Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 30, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
தற்போது ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி, ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்து விட்டோமோ என நாட்டின் சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மனம் வருந்தும் வகையிலேயே ஜனாதிபதியும் அவரது அரசும் ‘புதிய திசை , புதிய மாற்றம்’ என்ற முகமூடியுடன் ‘பழைய திசை, பழைய கொள்கை’யிலேயே பயணிக்கத் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் 56,34,915 வாக்குகளை வழங்கி அனுரகுமார திசாநாயக்கவையும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் 68,63,186 வாக்குகளை வழங்கி 141 எம்.பி.க்களை நேரடியாகவும் 18 எம்.பி.க்களை தேசியப்பட்டியல் மூலமாகவுமென 159 எம்.பி.க்களை பெற்று பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஆணை வழங்கிய மக்களில் தமிழ்,முஸ்லிம் மக்களும் கணிசமானளவுள்ள நிலையிலேயே அனுர அரசில் தமிழ், முஸ்லிம் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் புறக்கணிக்கும், ஓரம்கட்டும் பழைய மாறாக் கொள்கையான இனவாதக் கொள்கையே முன்னெடுக்கப்படுகின்றது.
மக்களை உசுப்பேத்திய உரைகள், மக்களைக் கவர்ந்த வாக்குறுதிகள் மூலம் மக்களின் பெரும் நம்பிக்கையைப்பெற்று , ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக்க முதலில் மூவின மக்களின் நம்பிக்கைகளையும் பொய்த்துப்போகச் செய்தார். சர்வதேச நாணய நிதியத்தின் சரத்துக்களை மாற்றம் செய்வோம் , மக்கள் நலன் சாரந்த விடயங்களில் மாத்திரம் ஒப்பம் இடுவோம் என்ற உறுதி மொழியை அவர் வழங்கியிருந்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டதை அவ்வாறு எவ்வித மாற்றமும் இன்றி அடுத்த தவணை பணத்திற்காக கையொப்பமீட்டு வருகின்றார். மக்கள் மேல் கடந்த அரசு சுமத்திய வரிகளைக் குறைப்போம் என்று உறுதிமொழி வழங்கினர் ஆனால் அதே வரிகள் மாற்றம் ஏதுவும்மின்றி தொடர்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு சலுகைகளை நிறுத்துவோம் என்றார்.
அதற்கு அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இவ்வாறான நிலையில், சிங்களவர்களைத் திருப்திப்படுத்தத் தனது பழைய மாற்றமில்லாக் கொள்கையான இனவாதத்தைக் கையில் எடுத்து சிங்களவர்களுக்கு அதே திசையைக் காட்டத் தொடங்கியுள்ளார்.
இதன் முதல் கட்டமாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் முதலில் இடம்பெற்ற மாகாண ஆளுநர்கள் நியமனத்தில் வடக்கு மாகாணத்திற்குத் தமிழ் ஆளுநரையும் மேல் மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநரையும் நியமித்த அனுரகுமார, தமிழ் அல்லது முஸ்லிம் ஆளுநர் ஒருவரையே கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளி கிழக்கிற்குச் சிங்கள ஆளுநரை நியமித்தார்.
அடுத்ததாகத் தனது அமைச்சரவை அமைச்சர்களாக 21 பேரை நியமித்த நிலையில் இந்த அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இராமலிங்கம் சந்திரசேகர் என்ற மலையகத் தமிழர் ஒருவரும் சரோஜா சாவித்ரி போல் ராஜ் என்ற மாத்தறை தமிழ் பெண் ஒருவரும் மட்டுமே சிறுபான்மையினத்தவர்கள் சார்பில் உள்வாங்கப்பட்டனர். அதேநேரம், இலங்கை அமைச்சரவை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் இடம்பெறாத அமைச்சரவை என்ற வரலாற்றையும் அநுர அரசு பதிவு செய்து கொண்டது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக்கி, சிறைகளில் அடைத்து, வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்த கோட்டாபய அரசின் முதல் அமைச்சரவையில் கூட முஸ்லிம் ஒருவரே பிரதான அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நிலையில் கோத்தபாய அரசில் பழிவாங்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவோம் .உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவோம் என முழங்கி, முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று ஆட்சிக்கு வந்த அனுரகுமார அரசு, தனது அமைச்சரவையில் முஸ்லிம்களைப் புறக்கணித்தது.
வடக்கில் வரலாற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக்கொடுத்த தமிழ் மக்களுக்காக வடக்கிலிருந்து ஒரு தமிழ் பிரதிநிதியாவது அமைச்சரவைக்கு உள்வாங்கப்படுவார் என்று தமிழர்களும் ஜனாதிபதிக்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கியதால் ஒரு முஸ்லிமாவது, அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார் என்று முஸ்லிம்களும் வைத்திருந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது.
இந்த இன வாத புறக்கணிப்புக்களுக்கு இடையிலும் அனுர அரசின் மீது நம்பிக்கையிழக்காத தமிழ், முஸ்லிம்கள் சபாநாயகர், நியமனத்தின் போது, தமது பிரதிநிதிகளுக்கு உரிய இடம் வழங்கப்படுமென்ற எதிர்பார்ப்பிலிருந்தனர்.
ஆனால் அசோக சபுமல் ரன்வல என்பவர் சபாநாயகராக நியமிக்கப்பட்டதோடு, பிரதி சபாநாயகராகவே முஸ்லிமான ரிஸ்வி சாலி என்பவர் நியமிக்கப்பட்டார். பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக ஒரு சிங்கள பெண்மணியே நியமிக்கப்பட்டார். இதிலும் தமிழ்,முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர்.
சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் போல, பிரதியமைச்சர்கள் நியமனத்திலாவது தமது எதிர்பார்ப்பு நிறைவேறும் எனக்காத்திருந்த தமிழ்,முஸ்லிம்களுக்கு அதிலும் புறக்கணிப்பே கிடைத்தது அனுர அரசில், 29 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் வெளிவிவகார பிரதி அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா என்ற திருகோணமலைத் தமிழரும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக மொஹமட் முனீர் என்ற முஸ்லிமும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் என்ற மலையகத் தமிழரும் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதாவது அடையாளத்திற்காக சிறுபான்மையினங்களிலிருந்து ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டனர்.
இதிலும் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வெற்றியாக 5 பிரதிநிதிகளைக் கொடுத்த வடக்கு மாகாணம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது.
இந்த இனவாத புறக்கணிப்புக்கள் தமிழ், முஸ்லிம்களுக்கு புதிய விடயம் அல்லவென்பதனால் அவர்கள் பொறுத்துப் போயிருப்பார்கள்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு அனுபவம், அறிவு போதாது.அனுபவமற்றவர்களை,அறிவற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடியாது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்தே தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் இருக்கும் ஜே.வி.பியின் சிறுபான்மையினங்களுக்கு எதிரான உண்மை முகத்தையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
யார் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும் அவரின் அமைச்சரவையில் நிச்சயமாக தமிழ், முஸ்லிம்கள் இருப்பார்கள். அதற்கு தமிழ் முஸ்லிம்களின் ணைபவம், அறிவு, திறமை, விசுவாசம், நம்பிக்கையே காரணங்களாக இருந்து வந்தன.
தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு அனுபவம், அறிவு போதாது என்றால் அனுர அரசில் நியமிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் தவிர, ஏனையவர்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளதா? இவர்கள் முன்னர் எம்.பி.க்களாகவேனும் இருந்தவர்களா? அல்லது பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 29 பேரில் எத்தனை பேருக்கு அரசியல் அனுபவம் உள்ளது? இவர்களில் எத்தனை பேர் முன்னர் எம்.பி.க்களாகவேனும் இருந்தவர்கள்? இவர்களின் பட்டங்கள்தான் இவர்களின் தகுதி என்றால் தமிழ், முஸ்லிம்களிலும் பலரும் அவ்வாறான பட்டங்களுடன் இருக்கின்றார்கள் தானே?
அதுமட்டுமன்றி, அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிகழ்த்திய தனது அரசின் கொள்கைப் பிரகடன உரையும் தமிழ், முஸ்லிம் மக்களைக் குறிப்பாகத் தமிழ் மக்களை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இன,மதவாதத்திற்கு இடமில்லை என்ற உறுதி மொழியைத் தவிரத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்,பிரசாரங்களில் சிறுபான்மையினங்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எதுவுமே கொள்கைப் பிரகடன உரையில் உள்ளடக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி, ஜே .வி.பியின் செயலாளரான ரில்வின் சில்வா புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படும் என கூறி, தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அனுர அரசு மீதான கடும் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டுள்ளார். ஜே .வி.பி. எதிர்பார்த்ததை விடவும் இதன் பிரதிபலிப்புக்கள் கடுமையாக இருப்பதனால் தற்போது ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் திரிவுபடுத்தப்பட்டு, விட்டதாகக் கூறி, தமிழ் தரப்புகளையும் இந்தியாவையும் சாந்தப்படுத்தும் வேலைகள் இடம்பெறுகின்றன.
தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் இருக்கும் ஜே .வி.பியின் இவ்வாறான இனவாத நடவடிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வர தமது சமூக கட்சிகளை, தமது தேசியக் கட்சிகளை புறக்கணித்து அனுரகுமார அரசிடம் மாற்றத்தை எதிர் பார்த்து பெரும் ஏமாற்றத்தையே தமிழ், முஸ்லிம்கள் அடைந்துள்ளனர் . தேர்தல் பிரசாரங்களில் ‘அனைவரும் சமம்’ என்ற கோஷத்தை பெரிதாக பிரசாரப்படுத்திய அனுரகுமாரவின் கட்சி ஆட்சிக்கு வைத்த பின்னர் ‘சிங்களவருக்குத் தமிழ், முஸ்லிம்கள் சமமில்லை’ என்ற மாற்றத்தையே ஏற்படுத்தி வருகின்றது.
12.05.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago