Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். கே அஷோக்பரன்
Twitter: @nkashokbharan
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது.
ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது நல்ல விடயம்தான்.
தென்இலங்கை, இந்த விழிப்பை அடைய, 44 ஆண்டுகள் தேவைப்பட்டதற்குக் காரணம், இத்தனை காலமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் வாள், குறிப்பிடத்தக்க அளவுக்கு, இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரை நோக்கி பயன்படுத்தப்படவில்லை. முதலில் தமிழர்கள்; பிறகு முஸ்லிம்கள்; இடையில் கொஞ்ச மாக்ஸிஸவாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என, பயங்கரவாத தடுப்புச் சட்டம் பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாத’ நபர்களாக முன்னிறுத்தப்பட்டவர்களையே பதம்பார்த்தது.
இதனால், இலங்கையின் பெரும்பான்மையினம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கோரமுகம் பற்றி, பெரிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்று, ‘கோட்டா கோ ஹோம்’ என்ற, இலங்கையின் பெரும்பான்மை இனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனும் ‘கூர்வாள்’ திரும்பலாம் என்ற நிலையில், அதற்கு எதிரான விழிப்பு, தென்இலங்கையில் உருவாவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய ஒரு மீட்டல், மீள்பார்வை காலப்பொருத்தம் மிக்கதாகும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிறப்பு
1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. இது, அன்றைய ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது.
குறிப்பாக, வடக்கில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மீது, கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. இவற்றில், பல தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற அறிக்கை, 1978 ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியானதன் பின்னர், ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதையொத்த ஆயுதக் குழுக்களையு,ம் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1978 மே மாதம் நிறைவேற்றியது.
அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை, பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டிருந்தது. இதன் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டபோதும், இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் குறைக்க முடியவில்லை.
1978 செப்டெம்பர் ஏழாம் திகதி, இரத்மலானையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் தேசிய விமானசேவையான ‘எயார் சிலோன்’ க்குச் சொந்தமான ‘அவ்ரோ’ விமானம், விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல், அரசாங்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, உடனடி அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.
உடனடியாகப் பொலிஸ், இராணுவம் போன்ற படையணிகளின் கெடுபிடிகள், நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டன. இதனால், தமிழ் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யும் சட்டத்துக்கு மாற்றாக, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979 ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும், ‘சந்தேகம்’ என்ற ஒரே காரணத்தின் நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவை இன்றி, கைது செய்யப்படவும் காலஎல்லை இன்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் காணமாக இருந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக, எதேச்சாதிகாரக் கைது, தடுத்து வைத்தல் போன்ற எதேச்சாதிகாரத்தை, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது.
1978ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் 13 ஆவது சரத்தானது, எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைத்தல் மற்றும் தண்டனை என்பவற்றுக்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. சுருங்கக் கூறின், ஒருவர் சட்டப்படியன்றி, வேறு எக்காரணத்தின் நிமித்தமும் கைது செய்யப்படவோ, தடுத்துவைக்கப்படவோ, தண்டனைக்கு உள்ளாக்கப்படவோ முடியாது. அப்படிச் செய்வதானது அந்நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
1978 ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில், இந்தச் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதே அத்தியாயத்தின் 15(7) சரத்தானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம், மற்றவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், ஒரு ஜனநாயக சமூகத்தில் பொதுநலன் நோக்கிலான, நியாயமான தேவைப்பாடுகள் ஆகிய காரணங்களுக்காக 13 ஆம் சரத்து வழங்கிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்கிறது. இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான், நாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நோக்க வேண்டும்.
நிர்வாகத்துறையின் கையில் எதேச்சாதிகாரம்
இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது, நபரொருவரைக் கைது செய்யும் நடைமுறை, கைது செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டிய நடைமுறை என்பன பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
இதன்படி, கைதுசெய்யப்படும் நபரொருவரை 24 மணி நேரத்துக்குள் பொலிஸார், நீதவான் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். மேலும், விசாரணை செய்யக் காலம் வேண்டுமெனில், நீதிவான் உத்தரவுக்கமைய மேலும், 24 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம்.
ஆகவே, கைது செய்யப்படும் நபரொருவர், எக்காரணம் கொண்டும் எதுவித குற்றச்சாட்டக்களும் இன்றி, 48 மணிநேரத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட முடியாது.
இதற்கு விலக்காக, குறித்த நபரொருவர் குற்றமொன்றோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்க அல்லது நம்ப, அமைச்சருக்கு உரிய காரணங்கள் உண்டெனின், அந்நபரைக் கைது செய்யவும் அமைச்சரின் உத்தரவுப்படி, ஒரு முறைக்கு அதிகபட்சம் மூன்று மாதம் என்ற அடிப்படையில், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியும் என்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஒன்பதாவது சரத்து, அமைச்சருக்கு (அதாவது, நிர்வாகத்துறைக்கு) அதிகாரத்தை வழங்கியது.
அதுமட்டுமல்ல, அந்நபரை எங்கு, எந்தச் சூழலின் கீழ் தடுத்து வைப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அமைச்சருக்கு, அதே சரத்து வழங்கியது. அத்தோடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 10 ஆவது சரத்தானது, ஒன்பதாவது சரத்தின் கீழமைந்த அமைச்சரொருவரின் உத்தரவானது, எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது என்று குறிப்பிட்டது. ஆகவே, நீதித் துறையின் தலையீடின்றி, நபரொருவரை அமைச்சரின் எண்ணத்தின்படி கைது செய்யவும், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை அமைச்சர் எண்ணும் இடமொன்றில் தடுத்து வைக்கவும் கூடிய, பயங்கரமானதொரு எதேச்சாதிகாரத்தை நிர்வாகத்துறைக்கு, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வழங்கியது.
இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் இணையும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். அவசர காலச் சட்டத்தின் கீழ், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது, நபரொருவரைக் கைது செய்து எல்லையின்றிய காலம் தடுத்து வைக்கும் அதிகாரமானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுவதே இங்கு யதார்த்தமாகும். அத்தோடு அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைப் பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் இடமொன்றில், அவரது வழிகாட்டலின் படி தடுத்து வைக்க முடியும் என்ற ஏற்பாடும் காணப்பட்டது.
ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச்சட்டமும் தனிநபர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கும் அதிகாரத்தை நிர்வாகத் துறைக்கு வழங்கியது. தடுத்து வைக்கும் இடங்களையும் தீர்மானிக்கும் பலம் அமைச்சருக்கு இருந்தமையால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலரும், தடுப்புக் காவல் சிறைகளில் அல்லாமல், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அரசியலமைப்பு ஒரு குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை பாதுகாப்பைக் கூட, இல்லாதொழிக்கத்தக்க பலத்தை, நிர்வாகத்துறையிடம் சரணடையச் செய்துள்ளது என்றால் மிகையல்ல.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago