2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

தமிழர் வரலாற்றில் ஏமாற்றங்கள்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 01 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

மாற்றங்கள், தமிழர் வரலாற்றில் மறக்கப்பட முடியாத, மாற்றப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அது நம்மவர்களாலும் நண்பர்களாலும், எதிரிகளாலும் கூட நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நமது முயலுமைகள் பயனற்றுப் போதல் என்பதும், எதிர்பாராமலே நம் எதிர்பார்ப்புகள் நிகழாமல் போதலும், நிகழாமலாக்கப்படுவதும் இந்த ஏமாற்றங்களுக்குள் அடக்கம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரின் நெருக்குதல் நடவடிக்கைகளால் உருவானதே இனப்பிரச்சினையாகும். அதனைக்கூட, இந்த நாட்டுக்குள் அவ்வாறு ஒரு பிரச்சினையுமில்லை என்று சொல்லும் தலைவரே நமது நாட்டில் இருக்கிறார். இதற்கு குறிப்பிட்டளவு தமிழர்களும் உடந்தை.

வரலாற்றுக் காலம்தொட்டு ஏமாற்றப்பட்ட தமிழினத்தினை மேலும் அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அடிபணிய வைப்பதற்குமாக உருவாக்கப்பட்டதுதான் பயங்கரவாதத் தடைச்சட்டம். அப்போதிலிருந்து அச்சட்டத்தினை பழிவாங்கும் சட்டமாக எல்லோரும் பார்த்தனர்; இப்போதும் பார்க்கின்றனர்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது 1979ஆம் ஆண்டில் 48 ஆம் இலக்கச் சட்டமாக 6 மாதங்களுக்கான தற்காலிகமான ஏற்பாடாகக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அது 1983 இல் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜே.ஆர்.ஜயவர்தனா ஜனாதிபதியாக இருந்த போது கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டம் அரசியல் யாப்புக்கே முரணானது என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை இருந்தே வருகிறது.

ஒருவர் தன்னுடைய கருத்தை பொதுவெளியில் அல்லது, சமூக ஊடகங்களில் கூட பகிர முடியாத நிலை பயங்கரவாதச் சட்டத்தால் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியான நெருக்கடிகள், சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்காக தற்போது அதில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறோம் என்று பூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடே அரசாங்கத்தால் நடைபெறுகிறது. இதுவும் ஒருவகையிலான ஏமாற்றே.

இருந்தாலும், இந்தச் சட்டம் ஆயுதப் போராளிகளை மட்டுமல்லாமல் அப்பாவித் தமிழர்களையும் பழிதீர்த்தது.  வடக்கு கிழக்கு தமிழர்கள் எல்லோரும் ‘புலிகள்’ என்ற போர்வையொன்று போர்த்தப்பட்டு, கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கொடுமை சொல்லொணாதது. யுத்தம் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் வாடுகின்றனர். வழக்குத் தாக்கல் செய்யப்பட்டும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாமலும் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் யாழ்ப்பாண இராஜியத்தை போர்த்துக்கேயரிடம் இழந்து அவர்களால் நாடு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து பின் பிரித்தானியரால் நாடு கையளிக்கப்பட்டபோது சிங்களவர்களின் ஆளுகைக்குள் சிக்குண்ட தமிழர்கள், அன்றிலிருந்தே போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்தும், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படாததால் அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.

ஆனாலும் தீர்வின்றி யுத்தங்களும் பேச்சுக்களும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆனால், தமிழர்களை வென்றதாகக் கருதி அவர்களுக்கான தீர்வை இன்னமும் இலங்கை அரசாங்கம் வழங்காமலேயே மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், விடுதலைப் போராளிகளை மட்டுமல்லாமல் அப்பாவித் தமிழர்களையும் அடக்குவதற்காக, அழிப்புகள் செய்வதற்குமான பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பயங்கரச்சட்டத்துக்கெதிராக கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுத்து வருகிறது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, காரைதீவு, கல்முனை என்றும் இன்று சனிக்கிழமை திருகோணமலையிலும் நடைபெறவிருக்கிறது. இதில் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கையொப்பமிட்டு வருகின்றனர். 44 வருடங்களை எட்டுகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான இந்த முயற்சி, வெற்றியளிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவதைத் தவிர, தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

இந்த இடத்தில்தான், திட்டமிட்ட இன அழிப்பைச் செய்து கொண்ட பெரும்பான்மையின அரசாங்கத்துக்கு இக் கையெழுத்துப் போராட்டம் மூலம், என்ன தகவலைச் சொல்லப் போகிறோம் என்ற கேள்வி தோன்றுகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்ததாக அல்லாமல் குற்றவாளிகள் கணிசமானவரை உருவாக்கிய   சட்டமாக மாறியிருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இப்போதும், ஜனநாயகத்திற்குள் சர்வாதிகாரத்தினைப் புகுத்துவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் வழிவகுத்தது. அதேவேளை ஆட்சியாளர்கள் தமது தேவைக்கு ஏற்ப, எதிரானவர்களைப் பழிவாங்குவதற்கு இந்தச் சட்டம் உதவியுள்ளது. வழக்குகள் தாக்கல் செய்யாமல் 10 ஆண்டுகளுக்கு ம் மேல் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கும் சித்திரவதைகள் செய்வதற்கும் இந்த சட்டம் உதவுகின்றது.

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத்சாலி, அரசாங்கம் பற்றி விமர்சனக் கருத்துகளை முன்வைத்தமைக்காக பல மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டு   விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  ராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்நோக்கினார். இவ்வாறு எதிர்க்கட்சியினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் வறுத்தெடுக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், எதிர்ப்புகள் விமர்சனங்கள் இல்லாத அரசியல், ஜனநாயகமற்ற அரசியல் நடைபெறுகின்ற நாட்டில்  ஜனநாயக அரசியல் முறைமைகளின் ஊடான முயற்சிகளுக்குப் பலன்கிடைக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு பல வருடங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கும், முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கும் பதிலே இல்லாமல், தீர்வுகள் இன்றி ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை மிரட்டும் செயற்பாடுகள், கைது செய்யும் செயற்பாடுகள் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியாளர்களால் பொறுப்புக் கூற முடியவில்லை. சிலரை சிறையில் அடைப்பதன் மூலமாகவும், அடக்குவதன் மூலமாகவும் சிறைக்கு வெளியிலுள்ள பலருக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது.

ஜெனீவா அரங்கு தொடங்குகிறது. இந்தத் தொடக்கம் தமிழ் மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாக நோக்கப்படுவதே வழக்கம். இந்தத் தடவையிலும் அந்த மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அரசாங்கத் தரப்பு அதனை வெற்றிகரமாக வெல்லவே போகிறது. அதற்குப் பின்னும் தமிழர்களின் முயற்சி தொடரவே செய்யும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதில் இணைக்கப்படவிருந்த மலைகயக் கட்சிகள் தங்களுடைய தனியான திட்டத்தினைத் தயாரித்திருக்கின்றன. தமிழ் பேசும் இனமான முஸ்லிம்கள், தமிழர்களுடன் இணைந்து நாட்டுக்குள் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குத் தயாரில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

70 வருடகாலமாக நடைபெறும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் எனும் இனப்பிரச்சினை, நீண்ட நெடுங் கயிறாகவே இருக்கிறது. யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியாமலேயே தொடரும் இந்த முயற்சியில் அலுத்து, சலித்துப் போய் ஒதுங்கிப் போனவர்கள் அதிகம் என்றிருக்கின்ற நிலையில், தமிழர்களின் ஏமாற்றம் இன்னமும் தொடரத்தான் போகிறது. அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டமும், இருபதாவது யாப்புத் திருத்தமும் ஆட்சியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் நிலையில், நாட்டின் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதையும் கொடுத்துவிடப் போவதில்லை. இருந்தாலும் தமிழர்களிடமில்லாத ஒற்றுமையானது அவர்களை மேலும் குழிக்குள் தள்ளுவதாகவே இருக்கும்.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் உள்ளிட்ட உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொள்கை மாற்றங்களையும் சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை அரசாங்கம், மேலும் பல மேலை நாடுகளது உதவிகளுடன் விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இது விடுதலைப்புலிகளை 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் தோல்வியடையச் செய்தது.

இப்போது தமிழர்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முன்னெடுக்கும் இராஜ தந்திர அகிம்சைப் போராட்ட முயற்சிகளை முறியடிப்பதற்கும் இலங்கை அரசாங்கம், நாடுகள் பலவற்றை ஐக்கிய நாடுகள் சபை அமர்விற்கு தமக்கு ஆதரவாக கூட்டுச் சேர்க்கும் முயற்சியையே கொண்டு நகர்த்துகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ள நிலையில், மிதவாத அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கின்ற தமிழர்களின் அரசியல் வெற்றியளிக்குமா என்பதுதான் சந்தேகம்.

வெளிநாடுகளின் புலம்பெயர்ந்திருப்பவர்களின் முயற்சி, நாட்டுக்குள்ளேயே 13லிருந்து தொடங்கவேண்டும், அதனை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள், அது வேண்டாம் என்பவர்களும் சாதிக்க நினைப்பது ஏமாற்றமில்லாததாக இருக்கட்டும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .