஜொலிக்கவில்லை. வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் முன்னர் போல் தேசிய கொடி பறப்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை.
இதற்கு முன்னர் பல வருடங்களிலும், எதிர்க்கட்சிகள் அரச அனுசரணையுடன் நடைபெறும் சுதந்திர தின விழாக்களை பகிஷ்கரித்துள்ளன. கடந்த வருடம், ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இம்முறை சுதந்திர தினத்துக்கு எதிராக, நாட்டின் தென்பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஏனைய விடயங்களைப் போலவே, சுதந்திர தினமும் அரசியல்மயமாகி உள்ளது.
தமிழ்த் தலைவர்கள், நீண்ட காலமாகவே தமது மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாட்டில் அத்தினத்தைப் புறக்கணித்து வந்துள்ளனர். அதேவேளை, தெற்கில் இரு பிரதான கட்சிகளில் ஒன்று அதிகாரத்தில் இருக்கும் போது, மற்றைய கட்சியின் ஆதரவாளர்கள், சுதந்திர தினமானது ஏதோ ஆளும் கட்சியின் வைபவம் என்பதைப்போல், தமது வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட மாட்டார்கள். மற்றைய கட்சி அதிகாரத்தில் இருக்கும் போதும் இதுவே நடைபெறுகிறது.
வழமையாக சுதந்திர தினம் நெருங்கும் போது, தமிழ் ஊடகங்களில் மட்டுமே அதனை விமர்சித்து கட்டுரைகள் போன்றவை வெளியாகின்றன. தெற்கே ஆரம்ப காலத்தில் இருந்த இடதுசாரிகளின் ஊடகங்களிலும் அவ்வாறே சுதந்திர தினம் விமர்சிக்கப்பட்டது. பின்னைய காலத்தில் அத்தினத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் போன்றவை மிகவும் அரிதாகவே வெளியாகின.
ஆனால், இம்முறை சிங்கள ஊடகங்கள் பலவற்றில் சுதந்திர தினத்தைப் பற்றியும், தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றியும் பல விமர்சனக் கட்டுரைகள் வெளியாகின.
சுதந்திர தினத்துக்குப் பின்னர் வழமையாக, அதைப் பற்றிய கட்டுரைகள் வெளியாவதில்லை. எனினும் இம்முறை காணப்பட்ட இந்த மாற்றமே, சுதந்திர தினத்துக்குப் பின்னர் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
சுதந்திரமானது இலங்கையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கால கட்டத்திலிருந்தே நாட்டில் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்து வந்துள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்தது உண்மையான சுதந்திரமா என்ற கேள்வி, அக்காலத்திலிருந்தே பலர் எழுப்பி வருகின்றனர். அதற்கு பலமான காரணங்கள் இருக்கின்றன.
இலங்கை உள்ளிட்ட பிரிட்டனின் பெரும்பாலான கொலனிகளுக்குக் கிடைத்த சுதந்திரமானது, ‘டொமினியன்’ அந்தஸ்திலான சுதந்திரம் என்றே கூறப்படுகிறது. இன்றும் பல நாடுகளில், அந்த நிலைமையே காணப்படுகிறது.
அது பூரண சுதந்திரமல்ல; பிரட்டனின் மன்னர் அல்லது இராணியே அந்நாடுகளினது அரச தலைவராக இருப்பார். அந்நாடுகளின் அரச ஊழியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினர் போன்றோர் பிரிட்டிஷ் மன்னரின் அல்லது இராணியின் பெயரிலேயே சத்தியப் பிரமானம் செய்வர். பிரிட்டனின் பிரிவி கவுன்சிலே (Privy Council) அந்நாடுகளினது அதி உயர் மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயற்படும்.
1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கான அரசியலமைப்பே, 1948ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இலங்கையில் அமலில் இருந்தது.
இலங்கையில் இந்த நிலைமை 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை நீடித்தது. போதாக்குறைக்கு கட்டுநாயக்கா, திருகோணமலை போன்ற இடங்களில் பிரிட்டிஷ் படைகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தன. எனவேதான், இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இங்கிருந்த இடதுசாரிகள், இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, ஆரம்ப காலத்தில் தமது புதிய உறுப்பினர்களுக்கு நடத்திய ஐந்து வகுப்புகளில் ஒன்று, இந்த விடயத்தை விளக்குவதாகவே அமைந்திருந்தது. அவர்களது வாதத்தை உறுதிப்படுத்துவதைப் போல், அக்கட்சியினர் 1971ஆம் ஆண்டு நடத்திய ஆயுதக் கிளர்ச்சியை அடுத்து, அதன் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் எதிராக, குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் போது, மகாராணியாரின் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்தல், போர் புரிதல் என்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டன.
அதுவே, 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்தது சுதந்திரம் அல்ல என்பதன் அர்த்தமாகும். ஆயினும், 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று வாதிட முடியாது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சட்டச் சுதந்திரம் கிடைத்தது. அதாவது, அதுவரை இலங்கையின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பப்படியே அமைந்திருந்தன. அதேபோல், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இலங்கையிலும் அமலாக்கப்பட்டன.
1948ஆம் ஆண்டுக்குப் பின்னரும், பிரிட்டிஷ் முடியின் பிரதிநிதியான மகா தேசாதிபதி (Governor General) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் கையொப்பமிட்டே அவை அமலாக்கப்பட்டன. ஆயினும் அது வெறும் சம்பிரதாயத்துக்காகவே இடம்பெற்றது. மகாதேசாதிபதி அதன் பின்னர், இலங்கை பிரதமரின் ஆலோசனைப் படியே செயற்பட்டார். அதேபோல், அதன் பின்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், இலங்கையில் அமலாக்கப்படவும் இல்லை. இந்தச் சட்ட சுதந்திரத்தை பாவித்தே, இந்தியா 1950ஆம் ஆண்டிலும் இலங்கை 1972ஆம் ஆண்டிலும் குடியரசுகளாக மாறி, பிரிட்டிஷ் முடியரசின் சகல கட்டுப்பாடுகளில் இருந்தும் பூரணமாக விடுதலை பெற்றன.
எனவே, 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு, சுதந்திரம் அடைவதற்கான சுதந்திரமே கிடைத்தது எனலாம். எனவே, பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை வைத்து, 1948ஆம் ஆண்டு கிடைத்த அந்தச் சுதந்திரத்தை புறக்கணிக்கவோ அதைச் சிறுமைப்படுத்தவோ முடியாது. அந்தச் சட்ட சுதந்திரத்தை பாவித்து, இலங்கையின் தலைவர்கள் நாட்டை முன்னேற்றவோ, இனப்பிரச்சினையை தீர்க்கவோ இல்லை என்பது வேறு விடயம்.
மாறாக, இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பிரிட்டிஷார் சிறுபான்மையினருக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தையும் இலங்கை தலைவர்கள் இல்லாமல் செய்தனர்.
1972ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பிரிட்டிஷார் வரைந்த அரசியலமைப்பின் 29 ஆவது பிரிவின் படி, ‘ஒரு சமூகம், ஏனைய சமூகங்கள் அனுபவிக்காத எந்தவொரு சிறப்புரிமையையோ அநீதியையோ அனுபவிக்க முடியாது. இந்த நியதியை மீறும் எந்தவொரு சட்டமும் செல்லுபடியாகாது’ என்றிருக்கிறது. ஆனால், 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பில், இந்த உத்தரவாதம் இல்லை.
அந்தவகையில், சிறுபான்மையினர் 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை அல்ல; 1972ஆம் ஆண்டு கிடைத்த பூரண சுதந்திரத்தைத்தான் புறக்கணிக்க வேண்டும். எனினும், 1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தையும் பறித்துவிட்டார்கள் என்ற அடிப்படையில், ஒருவர் சுதந்திர தின விழாக்களில் கலந்து கொள்ளாதிருந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது.
இலங்கையர்கள் போராடியே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது மற்றுமொரு பிழையான கருத்தாகும். இலங்கையர்கள் சுதந்திரத்துக்காக போராடியமை உண்மை தான். 1818ஆம் ஆண்டிலும் 1848ஆம் ஆண்டிலும் அதற்காக ஆயுதப் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலக கொலனித்துவ நாடுகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் காரணமாகவே, அதன் பின்னர் பல நாடுகள் சுதந்திரத்தை அடைந்தன.
ஒருபுறம் ஐந்தாண்டு கால உலகப் போரின் காரணமாக, வல்லரசு நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தன. மறுபுறத்தில், அந்நாடுகள் ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் கைப்பற்றி இருந்த நாடுகளுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கருத்து, போர் நடைபெற்ற காலத்தில் அந்நாடுகளிலும் வல்லரசு நாடுகளிலும் வலுப்பெற்று இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டம் அதில் முக்கிய பங்காற்றியது. அக்கால மலாயாவில் சுதந்திரத்துக்காக ஆயுதப் போராட்டமும் வெடித்தது. இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸூம் ஆயுதப் போராட்டத்தை நம்பினார். அதேவேளை, கைப்பற்றப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இடதுசாரிகளின் கையும் ஓங்கி வந்தது.
இதுபோன்ற நெருக்குவாரங்களின் காரணமாகவே, கொலனித்துவ நாடுகள், தாம் கைப்பற்றி இருந்த நாடுகளுக்கு போர் முடிந்தது முதல் 1960களின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில், சுதந்திரம் அளித்து தாம் விரும்பியவர்களை பதவியில் அமர்த்தின.
இலங்கையின் சுதந்திரத்தின் பொன்விழாவில், பிரதம அதிதியாக அப்போது இளவரசராக இருந்த தற்போதைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் கலந்து கொண்டார். ஒரு நாடு தமது சுதந்திர தினத்தைக் கொண்டாட, தம்மை ஆக்கிரமித்து இருந்த நாட்டின் தலைவர் ஒருவரை அழைப்பதாக இருந்தால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அதேபோல், இம்முறை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட, கொலனித்துவ பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சின்னமான பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லன்ட்டை இலங்கை அரசு அழைத்திருந்தது.
முக்கிமான விடயம் என்னவென்றால், சுதந்திரத்தின் மூலம் இலங்கை எதை அடைந்தது என்பதேயாகும். சுதந்திரம் அடைந்து ஓரிரு வருடங்களில், இலங்கை அரசு பிரிட்டனுக்கு கடன் வழங்கியிருந்தது. ஆனால், கடந்த வருடம் ஏப்ரல் மாதம், “நாம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதால், வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது” என்று இலங்கை உலகுக்கு அறிவித்தது. இதுதான் சுதந்திரத்தின் மூலம் இலங்கை அடைந்த பயனாக இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago