Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூன் 03 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திரம் அடைந்ததை அடுத்து, இலங்கை அரசியலில் மிகவும் நீண்ட காலமாகத் தாக்கத்தை ஏற்படுத்திய பெயர், தொண்டமானாகத் தான் இருக்க வேண்டும்.
சுதந்திரத்துக்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்த அப்பெயர், மே மாதம் 26ஆம் திகதி வரை, ஓரளவுக்கேனும் அத்தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.
சுதந்திரத்துக்கு முன்னைய காலத்தையும் கருத்தில் கொண்டால், சேனாநாயக்க, பண்டாரநாயக்க போன்ற பெயர்கள், அதைவிட நீண்ட காலமாக, இலங்கை அரசியலில் செல்வாக்கைச் செலுத்தி இருக்கின்றன. ஆயினும், ஒரு சிறுபான்மையினப் பெயர், இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவது வித்தியாசமானதே.
'தொண்டமான்' என்ற பெயர், எதிர்காலத்திலும் இந்நாட்டு அரசியலில், தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்போதைய காபந்து அரசாங்கத்தின் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின், மே 26ஆம் திகதி இடம்பெற்ற திடீர் மரணத்தை அடுத்து, அவரது மகன் ஜீவன், அவருக்குப் பதிலாக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை, எவரிடம் கையளிப்பது என்பது, இக்கட்டுரை எழுதப்படும் வரை, தீர்மானிக்கப்பட்டு இருக்கவில்லை.
ஜீவன் தொண்டமான் தான், இ.தொ.காவின் அடுத்த தலைவர் என, அக் கட்சி தீர்மானித்தாலும் அவர், மற்றொரு சௌமியமூர்த்தி தொண்டமானாக இருப்பது ஒரு புறமிருக்க, தமது தந்தைக்கு இணையானவராக இருப்பாரா என்பதையும், இப்போதே கூற முடியாத விடயமாக இருக்கிறது.
அதேவேளை, இ.தொ.காவில் அனுபவசாலிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், ஜீவனுக்குப் பதிலாக, மற்றொருவர் கட்சித் தலைவராக நியமிக்கப்படுவாரா என்பது சந்தேகமே.
உண்மையிலேயே, இ.தொ.காவின் தலைவராக ஜீவன் நியமிக்கப்படுவாராயின் அது, அவரது அனுபவத்தின் காரணமாகவோ, அரசியல், தொழிற்சங்க விடயங்களில் அவரைப் பார்க்கிலும் சிறந்தவர் இ.தொ.காவில் இல்லை என்பதற்காகவோ அன்றி, ஆறுமுகன் தொண்டமானின் மகன் என்பதற்காகவே, அவ்வாறு நியமிக்கப்படுவார்.
இது ஜனநாயகமல்ல; குடும்ப அரசியலாகும்; வாரிசு அரசியலாகும். சித்தாந்த ரீதியாக, அது முறையாகாது என்று வாதிட்டாலும், அதுதான் அனேகமாக நடைபெறப் போகிறது.
அதேவேளை, கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டதைப் போல், ஏற்கெனவே ஜீவன் நடந்து கொண்டுள்ள நிலையில், மற்றொருவர் கட்சித் தலைமைக்கு நியமிக்கப்பட்டால், அது கட்சியை ஒரு பிளவுக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது.
அதேவேளை, தொண்டமான்களுக்கும் பெரும்பாலான அடிமட்டத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையிலான, நீண்ட காலப் பிணைப்பைப் பார்க்கும் போது, மற்றொருவரால் கட்சியையும் தொழிற்சங்கத்தையும், தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுகிறது. (ஜீவனாலும் அது முடியுமா என்றும் சிலர், இதற்குப் பதிலாகக் கேள்வி எழுப்பலாம்.)
இதேவேளை, குடும்ப அரசியல் என்பது, இலங்கைப் போன்ற நாடுகளில் புதிய விடயமும் அல்ல. டி. எஸ் சேனாநாயக்க, எப். ஆர். சேனாநாயக்க ஆகியோர், 1920க்கு முன்னரே ஆரம்பித்த அரசியல், வாரிசு அரசியலாக மாறி, 1973ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க மரணிக்கும் வரை நீடித்தது. 1920களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஆரம்பித்த அரசியல், 1959ஆம் ஆண்டு அவரது மறைவையடுத்து, அவரது மனைவி சிறிமாவின் மூலம் குடும்ப அரசியலாகி, 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் வரை நீடித்தது.
இதேபோல், வடக்கே பொன்னம்பலங்கள், தெற்கே திஸாநாயக்காகள், ராஜபக்ஷகள், சேனாரத்னகள், சமரவீரகள் பௌஸிகள் என, அரசியல் குடும்பங்கள் பல இருக்கின்றன.
உண்மையிலேயே, இன்று உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும், பல அரசியல்வாதிகளுக்குத் தமது புதல்வர்களை அரசியலில் திணிக்கும் நுழைவாயில்களாகவே அமைந்து உள்ளன. அதன் மூலம், குடும்ப அரசியலும் அரசியல் குடும்பங்களும் பரவலாக காணக்கூடிய அம்சங்களாகி உள்ளன. தந்தையர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள், பிள்ளைகளுக்கும் வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.
இ.தொ.காவானது, 1929-1939 காலப் பகுதியில், உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் (Global recession) விளைவாகத் தோன்றியதொன்று என்றும் கூறலாம். அப்பொருளாதார வீழ்ச்சியே, இரண்டாம் உலகப் போருக்கும் காரணமாகியது. அதாவது, அந்தப் பொருளாதார வீழ்ச்சி, ஹிட்லர், முசோலினி போன்ற போர் வெறி கொண்ட சர்வாதிகாரிகளைத் தொற்றுவித்ததைப் போலவே, சௌமியமூர்த்தி தொண்டமான் போன்ற சாத்வீகப் போராளியையும் தோற்றுவித்தது.
மேற்படி பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, இலங்கையில் சகல துறைகளும் பாதிக்கப்பட்ட போதும், பெருந்தோட்டத்துறை பாதிக்கப்படவில்லை. எனவே, மலையக மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் தோன்றி, அது இனவாத பிரசாரமாகவும் மாறியது.
இந்த நிலையிலேயே, இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் உதவியை நாடினர். 1939ஆம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த ஜவஹர்லால் நேரு, 'தோட்டப்புற மக்கள் ஓரியக்கமாக ஒருங்கிணைய வேண்டும்' என்ற ஆலோசனையை வழங்கினார். அதன் விளைவே, இலங்கை இந்திய காங்கிரஸூம் இ.தொ.காவும் ஆகும்.
அதன் பின்னரும், பேரினவாதம் மலையக மக்களைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளது. தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை, மலையக மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அது, தமது மக்களுக்குப் பயனற்றது என்பதையும், இ.தொ.கா தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நன்கறிந்து இருந்தார்.
எனவேதான், 1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'தமிழர் ஐக்கிய முன்னணி'யின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், அம்முன்னணி தனது பெயரைத் 'தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி' என்று மாற்றிக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான 'வட்டுக்கோட்டைப் பிரேரணை'யை நிறைவேற்றிய போது, அக்கூட்டணியிலிருந்து விலகினார்.
அவ்வாறிருந்தும், பேரினவாதம் மலையக மக்களை விட்டு வைக்கவில்லை. 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற வன்செயல்கள், அத்தேர்தலின் போது, வடக்கில் மேலெழுந்த தமிழ் ஈழக் கோஷத்தின் காரணமாக, இனக் கலவரமாக மாறிய போது, மலையக மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர்.
மீண்டும் 1981ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரமும் எந்த நியாயமான காரணமுமின்றி, மலையக மக்களுக்கு எதிரான கலவரமாகவே நடைபெற்றது. 1983ஆம் ஆண்டு, இனக் கலவரம் மலையகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம், இ.தொ.காவே அம்மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே அமைப்பாக இருந்தது.
அதன் பின்னர், பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இ.தொ.கா மலையத்தில், 'மலயநாடு' என்ற பெயரில், தனித் தமிழ் நாடொன்றை உருவாக்கப் போவதாகப் பிரசாரம் செய்து வந்தன. மலை நாடு என்பதையே அவர்கள், 'மலயநாடு' என்று குறிப்பிட்டனர். ஆனால், சௌமியமூர்த்தி தொண்டமான், அதற்குப் பதில் அளிக்க முற்படவில்லை. இதைப் பற்றி, கட்டுரையாளர் ஒரு முறை அவரிடம் வினவிய போது, 'மலை நாட்டை, நாம் ஏன் உருவாக்க வேண்டும்? அதுதான், உலக ஆரம்பத்திலிருந்தே இருக்கிறதே' எனப் பதிலளித்திருந்தார்.
இவ்வாறு அரசியல்வாதிகளும் ஊடகங்களும் குற்றஞ்சாட்டினாலும், அவர் இறந்தபோது, பல பெரும்பான்மையினத் தலைவர்கள், 'தொண்டமானே, மலையக இளைஞர்கள், வட பகுதி இளைஞர்களின் தனி நாட்டுப் போராட்டத்தில் இணையாது தடுத்தவர்' எனப் பாராட்டியிருந்தனர். அதேபோல், ஆறுமுகன் தொண்டமான் மரணித்த போதும், சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றவர்கள் கூறினார்கள்.
இ.தொ.கா, ஒரு காலத்தில் இலங்கை அரசியலிலும் தொழிற்சங்கத் துறையிலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய, மலையகமெங்கும் பரவிய மாபெரும் விருட்சமாகவே இருந்தது. ஆனால், 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாராள பொருளாதாரத்தின் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டதை அடுத்து, அது படிப்படியாக முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.
மலையக மக்களும், ஏனைய பிரதேசங்களில் குடியேறி வருகிறார்கள். தோட்டத்துறையோடு மட்டுமே சம்பந்தப்பட்டு இருந்த அம்மக்கள், பிற்காலத்தில் அப்பகுதியிலும் பிற பகுதிகளிலும் ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது, மலையக மக்களின் பிள்ளைகள், வெளிநாட்டுத் தூதுவர்களாகவும் உயர்நீதிமன்ற நீதியரசர்களாகவும் உள்ளனர்.
பிற்காலத்தில், மலையகத்தில் வேறு பல தொழிற்சங்கங்கள் ஊருவாகி, முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அது எந்தளவு என்றால், தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கம், தம் பக்கம் சாய்ந்த இ.தொ.காவை ஒதுக்கித் தள்ளியது. ஆனால், இன்னமும் இ.தொ.காவே மலையத்தில் பிரதான தொழிற்சங்கமாகத் திகழ்கிறது.
ஒரு காலத்தில், சுமார் 10 இலட்சம் தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படும் பெருந்தோட்டத்துறையில், தற்போது சுமார் 150,000 தொழிலாளர்களே உள்ளனர் என, பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளரை மேற்கோள் காட்டி, 'சன்டே டைம்ஸ்' பத்திரிகை கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதைச் சுட்டிக் காட்டும் 'மாற்றம்' இணையத்தளம், மூன்று பிரதான தொழிற்சங்சங்கள், தொழில் திணைக்களத்துக்கு வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின் பிரகாரம், அச் சங்கங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும், சுமார் 550,000 ஆகும் என கூறுகிறது. அதாவது, தோட்டத் தொழிற்றுறையும் இ.தொ.காவும் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன என்பதாகும். இந்த நிலையிலேயே, இ.தொ.கா தற்போது தலைமையை இழந்திருக்கிறது.
குடும்ப அரசியலைப் பற்றி, சிலர் வாதிடுகிறார்கள். திறமை, தகுதி அனுபவம் ஆகியவற்றை, ஒரு பரம்பரைக்கான மக்களின் பிணைப்பு புறந்தள்ளிவிடும் என்றால், அது அடிமை மனப்பான்மை என, சித்தாந்தவாதிகள் வாதிடலாம்; இருக்கலாம்! ஆனால், யதார்த்தம், சிலவேளைகளில் சித்தாந்தத்தை விஞ்சிவிடுகிறது.
தொண்டமான்களின் எதிர்ப்புடனோ, இணக்கத்துடனோ மற்றொருவர் இ.தொ.காவின் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில், மற்றொரு நடைமுறைப் பிரச்சினையையும் அக்கட்சி எதிர்நோக்கப் போகிறது. அதாவது, தொண்டமான்களுக்குச் சவால் விடுக்கத் தைரியம் இல்லாதவர்கள், அந்த மற்றொருவருக்குச் சவால் விடுக்க முன் வரலாம்.
இதுவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் நடந்தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் வாழ்ந்த காலத்தில், அக்கட்சியில் எவரும் தலைமை என்ற விடயத்தில், அவருக்குச் சவால் விடுக்கவில்லை; அதற்கான தைரியமும் எவரிடமும் இருக்கவில்லை. அவரிடமிருந்த ஆளுமையும் கவர்ச்சியும் (charisma) மற்றொருவரிடமும் இருக்கவும் இல்லை. அவர், இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவரைப் பயிற்றுவித்து, தேவையான அங்கிகாரத்தையும் தொண்டர்களிடம் பெற்றுக் கொடுத்து இருக்கவும் இல்லை.
ஆயினும், அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அரநாயக்காவில் ஹெலிகொப்டர் விபத்தில் மரணிக்கும் போது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீம், இரண்டாம் நிலையாக மிளிர ஆரம்பித்து இருந்தார். இரண்டாமவரைப் போல் நடந்து கொண்டார். அவரிடம் அரசியல் அனுபவமும் இருந்தது. அதன்படி, அஷ்ரபின் மறைவை அடுத்து, கட்சியின் பெரும்பான்மையினரது இணக்கத்தில், அவர் கட்சித் தலைவரானார்.
எனினும், ரவூப் ஹக்கீம், தம்மோடு சமமானவர் என நினைத்த சிலர், அப்போது கட்சியில் இருந்தனர். அவர்கள் பின்னர், அவருக்குச் சவால் விடுக்க ஆரம்பித்தனர். மு.கா பிற்காலத்தில் பிரிந்து, பல கட்சிகள் உருவாக அதுவும் ஒரு காரணமாகியது.
ஆறுமுகன் தொன்டமானின் தலைமையை ஏற்ற போதும், பலர் இ.தொ.காவை விட்டு வெளியேறினார்கள். இ.தொ.காவின் சிரேஷ்ட உப தலைவர்களான பி.பி. தேவராஜ், எஸ். சதாசிவம், எஸ். ராஜரட்ணம், ஏ.எம்.டி. ராஜன், வி. சென்னன் ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தனர். அதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். யோகராஜன், வி. புத்திரசிகாமணி, வடிவேல் சுரேஷ், எம். சச்சிதானந்தன் ஆகியோரும் இ.தொ.காவை விட்டு வெளியேறினர்.
சௌமியமூர்த்தி தொண்டமானிடம், தாம் கண்ட 'கரிஸ்மா'வையும் ஆளுமையையும், ஆறுமுகம் தொண்டமானிடம் காணாதமை, அவருக்குச் சவாலாக, அவர்கள் முன்வரக் காரணமாகியது. ஆனால், தமது பாட்டன் மரணிக்கும் போதும், இ.தொ.காவில் இரண்டாம் நிலையில், ஆறுமுகன் அங்கிகாரம் பெற்று இருந்தார்.
தொண்டமான் என்ற பெயரும், மலையகத்திலும் இந்திய வம்சாவளி மக்களிடமும் அங்கிகாரம் பெற்றிருந்தது. அவற்றின் மூலம், அவர் நிலைத்துவிட்டார்.
அனேகமாக இதுவே, ஜீவன் தொண்டமான் விடயத்திலும் உண்மையாகலாம். அது ஜனநாயகமல்ல, குடும்ப அரசியல் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவை வெறும் வாதங்களாகப் புறக்கணிக்கப்பட்டு விடலாம். சித்தாத்தங்களே, எப்போதும் நடைமுறையாவதில்லை.
எவர் இ.தொ.கா தலைவரானாலும், அவர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினை இருக்கிறது. அதாவது, இ.தொ.கா ஒரு காலத்தில், 'உருலவள்ளி'ப் போராட்டம் போன்ற போராட்டங்களால், இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையே தலைக்குனிய வைத்த போதும், ஒரு சமூகத்தின் அபிவிருத்தியின் குறியீடுகளாகக் கருதப்படும் கல்வி, போஷாக்கு, வீடமைப்பு, தாய் மரணங்கள், குழந்தை மரணங்கள் போன்ற அனைத்திலும், மலையகம் இன்னமும் நாட்டின் பொதுவான அளவீடுகளைப் பார்க்கிலும், மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறது என்பதே, அந்தப் பிரச்சினையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago