2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 17 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்தப் போராட்டங்களால், நாட்டின் இயல்பான நடவடிக்கைகள் மாத்திரமன்றி, தொழில் நடவடிக்கைகளும் முடங்குகின்றன. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பும், கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவும் சுட்டிக்காட்டத்தக்கன. 

நேற்று (15) கூட, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால், மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன. 

ஏற்கெவே, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய மூன்றாம் தவணைப் பரீட்சைகள், நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களால் நான்கு மாதங்கள் கடந்து நடைபெறுகின்றது. 

இவ்வாறான நிலையில், அந்தப் பரீட்சைகள் மீண்டும் காலம் தாழ்த்தி நடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் பரீட்சைகள் பிற்போடுவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

கடந்த ஆண்டு பரீட்சை நடந்து முடியாமல், இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பரீட்சையை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும், நாட்டு மக்கள் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

 நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்த போது, விரைவாக தேர்தல் ஒன்றின் ஊடாக, புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். 

ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்களை நடத்தாது, ஒற்றை மனிதராக, சர்வாதிகார ஆட்சியொன்றைப் பேணுவது குறித்து, சிந்தித்துச் செயலாற்றுகிறார். 

மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, நிதியை வழங்காது ரணில் ஒத்திப்போட வைத்துவிட்டார். எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடி, ஒத்திப்போடப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஆணையை வாங்கியிருக்கின்றன. 

ஏப்ரல் 25ஆம் திகதி அந்தத் தேர்தலை நடத்துவது என்று, தேர்தல் ஆணைக்குழு மீண்டும் அறிவித்திருக்கின்றது. ஆனால், அதனை நடத்துவதற்கான நிதியை திறைசேரி விடுவிக்குமா என்ற கேள்வி எழுகின்றது.

 நாட்டில் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு, ஜனநாயக ரீதியான ஆட்சி அமையாத வரையில், போராட்டங்கள் ஓயப்போவதில்லை; மக்கள் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் செல்லப்போவதில்லை. இன்றைக்கு தேர்தலொன்று நடைபெற்றால், பிரதான தரப்புகளாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இருக்கும் என்கிற நிலை காணப்படுகின்றது. 

ஆட்சியமைப்பதற்கான போட்டியில், இரு தரப்புகளுமே இருக்கும் என்பது தென் இலங்கையின் உணர்நிலை. அப்படியான நிலையில், தேர்தலை நடத்துவது தங்களின் எதிர்கால ஆட்சி - அதிகார கனவுகளில் பாறாங்கல்லை எறிவதற்கு சமமானது என்பது ரணிலினதும், ராஜபக்‌ஷர்களினதும் நிலைப்பாடு. 

அப்படியான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் அபிமானம் குறையும் வரையில், தேர்தல்களை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அனைத்து சதித்திட்டங்களையும் ரணிலும் ராஜபக்‌ஷர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

 பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர் இல்லம் என்று நாட்டின் முக்கிய மத நிறுவனங்கள் தொடங்கி, சமூக இயக்கங்களும் தொழில் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோருகின்றன. திங்கட்கிழமை (13) அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள், தேர்தலை உடனடியாக நடத்துமாறு ரணிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். 

இனியும் தேர்தலை நடத்தாது விட்டால், தென்இலங்கையில் தங்கள் மீதான மதிப்பு மேலும் கீழிறங்கும் என்று ரணில் - ராஜபக்‌ஷ தரப்புகளுக்குத் தெரியும். ஏனெனில், ராஜபக்‌ஷர்களை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு பௌத்த பீடங்கள் எவ்வாறு உதவின என்பது அனைவருக்கும் தெரியும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில், தென் இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலுள்ள பௌத்த விகாரைகளும் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பெரும் பிரயத்தனத்தோடு பிரசாரத்தை மேற்கொண்டன. அப்படிப்பட்ட நிலையில், நாட்டின் பல தரப்புகளும் தேர்தலை நடத்துமாறு கோரிய நிலையில், இறுதியாக தவிர்க்க முடியாமல் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த நெருக்கடியையும் தாண்டி, தேர்தலை நடத்தாது ஒத்திவைப்பது என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லை. ஏனெனில், மீண்டும் ஆட்சிக்கனவை நோக்கி ஓடுவதற்கு, இனவாதமும் மதவாதமுமே உதவும் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அதற்கு, பௌத்த பீடங்களின் ஒத்துழைப்பு அவசியம். அதனால், பௌத்த பீடங்களோடு இப்போது இணங்கிச் செல்வதுதான் எதிர்கால அரசியலைக் காப்பாற்றும் என்பது அவர்களின் நினைப்பு. குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷவை பத்து ஆண்டுகளுக்குப் பின்னராவது, ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவும் என்பது மஹிந்தவின் எதிர்பார்ப்பு.

 ஆனால், ரணில் இந்த நெருக்கடிகளை எல்லாம் பூச்சாண்டிகளாக மாத்திரமே காண்கிறார்.  அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்தே சிந்தனை இருக்கின்றது. அதில் எப்படி வெல்வது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. 

கடந்த வாரம் திடீரென அமெரிக்கா டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியை அதிகரித்தது. கடந்த எட்டு மாதங்களில், குறிப்பாக ரணில் ஜனாதிபதியானதும் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து, ரூபாயின் பெறுமதி அதிகரித்ததாக அரசாங்கம் அறிவித்தது. 

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 360 ஆகக் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் மூன்று நாள்களில் 306 முதல் 309 ரூபாய் வரை வந்தது. இந்தப் பெறுமதி அதிகரிப்பு என்பது, திறைசேரி ஊடாக திட்டமிட்ட ரீதியில் பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என்று எதிர்க்கட்சிகளும் பொருளாதார அறிஞர்களும் வாதிட்டனர். 

இவ்வாறு பொய்யாக ரூபாயின் பெறுமதியை அதிகரித்துக் காட்டினால், இந்த ஆண்டின் இறுதியில் டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இழப்பு என்பது, கிட்டத்தட்ட 400 ரூபாயில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது குற்றச்சாட்டு. 

இந்த வண்டவாளங்களை எல்லாம் ரணில் அறியாதவர் அல்ல. அவர் தன்னை, ‘நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்த தலைவராக முன்னிறுத்தி’ மக்களை மடையர்களாக்க நினைக்கிறார். அதன்மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார். 

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக்கட்டண அதிகரிப்பு தொடங்கி சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதற்காக விதித்த பல நிபந்தனைகளையும் ரணில் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. மக்கள் மீதான வரிச்சுமை என்பது, ஏற்கெனவே வாழ்வாதார நெருக்கடியில் இருக்கும் மக்களை, இன்னும் இன்னும் அலைக்கழிக்க தொடங்கி இருக்கின்றது. 

அப்படியான நிலையில், தற்போதைக்கு போலியாக ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி அதன் இயல்பான கட்டத்தை அடைந்தால், அதாவது 400 ரூபாய் என்ற நிலையை ஏட்டினால் அதையும் நாட்டு மக்களே தாங்க வேண்டி ஏற்படும். 

மீண்டும் பொருட்களின் விலை அதிகரிப்புத் தொடங்கி, அனைத்து நெருக்கடிகளும் ஏற்படும். தனது ஆட்சி அதிகார வெறிக்காக, ரணில் இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். அதனை, ஜனநாயக விரும்பிகள் என்று கடந்த காலங்களில் பேசிக்கொண்டிருந்த சில புத்திஜீவிகளும், சமூக அறிஞர்களும் கூட ஆதரிப்பது என்பது அற்பத்தனமானது.

 நாட்டின் நெருக்கடிகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேர்தல்கள் ஊடாக நிலைபெறும் ஆட்சி அவசியமானது. அவ்வாறான ஆட்சியொன்று அமையும் வரையில், நாட்டில் போராட்டங்கள் என்பது தொடர் கதையாகிவிடும். 

அது, மக்களின் இயல்பு வாழ்வை முற்றாக சீர்குலைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் இன்னும் படுபாதாளத்துக்குள் தள்ளும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .