2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சமாதானத்திற்கான போரரசியல் - 5

Mayu   / 2024 நவம்பர் 19 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

சந்திரிக்காவுக்கும் ரணிலுக்கும் இடையிலான முரண்பாடுகள் 2000ம் ஆண்டளவில் புதிய கட்டத்தை எட்டியது. இதன் தொடர்ச்சியாக 2001இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க தலைமையிலான ஐ.தே.மு வெற்றி பெற்றது. 

இது அக்காலப்பகுதியில் இலங்கையின் தேசிய அரசியல் வரலாற்றில் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்எதிர் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 

ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் கொண்டவராக இருந்தாலும் பாராளுமன்றமும் அமைச்சரவையும் பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இது அதிகார நெருக்கடியை உண்டு பண்ணியது. 

தேர்தலில் ஐ.தே.மு.வின் வெற்றியானது, ரணிலின் கீழ் ஐ.தே.க தலைமைத்துவம் மற்றும் கட்சியின் தாராளவாத சமாதான நிகழ்ச்சி நிரல், சமாதான பலன்களுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டது. மக்கள் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. 

எவ்வாறாயினும், ஐ.தே முவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதானப் பலன்களை வழங்குவது இலகுவானதாக இருக்கவில்லை, ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட உயரடுக்கு பிரிவு மோதல்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

2001 இல், ஐ.தே.முவின் தலைவர் ரணில், சமாதான-பொருளாதார அபிவிருத்தி தளத்தில் பொதுத் தேர்தலில் கண்ட வெற்றியை சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்குப் பயன்படுத்த முயன்றார்.

 புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அவர் விரும்பிய போதும் ரணில் தனது கூட்டணி உறுப்பினர்களிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொண்டார். அது வலுவான எதிர்ப்பாக இல்லாத நிலையும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் கொண்டிருந்த விருப்பும் தமிழர்களுடனான அரசியல் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை நோக்கி நகர்வற்கான உந்துதலை அளித்தது. 

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்த த.தே.கூ அமைப்பின் தாராளவாத் பொருளாதாரக் கொள்கைகளுக்கான விருப்பு, சர்வதேச சமூகம் குறித்த மிகை நம்பிக்கை ஆகியன சமாதானம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தூண்டின.

அதேவேளை எதிர்கட்சிகள் இதைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தக் காத்திருக்கிறார்கள் என்பதை நன்கறிந்த ரணில், அதன் அரசியல் போட்டியாளர்களிடமிருந்து விரும்பத்தகாத கவனத்தை நடுநிலையாக்குவதற்கு, முதலில்இலங்கையில் ஏற்பட்ட மோதலை ஒரு ‘வட-கிழக்கு யுத்தமாக’ வடிவமைத்து, பொருளாதார காரணங்களுக்காக மோதலை தீர்க்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தினார்.

“அபிவிருத்தியினூடான சமாதானம்” என்பதே பிரதான தொனிப்பொருளானது. உலகளாவிய புதிய வலதுசாரிகள் மேலாதிக்கம் செலுத்தும் உலகளாவிய ‘தாராளவாத சமாதான’ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பொருந்தக்கூடிய பொருளாதார மூலோபாயத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு சர்வதேச சமூகத்திலிருந்து ஆதரவையும் அழுத்தத்தையும் விக்கிரமசிங்க எதிர்கொண்டார். 9/11 தாக்குதலுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் தாராளவாத சமாதான நிகழ்ச்சி நிரல் உறுதிப்படுத்தப்பட்டு, மேற்குலகின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற உலகளாவிய பிரச்சாரமானது.

2002இல் இலங்கை அரசாங்கமும் புலிகளும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இவை முக்கிய காரணங்களாகும். இங்கு விளங்கிக் கொள்ளவேண்டியது யாதெனில் விக்கிரமசிங்கவின் அரசியல் பேச்சுவார்த்தை முன்முயற்சி பொ.முன்னணி அரசாங்கத்தால் (குமாரதுங்கவின் முந்தைய அரசாங்கம்) அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது, எனவே அவர் நோர்வேயின் பங்களிப்பை எளிதாக்கினார்.

ஐ.தே.மு அரசாங்கத்தின் கீழ் இந்த புதிய கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கத்திய நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடிந்தாலும், ஐ.தே.முவின் உள்ளூர் அரசியல் போட்டியாளர்கள் இந்த முயற்சியை வரவேற்கவில்லை.

2002ல் ஐ.தே.மு புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்பே, அதன் போட்டி அரசியல் சக்திகள் (முக்கியமாக ஜனாதிபதி குமாரதுங்கவின் பொ.முன்னணி அரசியல் கூட்டணி, ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி) உடன்படிக்கைக்கு எதிராக பொதுக் கருத்தைத் திரட்டின. 
இதற்கிடையில், இந்த நேரத்தில் தமிழ் அரசியல் சக்திகளிடையே வளர்ந்து வரும் பிரிவு மோதல்கள், ஈபிடிபி மற்றும் அதன் பரம அரசியல் எதிரியான த.தே கூ (புலிகளின் பினாமி என அழைக்கப்படும்)  தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான நிச்சயமற்ற தன்மைகள், யுத்த நிறுத்தத்திற்கு தெற்கின் எதிர்ப்பு ஆகியன புலிகளின் ஆட்சியின் கீழ் வடக்கில் ஒரு தனிநாடு ஸ்தாபிக்கப்படுவதற்கு யுத்த நிறுத்தம் வழிவகுக்கும் என்ற தவறான அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது.

2002-2003 போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, பொ.முன்னணியின் இரகசிய ஆசீர்வாதத்துடன், ஜே.வி.பி. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக பாரிய பொது ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 

ஜே.வி.பி மற்றும் ரணிலின் மற்ற அரசியல் போட்டியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம், தேர்தல் பிரச்சாரத்தின் போது ரணில் கட்டியெழுப்ப முடிந்த முந்தைய பேச்சுவார்த்தை சார்பு நிலைப்பாட்டை பேச்சுவார்த்தைக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்ற முடிந்தது.

ஜனாதிபதி குமாரதுங்க தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு ஆதரவாக தென்னிலங்கை அரசியலை வெற்றிகரமாக அணிதிரட்டியவர், இப்போது ஐ.தே.மு தலைமையின் கீழ் அரசியல் தீர்வுக்கு எதிராக அதே சக்திகளை அணிதிரட்டினார்.

இறுதியில் ரணிலுக்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பகிரங்கமாக விமர்சித்தவர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிழைப்புக்கு விரோதமான ஒரு கோஷ்டி அரசியல் சூழலை மேலும் ஊக்குவித்தனர். புலிகளுக்கு எதிரான அரச இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதலாவது பிரிவை குறிப்பாக தாக்கினர்.

ஜே.வி.பி., ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஏனைய எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் இந்த குறிப்பிட்ட சரத்தை புலிகள் சுதந்திரமாக மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகிறது என்று கூறி விமர்சித்தன. இந்த வாதமானது தெற்கில் இருந்து சிங்கள மக்களிடமிருந்து ஓரளவு ஆதரவைப் பெற்றது.

அவர்கள் தோல்வியுற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இதேபோன்ற நிகழ்வுகளையும் பேச்சுவார்த்தை செயல்முறையின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் அளவையும் நினைவு கூர்ந்தனர்.

நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் இதற்கெதிரான ‘அரசியல் சார்பற்ற தொழில்நுட்ப எதிர்ப்புகள்’ என ஒழுங்கமைக்கப்பட்டன. இவை அரசியலமைப்பு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சட்டபூர்வமான தன்மையில் தங்கள் வாதங்களை அடித்தளமாகக் கொண்டிருந்தன.

இவ்வாதங்களின் கருத்துப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு முக்கிய அடிப்படை விதிகளை மீறியுள்ளது.

போர் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் நுழைவதற்கு பிரதமருக்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை, ஏனெனில் அத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக நிறைவேற்று ஜனாதிபதியின் கைகளில் உள்ளன. 

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஆயுதக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறும் செயலாகும் என்பதை அவை சுட்டிக்காட்டின. 

பல்வேறு குழுக்களால் சுட்டிக்காட்டப்பட்ட இந்தக் குறைபாடுகள் இருந்தபோதிலும், ரணில் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ள சம்மதிக்க நோர்வேயின் தொடர்பாடல் வழிகளைப் பயன்படுத்தி புலிகளை அணுக முடிந்தது.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் மீது விதிக்கப்பட்ட உள்ளக தடையை நீக்குவதாக ஐ.தே.மு அரசாங்கம் புலிகளுக்கு உறுதியளித்தது.

உதாரணமாக, கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இலங்கையின் பூர்வீகத் தமிழர்களின் ‘ஏக பிரதிநிதி’ என்ற புலிகளின் சுயமாக அறிவிக்கப்பட்ட நிலையை இலங்கை அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியது என்று குற்றஞ்சாட்டினர். 

மற்ற தமிழ் குழுக்களின் கோரிக்கைகளை, குறிப்பாக ஜனநாயக அரசியல் ஈடுபாட்டின் மூலம் தமிழ் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் மிதவாத தமிழர்களின் கோரிக்கைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மதிக்கவில்லை என்றும் வாதிட்டனர்.

தார்மீக உயர்நிலையை எடுத்துக்கொள்வதன் மூலம், புலிகளின் மிருகத்தனமான பாசிச நடைமுறையை அரசு அங்கீகரிப்பதாகவும், புலிகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட மாற்று, மிதவாத, ஜனநாயக மற்றும் தாராளவாத தமிழ் குழுக்களை தமிழ் அரசியல் களத்தில் இருந்து வேண்டுமென்றே அகற்ற ஐ.தே.மு முயற்சிப்பதாக இந்த குழுக்கள் குற்றம் சாட்டின. 

மேலும், ஐ.தே.மு , புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது, வடக்கு மற்றும் கிழக்கில் சர்வாதிகார ஆட்சியை அமுல்படுத்த புலிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என அவர்கள் சொன்னார்கள். 

அவர்களைப் பொறுத்தவரை, பிராந்திய சிறுபான்மையினரின் மனித உரிமைகளை புலிகள் மீறுவதையும் ஜனநாயக பன்மைத்துவ அரசியலை நிராகரிப்பதையும் அரசாங்கம் வேண்டுமென்றே ஏற்றுக்கொண்டதையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிக்கிறது. நுpறைவாக இவர்கள், அரசாங்கம் ‘சர்வாதிகார அமைதிக்கு’ வழி வகுத்ததாகவும் புலிகளை ஒரு பாசிச அமைப்பாக மேலும் வளர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

10.11.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .