Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது.
அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை.
இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடைய பாதுகாப்பு, புலனாய்வு எல்லைகளை விஸ்தரித்தது. அதன்போக்கில், பசுபிக் பெருங்கடலையும், இந்து மாகடலையும் கையாளும் தேவைகளுக்காக பிராந்திய நாடுகளை கையாளும் முயற்சிகளை முழு முனைப்போடு முன்னெடுத்து வருகின்றது. அதனால், அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஒரு பக்கத்திலும் சீனா தனியொரு நாடாக இன்னொரு பக்கத்திலும் நிற்கின்றன.
ஏற்கெனவே இந்தியாவோடு எல்லைப் பிரச்சினையைக் கொண்டிருக்கிற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்போதுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. அதன்போக்கில், கடந்த சில தசாப்த காலமாக, இந்தியாவையும், இந்து மாகடலையும் கண்காணிக்கும் களமாக, இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது.
அண்மையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் புலனாய்வுப் பணியில் ஈடுபடும் சீனாவின் கப்பல் வந்து சென்றது. இந்தியாவும் மேற்குநாடுகளும் அந்தக் கப்பலின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை முழு மூச்சோடு முன்னெடுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு கப்பலின் வருகையை தடுத்து நிறுத்திவிடலாம் என்றும் நம்பின.
ஆனால், ரணிலால் கூட சீனக் கப்பலின் வருகையை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியான ஆளுகையை இலங்கை மீது, சீனா செலுத்திக் கொண்டிருக்கின்றது. தென் இலங்கையில் மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கிலும்கூட கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளிட்ட பல வடிவங்களில் சீனாவின் ‘ஒக்டோபஸ்’ கரங்கள் நீள்கின்றன.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களில் தாயகப் பிரதேசம் சார்ந்து குறிப்பிட்டளவு ஆளுமை செலுத்த வேண்டும். அதன்மூலம் சர்வதேச அரசியல் ஆட்டங்களுக்குள் ஊடுருவிச் சென்று, ஆதாயங்களை அடையும் நிலை சார்ந்து சிந்திக்க வேண்டும்.
ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் பிராந்திய அரசியலில் இந்தியாவே பிரதான தரப்பு என்ற கட்டத்தில் இருந்தே அணுகி வருகின்றன. இலங்கையின் உள்ளக அரசியலில் இந்தியா அளவுக்கு எந்தவொரு நாடும் எந்தக் காலத்திலும் ஆளுமை செலுத்தியது இல்லை.
கிழக்கு இந்தியாவிலிருந்து துரத்தப்பட்ட விஜயனும் அவனது தோழர்களினாலும் இலங்கையில் தோற்றம் பெற்றதே சிங்கள இனம் என்பது மகா வம்சத்து கதை. அப்படியான நிலையில், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் தொடுப்பு இந்தியாவே. அதுபோல, இலங்கை காலத்துக்கு காலம் இந்தியப் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகள் இருந்திருக்கின்றன.
வெள்ளையின ஆட்சியாளர்களும் வியாபாரிகளும் இலங்கையை ஆக்கிரமித்த போது, கண்டி இராட்சியத்தை ஆட்சி செலுத்தியது நாயக்கர் வம்சத்தினர். காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்காவிட்டால், தற்போதும்கூட இந்தியாவின் ஒரு கூறாக சிலவேளை இருந்திருக்கலாம்.
இறுதியாக, இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு அமைய இந்தியாவின் இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கைக்குள் வந்து சில ஆண்டுகள் அலைக்கழித்தது.
அப்படியான நிலையில், இலங்கையின் ஆட்சி அதிகார கட்டங்களில் இந்தியா வெகுவான தலையீடுகளைச் செய்து வந்திருக்கின்றது. அதனால், இந்தியாவை நிராகரிக்க முடியாத ஒரு தரப்பாக தமிழ்த் தேசிய தரப்புகள் ஆரம்பம் தொட்டு நம்பி வருகின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது, எந்தவொரு கட்டத்திலும் இந்தியாவை கொஞ்சமாகவேனும் சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இயங்கி வந்திருக்கின்றது. இந்தக் கட்டம், சர்வதேச ரீதியில் இந்திய சார்புக்கு அப்பால் தமிழ்த் தேசிய தரப்புகள் இயங்காது என்கிற கட்டத்தை உருவாக்கி விட்டது.
ஆனால், தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஆரம்பம் தொட்டு, இந்தியாவுக்கு வழங்கிவந்த முக்கியத்துவத்தை, இந்தியா தமிழ்த் தேசிய தரப்புக்கள் சார்ந்தோ, ஈழத் தமிழ் மக்கள் சார்ந்தோ கொண்டிருந்ததோ என்றால் இல்லை என்பதே வெளிப்படையான பதில்.
எப்போதுமே தென் இலங்கையின் ஆட்சியாளர்களை ‘தாஜா ’செய்யும் வேலைகளையே இந்தியா செய்து வந்திருக்கின்றது. இலங்கை சார் இந்தியாவின் அணுகுமுறையில், ஈழத் தமிழ் மக்கள் ஒரு கருவியாகவே இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றதொரு தரப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக எழுந்த போது, அதனை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை.
அதனால்தான், புலிகளை முழுமையாக அழித்து ஒழிப்பதற்கான ஆதரவை இந்தியா முழுமையாக வழங்கியது. ஆனால், இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக, தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைச் சக்தியாக இருந்த புலிகள்கூட, இந்தியாவை முழுமையாக எதிர்க்கும் எந்தவொரு கட்டத்துக்கும் வரவில்லை. அது, இந்தியாவை பிராந்திய வல்லரசாக ஏற்றுக்கொண்டமையால் ஆகும்.
ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய அரசியல் என்பது, அளவுக்கு மீறிய அளவுக்கு இந்தியாவுக்கான விசுவாசத்தை காட்டி வந்திருக்கின்றது. அதனால் அடைந்த அடைவுகள் என்றால், மாகாண சபை என்கிற அதிகாரங்களற்ற ஓர் ஆட்சிக் கட்டமைப்பு என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.
அப்படியான கட்டத்தில், கேள்விகளுக்கு அப்பாலான பரிவை இந்தியாவை நோக்கி காட்டிக் கொண்டிருக்கும் நிலை என்பது, தேவையற்ற எதிரிகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி விடுகின்றன.
சீனாவைப் பொறுத்தளவில் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராவனர்கள் என்பதே உணர்நிலை. அதன்போக்கில்தான், தென் இலங்கை மக்களையும், அவர்களால் தேர்வாகும் ஆட்சியாளர்களையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, சீனா செயற்பட்டு வந்திருக்கின்றது.
அவர்களைப் பொறுத்தளவில் தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள். கம்யூனிசம் என்ற பெயரில் ஏதேச்சதிகார ஆட்சி செலுத்தி வரும் சீனா, தங்களுக்கான இலாபம் என்ற ஒற்றைக்கணக்கை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றது.
அதனால், இந்தியாவின் அடிமைகளாக இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலையும், அதன் பரப்பையும் எதிரியாகவே கையாண்டு வருகின்றது. அதனால், சர்வதேச ரீதியில் குறிப்பிட்டளவான பின்னடைவை, தமிழ்த் தேசிய தரப்புகள் கண்டிருக்கின்றன.
இந்த இடத்தில்தான், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் இலங்கையை இன்று ஆட்கொண்டுவிட்ட சீனாவையும் கிட்டத்தட்ட சம தூரத்தில் வைத்து அணுகும் இராஜதந்திர கட்டத்தை நோக்கி தமிழ்த் தேசிய தரப்புகள் நகர வேண்டும்.
இல்லையென்றால், எப்போதுமே ஒரு தரப்பின் அடிமையாக இருந்து, அடைவுகள் இன்றி இருக்க வேண்டும். இராஜதந்திர அணுமுறை என்பது, எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டியது. அது இல்லாமல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மாத்திரம் பிரதிபலித்துக் கொண்டிருந்தால், எதையும் அடைய முடியாது.
தமிழ்த் தேசிய அரசியலில் முகவர்களும் அவர்களின் அணிகளும் மேலெழுந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூர நோக்கு என்பது அவசியமற்ற ஒன்று!
ஏனெனில், அவர்களின் எதிர்பார்ப்பு என்பது, தங்களது பைகளை நிரப்பிக் கொள்ளுதல் என்பதாகும். அவ்வாறான கட்டத்தில், அவர்களிடத்தில் அரசியலை தூர நோக்கோடு, இராஜதந்திர கட்டங்களில் அணுகக் கோருவது அபத்தமானதே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago