Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 மே 10 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களால் மட்டுமன்றி அரச இயந்திரத்தாலும் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை பின்னொரு நாளில் அவர்களே “தவறு” என ஒப்புக் கொள்வது நமக்குப் புதிதல்ல.
ஆனால், இது வழக்கமானதும் நமக்குப் பழகிப் போனதும் என்றால் கூட, எல்லாத் தவறுகளையும் பொறுத்துக்கொண்டு இருக்;க முடியாது என்பதுதான் இங்கு முக்கியமானது. அதாவது, ஒட்டுமொத்த நாட்டு மக்களை அல்லது ஒரு சமூகப் பிரிவை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற வன்மத்தனமான, முட்டாள்தனமான முடிவுகளை கண்டும் காணாமல் கடந்து செல்ல இயலாது.
பாராளுமன்றத்தில் கடந்தவாரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான உடல்களை எரிக்கும் விடயத்தில் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டமை இந்த வகையைச் சார்ந்த தவறாகவே தோன்றுகின்றது.
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போது கோட்டபாய அரசாங்கத்திலும் பலம் வாய்ந்த அமைச்சராக இருந்த ஒருவரே இப்போது இதனைக் கூறுகின்றார் என்றாலும், இது வெறுமனே கெஹலியவின் கருத்தல்ல. அதனை யாரும் சபையில் மறுதலிக்கவும் இல்லை. எனவே இது ஒட்டுமொத்த மொட்டு அணியின், ஆட்சியாளர்களின் ஒப்புதல் வாக்குமூலமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த முடிவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன.
இதனை அரசாங்கமோ அல்லது நிபுணர்கள் குழுவோ கண்டுகொண்டதாகவோ அன்றேல் பொறுப்புக்கூறலுடன் கையாண்டதாகவோ தெரியவில்லை. இலங்கைச் சூழலில் அது சாத்திமில்லை என்பது நாமறிந்த சங்கதிதான்.
இருப்பினும், ஜனாஸா எரிப்பு என்பது ஒரு தவறான முடிவு என்பதை இந்த உலகமே சப்தமிட்டுச் சொன்ன போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த, அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்ட அதிமேதாவித்தனமான நிபுணர்கள் குழு என்பன அதனை காதில் வங்கிக் கொள்ளவில்லை.
அப்போது இவ்விடயத்தில் சமூகப் பொறுப்புடன், உண்மையான நியாயத்துடன் செயற்படாத இத் தரப்பினர் இப்போது பொறுப்புக்கூறலில் இருந்து விலகி ஓடுவதற்கு அல்லது இதனை ஒரு சிறிய விடயமாக கருதி விட்டுவிடுவதற்கு எத்தனிக்கின்றனர் என்பது வெளிப்படையானது. இதனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியாது!
2020 இல் கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்று உலகெங்கும் ஏற்பட்டது. உலகில் எல்லா நாடுகளிலும் பெருமளவு மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் சீனாவைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கும் அரசாங்கங்கள் அனுமதி அளித்தன.
உலகுக்கு மருத்துவம் தொடர்பான வழிநடாத்தலை வழங்கும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற அமைப்புக்கள் நிலத்தில் உடல்களை புதைப்பதற்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தன.
விஞ்ஞானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நாடுகளும், இலங்கையை விட அதிக, அறிவுள்ள உண்மையான நிபுணர்கள் நிரம்பி வழிகின்ற தேசங்களும் கொவிட்டினால் இறந்தவர்களின் அவரவர் விருப்பப்படி இறுதிக் கிரியைகளுக்கு உட்படுத்துவதற்கு அனுமதி அளித்திருந்தன.
ஆனால், எல்லாவற்றிலும் உலக ஒழுங்கோடு ஒன்றித்துப் பயணித்த இலங்கை உடல்களை எரிக்கின்ற விடயத்தில் மட்டும் உலக ஒழுங்கிற்கு மாற்றமான வழியில் சென்றது. சர்வதேச நாடுகளும் விஞ்ஞானிகளும் மண்ணியலாளர்களும் சொன்ன விஞ்ஞான விளக்கங்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டிடுவிட்டு ராஜபக்ஷ கூட்டம் தமது முயலுக்கு மூன்று கால்கள் என்று சொன்னது.
இலங்கை போன்ற நாடுகளில் உடல்களை நிலத்தில் புதைப்பதன் ஊடாக நிலத்திற்கு அடியில் வைரஸ் தொற்று பரவக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நிபுணர் குழுவும் சுகாதார அமைச்சர் பவித்திராவும் அரசாங்கமும் ஒரு கற்பிதத்தை சொன்னார்கள்.
நீலிகா மாளவிகே உள்ளிட்ட பல சிங்கள நிபுணர்கள் அப்படி எந்தப் பாதிப்பும் நடக்காது என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இறந்த உடலில் இருந்து வைரஸ்கள் பரவ மாட்டாது என்ற அடிப்படை விஞ்ஞானத்தைக் கூட பொறுப்புவாய்ந்தவர்கள் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
மாறாக, மெத்திகா விதானகே போன்றவர்கள் கூறிய கற்பனைக் கதைகளை மக்களுக்குச் சொல்லி பயம் காட்டி, உடல்களை வலுக்கட்டாயமாக எரிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன.
உடல்கள் நிலத்தில் புதைக்கப்படுவதை தமது சமய அனுஷ்டானமாக கடைப்பிடித்து வந்த இலங்கையர்கள் அனைவருமே இந்தத் தீர்மானத்தின் காரணமாக. பெரும் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகினர். கட்டாய உடல் எரிப்பினால் அதிகம் இழப்புகளையும் வலியையும் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை உலகே அறியும்.
இவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், ஜனாஸாக்களை ஒரு தூரப் பிரதேசத்திலேனும் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு 20 இலட்சம் இலங்கை முஸ்லிம்கள் மன்றாட்டமாக வேண்டி நின்றனர்.
ஆனால், இனவாதத்தின் துணைகொண்டு, அதிகார வேட்கையின் உச்சாணிக் கொம்பில் நின்று தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்த ராஜபக்ஷர்கள் நியாயத்தின் அடிப்படையிலோ, மனிதாபிமானத்தின் அடிப்படையிலோ, முஸ்லிம்களின் வாக்குகளும் தமக்கு வேண்டும் என்ற அடிப்படையிலோ ஒரு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கவில்லை.
கொவிட் வைரஸ் பற்றிய தெளிவின்மையும் மரணப் பயத்தையும் பயன்படுத்தி சிறுபான்மை முஸ்லிம்கள் மீது ஒரு வன்மத்தை கக்குவதற்கான சந்தர்ப்பமாக இதனை கோட்டாபய அரசாங்கம் பயன்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு கட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ உலக நியாயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து இன, மத குழுமங்களையும் சேர்ந்த மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினார்கள். அரபு நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகள் அமைப்புகளின் அழுத்தங்கள் அதிகரித்தன. அத்துடன், ஜனாஸாக்களை எரிப்பது அரசியல் தீர்மானம் என்பதையும் அவற்றை நிலத்தில் புதைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அரசாங்கமும் அதிகாரிகளும் தம்மளவில் அறிந்திருந்தனர்.
அதன் பிறகுதான் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியது. இது இதயத் சுத்தியுடன் அல்லது முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அரசாங்கம் வழங்கிய அனுமதி என்று இதனைக் கொள்ள முடியாது. மாறாக, வேறு வழியின்றி இந்த முடிவுக்கு அரசாங்கம் வந்தது எனலாம்.
இதன்படி பலரது முயற்சிகளின் பலனாக ஓட்டமாவடி, மஜ்மா நகரில் ஜனாஸாக்களை அடக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கொரோனாவின் கடைசி அலை முடிவடையும் வரை மஜ்மா நகரில் 3,634 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 2,992 பேர் முஸ்லிம்கள். அதுமட்டுமன்றி, 237 பௌத்தர்கள், 270 இந்துக்கள், 85 கத்தோலிக்கர்களின் உடல்களும் நெருப்பில் இருந்து தப்பி வந்து, மஜ்மா நகரில் அடக்கப்பட்டுள்ளன.
ஆனால், இலங்கையிலோ உலகின் வேறு நாடுகளிலோ உடல்களை நிலத்தில் புதைத்ததால் ஏதேனும் ஆபத்து வந்ததாகவோ, இலங்கை நிபுணர் குழு ஆரம்பத்தில் சொன்னது போன்று நிலத்திற்கு கீழால் வைரஸ் பரவியதாகவோ எங்கும் இதுவரை எந்தச் சம்பமும் பதிவாகவில்லை.
ஆக, அவர்கள் சொன்ன காரணங்கள், விஞ்ஞான விளக்கங்கள் எல்லாம் பொய்யாகி விட்டதை முழு இலங்கை மக்களும் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொண்ட பின்னர், இப்போதுதான் நிபுணர் குழுவின் வழிநடத்தல் தவறு என்று அரசாங்கம் சொல்கின்றது.
காலம் பிந்தியாவது உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அழித்ததும், அதேபோன்று இப்போதாவது உண்மையை ஏற்றுக் கொள்வதும் வரவேற்கத்தக்க விடயமே. ஆனால், இதனை இப்படியே விட்டுவிட முடியாது.
இக்கட்டாய ஜனாஸா எரிப்பால், முஸ்லிம் சமூகம் பட்ட துன்பங்களும் வலியும் மன அழுத்தமும் கொஞ்சநஞ்சமல்ல. நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவர்களது அடிப்படை உரிமைப்படி, மத நம்பிக்கையின் படி அடக்க முடியாமல் போனது, அவர்களது உடல்கள் குடும்பத்தாரின் விருப்பமின்றியே தீக்கிரையாக்கப்பட்டன என்பதும் சாதாரணமான விடயமல்ல.
இதற்குப் பின்னால் இருந்த இனவாதம், வன்மம் எல்லாவற்றையும் உலகே அறியும். எனவே, இது விடயத்தில் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்பட வேண்டும். பிழையான முடிவை எடுத்த நிபுணர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எல்லோரும் நீதி தேவதையின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago