Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
மொஹமட் பாதுஷா / 2020 ஜூன் 12 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டதோர் இழுபறிக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, நாட்டில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலை எதிர்பார்த்தவர்களுக்கு இது, நல்லநாள் ஆகும். ஆதலால், கொரோனா வைரஸ் பற்றிய மனோநிலையில் இருந்து, விரும்பியோ விரும்பாமலோ இலங்கை மக்கள், தேர்தல் பற்றிய மனோநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மைக் கட்சிகளும் முஸ்லிம், தமிழ்க் கட்சிகளும் ஆளுக்கொரு வியூகத்துடன் மீண்டும் களத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. எல்லாவற்றுக்கும் பின்னால், அவர்களிடம் ஒரு நியாயம், மூலோபாயம் இருக்கின்றது.
இது பெரும்பாலும், தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறுதல், ஆட்சியமைத்தல் போன்ற இலக்குகளை நோக்கியதாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக, முஸ்லிம் கட்சிகள் இத்தேர்தலில் எடுத்துள்ள தீர்மானங்கள், அறிவார்த்தமானவையாக இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன், முஸ்லிம் கட்சிகளும் ஏனைய தனிப்பட்ட அரசியல்வாதிளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதன் விளைவாக, விகிதாசாரத் தேர்தல் முறைமையிலேயே, முஸ்லிம் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான அபாயங்களும் தென்படுவதாகச் சொல்ல முடியும்.
என்ன நடந்தாலும், தேர்தலை நடத்தியே தீர்வது என்ற விடாப்பிடித்தனத்தில், ஆளும் பொதுஜன பெரமுனக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்று, எடுத்துக் கொள்ளலாம். கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலான காலப்பகுதியில், சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை என்று, அரசாங்கம் பெருமை கொள்கின்றது.
ஆயினும், சுகாதார விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நூறு சதவீதம் கடைப்பிடித்து, வாக்கெடுப்பை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைத் தேர்தல் ஆணைக்குழுவே பரீட்சித்து அறிந்திருக்கின்றது.
இத்தகைய ஒரு சூழலில், சட்டத்தை மதியாத நமது அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு, சுகாதார முறைப்படி தேர்தல் பிரசாரங்களை நடத்தச் செய்வதும் திட்டமிட்ட விதத்தில் எவ்விதக் குளறுபடிகளும் இன்றி வாக்கெடுப்பை நடத்தி, வாக்குகளை எண்ணி, முடிவுகளை அறிவிப்பதும், பெரும் சவாலாக இருக்கப் போகின்றது.
2019 டிசெம்பர் 31ஆம் திகதி, சீனாவில் முதலாவது கொவிட்-19 தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் சில நாடுகளுக்கும் இலங்கைக்கும் நோய்த் தாக்கம் ஏற்பட ஆரம்பித்திருந்த வேளையில், மார்ச் இரண்டாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியில், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்படும் என்ற விடயமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், மார்ச் மாதம் முற்பகுதியில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தமையால், வேட்புமனுக்கள் அனைத்தும் பொறுப்பேற்கப்பட்ட பின்னர், தேர்தல் ஆணைக்குழு, தேர்தலை ஒத்திவைத்தது. ''கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாகத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஏதுவான சூழல் இல்லை'' எனத் தெரிவித்து, தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணைக்குழு, அதன்பின்னர் ஜூன் 20ஆம் திகதி, தேர்தல் நடைபெறுமெனவும் அறிவித்தது.
இந்தக் கட்டத்தில், இலங்கை இரு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. அதாவது, கொவிட்-19 எனும் உலகப் பேரிடரை எதிர்கொண்ட வண்ணமே, தேர்தலை நடத்துவது பற்றியதான சிக்கல்களுக்கும் முகம் கொடுத்தது எனலாம்.
தேர்தலை நடத்துவதில் ஆளும் கட்சி, ஆரம்பத்திலிருந்தே அவசரம் காட்டியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அற்றதும் அவர்களைப் பொறுத்தமட்டில் குழப்பம் நிறைந்ததுமான இந்த நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தமக்கு விருப்பமானதும் ஸ்திரமானதுமான நாடாளுமன்றம் ஒன்றை நிறுவுவதே, ராஜபக்ஷக்களின் எதிர்பார்ப்பாகும்.
எவ்வாறிருப்பினும், தேர்தல் தாமதமடைந்ததைக் காரணம் காட்டி, மீண்டும் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்தனர். மூன்று மாதங்களுக்குப் பின்னர், தேர்தல் ஒன்றை நடத்தாமல், நாடாளுமன்றம் இல்லாத நாடொன்றை முன்கொண்டு செல்வது, சட்டமுரண் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதுமாத்திரமன்றி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி ஆகியவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி, ஏழு அடிப்படை உரிமை மீறல் மனுக்களும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், பொஜன பெரமுனவை மய்யமாக வைத்துச் சூழலும் இன்றைய அரசாங்கம், பரவலாக எதிர்பார்த்ததைப் போல, எதற்கும் செவி சாய்க்கவில்லை. அது, நகர்த்த வேண்டிய காய்களை எல்லாம், சாமர்த்தியமாக நகர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.
பத்து நாள்களாகப் பரிசீலனை செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டமை, அரசாங்கத்துக்குச் சாதகமான களநிலைமையைத் தோற்றுவித்தது.
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம், மாற்றுத் தேர்தல் திகதியைத் தீர்மானிப்பதற்கான சட்டவலுவைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியது. அதன்படி, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி புதன்கிழமை, தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதாவது, தேர்தல் சட்ட நியதிகளின்படி, கடந்த காலங்களில் சனிக்கிழமையே தேர்தல்கள் நடைபெற்று வந்த பின்னணியில், இம்முறை தேர்தல், வாரநாளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கம் போல வாக்கெண்ணும் நடவடிக்கைகளை, இம்முறை மேற்கொள்ள இயலாது. சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன், 'சமூக இடைவெளி'யும் பேணப்பட வேண்டியது அவசியம். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே தேர்தல் அலுவலர்களை, ஓர் அறையில் வைத்திருக்க வேண்டும் என்பதால், வாக்குகளை எண்ணி, இறுதி முடிவுகளை வெளியிடக் கால தாமதமாகலாம்.
எனவே, வார இறுதி நாள்களை முழுமையாகப் பயன்படுத்தி, 10ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னதாகத் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இத்தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
முன்னதாக, 524 பக்கங்கள் கொண்ட அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் ஊடாக, 22 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள், வாக்களிப்பு நிலையங்கள் பற்றிய முழு விவரத்தையும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இவ்வாறாக, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சமூக வலைத்தள பிரசாரங்களும் வீட்டுக்கு வீடு வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2,000ஐத் தொடுகின்றபோதும், அதுபற்றிய சிந்தனைகள் எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தேர்தல் பற்றிச் சிந்திக்கும் நிலைக்கு, இலங்கைச் சமூகம் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 200 பேர் இருந்தபோது, பொதுவாகக் காணப்பட்ட அச்சமும் முன்னெச்சரிக்கை உணர்வும் இப்போது, எங்கும் காணப்படுவதாகத் தெரியவில்லை.
நாம் மட்டுமன்றி, உலக மக்களே கொரோனா வைரஸுக்குப் பயந்து, வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த கடந்த சில மாதங்களில், உலகில் பல நாடுகள், தேர்தலை நடத்தி இருக்கின்றன.
கொரியா உட்படப் பல நாடுகள், நாடாளுமன்றத் தேர்தல், பிராந்தியங்களுக்கான தேர்தல் ஆகியவற்றை, இக்காலப் பகுதியில் நடத்தியிருக்கின்றன. கொவிட்-19 தொற்றால், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவும், திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை இவ்வாண்டில் நடத்தவே எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது. ஆகவே, இலங்கையில் தேர்தல் நடைபெறுவது குறித்து, ஆச்சரியப்படத் தேவையில்லை.
இருப்பினும், உலகின் கணிசமான நாடுகள், தேர்தல்களை ஒத்திவைத்துள்ளன. இதைத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரே கூறியுள்ளார். உலகை ஆட்கொண்டுள்ள தீவிரமான கொவிட்-19 பரவல், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்றவை காரணமாக, தேர்தலை நடத்துவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களைச் சிந்தித்து, தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கலாம்.
அந்த வகையில் நோக்கினால், இம்முறை ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதில், இலங்கை கடுமையான நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் என்றே ஊகிக்க முடிகின்றது.
தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் சுகாதார விதிமுறைகளையும் நடைமுறைகளையும் புறக்கணித்துச் செயற்படுவது என்றால், பெரிய சிரமங்கள் இருக்காது. ஆனால், சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும்.
ஆனால், கட்டுப்பாடுகளைப் பேணி, ஒழுங்கான முறையில் தேர்தல்கால நடவடிக்கைகள் அனைத்தையும், வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணியே, மிகுந்த நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கப் போகின்றது.
இவ்வளவு காலமும், மக்கள் செய்த தியாகங்கள், கடைப்பிடித்த கட்டுப்பாடுகள் எல்லாம் வீணாகும் விதத்தில், அடுத்த இரண்டு மாதங்களையும் கடத்தக் கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும் என்ற முழுமையான அறிவுறுத்தல் குறிப்புகள் அடங்கிய அறிக்கையை, சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி, வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கையொன்றைத் தேர்தல் ஆணைக்குழு, அம்பலாங்கொடை பிரதேசத்தில், கடந்த வாரம் நடத்தியது.
இந்த ஒத்திகை, வெற்றி அளித்துள்ளதாக மேலெழுந்த வாரியாகக் கூறப்படுகின்ற போதிலும், நடைமுறைச் சிக்கல்கள் பல காணப்படுவதைக் கண்டறிய முடிந்ததாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
இவைகளில் முக்கியமாக, வாக்களிக்க முன்னதாகக் கைகளைக் கழுவிச் செல்வதால், வாக்குச்சீட்டு நனைகின்ற நிலை, ஒரு சிக்கலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வேறுபல மாவட்டங்களிலும் முன்-பரீட்சிப்பு வாக்கெடுப்புகளை நடத்துவதற்கு, தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தேர்தல் வாக்கெடுப்பின் போது, வாக்குச்சாவடிகளில் எல்லா வாக்காளர்களும் சுகாதார விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல முடியாது. பெருமளவானோர், கட்டுப்பாடுகளைப் பேணி நடப்பார்கள்ளூ சிலர் அறியாமலும் வேறுசிலர் இறுமாப்புடன் விதிமுறைகளை மீறுவர். ஆயினும், அதைக் கூட சமாளித்து விடலாம். இங்கிருக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவெனில், தேர்தல் பிரசாரங்கள் பற்றியதாகும்.
தேர்தல் வாக்கெடுப்பு, இன்னும் 50 நாள்களின் பின்னரே இடம்பெறவுள்ளது. அதற்கிடையில், கொவிட்-19 பரவல் குறைவடையலாம். ஆனால், தேர்தல் பிரசாரங்கள், இப்பொழுதே சூடுபிடித்து விட்டன. இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மேலாக, இடம்பெறப் போகின்றன. எனவே, இங்குதான் சுகாதார நடைமுறைகள் மிகவும் அவசியமாவும் அச்சொட்டாகவும் பேணப்படவேண்டியதாக இருக்கின்றது.
இந்த அடிப்படையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சுகாதார வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதே, மிகப் பெரிய தலையிடியாக இருக்கும்.
ஆண்டாண்டு காலமாக, நாட்டில் இருக்கின்ற சிவில் சட்டங்களையே மதிக்காத அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும், தேர்தல் பிரசாரத்தின்போது, கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் பேணுவார்கள் என எதிர்பார்ப்பது, சற்று அதிகம்தான்.
பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டு, வரையறுக்கப்பட்ட நபர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டங்கள் நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தியும் சண்டித்தனத்தைப் பிரயோகித்தும் அதிகமானோர் கூடுவதும் சமூக இடைவெளியின்றித் தேர்தல் பிரசாரம் நடத்துவதும் நடைபெறும் என்றே, கணிக்க முடிகின்றது.
பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்நிலைகளுக்கே இது வழிகோலும். ஆனாலும், தேர்தலுக்குள் காலை எடுத்து வைத்தாயிற்று. இனியென்ன, 'சவாலே சமாளி' எனத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதுதான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago