2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சுதந்திரக் கட்சியும் ‘மாமனார்’ மரபும்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 06

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், குடும்ப அரசியலுக்கு வழிகோலியது. சுதந்திர இலங்கையில், குடும்ப அரசியலில் நடுநாயகமாக ஐக்கிய தேசிய கட்சி இருந்தபோதும், அதிலிருந்து பிரிந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் குடும்ப அரசியல் அங்கமானது.

பண்டாரநாயக்காவுக்கு சுதந்திரக் கட்சியை, குடும்பக் கட்சியாக வளர்த்தெடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே, அவரது அமைச்சரவை அமைந்திருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ‘மகாஜன எக்சத் பெரமுன’ என்ற கூட்டணியை அமைத்தே, 1956இல் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.

பண்டாரநாயக்கவின் ஆட்சியில் வலதுசாரிச் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.ஜி. சேனாநாயக்க, இடதுசாரிச் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய பிலிப் குணவர்த்தன, சிங்கள கடும்போக்குவாதியான தகநாயக்க என ஒரு கலவையாகவே அவரது அரசாங்கம் அமைந்திருந்தது. பண்டாரநாயக்கவின் நம்பிக்கைக்குரியவராக, இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தரான சி.பி.டி. சில்வா இருந்ததோடு அமைச்சராகவும் இருந்தார்.

1959 செப்டெம்பரில், பண்டாரநாயக்கவின் கொலை மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலை நிகழும்போது, சி.பி.டி சில்வா மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாட்டில் இருந்தார். சி.பி.டி சில்வா, நஞ்சூட்டப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக இலண்டன் சென்றிருந்தார். 

பண்டாரநாயக்க, கொலை செய்யப்படுவதற்கு முன்னர், பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்குபெறுவதற்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். தான் இல்லாத காலத்தில் பதில் பிரதமராக, தகநாயக்கவை நியமிக்குமாறு, ஆளுநர் நாயகம் ஒலிவர் குணதிலகவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அரசாங்கம் கூடி, அடுத்த தலைவரைத் தீர்மானிக்க இடமளிக்காது, இக்கடிதத்தைக் காரணங்காட்டி ஒலிவர் குணதிலக, தகநாயக்கவைப் பிரதமராக நியமித்தார்.

இக்கட்டத்தில் நாடுதிரும்பிய சி.பி.டி சில்வா, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும், அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. தகநாயக்க, அரசாங்கத்தைக் கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசாங்கக் கூட்டணிக்குத் தலைமையேற்பதை விடுத்து, இலங்கை ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை உருவாக்கி, தகநாயக்க அதில் போட்டியிட்டார். பிலிப் குணவர்த்தவும் ஆர்.ஜி. சேனாநாயக்கவும் வெவ்வேறு திசைகளில் சென்றனர். இப்பின்புலத்திலேயே, சிறிமா பண்டாரநாயக்க கட்சிக்கு அழைக்கப்பட்டார்.

காலப்போக்கில் இதற்கு வழியமைத்த சி.பி.டி சில்வா, சிறிமாவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, ஆட்சியைக் கவிழ்த்த நிகழ்வும் பின்னர் நடந்தேறியது. கணவனின் கொலை, அதைச் சூழ்ந்த சூழ்ச்சிகள் எனப் பலவிடயங்கள் தொடர்பில், கட்சியில் உள்ளவர்கள் மீது நம்பிக்கையற்றவராக சிறிமா இருந்தார்.

இந்நிலையில், சிறிமாவின் நம்பிக்கைக்கு உரியவராக, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அரசியலுக்கு வந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க இவரின் மாமனாராவார். 1960இல் பொதுநலவாய நாடுகளிலேயே மிகக் குறைந்த வயதில் அமைச்சுப் பதவி பெற்றவர் என்ற பெருமை இவருக்குரியது. சிறிமாவின் அரசாங்கத்தில் நிதியமைச்சராகவும் துணைப் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றினார்.

1962இல் சிறிமாவின் ஆட்சியைக் கலைக்க நடந்த இராணுவச் சதியை முறியடித்ததில், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் பங்கு பெரியது. காலப்போக்கில், சிறிமா அரசாங்கங்களின் ‘உத்தியோகபூர்வமற்ற தலைவர்’ என்ற நிலையை அவர் அடைந்தார்.

1962ஆம் ஆண்டு, ‘Operation holdfast’ எனப் பெயரிடப்பட்ட இராணுவச்சதி குறித்த பல திடுக்கிடும் தகவல்களை, விசாரணைகள் வெளிப்படுத்தியிருந்தன. குறித்த சதியில், ஆளுநர் நாயகம் ஒலிவர் குணதிலகவின் பங்கு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு, டட்லி சேனாநாயக்கா, ஜோன் கொத்தலாவல, தகநாயக்க ஆகியோரின் பங்கு குறித்தும் தகவல்கள் வெளியாகின.

முதற்கட்டமாக, ஒலிவர் குணதிலகவை ஆளுநர் நாயகம் பதவியில் இருந்து அகற்ற சிறிமா முடிவெடுத்தார். பிரித்தானிய இளவரசிக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு, 1962 மார்ச்சில் பதவி விலக்கப்பட்டார். பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பிரித்தானியாவில் குடியேறிவிட்டார். ஏனையோர் மீது ஆதாரங்கள் இல்லாமையால், அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

குறித்த நிகழ்வு, தனது கணவரின் கொலையில் தகநாயக்கவுக்கு பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தை சிறிமாவுக்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக, 1963ஆம் ஆண்டு, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு, தகநாயக்க உட்படப் பலர் விசாரிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், தனக்கு நம்பிக்கையான ஒருவரை ஆளுநர் நாயகமாக நியமிக்க சிறிமா நினைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது, தனது மாமனாரான வில்லியம் கோபல்லாவை. 1958இல் பண்டாரநாயக்க, சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். 1960இல் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட கோபல்லாவ, 1962இல் மீள அழைக்கப்படும் போது, அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக இருந்தார்.

சிறிமாவால், ஆளுநர் நாயகமாக வில்லியம் கோபல்லாவ நியமிக்கப்பட்ட போதும், 1965ஆம் ஆண்டுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக ஆசனங்களைப் பெற்ற ஐ.தே.கவை ஆட்சியமைக்க அழைத்தார் கோபல்லாவ. அரசியல் ரீதியாக, சிறிமாவுக்கு உதவியிருக்க முடிந்தபோதிலும், கோபல்லாவ அதைச் செய்யவில்லை. மாறாக, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மதிப்பளித்தார். இதனாலேயே இவரது முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், டட்லி சேனாநாயக்க இவரை, ஆளுநர் நாயகமாகத் தொடர அனுமதித்தார்.

1966இல் டட்லி பிரதமராக இருந்தபோதும், அரங்கேறவிருந்த இராணுவச்சதி முறியடிக்கப்பட்டது. 1970இல் மீண்டும் பதவிக்கு வந்த சிறிமா, இன்னோர் இராணுவச்சதி குறித்து மிகுந்த அச்சமடைந்தார். இதனால், தனது மைத்துனரான அநுருத்த ரத்வத்தவிடம் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படையணியைக் கையளித்தார். 

ரத்வத்தவின் குடும்பம், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவுடையது. ரத்வத்தவின் தந்தையார், ஐ.தே.கவில் போட்டியிட்டு பலதடவைகள் வென்றவர். அநுருத்த ரத்வத்தவும், 1966ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் கட்சி மாறுவது ஒன்று புதிதல்ல. இருந்தபோதும் செல்வாக்கான அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்சி மாறுவது, கொஞ்சம் வியப்பாக இருக்கலாம். இதற்கு இரண்டு சிறப்பான உதாரணங்கள் உண்டு. முதலாமவர் அநுர பண்டாரநாயக்க; இவர் தனது தாயிடமும் சகோதரியிடமும் முரண்பட்டு, 1993இல் ஐ.தே.கவில் சேர்ந்து பின்னர், 2001ஆம் ஆண்டு மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு மீண்டவர்.

இரண்டாமவர் பசில் ராஜபக்‌ஷ; 1970களில் சுதந்திரக் கட்சியில் இருந்து, 1977இல் ஐ.தே.கவில் இணைந்து, பின்னர் சுதந்திரக் கட்சிக்கு வந்து, மீண்டும் 1990களில் ஐ.தே.கவுக்குச் சென்று, மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு மீள முயன்றபோது, அப்போது கட்சியின் தலைவராக இருந்த சந்திரிகா இதனை அனுமதிக்கவில்லை. இது தொடர்பான நீண்ட விரிவான அறிக்கையை, ‘விக்கிலீக்ஸ்’ கசியவிட்ட ஆவணங்களில் காணவியலும்.

1977ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றது முதல், சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றின. கட்சியின் தலைமையைப் பொறுப்பெடுக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட அநுரவின் செயற்பாடுகள், கட்சியை இன்னும் பின்னடைவுக்கு உட்படுத்தின.

இந்நிலையில் கட்சி, சந்திரிகா அணி, அநுர அணி என்று இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. அநுர மீது, சிறிமாவுக்கு இருந்த பாசம், சந்திரிகாவுக்கு சவாலாக இருந்தது. சந்திரிகாவின் கணவர் விஜய குமாரணதுங்க, கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்தார்.

உட்பூசல்களால் கட்சியில் இருந்து வெளியேறிய சந்திரிகாவும் விஜய குமாரணதுங்கவும், இலங்கை மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கினர். 1988இல் விஜய குமாரணத்துங்கவின் மரணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்ட சந்திரிகா, 1993இல் இலங்கை மீண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்.

1994இல் ஜனாதிபதியான சந்திரிகாவின் பாதுகாப்பு ஆலோசகராக, அவரது மாமனாரான அநுருத்த ரத்வத்த நியமிக்கப்பட்டார். பின்னர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரானார். பின்னர், கருத்து வேறுபாடுகளால் ரத்வத்த ஓரங்கட்டப்பட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியைப் போலன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் குடும்ப அரசியலும் மாமன்களின் செல்வாக்கும் அதிகரித்தமைக்கான காரணம், அதன் தலைமைப் பதவியை வகித்தவர்களால், கட்சியில் உள்ளவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை. இந்த நம்பிக்கையீனம், பண்டாரநாயக்கவின் கொலையோடு தொடங்கியது.

இந்த நம்பிக்கையீனத்தின் தொடர்ச்சியே, இன்று ஒரு சிறு கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாறியிருப்பதற்குக் காரணமாகும்.
இலங்கையில் குடும்ப அரசியலின் பரிமாணங்கள், சுதந்திரத்துக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக, குடியரசாகிய 40 ஆண்டுகளில் இலங்கை, குடும்ப அரசியலால் சீரழிந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .