Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 மே 01 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் ஐந்து வருடங்கள் கழிந்திருக்கின்றன. நாட்டில் நீதி நிலைநாட்டப்படாத, தீர்வு காணப்படாத, பிராயச்சித்தம் தேடப்படாத சம்பவம் இது மட்டுமே அல்ல. அந்தப் பட்டியலில் இதுவும் ஒன்றாகும்.
இனப் பிரச்சினை தீர்வு, யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதக் குழுக்கள் நிகழ்த்திய படுகொலைகள் மற்றும் உரிமை மீறல்கள், ஜூலைக் கலவரத்திற்கான நீதி, அதன் பின்னர் இடம்பெற்ற இனக் கலவரங்கள், நாட்டை கொள்ளையடித்தவர்களிற்கான தண்டனை, ஊழல் செய்தவர்களுக்கான தண்டனை என எத்தனையோ விவகாரங்கள் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்போம், நீதியை நிலைநாட்டுவோம்’ என்று கூறி மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் அப்படி எந்த அபூர்வத்தையும் நிகழ்த்திக் காட்டவில்லை என்பதே நமது அனுபவமாகும்.
ஆட்சியாளர்களின் மனப்பாங்கும் ஆட்சி முறைமையும் மாறாதிருக்கின்ற சூழ்நிலையில். ஒரு தேர்தல் நடந்தால், ஆட்சி மாறினால், சட்டமூலங்களைக் கொண்டுவந்தால், அமைச்சர்களை மாற்றினால், அதிகாரிகளை மாற்றினால், அரசியலமைப்பைத் திருத்தினால்; பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதான பழைய கதையையே இன்று வரை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அப்படி எந்த தீர்வையும் வழங்கியதாகத் தெரியவில்லை. பிச்சைக்காரனின் புண்களைப் போலப் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அல்லது எல்லா பரப்புகளுக்கும் பரவியுள்ளன.
இந்த நாட்டில் ஆயுத மோதலுக்கு அடுத்தபடியாக, சில மணிநேரங்களுக்குள்ளேயே பெரும் பிரளயத்தையும் அழிவையும் ஏற்படுத்திய ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இவ்வளவு காலமும் தனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்ற தோரணையில் செயற்பட்ட மைத்திரி, தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நேரத்தில் திடுதிடுப்பென ‘எனக்குத் தெரியும்’ என்று கூறியிருக்கின்றார். பிறகு, இந்த தகவல் தனக்கு அண்மையிலேயே தெரிய வந்ததாகவும் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து, அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் என்ன கூறினார் என்பது உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தப்படா விட்டாலும் இத்தாக்குதலில் இந்தியாவின் பின்னணி குறித்து சில தகவல்களை அவர் கூறியிருப்பதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றமை கவனிப்பிற்குரியது.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவுடன் முஸ்லிம்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். சட்டமும் அவர்கள் மீது பாய்ந்தது. சஹ்ரான் கும்பல் இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற காரணத்திற்காகச் சகோதர இனங்களும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண்கொண்டே பார்த்தன.
முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இலங்கையில் முன் பகை எதுவும் இல்லை. இந்நிலையில் சிங்கள இனவாதத்தின் வன்கொடுமைகளைக் கூட பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், எந்தக் காரணமும் இன்றி இப்படியொரு நாசக்கார செயலைச் செய்யமாட்டார்கள் என்பது வெளிப்படையான விடயம்.
ஆனால், முஸ்லிம் சமூகம் இதனைச் சொன்ன போது பெரிதாக யாரும் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை.
இதற்குப் பின்னால், அரசியல் சதியோ, வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலோ இருக்கின்றது என்ற அனுமானங்களைப் பொறுப்பில் இருந்தவர்கள் கணக்கெடுக்கவில்லை.
உண்மையில், இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான, அற்பத்தனமான, மனிதகுல விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலால் உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்த கத்தோலிக்க மக்களின் இழப்புக்கள் சொல்லி மாளாது.
அதற்கு அடுத்தபடியாக நெருக்குவாரங்களையும் மன அழுத்தங்களையும் அதிக அளவில் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், இந்த நொடி வரையும் நீதி நிலைநாட்டப்பட்டு குற்றவாளிகள், சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி புதுப்புது கதைகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே தவிர அறுதியும் இறுதியுமான ஒரு தீர்வு காணப்படவில்லை. சரியான விசாரணைகள் இடம்பெற்று சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படாமையின் காரணமாகவே புதுப்புது பூதங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
2019 ஏப்ரல் தாக்குதலைத் தொடர்ந்து, கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷ குடும்பம் ஆட்சிக்கு வந்தாலேயே இந்த பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியும் என்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. அது வெற்றியையும் தந்தது.
இதுவே பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது. ஆனால், விசாரணைகள் அந்தக் கோணத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, இத்தாக்குதலில் அரசியல் தரப்பின் அல்லது வெளிநாடுகளின் பின்னணி இருக்குமா என்ற சந்தேகங்கள் சாதாரண மக்களுக்கே ஏற்பட்டன. அந்தக் கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடைபெற்றபோது, இதே மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதியாக இருந்தார். ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி வகித்தார். ஆனால், தமக்கு எதுவும் தெரியாது என்று மைத்திரி கையை விரித்தார், அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடன் செயற்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்றன ஆனால் நீதி நிலைநாட்டப்படவில்லை.
இவ்வாறான போக்கை அவதானித்த கத்தோலிக்க சமூகம் மட்டுமன்றி நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் மக்களும் இது ஒரு அரசியல் பின்னணியுடனான சதித்திட்டம் என்பதையும் அதற்கு முஸ்லிம் கும்பல் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதையும் உணர்ந்து கொள்ள அவ்வளவு காலம் எடுக்கவில்லை. இருப்பினும் சட்டத்தின் கண்ணுக்கு இதுவெல்லாம் தெரியவில்லை.
இந்நிலையில், பிள்ளையானின் நெருங்கிய சகாவாக இருந்த அஸாத் மௌலானா சில மாதங்களுக்கு முன்னர் சில தகவல்களை செனல்-4 தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார். ‘இந்த தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்பட்டது’ என்பதும் ‘தாக்குதல் நடத்தியவர்களையும் ராஜபக்ஷ தரப்பையும் இணைக்கும் பணியை தாங்கள் (பிள்ளையான் தரப்பு) மேற்கொண்டதாகவும்’ சொல்லியிருந்தார்.
அஸாத் மௌலானா ஒரு தேசப் பற்றாளரும் இல்லை. இன நல்லிணக்கவாதியும் இல்லை. அவரும் கூட்டுக் களவாணிதான். ஆனால், அவர் கூறிய விடயங்கள் புறக்கணிக்க முடியாதவை. இவரது காணொளி சமூகத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்திய போதிலும், மக்கள் எதிர்பார்த்தபடி விசாரணைகள் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணையொன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த தனக்குப் பொருளாதார வசதி இல்லை என்று கூறி, இழுத்தடித்து வரும் மைத்திரி இப்போது, தனக்குச் சூத்திரதாரிகளைத் தெரியும் என்று ஒரு புதுக் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அதாவது,இப்படி காலத்திற்குக் காலம் புதுப்புது கதைகள் வருவதற்கும், ஆளுக்கொரு விதமாக இவ்விடயத்தைக் கையாள்வதற்கும் அடிப்படைக் காரணம், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறையான, முழுமையான, வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையொன்று இடம்பெறாமையாகும்.
தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில் கோட்டபாய புத்தகம் எழுதியுள்ளார். பிள்ளையானும் புத்தகம் வெளியிட்டுள்ளார். இனவாதிகளுக்கு சட்டப்படி அச்சமூட்டப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், திடுதிடுப்பென மைத்திரி இவ்வாறு கூறுவதும் அரசியலுக்காக இருக்கலாம். இந்த நாட்டில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக இனவாதமும் பிரித்தாளும் உத்தியும் கையாளப்பட்டிருக்கின்றது என்றால், ஆட்சி மாற்றத்திற்காகவே உயிரைக் கொல்லும் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது உண்மையென்றால், அதே கருவிகள் மீண்டும் வேலை செய்கின்றனவா என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீண்டும் உரசிப் பார்ப்பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
ஆகவே, தேர்தலை மையமாகக் கொண்டு அல்லாமல், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இவ்விவகாரத்திற்கு முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும்.
அவ்வாறில்லாமல், அரசியலுக்காக, தேர்தலுக்காக அல்லது மக்களை ஏமாற்றி காலத்தை இழுத்தடிப்பதற்காக இவ்விவகாரம் இதுபோன்ற ஏனைய நாட்பட்ட பிரச்சினைகளும் இனியும் பயன்படுத்தப்படுமென்றால், 2030 தேர்தலிலும் இதே ஆயுதம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
04.02.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
7 hours ago