2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தீர்க்கப்படாமலேயே மறக்கடிக்கப்படும் பிரச்சினைகள்

Editorial   / 2023 நவம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

 

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில்  விளையாட்டுச் சுற்றுப் போட்டி ஒன்றில் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டு, ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவது போல, நாட்டில் நடக்கின்ற முக்கிய பிரச்சினைகள், நெருக்கடிகள், குற்றங்கள், விவகாரங்களுக்கு தீர்வு காணப்படாத போதும், நாம் சில நாட்களிலேயே அவற்றை கடந்தும், மறந்தும் போவதற்கு பழக்கப் படுத்தப்பட்டிருக்கின்றோம். 

அரசியல் நிகழ்வுகள், சதித் திட்டங்கள், வன்முறைகள், ஊழல்கள், மக்கள் நலனுக்கு எதிரான ஆளுகை, இனவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள், கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், நிதிமோசடிகள் என நாம் மறந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களின் வரிசை நீண்டு செல்கின்றது. 

ஆக, மக்களின் மறதிதான் இலங்கையை ஆட்சி செய்கின்றவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குற்றமிழைப்பவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது எனலாம். 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுக்கு ராஜபக்‌ஷக்களும் உயரதிகாரிகளுமே காரணகர்த்தாக்கள் என்று நீதிமன்றம் அண்மையில் அறிவித்துள்ளது.

மக்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். அதனாலேயே வீதிக்கு இறங்கிப் போராடினார்கள். அதனை இன்று நீதிமன்றம் சட்டப்படி தீர்ப்பெழுதியுள்ளது. இது மிக முக்கியமான ஒரு விடயமாகும். 

இந்தப் பின்னணியில், ராஜபக்‌ஷ தரப்பு இதனை மறுத்துள்ளது. மறுபக்கத்தில் ‘ராஜபக்‌ஷக்கள் நாட்டு மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால். இதில் இருக்கின்ற விசித்திரமான உண்மை என்னவென்றால், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இதனை எல்லோரும் மறந்து விடுவோம் என்பதுதான். 

இவ்வாறு, மக்களின் மறதியைப் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வெளியில் விசாரணை என்றும் ஆணைக்குழுக்கள் என்றும் ஆட்சி மாற்றம் என்றும் இதோ சட்டம் தன் கடமையைச் செய்கின்றது என்றும் பொய் பிம்பத்தை வெளிக்காட்டியவாறு இழுத்தடிக்கப்பட்ட பிரச்சினைகளின் பட்டியல் நீளமானது. 

ஒரு பிரச்சினை வரும்போது அதனைப் பற்றி வாதங்கள் நடத்தி, ஆளுக்காள் குற்றஞ்சாட்டி, பெரிய பட்டிமன்றத்தையே நடத்திவிட்டு, சில நாட்களில் அதனை மக்களும் மறந்து விடுவார்கள், அப்போது வேறு ஒரு பிரச்சினை, பேசுபொருள் கிடைக்கும் அதைப்பற்றி இரண்டு வாரங்கள் பேசுவோம். இதுதான் யதார்த்தமாகும். 

யுத்தம் முடிவுக்கு வந்து விட்டாலும் இனப் பிரச்சினைக்கான மூலகாரணத்திற்கு, இன்னும் தீர்வு காணப்படவில்லை. அப்போது இடம்பெற்ற விதி மீறல்களின் உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை. 

யுத்த காலத்தில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, கப்பம் கோரப்பட்டமைக்கு எந்த நீதியும் நிலைநாட்டப்படவில்லை. கொழும்பிலும் வேறு பல இடங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு இருந்தது. பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், உயிரிழந்த பொது மக்களுக்கு நீதி கிடைத்ததா என்பது ஆய்வுக்குரியது.  

யுத்த காலத்தில் கடத்தப்பட்ட முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னவானார்கள்? என்பது சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை. அதனையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டுக் காணாமல்போன தமிழ் மக்கள் பற்றிக் கடந்த பல வருடங்களாகத் தொடராக பேசப்படுகின்றது. ஆனால், அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை.  

இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்கள் சிலர் ஆயுத அமைப்புக்களிடம் சில கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகக் கதைகள், குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது அந்தந்தக் காலத்தில் பெரும் பேசுபொருளாக இருந்ததுண்டு. ஆனால், யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. 

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதி நிலைநாட்டல் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக சஹ்ரான் கும்பலை வைத்து நடத்தப்பட்டதாக அண்மைக்காலத்தில் பல ஆதாரங்கள் வெளியில் வந்து விட்டன. 

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அதிகாரத்திற்காக ஆசைப்பட்டவர்களோ, கடும்போக்காளர்களோ அல்லர். மாறாக இறைவனை வணங்க சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள், ஹோட்டல்களில் தரித்திருந்த நபர்கள். ஆகவே, இந்த தாக்குதல் இலங்கை அரசியலில் பெரும் பிரளயத்தையும் வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தாலும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

1983 ஜூலைக் கலவரத்தின் பின்னணியும் நோக்கமும் எல்லோருக்கும் தெரியும். ஆயினும், அதற்கான சூத்திரதாரிகள் சரியாகத் தண்டிக்கப்பட்டார்களா என்பது கேள்விக்குரியது. அதேபோல், அளுத்கம, திகண மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களுக்குக் காரணமானவர்களும் நீதமாக தண்டிக்கப்படவில்லை. 

ஹெல்பிங் அம்பாந்தோட்டை திட்டத்திற்கு முன்பிருந்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி வரை ஏகப்பட்ட நிதிக் கையாடல்கள், மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறான ஒவ்வொரு ஊழலும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தலைப்புச் செய்தியாக இருந்தவையாகும். ஆனால், இவ்விவகாரங்களில் மக்கள் பேய்க்காட்டப்பட்டதைத் தவிர நீதி நிலைநாட்டப்பட்டது எனச் சொல்ல முடியாது. ஆனால், நாடே மறந்து விட்டது.  

நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தமைக்கு முன்னைய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமன்றி தர்மத்தை மீறிச் செயற்பட்ட அதிகாரிகளும் காரணமாவர். ராஜபக்‌ஷக்கள் மட்டுந்தான் நீதிமன்றால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டை சீரழித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ‘படம் காட்டப்பட்ட’  போதிலும் இதுவரை அது நடக்கவில்லை. இன்னும் சில காலத்தில் மக்களும் இதனை மறந்து போவார்கள். 

முஸ்லிம்களிற்கு இரண்டு இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகமான காணிகள் பற்றிய பிரச்சினைகள் உள்ளன. தமிழர்களுக்கும் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஆழமாக ஆராய்ந்து தீர்த்து வைப்பதற்கும், சர்வதேச சட்ட நியதிகளின் அடிப்படையில் காணிகளை வழங்கவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

சிறுபான்மையினங்கள் மீதான இன, மத ஒடுக்குமுறை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. காணி அபகரிப்புக்களும் திட்டமிட்ட குடியேற்றங்களும் தொடர்கதையே. ஆனால், இதனை வைத்து அரசியல் செய்கின்றார்களே தவிர இன, மத சமத்துவத்திற்கு எதிரானவர்களை தண்டிக்க முடியவில்லை. நாடாளுமன்றத்திலேயே அவ்வாறான சிந்தனை கொண்டவர்கள் அமர்ந்திருக்கின்ற சூழலில் அது முழுமையாக சாத்திமற்றதும் ஆகும். 

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள், கடத்தல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகப் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருந்தன. லசந்த விக்கிரமதுங்க, சிவராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலை, தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் கொலை, சிங்கள, தமிழ் புத்திஜீவிகளின் கொலை என எதற்கும் திருப்தியான நீதி கிடைக்கவில்லை. 

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் தொடக்கம் வர்த்தகர் பிரகாஸ் சாப்டர் போன்ற வர்த்தகர்கள் வரை பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது நாடறிந்த விடயமே. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது, நீதி நிலைநாட்டப்படும் என்ற தோற்றப்பாடு காட்டப்பட்டாலும், பிறகு அந்த விவகாரம் வேறுபக்கம் திசை திரும்பிவிடுவதை காண்கின்றோம். மக்களும் ‘அடுத்த கொலையில்’ கவனம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள். 

இதுதான் இலங்கையின் களநிலை யதார்த்தம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காலத்தை இழுத்தடித்து, மக்களின் மறதி மீது அரசியல் செய்யும் இந்தப் போக்கை பெருந்தேசிய அரசியலில் மட்டுமன்றி, தமிழ், முஸ்லிம் அரசியலிலும் காணலாம். அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொறுப்பு வாய்ந்தவர்களும் சாதாரண மக்களும் கூட இதற்கு விதிவிலக்கல்லர். 
நாட்டில் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள், சர்ச்சை, குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது விடயத்தில் நீதி, தீர்வு வேண்டுமென்ற குரல்கள் எழுகின்றன.

பரஸ்பர அறிக்கைகள், கருத்துக்கள் வெளியாகின்றன. மக்களின் கவனம் அதன்பால் திருப்பப்படுகின்றது. மக்களும் அதில் முழுநேரமாகக் கவனம் செலுத்துகின்றனர். இதோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்கின்றது. விசாரணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள், பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. அறிக்கைகள் பெறப்படுகின்றன. நாடாளுமன்றம் தொடங்கி சர்வதேச அரங்கு வரை அவ்விவகாரம் விவாதிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலும் தீர்வு எதுவும் எட்டப்படுவதில்லை 

ஒரு சீசனில் ஒரு பிரச்சினை பேசுபொருளாக இருக்கும். இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பேசுபொருள் கிடைத்துவிடும். மக்கள் மறந்து விடுவார்கள். இதற்காகவே காத்திருந்தவர்களைப் போல அரசியல் தரப்பும் நடந்து கொள்ளும். இந்த இலட்சணத்தில் கிடப்பில் கிடக்கும்  பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவதும்  இல்லை. அதற்கு காரணமானவர்கள் திருந்தப் போவதும் இல்லை. 

2023.11.21


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .