Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜூன் 02 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இம்முறை பயணக் கட்டுப்பாடுகள் பயனளிக்குமா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 நாள்களாகியும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
மே மாத நடுப் பகுதியில், நாளொன்றுக்குப் புதிதாக, சுமார் 3,500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இப்போதும், 3,000 பேர் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
இதனால், நாளொன்றுக்கு சுமார் 500 தொற்றாளர்கள் குறைந்துள்ளதாக வாதிட முடியுமாக இருந்த போதிலும், நாளாந்த பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அவ்வாறு மனதைத் தேற்றிக் கொள்ள முடியாது. மே மாத நடுப்பகுதியில், நாளாந்தம் 27,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இப்போது 20,000க்கு குறைந்த பரிசோதனைகளே நாளாந்தம் நடைபெறுகின்றன.
எந்தவொரு நாட்டிலும் கொரோனா தொற்றாளர்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கையைப் பற்றிய உண்மையான தகவல் வெளியாவதில்லை. ஏனெனில், எந்தவொரு நாட்டிலும், முழு சனத் தொகையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
இலங்கையில், இப்போது நாளொன்றுக்கு 30க்கும் 50க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில், கொவிட்- 19 நோயால் மக்கள் மரணிக்கின்றனர். இது இலங்கை போன்ற சிறிய நாடொன்றைப் பொறுத்தவரை, பாரியதோர் எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 10 நாள்களுக்கு மேலாகியும், இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. பயணக் கட்டுப்பாடுகள் முடிவடைய, மேலும் ஐந்து நாள்கள் மட்டுமே இருக்கின்றன. இதற்குள் நிலைமை மாறும் என்பதற்கு, அறிகுறிகள் இல்லை.
2021இல் ஏப்ரல் மாதமாகும் போது, இரண்டாவது கொவிட்- 19 அலையின் வேகம் தணிந்து, நிறுவனங்கள் சாதாரணமாக இயங்கும் நிலை உருவாகியிருந்தது. இந்த நிலையில் தான், சித்திரைப் புத்தாண்டு காலத்தில், மற்றோர் அலை உருவாகாத வண்ணம், சில நாள்களுக்குப் பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சுகாதாரத் துறையினர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். எனினும், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசாங்கம் இணங்கவில்லை.
ஏப்ரல் மாத இறுதியில், அதன் விளைவு காணக்கூடியதாக இருந்தது. மூன்றாவது அலை ஆரம்பித்து, மிக வேகமாக நோய் பரவியது. கொரோனா வைரஸின் சில வெளிநாட்டுத் திரிபுகள் நாட்டுக்குள் புகுந்தமையும் புத்தாண்டு காலத்தில் மக்கள் உல்லாசப் பயணங்களில் ஈடுபட்டமையும் அதற்குக் காரணங்களாகின.
இது அரசாங்கத்தின் குறுகிய கண்ணோட்டத்தின் விளைவாகும். ஒரு வார கால பயணத் தடைகளால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்றுக் கொள்ள மறுத்தமையால், இன்று நாட்டில் இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பயணத்தடை அமலில் உள்ளன.
தடுப்பூசியே கொவிட்- 19 நோய்கான நிரந்தரப் பரிகாரமாகும் என்பதே, பொதுவாகத் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அபிப்பிராயமாகும். ஆனால், ஒரு நாட்டின் சனத்தெகையில் குறைந்த பட்சம் 60 முதல் 70 சதவீதமானோர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டாலேயே, ஒரு சமூகமாக அந்நாடு, நோயிலிருந்து பாதுகாக்கப்படும் என, நிபுணர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
ஆயினும், புதிய வைரஸ் திரிபுகளின் தாக்கமும் வேகமும் அதிகமாக இருப்பதால், சனத்தொகையில் குறைந்த பட்சம் 80 சதவீதமானவர்கள், தடுப்பூசியை ஏற்றிக் கொண்டாலேயே, ஒரு நாட்டில் சமூக நோயெதிர்ப்பு சக்தி (herd immunity or community immunity or population immunity) இருப்பதாகக் கருதப்படும் எனக் கூறப்படுகிறது.
‘சமூக நோயெதிர்ப்பு சக்தி’ என்பது, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் பரவாத நிலை என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், இலங்கை அந்த நிலையை எப்போது அடையும் என்பதை, எவராலும் கூற முடியாது.
“தடுப்பூசியே கொவிட்-19 நோய்க்கு, ஒரே பரிகாரமாகும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கூறியிருந்தார். இது, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல உலக சுகாதார நிபுணர்களும், ஏற்கெனவே தெரிவித்திருந்த கருத்தாக இருந்த போதிலும், ஏதோ ஜனாதிபதி கண்டுபிடித்த ஓர் உண்மையைப் போல், ஊடகங்கள் பெரிதாகத் தூக்கிப் பிடித்தன.
ஆனால், கொவிட்- 19 நோய், மிக மோசமாக இந்தியாவில் பரவியதையடுத்து, அந்நாடு கடந்த மார்ச் மாதம், ‘கொவிஷீல்ட்’ என்ற பெயரில், தாம் தயாரிக்கும் ‘அஸ்ட்ராசெனெக்கா’ தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திய பின்னரும், கடந்த மாதம் (மே) இறுதி வரை, இலங்கை அதிகாரிகள், வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசியைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த மாத இறுதியில் தான், அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன, தமது கூட்டுத்தாபனம், 32 மில்லியன் தடுப்பூசி ‘டோஸ்’களை இறக்குமதி செய்ய, ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். அந்தத் தடுப்பூசிகளும் உடனடியாகக் கிடைக்கும் என அவர் கூறவில்லை. டிசெம்பர் மாத இறுதிக்குள் அவை கிடைக்கும் என்றே அவர் கூறினார். மிகச் சில தடுப்பூசிகளே, தற்போது சுகாதார அமைச்சின் கையிருப்பில் இருக்கின்றன.
கொரோனா தடுப்பூசி விவகாரம், இலங்கையில் பெரும் குழப்பமாகவே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிக்கான முன்னுரிமை பட்டியலைப் புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆரம்பத்திலேயே தடுப்பூசி வழங்கியதில் இருந்து, தடுப்பூசி விவகாரம் அரசியலாகிவிட்டது.
மருத்துவர்கள் தமது அதிகாரத்தைப் பாவித்து, தமது குடும்பத்தினருக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பஸ் உரிமையாளர்கள், தமது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால், வேலை நிறுத்தம் செய்வதாக மிரட்டுகின்றனர்.
ஆசிரியர்கள், தமக்கு தடுப்பூசி விடயத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். மத குருமாருக்கு முதலிடம் வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார். சுகாதார அமைச்சு, நோய் கூடுதலாகப் பரவியிருப்பதாகக் கூறி, சில கிராமசேவகர் பிரிவுகளில், தடுப்பூசி வழங்கி வருகிறது. இவற்றில் எந்தக் குழுவும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இல்லை.
மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோ, தாம் வழங்கும் பெயர்ப் பட்டியலின்படி தடுப்பூசி வழங்காவிட்டால், தடுப்பூசித் திட்டத்தை மொரட்டுவை பிரதேசத்தில் அமலாக்க இடமளிப்பதில்லை என, பிரதேச மருத்துவ சுகாதார அதிகாரியை மிரட்டியதை, ஊடகங்கள் மூலம் கண்டோம். குருநாகலிலும் அவ்வாறு அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலின் படியே, தடுப்பூசி வழங்கப்பட்டது என, அவர் கூறியதையும் கேட்டோம். ஆனால் குருநாகல் விவகாரத்தை விசாரிக்க சுகாதார அமைச்சு தயாராக இல்லை.
அதேவேளை, முதலாவது ‘அஸ்ட்ராசெனெக்கா’ தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களில் 600,000 பேர், இரண்டாவது தடுப்பூசி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர். அவர்கள் இப்போது, மற்றொரு வகைத் தடுப்பூசியைப் பெறவும் முடியாது.
உரிய நேரத்தில் தடுப்பூசியை பெற முயலாமையும், பெற்ற தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனத்தின் முன்னுரிமைப் பட்டியலின் பிரகாரம் வழங்காது, தடுப்பூசித் திட்டத்துக்குள் அரசியலுக்கும் ஊழலுக்கும் இட்மளித்தமையுமே, இவ்வனைத்துக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னுரிமைப் பட்டியலின்படி, முதலில் பாதுகாப்பாளர்களைப் பாதுகாப்பதும் இரண்டாவதாக உயிராபத்துள்ளவர்களைப் பாதுகாப்பதும் அதன் பின்னர் நோய் பரவலைத் தடுப்பதும் ஆகும். அதன் பிரகாரம், முதலில் மருத்துவ துறையினருக்கும் கொவிட்- 19 நோயைக் கட்டுப்படுத்த உதவிபுரியும் பொலிஸார், இராணுவத்தினர் போன்றவர்களுக்கு முதலிடம் வழங்க வேண்டும்.
அதைடுத்து, அதி கூடிய உயிராபத்து உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அதை அடுத்து, நிரந்தர நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும். பின்னர் படிப்படியாக, கூடிய வயதினரிலிருந்து குறைந்த வயதினர் வரை, கட்டம் கட்டமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும்.
இந்த முறையைப் பின்பற்றியிருந்தால், எங்கும் குழப்பமோ தாமதமோ நெரிசலோ ஏற்பட்டு இருக்காது. இலங்கையில் அரசியலும் ஊழலும், அதற்கு இடம் கொடுக்காது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
36 minute ago
46 minute ago