2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தேர்தலுக்கு நாள் குறித்தல்

மொஹமட் பாதுஷா   / 2020 ஜூன் 05 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக் கைகூடுவதற்கான நேரம், நெருங்கி வந்திருக்கின்றது. நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தலை நடத்துதல் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறுவதற்கான நிகழ்தகவுகள், அதிகரித்துள்ளன. தேர்தலுக்கு நாள்குறிப்பது மாத்திரமே மீதமுள்ளது,

ஆதலால், கடந்த மூன்று மாதங்களாக, கொவிட்-19 வைரஸ் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த இலங்கை மக்கள், இனிவரும் சில நாள்களுக்குத் தேர்தல் பற்றியும் தமக்குப் பொருத்தமான மக்கள் பிரதிநிதித்துவங்கள் பற்றியும், சிந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர்.

'காய்ச்சல்' என்றுகூறி, வீட்டுக்குள் சுருண்டுபடுத்தவனை, ஆடையுடுத்தி, 'சந்தைக்குப் போய் வா' என்று சொல்வது போல, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துதல் என்ற தோரணையில், தேர்தல் ஒன்றை நோக்கி, மக்கள் வெளித் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இதுவெல்லாம், எதிர்பார்த்த நிகழ்வுகள்தான்!

உலகில் ஏனைய நாடுகளில், கொவிட்-19 தொற்று, கடுமையாகப் பரவிக் கொண்டிருந்த போது, இலங்கையில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு வராத தருணத்தில், நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, ஏப்ரல் 20இல், அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து, கொழும்பிலும் படைத் தரப்புக்கு உள்ளும், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், மேலும் தளர்த்தப்பட்டன. இத்தகைய நகர்வுகள் யாவும், தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு  இருக்கின்ற அவசரத்தை, உணர்த்துவதற்குப் போதுமானதாக இருந்தன.

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை, நீதிமன்றம் நிராகரித்தமை, சட்டத்துக்கு உட்பட்ட விடயம் என்றாலும், அதுவும் கூட, அரசியல் பற்றித் தெரிந்தவர்களுக்கு, ஆச்சரியமான அறிவிப்பாக இருக்கவில்லை. பலர், இவ்வாறான தீர்மானம் ஒன்று எடுக்கப்படலாம் என்பதை, எதிர்பார்த்து இருந்தனர். 

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில், கணிசமான வெற்றி கண்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போன்ற முன்னைய ஆட்சியாளர்களின் காலமாக இது இருந்திருந்தால், நிலைமைகள் மேலும் மோசமடைந்து இருக்கலாம் என்பதே, நமது கடந்த கால அனுபவமாகும். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொண்டது, சஹ்ரான் குழு என்கின்ற பயங்கரவாதக் கும்பல் என்றாலும், அது விடயத்தில் அப்போதைய பிரதமரும் ஜனாதிபதியும், எவ்வாறு பொறுப்புக் கூறினார்கள் என்பதை, நாம் மறந்து விடவில்லை.

ஆனால், கொவிட்-19 தொற்று, இலங்கையில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதற்காக, முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றோ, அடியோடு துடைத்தெறியப்பட்டு விட்டது என்றோ, யாரும் கூற முற்படக் கூடாது. 

அத்துடன், வைரஸ் பரவல், சமூக மட்டத்தில் இப்போதில்லை என்றாலும், இனிவரும் நாள்களில், சமூகத்துக்குள் இருந்து தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட மாட்டார்கள் என்று, சுகாதார உயரதிகாரிகளால் அடித்துக் கூறுவதற்கான அடிப்படைகளும் இல்லை. இருப்பினும், கிட்டத்தட்ட அப்படியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பகீரதப் பிரயத்தனங்களையே, பெரும்பாலும் காண முடிகின்றது.

இலங்கை, ஒரு சிறிய நாடு. வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருப்பது மட்டுமன்றி, உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு, ஒரு சில துறைகளே 'ஒட்சிசன்' வழங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, நாட்டை இப்படியே முடக்கி, மூடி வைக்க முடியாது என்று, அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு சரியானதே. 

அதன்படி, மே இரண்டாம் வாரத்தில், ஊரடங்கு உட்பட அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையும் இயல்பு வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டமையும், தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகின்றது.

ஆனால், அதற்கு முன்னர், முதற்கட்டமாக, அதாவது ஏப்ரல் 20இல், ஆபத்தான மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை, காத்திரமான ஒரு தீர்மானம் எனச் சொல்ல முடியவில்லை. 

மாறாக, தேர்தலை நடத்துவதற்காகச் செயற்கைத் தனமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, அரசாங்கம் முயற்சி எடுத்தது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வகையிலான ஒரு நகர்வாகவே, இது அமைந்திருந்தது.

ஏனெனில், இத்தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகுதான், கொழும்பில் கொத்துக்கொத்தாக, கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், படைத் தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றனர். 

அரசாங்கம் அவசரப்பட்டமையால், இறுக்கமான சுகாதார நடைமுறைகளில் ஒரு சறுக்கல் ஏற்பட்டதையும் அதேபோன்று, படைத் தரப்பினரின் கவனக் குறைவான செயற்பாடுகளும் தேர்தல் தாமதமடைவதற்கு மறைமுகமாகக் காரணமாகியுள்ளதையும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அரசாங்கம் விமர்சனங்கள் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ஓர் இலக்கை நோக்கி நகர்வதாகவே தெரிகின்றது. அது, பொதுத் தேர்தல் ஊடாக, பலமான ஆட்சியை நிறுவும் இலக்கு எனலாம். 

எனவே, கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட அநேக தீர்மானங்கள், வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன என்றாலும், சில நடவடிக்கைகளை அவதானிக்கும் போது, அதற்குப் பின்னால், அரசியல் எதிர்பார்ப்புகள் இருக்கின்றமை, மங்கலாகத் தெரிந்தது.

இந்நிலையிலேயே, நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டமை, ஜூன் 20இல் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டமை ஆகியவற்றை ஆட்சேபித்து, ஏழு அடிப்படை உரிமைமீறல் மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தரணி சரித்த குணரத்ன, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆகியோர் தலைமையிலான குழுவும், முன்னாள் அமைச்சர்களான ரஞ்சித் மதும பண்டார, குமார வெல்கம, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்பினர், இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள், 10 நாள்களாக இடம்பெற்றன. பரிசீலனைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது இடைநடுவே, 15 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
குறிப்பாக, இந்த மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளில், இரு சமர்ப்பிப்புகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ஆகும்.

ஒன்று, 'எப்படி இருப்பினும், தற்போதிருக்கின்ற சூழலில், ஜூன் 20ஆம் திகதி, தேர்தலை நடத்த முடியாது' என, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்தமை. 
இரண்டாவது, 'சமூக மட்டத்தில், கொவிட்-19 தொற்று இல்லை. தேர்தல் வாக்கெடுப்பை நடத்தலாம்' என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உயர்நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கை. 

இலங்கையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விடயத்தில், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். தீர்மானங்களை எடுக்கின்ற அரசியல்வாதிகள், மேலதிகாரிகளை விட, அவற்றைக் களத்தில் நின்று செயற்படுத்துகின்ற தரப்பினரின் பங்களிப்பு, கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையானதாகக் காணப்படுகின்றது.

இப்படியான சூழ்நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டார். ஏதோவோர் உள்நோக்கத்துடனேயே, இராணுவ அதிகாரி ஒருவர், சுகாதார அமைச்சின் உயர்பதவிக்கு நியமிக்கப்படுகின்றார் என்ற அபிப்பிராயங்கள், அப்போது வெளியாகியிருந்தன. 

இப்பின்னணியில், எதிர்பார்க்கப்பட்டது போலவே, 'நாட்டில், சமூக மட்டத்தில் கொவிட்-19 தொற்று தற்போது இல்லை. தேர்தலை நடத்தலாம்' என்று, ஒரு சான்றறிக்கையைச் சுகாதார அமைச்சு, நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தமை கவனிப்புக்கு உரியது.

இலங்கையில், சமூக மட்டத்தில் வைரஸ் தொற்று இல்லை என்றாலும் கூட, நிஜத்தில், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, இன்னும் குறைந்தபாடில்லை. கடற்படையினர் மத்தியில் இருந்தும் குவைட், கட்டார், பங்களாதேஷ் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், அழைத்து வரப்பட்டோர் மத்தியில் இருந்துமே, புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், 'வழமைக்குத் திரும்புதல்' என்ற பெயரில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாடு திறந்து விடப்பட்டிருக்கின்ற ஒரு பின்புறச் சூழலில், சமூகத்துக்குள் தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. 

தேர்தல் நடைபெற்றால், மக்கள் நடமாட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதை, அடிமட்ட வாக்காளனும் அறிவான். இப்படியான ஒரு தருணத்திலேயே, மேற்படி சான்றறிக்கையைச் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இவ்வாறான சான்றுபடுத்தல் ஒன்றுக்காகவே, தேர்தல் ஆணைக்குழுவும் காத்திருந்தது.

இந்தப் பின்னணியிலேயே, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்களைப் பல நாள்களாகப் பரிசீலித்த உயர்நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, தள்ளுபடி செய்திருக்கின்றது. ஆக, மேற்படி சான்றறிக்கை, எதற்காகக் கொடுக்கப்பட்டதோ, இவ் விவகாரத்தில் ஆளும் தரப்பின் எதிர்பார்ப்பு எதுவாக இருந்ததோ, அது இன்று கைகூடி வந்திருக்கின்றது எனலாம்.

உயர்நீதிமன்றின் இந்த அறிவிப்பால், புதிய தேர்தல்த்; திகதியொன்றைத் தீர்மானிக்கும் அதிகாரம், சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு வசமாகியுள்ளது. இந்த அடிப்படையில், புதிய தேர்தல்த் திகதி, திங்கட்கிழமை (08) நடைபெறும் உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

அதேநேரம், வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்குவதற்கும் வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறிருக்க, தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய, சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வழிகாட்டல் கையேட்டை, சுகாதார அமைச்சு, தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. 

தேர்தல் பிரசாரம், வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல் ஆகிய அனைத்துச் செயன்முறைகளிலும், பேணவேண்டிய சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான கையேடாக, இது காணப்படுகின்றது.

ஆளும் தரப்பு, தாம் முன்வைத்த காலை, நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதன் மூலம், பின்வைப்பதற்குக் கடைசி மட்டும் விரும்பவே இல்லை. அதற்கு, நிறைய அரசியல், சட்டக் காரணங்கள் உள்ளன. 

காய் நகர்த்துவதில் ராஜபக்ஷக்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகள் என்பதை நாம் நன்கறிவோம். அந்த வகையில், அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமை, அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இந்தப் பின்னணியில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை, எல்லா மாவட்டங்களிலும் ஒரே தினத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழு நாள்குறிக்க உள்ளது. 

ஏப்ரலில் நடைபெற இருந்த பொதுத் தேர்தல், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என, அனுமானிக்க முடிகின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினம் வரை, 60 – 70 நாள்கள் கால இடைவெளி தேவை என்று, தேர்தல் ஆணைக்குழு முன்னர் தெரிவித்தமை, இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும், சமூகத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனச் சான்றறிக்கை அளித்துள்ள சுகாதாரத் தரப்பினரே, மக்களைக் கவனமாக இருக்குமாறும், இல்லையென்றால் தொற்று ஏற்படலாம் என்ற தோரணையிலும், கருத்துகளை வெளியிட்டு வருவதைக் காண முடிகின்றது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறித்த, அச்சமூட்டல்களும் முன்வைக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்துவதும், நாடாளுமன்றத்தை ஸ்தாபிப்பதும் அத்தியாவசியமானது. இருப்பினும், இன்றைய சூழலில், எவ்வாறான தேர்தல்கால வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தினாலும், அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்குவதும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி, அதில் கணிசமான வாக்களிப்புச் சதவீதத்தைப் பதிவு செய்வதும், அரசாங்கத்துக்குச் சவாலாக இருக்கும். 

ஒருவேளை, தேர்தல் வெற்றி–தோல்வியை விட, இது பெரும் சவாலாக அமைந்தாலும் அமையலாம்.
 

கட்டுப்பாடுகளுடன் இறை வணக்கம்
 

இலங்கையில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும், இம்மாதம் 15ஆம் திகதி திறப்பதற்கு, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவியதை அடுத்து, மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ள, பள்ளிவாசல்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அரசாங்கம் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி, மக்களை வழமைக்குத் திருப்ப நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. ஏற்கெனவே, அரச, தனியார் அலுவலகங்களில், குறிப்பிட்டளவான ஊழியர்கள் கடமையாற்றுவதற்கும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, பொதுப் போக்குவரத்துச் சேவையில் பஸ்கள் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

'சமூக இடைவெளியைப் பேண வேண்டும்' என்ற முன்நிபந்தனையுடன், இவ்வாறு பல்வேறு விதமான பொதுவெளி நடமாட்டங்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பது மட்டுமன்றி, தேர்தலை நடத்த எதிர்பார்த்திருக்கும் அரசாங்கம், சுகாதார வழிகாட்டல்களை வழங்கி, மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியும் ஆலோசித்து வருகின்றது. எனவே, வழிபாட்டுத் தலங்களை, இனியும் மூடிவைப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியாத சூழ்நிலை, ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.

இரண்டரை மாதங்களாக, அரசாங்கத்தின் ஒழுங்குவிதிகளை மதித்தும் கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கிலும், இலங்கையில் வாழும் ஆத்தீகர்கள் அதாவது, இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும், தமது இறை வழிபாடுகளைத் தியாகம் செய்திருந்தனர்.

இதில், இஸ்லாமியர், பௌத்தர், இந்துக்கள், கிறிஸ்தவார, கத்தோலிக்கர் என, எந்தப் பாகுபாடும் இருக்கவில்லை. எல்லா மத நம்பிக்கைகளையும் கொண்ட மக்கள், இக்காலப் பகுதியில், தமது வீடுகளையே பிரார்த்தனைக் கூடங்களாக மாற்றி இருந்தனர்.

இப்போது அவற்றைத் திறப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்துவரும் தினங்களுக்குள், கொரோனா வைரஸ் பரவல் போக்கில், குறிப்பிடத்தக்க பாதக நிலை எதுவும் ஏற்படாதவிடத்து, பள்ளிவாசல்கள், விகாரைகள், கோவில்கள், தேவாலங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், வணக்கஸ்தலங்களுக்குச் செல்லும் மக்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில், கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதிலும், ஒவ்வொரு நாளும், திரளாக ஐந்து வேளைகள் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்ட முஸ்லிம்கள், இதுவிடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் உள்ள பள்ளிவாசல்கள் திறக்கப்படும். இருப்பினும், வரையறைகள், நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடனேயே தொழுகைகள் இடம்பெறும். 

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, இதற்கான அறிவுறுத்தல்களை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழியங்கும் வக்பு சபை வெளியிட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரை, பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளோ, கூட்டாக இடம்பெறும் காரியங்களுக்கோ அனுமதியில்லை. தனித்தனியே தொழுகையில் ஈடுபடலாம். எனினும், குறித்த பள்ளிவாசலுக்குள் ஒரே நேரத்தில், 30 பேருக்கு உள்பட்டவர்களே இருக்க முடியும் என, சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, பள்ளிவாசல்கள் திறந்திருக்கக் கூடிய நேரத்தைக் குறித்துரைத்துள்ள வக்பு சபை, பள்ளிவாசல்களுக்கு தொற்றுநீக்கி தெளித்தல், ஓரேயொரு நுழைவாயிலைப் பயன்படுத்தல், ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு, தொழும் இடங்களை அடையாளமிடல், முகக் கவசம் அணிந்து தொழுதல் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இவற்றைக் கட்டாயமாக முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். அதேபோன்று ஏனைய சமூகத்தினரும் வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தாக வேண்டும்.
இவற்றைப் புறக்கணித்தல், சட்டத்தை மீறுவதாக அமையும் என்ற அடிப்படையில், வழிகாட்டல்களை மீறி, இறை வணக்கத்தில் ஈடுபட்டதற்காகக் குற்றவாளியாக ஆகிவிடுவதா என்பதை, சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .