Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 மார்ச் 02 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல், திட்டமிட்டபடி நடைபெறாமல் போயுள்ளது. ‘திட்டமிட்டபடி’ தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறும் என கடைசி வரை சொல்லிக் கொண்டு வந்தவர்கள், இப்போது ‘தமது திட்டப்படி’ தேர்தலை ஒத்திவைத்துள்ளார்கள்.
இன்றைய நிலையில், தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்படுவதில் உள்ள நியாயங்களையும் பின்னணிக் காரணங்களையும் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அது நடந்து கொண்டிருக்கின்ற விதம்தான் கவனிப்புக்கு உரியது.
அதாவது, வாக்கெடுப்பு சில மாதங்களுக்கு தள்ளிப்போவதை விட, எல்லாம் நடக்கப் போகின்றது என்பதைப் போன்ற தோற்றப்பாட்டை கட்டமைத்து, கடைசித் தருணத்தில் எல்லாவற்றையும் பூச்சியத்தால் பெருக்கியதுதான் விமர்சனத்துக்கு உரியதாகியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் நிதிசார் நெருக்கடி, ஒவ்வொரு குடும்பத்திலும் பாரிய எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கடுமையான வாழ்வியல், மனநெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்; இது இரகசியமானதுமல்ல.
வறிய மக்கள் மட்டுமன்றி, கூலித் தொழிலாளர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட மாதச் சம்பளத்தை பெறுகின்ற உத்தியோகத்தர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரக் கதிரையில் அகலக் கால்போட்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் பண முதலைகளுக்கும் இது புரியாமல் போகலாம்.
தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக மக்களுக்கு இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு மக்கள் மனநிலை ரீதியாகத் தயாராக இல்லை என்பதே யதார்த்தமாகும்.
மறுபுறத்தில், மருந்துக் கொள்வனவுக்கும், உணவுப் பொருட்களையும் அத்தியாவசிய உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கும் கஜானாவில் பணமில்லாத நாட்டில், தேர்தல் நடத்துவதற்கும், அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கும் நிதி கிடைப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை சாதாரண மக்களே அறிவார்கள்.
தெரு முனைகளிலும், தேநீர்க்கடைகளிலும் அடுப்பங்கரையிலும் அரசியல் பேசுகின்ற மக்களுக்கே, இப்போது தேர்தலை நடத்துவது நடைமுறைச் சாத்தியமில்லை; அல்லது, மிகக் கடினமானது என்பது, பல மாதங்களுக்கு முன்னரே பட்டவர்த்தனமாகத் தெரிந்திருந்தது.
இப்படியிருக்க, நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள், ஆட்சியாளர்கள், உயர்அதிகாரிகளுக்கு இது ஏன் ஆரம்பத்திலேயே தெரியாமல் போனது என்பதுதான், ஆச்சரியம் நிறைந்த கேள்வியாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி திட்டமிட்டபடி இடம்பெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் தபால்மூல வாக்களிப்புக்கும் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், அதற்கான நிதி ஏற்பாடுகள் இருப்பதாகவே ஆரம்பத்தில் இருந்து அதிகாரிகளும் அரசாங்கமும் அடித்துக் கூறி வந்தமை, இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இப்போது, நீதிமன்ற விசாரணைகள் முற்றாக முடிவுக்கு வராத நிலையில், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றுக்கு வாக்குறுதி அளித்ததன்படி, மார்ச் 19 இற்கு முன்னர் தேர்தல் நடைபெற வேண்டும். என்றாலும், மார்ச் மூன்றாம் திகதியில் அறிவிக்கப்படவுள்ள புதிய தேர்தல் திகதியானது, ஒரு சில மாதங்களுக்கு பிறகான ஒரு நாளாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“இதோ தேர்தல் நடைபெறப் போகின்றது” என்று உத்தியோகபூர்வமாக அறிவித்து, மக்களை அந்த மனநிலைக்குள் வலிந்து தள்ளி, தேர்தல் களத்தை உசுப்பேற்றி விட்டு, கடைசியில் வடிவேலு பாணியில் “எல்லோரும் ஆட்டத்தை கலைத்து, வீட்டுக்கு போங்கள்” என்று கூறுவது போல் உள்ளது.
ஆகவே, சாதாரண மக்களே முன்னுணர்ந்திருந்த களநிலைமையை, அரசாங்கமும் அதிகாரிகளும் ஏற்கெனவே அறிந்திருக்கவில்லையா? அல்லது, அரசாங்கத்தின் திட்டத்துக்குள் அதிகாரிகளின் திட்டம் மாட்டிக் கொண்டதா என்று தெரியவில்லை.
எது எப்படியாயினும், மக்களது பார்வையில் சட்டப்படி, உத்தியோகபூர்வமான முறையில் அவர்கள் பேய்க்காட்டப்பட்டு உள்ளார்கள். ‘சட்டப்படி’ என்பது பேச்சு வழக்கில் இன்னுமோர் அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
மக்களுடைய பொழுதுகள் மட்டுமன்றி, தேர்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் நேரமும் குறிப்பிட்டளவான பணமும் வீணடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு வகையான ‘அரசியல் நாடகம்’ என்றுதான் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
“நாங்கள் பிரதமரை மாற்ற நினைத்தோம்; ஆனால், யாரும் பொறுப்பேற்கவில்லை”.
“ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருந்தோம்; ஆனால், யாரும் முன்வரவில்லை”.
“இனப்பிரச்சினையை தீர்க்க முனைந்தோம்; ஆனால், அதற்குத் தடைகள் வந்து விட்டன. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் எமக்கிருந்தாலும் இவர்கள் விடுகின்றார்கள் இல்லை”.
“பொருட்களின் விலைகளை அதிகரிப்பதில் எமக்கு உடன்பாடில்லை; ஆனால், நாட்டு நிலைமையில் மின்சாரக் கட்டணத்தை, பொருட்களின் விலையை அதிகரிக்காமல் வேறு எதையும் செய்ய முடியாது”
இவை போன்ற ஏகப்பட்ட நியாயப்படுத்தல்களின் அடிப்படையிலேயே, தேர்தல் ஒத்திவைப்பையும் நோக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, கிட்டத்தட்ட இதே பாணியில்தான், உள்ளூராட்சி தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி நடத்த நாம் எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். வரவு - செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தோம்; திகதி அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன செய்வது, இப்போது நிதியை விடுவிக்க முடியாத பற்றாக்குறை நிலை காணப்படுகின்றது” என்று அரசாங்கமும் அதிகார தரப்பினரும் சொல்லாமல் சொல்வதாகவே எடுத்துக் கொள்ளலாம்.
2022 மார்ச் மாதம் தொடங்கிய மக்கள் எழுச்சியின் முடிவில், மக்கள் எதிர்பார்த்த ஒன்றும் எதிர்பாராத இன்னொன்றும் நிகழ்ந்துள்ளன எனலாம். அதாவது, கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடினார்; ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார்.
இந்தப் பிரளயத்துக்குப் பிறகு, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்று சொல்வதை விட, அதலபாதாளத்தில் கிடந்த நாட்டை அவர் பொறுப்பேற்றார் என்று கூறுவதே மிகப் பொருத்தமானது.
அதற்கமைய, அவர் நாட்டை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தி இருக்கின்றார் என்பதையும், இது வேறு யாராலும் முடியாத காரியமாக இருந்திருக்கும் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.
நாட்டில் மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து, பல வருடங்கள் சென்று விட்டன. அதேபோன்று, உள்ளூராட்சி சபைகளுக்கும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு தேர்தல்களையும் நடத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதற்கிடையில், பொதுவாக தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு தயங்கும் ஓர் ஆட்சியாளர் என்ற பார்வையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடந்த காலங்களில் இருந்தது.
ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மாகாண சபை தேர்தலை நடத்தினால் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதா? அதில், இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். எனவேதான் அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலுக்கு சென்றது எனலாம்.
தேர்தலை நடத்துவதன் ஊடாக மட்டும் ஜனநாயகம் வந்து விடுமா என்ற கேள்விகள் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளும் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்ததை அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கலாம் எனத் தெரிகின்றது.
எனவே, இந்த நிர்ப்பந்தத்தின், அடிப்படையிலேயே அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குச் சென்றதே தவிர, மனவிருப்பத்துடன் தேர்தல் நடத்துவதற்கான உள்ளார்ந்த முனைப்பை கொண்டிருக்கவில்லை. இவ்வாறு சொல்வதற்கு பல அவதானிப்புக்கள் உள்ளன.
உண்மையில், மார்ச் ஒன்பதாம் திகதி தேர்தலை நடத்துவதற்கான உறுதியான நோக்கம், அரசாங்கத்துக்கு இருந்திருக்கும் என்றால், ஆரம்பத்தில் இருந்தே, எப்படியாவது தேர்தலை நடத்துவதற்கான தோரணையில்தான் ஆளும்தரப்பின் அறிக்கைகளும், அரச ஆதரவு அதிகாரிகளின் செயற்பாடுகளும் இருந்திருக்க வேண்டும்.
இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் “இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது” என்ற தொனியிலான உரையும் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருந்துள்ளது என்பதை குறிப்புணர்த்தி உள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
உண்மையில், நாட்டு நடப்புகளை தொடராக அவதானித்த மக்கள், மார்ச் ஒன்பதாம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான நிகழ்தகவு குறைவு என்பதை எப்போதோ கணித்து விட்டார்கள். தேர்தல் ஆணைக்குழு, இப்போது அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், தேர்தலை நடத்த வேண்டிய வெளி-அழுத்தம், அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்பதற்காக, அல்லது தேர்தலுக்கு நாங்கள் தயார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டிருந்த வாக்காளப் பெருமக்களை, வலுக்கட்டாயமாக தேர்தல் களத்துக்குள் தள்ளிவிட்டு, மக்கள் தொடக்கம் அதிகாரிகள் வரையில் அனைவரது நேரத்தையும் வீணாக்கியதற்கு என்ன பெயர் வைப்பது என்றுதான் தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago