Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது என்பது அடிப்படை.
தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது.
ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்டியதாகிப்போனது.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாறு ஆயுதப் போராட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்று எல்லோரும் சந்தேகம் கொள்ளும் அளவுக்கான செயற்பாடுகளே அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்வதில் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறைகள் மாற்றம் பெற்று ஜனநாயக வழி சாத்தியமற்றது என்ற முடிவின் பலனாகவே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன.
இந்தியாவினுடைய உள் வருகையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை, இதனையடுத்து, ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகப் போராட்ட இயக்கங்கள் பல அரசியல் கட்சிகளாக மாறிப் போயின.
ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாக் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். ஆனாலும், 2009 மே மாதம் அதனையும் மௌனிக்கச் செய்த மாதமாகப் போனது.
தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான பிரச்சினை இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரையில் தீர்வை எட்டுவதற்கு முடியாததாகவே தொடர்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 22 திருத்தங்களில் எதுவும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷையை நிறைவேற்றவில்லை.
அவற்றில் 13ஆவது திருத்தம் தவிர ஏனையவை இனப்பிரச்சினை கூர்மையடையவே வழி செய்திருக்கின்றன.
1987 இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தற்போதும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. ஆனாலும், அதற்கு எதிராகச் செயற்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
13ஆவது திருத்தச் சட்டம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்தாலும் அதனைக்கூட இலங்கையின் ஆளும் அரசாங்கங்கள் மற்றும் பெரும்பான்மைச் சமூகம் முழுமையாக அமுல்படுத்துவதற்கான மனநிலையற்றவர்களாகவே இருக்கின்றனர்.
பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும் கடந்த கால கசப்புணர்வுகள், முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்காகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரால் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பலமாக இருந்தது.
ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2009 மே 18க்குப் பின்னர் ஒவ்வொரு கட்சியாகக் கழன்று இப்போது சின்னத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி கடந்த வருடத்தில் தனித்துச் செயற்படும் முடிவை எடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியன் சின்னம் இல்லை என்றானது.
அதன் பின்னர், கடந்த வருடத்தில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் எடுத்துச் செல்லப்பட்டதால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற ஒன்று இருக்கிறதா என்று வினவ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தந்தை செல்வாவினால் தமிழரசுக் கட்சி கிடப்பில் போடப்பட்டே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன்படி, இயக்கமின்றி இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டது என்பதே உண்மை.
அது தமிழர்களின் அரசியல் சின்னமாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாகக் கூட்டாக இருந்த கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது.
இதனை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்றுப்போனதும் அதற்குக் காரணம் எனலாம்.
தமிழர்களின் அரசியலைப் பலவேறு கட்சிகளாகி, தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு சிதைந்து போயிருக்கின்றது. ஆனாலும், தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலை நடத்துவதில் பயன் ஏதும் விளையாதென்பது புரிந்து கொள்ளப்படவில்லை. இருந்தாலும், தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது.
வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய அரசியல் வரலாறென்பது கொள்ளை ரீதியாகவும், கோட்பாடு மற்றும் நிலைப்பாடு ரீதியாகவும் சீராகக் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே இதுவரை காலமும் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது எனக் கொண்டால் அதனை வழிப்படுத்துவதற்கான அரசியல் சரியான முறையில் இனிவரும் காலங்களிலும் செய்யப்பட்டாக வேண்டும்.
அந்த ஒழுங்கில்தான், தமிழர்களுடைய உரிமைகளுக்கான, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வி தோன்றும். அவ்வாறில்லையானால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்களை இந்த வரன் முறைகளுடன் முன் நகர்த்த வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.
தமிழ் மக்களின் இன முரண்பாட்டுச் சிக்கல் தோற்றம் பெற்றமை முதல் பேரினவாதிகளுடன் கொள்கை ரீதியான பல விடயங்களில் உடன்பாடுகள், இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளின் ஊடாக இதுவரையில் சீர்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு. ஆனால், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதும், ஏமாந்ததும் காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிறது.
ஆயுத யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டது. அதனால் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இராஜதந்திர ரீதியில் முன் நகர்த்தவேண்டிய கட்டாயத்துக்குப்படுத்தப்பட்டனர். ஆனால், அதனை யார் சரியாகச் செய்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.
ஏனெனில் அரசியலைத் தமிழ் மக்கள் வெறுக்கும் அல்லது வேறு நிலைப்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்ற நிலைமை உருவாகி வருகிறது. இதற்கு தமிழர்களின் அரசியல் தரப்பினரே பொறுப்பாகவேண்டும்.
தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ். என ஆயுத அரசியலுடனும் என தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதாகவே இருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
இந்த இடத்தில்தான் தமிழர்களுடைய அரசியலை மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்வது. சுயநலன்களுக்கு அப்பால், மக்களை அரசியல் மயப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற செயற்திட்டம் முன்னிற்கிறது. பூனைக் கண்ணை மூடிக்கொண்டிருப்பது பயனற்றதே.
அந்தவகையில், தமிழர் அரசியலில் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து தமிழர் அரசியல் தரப்பினர் விடுபட்டு ஒன்றிணைந்த தமிழ்த் தேசிய அரசியல் உருவாவதற்கான வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும்.
அதன் ஒரு படியாக, தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு வெறுமனே, சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, மொழி அறிவு என்பவைகளுக்கப்பால், தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்காகச் சுயநலம் மறந்து ஒன்றிணைந்த அரசியலுக்கான, தமிழர்களை ஒன்றிணைப்பதாகத் தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
8 hours ago