2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தப்புக் கணக்கு

Editorial   / 2020 மே 05 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு - சூட்டோடு சூடாகப் பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி, பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாமல் போயுள்ளமை, ஆளும் பொதுஜன பெரமுனவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, பொதுஜன பெரமுன கட்சியினர், சிங்கள மக்களின் மனங்களில் மூட்டி விட்டிருந்த இனவாதத் தீயின் சூடு அடங்குவதற்குள், பொதுத் தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே, அந்தக் கட்சியினரின் விருப்பமாகும்.  

இந்த நிலையில் ஜூன் 20ஆம் திகதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திகதியில் தேர்தலை நடத்துவதென்றாலும், “பிரசார நடவடிக்கைகளுக்காக ஆகக்குறைந்தது 05 வாரங்களாவது வழங்கப்பட வேண்டும்” என, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் கூறியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் இம்மாதம் 13ஆம் திகதியிலிருந்து வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரக் களத்தில் இறங்க வேண்டும்.  

ஆனால், இப்போதுள்ள சூழ்நிலை - தேர்தலொன்றை நடத்துவதற்கு பொருத்தமானதாக இல்லை என்பது ஆளுந்தரப்பினர் தவிர்ந்த பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. ஆனால், ஜூன் 20இல் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் ஆளுந்தரப்பினர் விடாப்பிடியாக உள்ளமை தெரிகிறது.  
சட்டச் சிக்கல்கள்

இதேவேளை, பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ரீதியான சில சிக்கல்கள் தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என, அரசமைப்பு கூறுகிறது. முன்னைய நாடாளுமன்றம் மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டது. “அப்படியென்றால், ஜூன் 02ஆம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அந்தத் திகதியைத் தாண்டித் தற்போது ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை ஒத்தி வைத்திருப்பது அரசமைப்புக்கு முரணான செயற்பாடு” என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.  

இந்த நிலையில், பொதுத் தேர்தலை ஒத்திவைத்து, தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்பதால் அதனை இரத்துச் செய்யக் கோரியும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் திகதி, சட்டவிரோதமானது என்றும் உத்தரவிடவும் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  

எனவே. இது குறித்து நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடும் என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் நாம் மேலதிகமாக இங்கு பேசத் தேவையில்லை.  

இது இவ்வாறிருக்க, பொதுத் தேர்தல் தொடர்பில் இன்னுமொரு சிக்கலும் புதிதாக எழுந்திருக்கிறது. அதாவது, வேட்புமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த இறுதித் தினமான மார்ச் 19ஆம் திகதியையும் அதற்கு முந்தைய இரு தினங்களையும் (17, 18ஆம் திகதிகள்) பொது விடுமுறை நாள்களாக அரசாங்கம் அறிவித்திருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.  

ஆனாலும், விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த குறித்த நாள்களில் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டிருந்தன. மார்ச் 19ஆம் திகதியன்றுதான், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.  

இந்த நிலையில், பொது விடுமுறை தினங்களில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொண்டமை சட்ட ரீதியாகச் செல்லுபடியாகுமா என்கிற சிக்கலொன்று இப்போது எழுந்துள்ளது. இதையடுத்து, இதற்குரிய சட்ட விளக்கத்தை வழங்குமாறு, சட்ட மா அதிபரிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டிருக்கிறது.  

இதுபோன்றதோர் அசாதாரண சூழ்நிலையில், தேர்தலொன்றை எதிர்கொள்வதென்பது இலங்கைக்குப் புதியதோர் அனுபவமாகும். அதனால் இப்படியான சிக்கல்கள் ஏற்படுவது ஆச்சரியமானதல்ல. ஆனாலும் இவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கான சட்ட வியாக்கியானங்கள் நீதிமன்றங்களிடம் நிச்சயம் இருக்கும்.  

ஆபத்து நேர்ந்தால் யார் பொறுப்புதாரி?  
மேற்கூறப்பட்ட சட்டச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சத்தைத் தாண்டி, அந்தத் தேர்தலில் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குரியதாகும். இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் கருத்து வெளியிட்டுள்ளார். “சாதாரணமாக 70 சதவீதமான வாக்களிப்பு இடம்பெறுவது வழமை.

இப்போதுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பு 10 சதவீதம் குறைவடைந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதனை விடவும் வாக்களிப்பு சதவீதம் குறைந்தால், அந்தத் தேர்தலை நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலாக எவ்வாறு எடுத்துக் கொள்வது”எனும், அர்த்தப்பட அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.  

மறுபுறம், ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதற்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து நாட்டில் முழுமையாக நீங்கியிருக்காது என்றே பலரும் கூறுகின்றனர். அப்படியென்றால் தேர்தல் காலத்தில் மக்களைத் திறந்து விட்டு, அதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவும் ஆபத்து அதிகரிக்குமானால், அதற்குப் பொறுப்புக் கூறுவது யார் என்கிற கேள்வியும் உள்ளது.  

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாடுகள் எவ்வளவுதான் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் - அவை குறித்து அலட்டிக் கொள்ளவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நாள்களில், பொருள்கள் கொள்வனவில் ஈடுபடும் மக்கள், “தனிநபர் இடைவெளி” குறித்த அக்கறைகள் எவையுமின்றி, முண்டியடிக்கின்றமையைத் தொடர்ச்சியாகக் காண்கின்றோம்.  

இவ்வாறானவர்களை தேர்தல் பிரசாரக் காலங்களில் திறந்து விட்டால், அவர்கள் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையெல்லாம் கணக்கில் எடுக்காமல், எவ்வளவு அலட்சியத்துடன் நடந்துகொள்வார்கள் என்பதை நினைத்துப் பார்த்தல் அவசியமாகும்.  
ஆக, ஜூன் 20இல் பொதுத் தேர்தலை நடத்துவதென்பது ஆரோக்கியமற்ற முடிவாகவே அமையும். “நெருப்பு அணைவதற்குள் அடுத்த பானையை அடுப்பில் ஏற்றிவிட வேண்டும்” என்று நினைப்பவர்களைத் தவிர, வேறு எவரும், ஜூன் 20ஆம் திகதி தேர்தலொன்றை நடத்துவதை விரும்பவே மாட்டார்.  

பிந்துவது நட்டம்
பொதுத் தேர்தல் தள்ளிப் போவது, எதிர்க்கட்சிகளை விடவும் ஆளுந்தரப்பினருக்கே நட்டமாக அமையும். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் முறையாக வழங்கவில்லை என்கிற அதிருப்தி பல்வேறு மட்டங்களிலும் எழுந்து வருகிறது.

இதேவேளை, கொரோனா ​ சூழ்நிலையை ஆட்சியாளர்கள் முறையாகக் கையாளவில்லை என்கிற பிரசாரங்களையும் எதிரணியினர் கையில் எடுத்துள்ளனர். இவையெல்லாம் ஆளுந்தரப்புக்கு எதிரான வாக்குகளை அதிகரிக்கும் நிலைவரத்தைத்தான் ஏற்படுத்தும்.  

ஆனாலும், இவற்றின் காரணமாக அரசாங்கமொன்றை அமைப்பதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் சந்தர்ப்பத்தை, பொதுஜன பெரமுன இழந்து விடாது என்கிற கருத்து, எதிர்க் கட்சியினரிடம் கூட உள்ளமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  

இதேவேளை, அரசாங்கத்துக்கும் ராஜபக்‌ஷவினருக்கும் எதிரான பலம் வாய்ந்த அணிகளையும் பரந்த மனநிலைகளையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், எதிரணியினருக்குக் கிடைத்த போதும், அதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட செயற்பாடுகள் எவற்றையும் அவர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் உள்ளது.  

மறுபுறமாக, சிக்கலான தருணங்களை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையைக் குறி வைத்து, தமக்கு எதிரான உணர்வுகளை எதிர்க்கட்சியினர் உருவாக்கி விடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாகவே இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இறந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதென, பேரினவாதிகளைக் கிளுகிளுப் பூட்டும் முடிவை ராஜபக்‌ஷவினர் எடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பியமைக்குக் காரணம்; வேறு எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?  

இன வெறுப்பு அரசியல்
உலகமே அச்சத்துக்குள் உறைந்திருக்கும் நிலையில், கொரோனாவை வைத்துத் தமக்குத் தேவையான விதத்தில் இன வெறுப்பு அரசியலை சில நாடுகள் செய்து வருவதைக் காண முடிகிறது. இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் - அந்த விடயத்தில் மிகவும் இழிவாகவும் உச்ச அளவிலும் நடந்து வருகின்றன. “இலங்கையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம்” என்கிற வகையில், ராஜபக்‌ஷவினருக்கு ஆதரவான சில ஊடகங்கள் - நச்சுப் பிரசாரங்களைச் செய்தபோது, ஆட்சியாளர்களும் அதனைக் கண்டும் காணாமல் இருந்தனர்.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன மேற்கொண்ட முஸ்லிம் விரோத பிரசாரம், அவர்களுக்கு வெற்றியளித்தமையால், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அதையே அவர்கள் தொடர நினைக்கின்றனர்.  

ஆனால், இந்த இனவெறுப்பு அரசியல் - எப்போதும் வெற்றியளிப்பதில்லை. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு, அதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.  

முஸ்லிம்களுக்கு எதிரான - பொதுபல சேனா போன்ற அமைப்புகளைப் போஷித்துக் கொண்டு, “சிங்ஹலே” கோசத்தை எழுப்பியவாறு, பௌத்தர்களின் நவீன ராஜாவாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மைத்திரிபால சிறிசேன என்கிற “நோஞ்சான்” எதிராளியிடம் தோற்றுப் போன “கதை”யிலுள்ள நீதி “இனவெறுப்பு அரசியல் எப்போதும் வெற்றியளிக்காது” என்பதாகும்.  

ஆனாலும், அதிலிருந்து ராஜபக்‌ஷவினர் எதனையும் கற்றுக் கொள்ளவில்லையா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.  

எப்போதாவது மட்டும் கைகொடுக்கும் இனவெறுப்பு அரசியலை, மீண்டும் அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டமைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் காரணமாக அமைந்து விட்டதா என்கிற கேள்விகளும் உள்ளன. அது குறித்து வேறோரு பத்தியில் தனியாகவும் விரிவாகவும் பார்ப்போம்.  

கொரோனாவும் கோட்டாவும்
அரசியலுக்கு அப்பால், கொரோனா வைரஸையும் அது ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழ்நிலையையும் ஜனாதிபதி எதிர்கொண்டு வரும் விதம் குறித்துப் பரவலான பாராட்டுகள் உள்ளன. கோட்டாபய ராஜபக்‌ஷவிடமுள்ள இராணுவ அனுபவம், இராணுவ ஒழுங்குப் போன்றவை, கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருவதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.  

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை அவசரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக, நாடகத் தன்மையானதோர் இயல்பு நிலையைக் கொண்டு வரும் பொருட்டு, ஜனாதிபதி எடுக்கின்ற சில நடவடிக்கைகளால், கொரோனா வைரஸுக்கு எதிரான அவரின் மிகச் சிறப்பான நடவடிக்கைகள் கூட, “எடுபடாமல்” போகும் நிலைமை உருவாகி வருவதையும் அவதானிக்க முடிகிறது.  

உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொண்ட அமெரிக்காவையே, ஆட்டம் காண வைத்திருக்கும் கொரோனா ஆபத்திலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்குத் தலைமை வழங்கியவர் என்கிற பெயரை வைத்தே, ஜனாதிபதியும் அவரின் கட்சியினரும் எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.  

அந்தப் பெயரைப் பெறுவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இயலுமானவராகவும் இருக்கின்றார்.  

ஆனால், கொரோனாவினதும் பொதுத் தேர்தலினதும் “கணக்குகளை” ஒரே நேரத்தில் பார்த்து முடிப்பதற்கு அவர் காட்டும் அவசரம்தான், எல்லாக் “கணக்குகளையும்” தப்பாக்கி விடும் போலிருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .