2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

தலைவர்களின் அனுபவமா? நேர்மையா? முக்கியம்

Mayu   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதித் தேர்தல்களுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் இடையில் சில முக்கிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியே அந்த வேறுபாடுகளுக்கு காரணமாகும்.

முதலாவதாக, இது வரை நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களும் இருமுனை போட்டியாகவே நடைபெற்றது. ஆனால், இம்முறை தேர்தல் குறைந்த பட்சம் மும்முனைப் போட்டியாக போகிறது.
சிலவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ எதிர்வரும் சில வாரங்களில் வளர்ச்சி அடைந்தால் அது நான்கு முனைப் போட்டியாகவும் கூடும்.

2021 பொருளாதார நெருக்கடி தோன்றாமல் இருந்தால்  இம்முறை ஜனாதிபதி தேர்தலும் இரு முனைப் போட்டியாகவே நடைபெற்றிருக்கும்.

அப்பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் அதனால் வெடித்த மக்கள் எழுச்சியின் காரணமாகவும் புதியதோர் அரசியல் பாதையைத் தேடிய பெருமளவான வாக்காளர்கள் மக்கள்  விடுதலை முன்னணியை மையமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணி திரண்டுள்ளனர். 

அத்தோடு 2020 பிளவுபட்ட ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு பிரிவுகளும் இம்முறை தனித்தனி கட்சிகளாகப் போட்டியிடுகின்றன.

இரண்டாவதாக, சாதாரண குடும்பத்தில் பிறந்து அந்த சாதாரண தரத்திலேயே வாழ்ந்த வண்ணம் ஒருவர் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிடும் முதலாவது முறை இதுவாகும். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்னமும் ஒரு சாதாரண குடும்பத்தவறாகவே இருக்கிறார். 

இதற்கு முன்னர் முன்னணி வேட்பாளர்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயர் வர்க்கத்தவர்களாகவே இருந்தனர்.

1988 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச சாதாரண குடும்பமொன்றில் பிறந்தவர். ஆயினும், அவர் ஜனாதிபதியாகும் முன் 1955 முதல் 
கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் 33 வருடங்கள் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி ஜனாதிபதியாகப் போட்டியிடும் போது செல்வந்தராக மாறியிருந்தார்.

இம்முன்னணி வேட்பாளர்களாகப் போட்டியிடும் நால்வரில் இருவர் அதாவது சஜித் பிரேமதாசவும், நாமல் ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதிகளின் மகன்களாவர். (ரணசிங்க பிரேமதாசவினதும் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் மகன்களாவர்) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்து கொண்டே போட்டியிடுகிறார். 

அனுரவின் குடும்பத்தில் எவரும் அரசியல்வாதிகளாக இருந்ததில்லை.

அனுர, 2000 முதல் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2004 ஏப்ரல் மாதம் முதல் 
14 மாதங்களாக அமைச்சராக இருந்துள்ளார்.
எனவே, ஒரு வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலானது அனுரவுக்கும் ஏனைய மூன்று முன்னணி வேட்பாளர்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமாகவும் கருதலாம். 
இப்போதைக்குத் தெளிவாக இல்லாவிட்டாலும் எதிர்வரும் நாட்களில் இது தெளிவாகத் தெரியவும் கூடும்.

இந்த நிலையில், அனுபவமற்றவரைப் பதவியில் அமர்த்த கூடாது என்றும் தற்போதைய பொருளாதார நிலையில், பரீட்சார்த்தமாக எவரையும் பதவியில் அமர்த்த கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

இந்த வாதம் ஒரு வகையில் சஜித் மற்றும் நாமல் ஆகியோருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும் குறிப்பாக அனுரவை குறிவைத்து முன்வைக்கப்படுகிறது.

அனுரகுமார இத்தேர்தலில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதோ வெற்றி பெற்றாலும் அவரால் இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா? முடியாதா? என்பது தற்போதைய நிலையில், அறுதியிட்டு கூற முடியாத ஒரு விடயமாகும். அவ்வாறு கூறுவது எமது நோக்கமும் அல்ல. 

எனினும், அவர்களைக் குறிவைத்து முன்வைக்கும் இந்த வாதமானது பொதுவாக இந்நாட்டு அரசியலை மிக மோசமான பாதையில் இட்டுச் செல்லக் கூடிய மிகவும் மோசமான வாதமாகும். 

சித்தாந்த ரீதியில் இந்த வாதம் மிகவும் பிற்போக்கானதாகும். இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் அதிபரான சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் பேராசிரியர் காமினி கிரவெல்ல மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். 

உலகில் அத்தனை வெற்றிகரமான புதியனவும் பரீட்சார்தததமாகவே முதலில் முன்வைக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். 

தமது இந்த பிற்போக்கான வாதத்தை நியாயப்படுத்த அதை முன்வைப்போர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசியல் வருகையையும் அவரது அரசியல் பொருளாதார தோல்வியையும் சான்றாக முன்வைக்கின்றனர். 

இன்று அனுர பின்னால் அலை அலையாக மக்கள் திரண்டு இருப்பதைப்போல், 
2019 கோட்டா பின்னாலும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தார்கள் என்றும் இன்று வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் அனுரவின் வெற்றிக்காகப் பெருமளவில் பங்களிப்பதைப் போல் அன்று கோட்டாவுக்காகவும் உழைத்தனர்.

அனுரவின் வெற்றியைப் பற்றியோ அவரது ஆட்சியைப் பற்றியோ எம்மால் எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாத போதிலும், அனுரவையும் கோட்டாவையும் இந்த விடயத்தில் ஒப்பிட முடியாது. ராஜபக்‌ஷக்களில் ஒருவரான கோட்டாவிடம் பதவி ஆசையும் அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கமும் எதிரிகளைப் பழிவாங்கும் தேவையும் மட்டுமே இருந்தது. 

இராணுவ அதிகாரியாக அவரிடம் ஓரளவு நிர்வாகத் திறமை இருந்த போதிலும், அரசாங்கம் என்ற சிக்கலார்ந்த பொறிமுறையை நிர்வகிக்க அது போதுமானதாக இருக்கவில்லை என்பது அவர் பதவி துறந்ததன் பின்னர் எழுதிய ‘Conspiracy’ என்ற புத்தகத்தின் மூலம் தெரிகிறது. 

அனுர என்பவர் அரசியல் ரீதியாகத் தனி நபர் அல்ல. மக்கள் விடுதலை முன்னணியிலும் தேசிய மக்கள் சக்தியிலும் உட்கட்சி அமைப்பின் படி, கட்சித் தலைவர் எதேச்சையாக நடந்துகொள்ள முடியாது.

அவை கூட்டு முடிவு எடுக்கும் கட்சிகளாகும். அக்கட்சிகளின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்காகவும் நிபுணர்கள் குழுக்கள் இருக்கின்றன. அவற்றின் முடிவுகளே கட்சித் தலைவரால் வெளியிடப்படுகின்றன.

இதில் ஒரு நடைமுறை பிரச்சினையும் இருக்கிறது. குறிப்பிட்டதோர் விடயத்தில் கைவைக்காது அனுபவமற்றவர் எவ்வாறு அனுபவசாலியாகலாம்? தற்போது அனுபவம் வாய்ந்தவர்கள் என்று கூறி கொள்பவர்கள் எவ்வாறு தற்போதைய நிலைக்கு வந்தார்கள்?

சமையலறையிலிருந்து 1960ஆம் ஆண்டு நேரடியாகப் பாராளுமன்றத்துக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்க நேரடியாகப் பிரதமராக அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார்.  
1977ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டின் மிகவும் முக்கியமான கல்வி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. சந்திரிகா குமாரதுங்க 

1994ஆம் ஆண்டே முதன் முதலில் தேர்தலொன்றில் போட்டியிட்டார். அதன் மூலம் மேல் மாகாண சபைக்கு தெரிவான உடனேயே அவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அனுபவசாலிகள் என்று கூறப்படுபவர்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்தார்கள். என்பது அடுத்து முக்கிய கேள்வியாகும். மிகச் சிறிய நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் தீர்க்கக் கூடியதாக இருந்த இனப்பிரச்சினையை அரசியல் இலாபம் கருதி பூதாகாரமாக வளர விட்டு பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிருக்கு உலை வைததவர்கள் இந்த அனுபவசாலிகளாவர்.

இன்னமும் அவர்களால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதிருக்கிறது. இன்னமும் அவர்கள் சர்வகட்சி மாநாடு அரசியலமைப்புத் திருத்தம் என்று பலவற்றைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஏமாறும் தமிழ் முஸ்லிம் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சுதந்திரமடைந்த ஆரம்பக் காலத்தில் இலங்கை பிரித்தானியாவுக்கும் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 
பின்னர் கடன்காரனாக மாறிய இந்நாடு, படிப்படியாக அக்கடன் தொகை அதிகரித்ததன் விளைவாக 2022ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையை அடைந்தது. 

இன்னமும் அனுபவசாலிகளாகக் கருதப்படும் இந்த நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டுக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

இலங்கை ஊழல் மலிந்த நாடாக கருதப்படுகிறது. கடந்த வருடம் Transparency International நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, இலங்கை ஊழல் ஒழிப்பு விடயத்தில் உலகில் 180 நாடுகளில் 115ஆவது இடத்தில் இருந்தது. இதுவும் அனுபவசாலிகள் நாட்டுக்குப் பெற்றுத்தந்த பெருமையாகும்.

எனவே தான் 2022இல் வெடித்த மக்கள் எழுச்சியின் போது, இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அனுபவம் உள்ளவர்கள் என்ற பழையவர்களை முற்றாக நிராகரித்தனர்.

அவர்கள் புதியதோர் அரசியல் பாதையையே கோரி நின்றனர். அனுபவம் என்பதைக் குறைவாக மதிப்பிடுவது எமது நோக்கமல்ல. ஆயினும், நேர்மையானவர்களின் அனுபவம் மட்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் என்பதே எமது வாதமாகும். திருடர்களினதும் இன வாதிகளினதும் அனுபவம் அழிவுக்கே இட்டுச்செல்லும்.

28.08.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X