2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘சுதந்திர இலங்கை’ - சில எண்ணப்பகிரல்கள்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே.அஷோக்பரன்

 

 

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் டொலருக்காக எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலையில், டொலர் இருந்தால்தான் எரிபொருள், எரிபொருள் இருந்தால்தான் மின்சாரம் என அடுத்தநாள் மின்சாரம் இருப்பதன் நிச்சயத்தன்மை இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணையெட்டிப்பிடிக்குமளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், “கோலாகலமாக” பெரும் இராணுவ அணிவகுப்புக்களுடன், விமான சாசகஸப் பறத்தல்களுடன், 74வது சுதந்திர தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

சுதந்திர தினமென்றால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கிறதுதானே எனச் சிலர் சொல்லலாம். சாதாரணமான நிலைமைகளின் கீழ், இந்தக் கொண்டாட்டங்களும் சாதாரணமானதுதான். ஆனால் இன்றுள்ள பொருளாதார கையறு நிலையில், மக்கள் பணத்திற்கு இந்த வீண் செலவுகள் தேவைதானா என்ற கேள்வியில் நிறைய நியாயங்கள் உள்ளன.

இந்த வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, இந்த “சுதந்திரதினத்தின்” அர்த்தம்தான் என்ன? அதனை இலங்கையர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்? போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்தித்தலும் முக்கியமானதாகிறது.

அனேக நாடுகளுக்கு ஒரு தேசிய தினம் இருக்கிறது. அந்தவகையில் இலங்கையின் தேசிய தினமாக சுதந்திர தினத்தை இலங்கையர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இதற்குப் பின்னால் காரணங்களும், அடையாளபூர்வ விடயங்களும் இருக்கின்றன.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்தியா இரண்டு தேசிய தினங்களைக் கொண்டாடுகிறது. முதலாவதாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியா போராடிப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைக் கொண்டாடும் ஓகஸ்ட்-15 சுதந்திர தினம். அந்த சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்தியா தனக்கான அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டரை வருடகாலம் எடுத்துக்கொண்டது. இந்தியாவினுடைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளான 26 ஜனவரி (1950) குடியரசு தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியா என்ற அரசியல் சிருஷ்டிக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்தான சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேயளவிற்கு இந்தியாவை ஒற்றைக்குடியரசாக கட்டமைத்த அரசியலமைப்பு அறிமுகமான நாளும் மிக முக்கியமானது.

பிரித்தானிய இந்தியாவிற்கு முன்னர், இன்றுள்ளதைப் போன்ற “ஒரு இந்தியா” இருக்கவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியமே, இன்றைய ஒரு இந்தியாவின் சிருஷ்டிகர்த்தா. மக்கட் பல்வகைமை, அடையாளப் பல்வகைமை கொண்ட ஒரு நிலப்பரப்பை, வரலாற்றில் அந்நியர் ஆதிக்கத்திற்கு முன்பதாக ஒருபோதும் முழுமையாக  ஓர் அரசாகவோ, ஒரு நாடாகவோ இருக்காத ஒரு நிலப்பரப்பை, ஒரு குடியரசாகக் கட்டியெழுப்புவதென்பது பெரும் தேசநிர்மாணப் பணியாகும். அந்தப் பணிக்கு இந்த இரண்டு தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்ற பொது எதிரியை வீழ்த்த, அந்த நிலத்தின் பல்வகைப்பட்ட மக்களிடமும் ஒரு பொது நிலைப்பாடு இருந்தது. அதற்கான அணுகுமுறைகளில் வேறுபாடிருந்தாலும், அந்நிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது என்பதை அம்மக்கள் “இந்தியர்” என்ற அந்தியருக்கு எதிரான சுதேச அடையாளத்தைக் கொண்டு ஒன்றிணையும் புள்ளியானது. அதனால் இந்தியர் என்ற அடையாளத்திற்கு “சுதந்திரதினம்” என்பது அடிப்படையானது. அதுபோல, அந்த சுதந்திரத்தைப் பெற்ற பின்னர், தம்மை ஒரு “சிவில் தேசிய” குடியரசாகக் கட்டியமைப்பதில் இந்திய அரசியலமைப்பே அடிப்படையாக அமைந்தது. ஆகவே அதன் தொடக்கப்புள்ளியை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறார்கள். நிற்க.

1948 பெப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் “சுதந்திரதினம்”. இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியிலிருந்து விடுவித்து, டொனிமினியன் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டது. “டொமினியன் அந்தஸ்த்தின்” படியும் இலங்கை சம்பிரதாயபூர்வமாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. இலங்கையின் ஆளுநர், பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட, முடியின் பிரதிநிதியே. இந்தியா சுதந்திரம் கிடைத்த 1947 ஓகஸ்ட் 15 முதல் குடியரசாகும் வரை இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால், இரண்டரை வருடங்களுக்குள் குடியரசு அரசியலமைப்பை ஸ்தாபித்து அவர்கள் குடியரசாகிவிட்டார்கள்.

இலங்கையின் நிலை அதுவல்ல. பிரித்தானிய பாராளுமன்றம் ஆக்கித்தந்த சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் 1972 வரை நடைமுறையிலிருந்தது. அதுவரை நாம் டொமினியனாகவே இருந்தோம். சிறிமாவோவும், அவரது இடதுசாரித் தோழர்களும் ஆட்சிக்கு வந்து 1972ம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்படும் வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. ஆகவே இலங்கையின் சுதந்திரதினம் என்ற அடையாளம், இலங்கையர்க்கு எவ்வளவுதூரம் அர்த்தபூர்வமானது என்பது மிக முக்கிய கேள்வியாகிறது.

இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் முடியவில்லை. பிரித்தானியர்தான், கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி, முழுத்தீவையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆனால் கண்டி மன்னனுக்கெதிராக இயங்கிய சில “தேசிய வீரர்கள்”, கண்டிய மன்னனை வீழ்த்த, பிரித்தானியரோடு ஒப்பத்தம் போட்டு, கண்டியை பிரித்தானியரிடம் கையளித்ததுதான் வரலாறு.

இலங்கையின் “சுதந்திரப் போராட்டத்தை” ஆழமாக அலசினால் அது உரிமைகளைவிட, சலுகைகளுக்கான கோரிக்கையாகத்தான் பெருமளவிற்கு இருந்தது. இந்தியாவைப் போல ஒரு பலமான சுதந்திரப் போராட்டம் இலங்கையில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் என்னவோ, இலங்கை 1972வரை டொமினியனாகவே தொடர்ந்தது.

ஆனால் 1972ல் இலங்கை குடியரசாக மாறிய மே 22, சிலகாலம் வரையிலும் “குடியரசு தினமாக” இலங்கையின் கொண்டாடப்பட்டது. ஆனால் அது தற்போது மறக்கப்பட்டுவிட்டது. அதற்கு கட்சி அரசியல் காரணமாக இருக்கலாம்.

இந்திய குடியரசு அரசியலமைப்பு பல்வகைப்பட்ட மக்கள் உள்ள ஒரு நிலப்பரப்பை ஒரு “சிவில் தேசிய” குடியரசாகக் கட்டமைக்க உருவானது. ஆனால் இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு அப்படிப்பட்டதா? பெரும்பான்மையினரின் மதத்திற்கு முதலிடமும், பெரும்பான்மையினர் மொழியை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக அரசியலமைப்பு ரீதியில் பிரகடனம் செய்த அரசியல் யாப்பு அது. ஆகவே இலங்கையிலுள்ள சிறுபான்மையினரை அந்நியராக உணரவைத்த ஒரு அரசியல்யாப்பு பிறந்ததினம் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் தினமாக அமையாது. அந்த வகையில் மே 22 முக்கியத்துவம் இழந்து, மறக்கப்பட்டமை இலங்கையர்க்கு பெரும் இழப்பல்ல.

அந்த அரசியலமைப்பும், சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியில் இந்நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து வழிகளிலும் இந்நாட்டின் சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்களும் அனுபவித்த துன்பங்களை பட்டியலிட இப்படி ஆயிரம் பத்திகள் எழுத வேண்டியிருக்கும்.

அப்படியானால், சுதந்திரதினமாவது இலங்கையர்களை ஒன்றிணைக்கிறதா என்ற கேள்வி இங்கு எழுகிறது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு பலகாலம் முன்பு, இலங்கையில் “சிலோனீஸ்” எனும் சிவில் தேசக் கட்டமைப்பிற்கான எண்ணங்கள், ஐரோப்பாவில் கல்வி கற்றுத் திரும்பிய பல தலைவர்களிடமும் இருந்தது. ஆனால் 1920-களின் பின்னர் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியமை நாம் காணலாம்.

பெரும்பான்மை இனத்தேசியவாதத்தின் எழுச்சி, இலங்கைக்குள் இலங்கையர் என்ற சிவில் தேசிய அடையாளம் கட்டியெழுப்பப்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது. மாறாக இலங்கை அரசியல் இனத்தேசிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவுதான் இலங்கை உள்ளுக்குள் உடைந்துபோய் நிற்கிறது.

சுதந்திரதினத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடவிடாது செய்தததை பெரும் வெற்றியாகப் பறைசாற்றும் அரசியல்தான் இந்நாட்டு மக்களை ஒருதாய் மக்கள் என்று பசப்புவார்த்தைகள் பேசுகிறது. சொல் ஒன்று, செயல் வேறு. அதுதான் இந்நாட்டின் போலி அரசியல். சுதந்திரதின மேடையும், இந்த அரசியல் நாடகத்திற்கான இன்னொரு அரங்கமாக அமைகிறதேயன்றி, சுதந்திரத்தின் மெய்யுணர்வு அங்கே இல்லை. பெரும்பான்மைத் தேசிய அரசியல் முழங்கலுக்கான மேடையாக அது மாற்றப்பட்டுவிட்டது. ஆட்சியாளர்களின் படோடாபங்களுக்கான மேடையாக சுதந்திரதின மேடை மாற்றப்பட்டுவிட்டது. அது மக்களுக்கான நாளாக அல்லாமல், நாட்டுக்கான நாளாக அல்லாமல், ஆட்சியாளர்களுக்கும், ஆயுதப்படைகளுக்குமான நாளாகவே மாறிவிட்டது. இதற்கு ஒட்டுமொத்தப் பொறுப்பாளிகள் இந்த நாட்டை ஆண்ட, ஆளுகிற அரசியல்வாதிகள் மட்டும்தான்.

சுதந்திரம் என்பது ஒரு பேருணர்வு. அதனால்தான் மனிதன் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள உயிரைக்கூடப் பணயம்வைக்கத் தயாராக இருக்கிறான். அத்தகைய சுதந்திரம் என்பது கொண்டாடப்பட வேண்டுமானால், அது ஒவ்வொரு மனிதனாலும் முதலில் உணரப்பட வேண்டும். சொந்த நாட்டு மக்களை, சொந்த நாட்டுக்குள்ளேயே அந்நியர்களாக உணரவைத்துவிட்டு, சுதந்திரத்தைக் கொண்டாடு என்றால், அது எப்படி முடியும்?

இலங்கை என்ற அற்புதமானதொரு தீவை, ஆட்சியாளர்கள் எனும் அரசியல்வாதிகள் சீரழித்துவிட்டார்கள். அது ஒன்றுதான் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளியாக இன்று இருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .