2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

பயன் இல்லாத சீன திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன

Editorial   / 2022 ஜூன் 24 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரத்தில் அதளா பாதாளத்துக்குள் விழுந்துகிடந்து எழும்ப முடியாது திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியா, “இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவருகிறது.

இந்திய மத்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசும் மக்களும் தங்களுக்கு முடிந்தளவு உதவிகளைச் செய்துவருகின்றன. இரண்டாம் கட்ட உதவிகளும் நாட்டை வந்தடைந்துள்ளன. என்பதையிட்டு பெருமைக் கொள்ளவே வேண்டும்.

இலங்கை இந்தளவுக்கு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் விழுந்தமைக்கு, கடந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கம் முழுக்க முழுக்க நம்பியிருந்த சீனாவின் மீதே பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அலசி ஆராய்ந்து பார்த்தோமெனில், அது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானதாகவே இருக்கிறது.

எந்தப் பயனும் இல்லாத பிற சீனத் திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன. நெருக்கடியான சூழ்நிலையிலும் தனது கொள்கையில் இருந்து கொஞ்​சமேனும் தளராத சீனா, உதவிக்கரம் நீடுவதிலும் பின்னடிக்கிறது. அல்லது விருப்பமின்றி செயற்பாடுகின்றது.

சீன நிறுவனங்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் தோல்வியடைந்த திட்டங்களாகவே இருக்கின்றன. இதேவேளை, சீனா வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் மட்டுமன்றி பாகிஸ்தானுக்கும் அதே நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது. அதற்கும் சீனாவின் திட்டமிடாத முதலீடுகளும் ஆகக்கூடிய வட்டி வீதங்களுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில், கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு, எந்தவிதமான பிரயோசமும் இன்றி, நிமிர்ந்து நிற்கும் தாமரை கோபுரம் இலங்கைக்கு ஒரு பெரும் சுமையாகும். இது சீனவின்  வெள்ளை யானை திட்டமாகும்.

நுரைச்​சோலை மின்திட்டத்துக்கு பழுதடைந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் அடிக்கொரு தடவை செயலிழந்துவிடுகின்றது. இதுவும் சீனாவின் திட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். முறையான பராமரிப்புகளும் நுரைச்சோலையில் முன்னெடுக்கப்படுவதில்லை. ஆனாலும் பரபரிப்பு செலவுகளை சீனா அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதனால், தேசிய மின்னிணைப்புக்கு எதிர்பார்த்த மின்சாரம் கிடைப்பதில்லை. ஆக, அதனையும் சீனாவின் மற்றுமொரு வெள்ளை யானை என்று கூறினால் தவறில்லை. இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இதனைவிட துறைமுக நகர் திட்டத்தால் இலங்கையானது பொருளாதார ரீதியில் எவ்வாறான பிரச்சினைகளை சந்திக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆனாலும், சீனா முதலிட்ட நாடுகள் அதளாபாதாளத்துக்குள் விழுந்துவிட்டன. இன்னும் சில நாடுகளின் நிலைமைகள் மிகமோசமானதாகவே இருக்கின்றது. இலங்கையை பொறுத்தவரையில் மீடெழுவதற்கு இன்னும் சில வருடங்கள் எடுக்குமென கூறப்படுகின்றது.

  சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது. மறுபுறத்தில் இலங்கையை ​​பொறுத்தவரையில் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் குடும்பங்களின் எண்ணிகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

இலங்கையின் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ​பயனற்ற கண்காட்சிப் பொருளாக இருக்கின்றது. இல்லை​யேல் அவ்​வப்​போது செயலிழந்து விடுகின்றது. ஆக, ​பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவில்லை. மாறாக கடனால் நாடு மூழ்க்கிக்கொண்டிருக்கிறது.  பசி, பட்டிணியால் மக்கள் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக ஒன்பது சதவிகிதத்தில் வளரத் தொடங்கியது. எனினும், இலங்கையின் உற்பத்தியும் ஏற்றுமதியும் கிடுகிடுவென சரியத்தொடங்கின. இறக்குமதிக்கான தேவை அதிகரித்தது. அதற்காக, சீனாவிடம் கடந்த அரசாங்கம் கையேந்தி,கையேந்தி, இந்த நிலைமைக்குள் நாட்டை தள்ளிவிட்டுள்ளது.

அந்நிய முதலீட்டில் சரிவு

ஆனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் போக்கு தற்போது தலைகீழாக மாறுவதாக தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறிப்பாக உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில், சீன நாணயமான யுவானில் பத்திரங்கள் வடிவில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 150 பில்லியன் டொலர்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

"இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவுக்குள் மூலதன வரத்து அதிகரித்தது. ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறும் வேகம், எந்த ஆண்டிலும் எந்த ஒரு காலாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தக்காலாண்டில் மிக அதிகமாக இருந்தது. இந்தப்போக்கு ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்தது," என்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸின் மே மாத அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு, சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கூறுகிறது. இது 2021 உடன் ஒப்பிடும்போது இருமடங்காகும். 2021 ஆம் ஆண்டில், 129 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த சொத்துக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.

இந்த போக்குக்கான ஐந்து முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு இந்த போக்கு தொடர்ந்தால், சீனப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படும்.

 "ஜீரோ கோவிட் கொள்கையை சீனா செயல்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின்போது இருந்ததுபோல இது சீனாவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது" என்று ஸ்பெயினின் பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான பேராசிரியர் குவான் ரமோன் ராய்லோ கூறியுள்ளார்.

இலங்கையை பொருத்தவரையில் கொரோனா தொற்றின் காலத்தில், இலங்கைக்கு மிகவும் கூடுதல் விலைகளில் மருந்துகள், ஊசிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை சீனா விற்பனைச் செய்துவந்தது.

பெருந்தொற்று தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகள் பொதுமுடக்கத்தை முடித்து, பிற கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டன. ஆனால் சீனாவில் அப்படி இல்லை.

 இலங்கையிலும் ​வேலையின்மை சதவீதம் அதிகரித்துச் செல்கின்றது. அரசதுறை ஊழியர்களை தனியார் துறைக்குள்ளும் வேலைச் செய்யும் வகையில் கதைகள் அடிப்படுகின்றன. எனினும், சீனாவில்  வேலையின்மை 6 சத வீதமாக அதிகரித்தது. அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகள் 0.68 சதவீதம் சுருங்கியது. இந்த ஆண்டு சீனா 5.5 சதவீத வளர்ச்சி வீதத்தை அடைய முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.

"பல நிறுவனங்கள் இன்றும் சீனாவை ஒரு பெரிய மற்றும் முக்கியமான சந்தையாகவே பார்க்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதைச் செய்வது அவர்களுக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட முழு உலகமும் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இப்போதும் நடைமுறையில் உள்ளன," என்கிறார் ஹாங்காங்கில் உள்ள எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் பிரிவின் முதன்மை ஆய்வாளர் நிக் மாரோ.

சீனாவின் பூஜ்ஜிய-கொவிட் கொள்கை காரணமாக சீனாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர் என்று மாரோ கருதுகிறார்.

   வங்கிகளின் அதிகரிக்கும் கடன் சுமை என்ற கருமேகம் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை துறையை சூழ்ந்துள்ளது. நாட்டின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.

 சமீபத்திய மாதங்களில், சீனாவின் பங்குச் சந்தையாலும், தங்கள் முதலீடுகளுக்கான அதிக பலனை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை.

ஷாங்காய் பங்குச் சந்தை ஏப்ரல் பிற்பகுதியில் மிகக் குறைந்த மட்டத்தில் திறக்கப்பட்டது, அதன் பிறகு அது ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால் அது ஆண்டின் தொடக்க நிலையை நெருங்கவில்லை. அதே நேரத்தில், மே மாதத்தில், சீன நாணயமான யுவானின் மதிப்பு ,டாலருக்கு எதிராக இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் இருந்தது.

ஆயினும் சீன சந்தையில் காணப்படும் சரிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற சந்தைகளில் காணப்படும் சரிவை விடக்குறைவு என்றும் கூறலாம். 2021 ஆம் ஆண்டில் அதிகபட்ச அளவை எட்டிய பிறகு இந்த சந்தைகளிலும் சரிவுப்போக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.

முதல் காலாண்டில் சீனாவின் வர்த்தக உபரி 200 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இதற்கு ஒரு காரணம் ஏற்றுமதியில் ஏற்பட்ட குறைவு. ஆனாலும் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வெளியே சென்றதால் ஏற்பட்ட நஷ்டத்தை இது ஓரளவு ஈடுகட்டியது.

இந்நிலையில், தனது ஏற்றுமதி உறுதிமொழிகளை நிறைவேற்றும் அளவுக்கு அன்னியச் செலாவணி உள்ளதால், அன்னிய முதலீடு நாட்டைவிட்டுச்செல்வது சீனாவை அதிகம் பாதிக்காது என்று சர்வதேச நிதி கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதன் சொந்த சிரமங்களும், வரம்புகளும் உள்ளன என்று இந்தக்கழகம் கூறுகிறது.

"பெரிய நிறுவனங்கள் இந்த சந்தையை விட்டு வெளியேற விரும்புவதை நாங்கள் காண்கிறோம். ஆனால் இதை ஒரு வெளியேற்றமாக நாம் கருதக்கூடாது. இவற்றில் பல நிறுவனங்கள், பல தசாப்தங்களாக சீனாவில் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியேறுவதற்கான அவர்களது முடிவு எளிதாக இருக்காது," என்று அது மேலும் தெரிவித்தது.

சீனாவின் முதலீடுகளும் சீனாவுக்குள் ஏனைய நாடுகளின் முதலீடுகளும் எவ்வாறு தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், இலங்கைக்குள் அதிகூடிய வட்டிக்கு முதலீடுகளைச் செய்த சீன நிறுவனங்கள், பொருளாதார ரீதியில் இலங்கை குழிக்குள் விழுந்துவிட்டநிலையில், உதவிக்கரம் நீட்டுவதற்குக் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .