Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் கதைகள் புஷ்வாணமாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், அப்படியென்றால் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு இரண்டரை வருட ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்களும் அடுத்த வருடம் நடுப்பகுதியில் உள்ளன.
மாகாண சபை ஆட்சிகளின் ஆயுட்காலம் முடிவடைந்து பல வருடங்களாகின்றன. ஆயினும், மாகாணத்தை ஆட்சி செய்வதற்கான அரசியல் அதிகார சபையை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதனால், வெறுமனே ஆளுநர்களினால் ஆட்டுவிக்கப்படும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாக இது மாறியிருக்கின்றது.
இதேவேளை நாட்டிலுள்ள எல்லா உள்ளுராட்சி சபைகளும் தமது நான்கு வருட ஆட்சிக் காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. எனவே இவற்றுக்கான தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது.
மாகாண சபை முறைமையை ஒரு வெள்ளை யானை என்றுதான் பெருந்தேசிய அரசியல்வாதிகள் கூறி வருகின்றார்கள். இச் சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட, மாகாண சபைகள் மத்திய அரசிற்கு தலையிடியை கூட்டி விடுகின்ற கட்டமைப்பாகவே இருந்து வந்திருக்கின்றன.
இப்போது மாகாண சபை தேர்தலை நடத்த முற்பட்டால் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்கள் பற்றி தமிழர்கள் என்ன கோரிக்கையை முன்வைப்பார்கள்? அதில் இந்தியா என்ன வகிபாகத்தை எடுக்கும்? என்ற உள்ளச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.
இந்தப் பின்னணியில், தேர்தல் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது எல்லை நிர்ணயம் செய்தால் நல்லது போன்ற கற்பிதங்களைக் கூறி மாகாண சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால், உள்ளுராட்சி சபை தேர்தல்களைப் பொறுத்தமட்டில், அவற்றின் ஆயுட்காலத்தை மேலும் சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்க சட்ட ஏற்பாடுகள் உள்ளன. ஆயினும் மாகாண சபை தேர்தலைப் போல ஆண்டாண்டுகாலமாக இழுத்தடிக்க முடியாது.
ஆகவே, மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற குரல்கள் சற்று ஓய்ந்திருக்கின்ற நிலையில், இப்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பற்றி பேசப்படுகின்றது. அடுத்த வருடம் பெப்ரவரியில் அல்லது அதற்குக் கிட்டிய திகதியொன்றில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஏதாவது தேர்தல் ஒன்று இடம்பெற்றால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் தனியொரு அரசியல்வாதியில் தங்கியிருக்கும் அணிகளின் வெற்றி, தோல்விகள் எப்படி அமையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
2019 இல் இருந்து இன்று வரை, இலங்கையில் எந்தவொரு முறைமையும் சரிவர இயங்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா அலைகள், பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் என காலங்கள் எந்தப் பயனுமற்று கழிந்து கொண்டிருக்கின்றன.
சாதாரணமான காலங்களிலேயே ஒரு மந்தமான, சுறுசுறுப்பற்ற அரசியலைச் செய்து பழக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், கடந்த மூன்று நான்கு வருடங்களாக இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் .
மஹிந்தவையா, சஜித்தையா, ரணிலையா ஆதரிப்பது என்ற குழப்பத்திலேயே சிலரது காலம் கழிந்து விட்டது. சில முஸ்லிம் தலைவர்களுக்கு கட்சியில் உள்ளவர்களிடையே பஞ்சாயத்து நடத்துவதே வேலையாகி இருக்கின்றது. சிலர் அமைச்சுப் பதவிகள், வெகுமதிகளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்குப் பிறகு நமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை தாமாகவே உணர்ந்து விட்டார்கள். எனவே எப்பாடுபட்டாவது அதை தக்க வைப்பது, அல்லது கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஒதுங்கிக் கொள்வது என்ற இரண்டில் ஒரு தெரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காண முடிகின்றது.
கடந்த தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பொதுவாக சரிவடைந்திருந்தன. 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான வாக்குககளும் இறங்குமுகமாக இருந்தது. இதற்கான காரண காரியங்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் தெரியும்,
மக்களை மறந்த அரசியலைச் செய்தமையும் முஸ்லிம் சமூகத்தை தொடர்ச்சியாக தவணை முறையில் பேய்க்காட்டி வந்தமையுமே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
பிரதான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு கீழுள்ள இரண்டாம் - மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், எடுபிடிகள், இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், பேஸ்புக் போராளிகளும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாகியுள்ளார்கள்.
இது யாருக்கும் தெரியாத பரம ரகசியமல்ல. இந்த யதார்த்தத்தை, பின்புலத்தைக் கூட புரிந்து கொண்டு, தம்மை சுதாகரித்துக் கொண்டு செயற்படக் கூட ஆற்றல் அற்றவர்கள், அரசியல் தலைவர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதி அற்றவர்களாவர்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் தமது கோட்டைகளை மறுசீரமைத்து இராஜியங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான பணிகளை அவர்கள் செய்திருக்க வேண்டும். தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வது ஒருபுறமிருக்க முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் இருக்கின்றது.
இதில் முதலாவது விடயமானது இரண்டாவது விடயத்திலேயே தங்கியிருக்கின்றது. அதாவது மக்களுக்கான அரசியலைச் செய்வதன் ஊடாகவே நீண்டகாலம் தமது கோட்டைகளில் அவர்களால் கொடிநாட்ட முடியும்.
இந்த விவகாரத்தில் றவூப் ஹக்கீம். றிசாட் பதியுதீன், அதாவுல்லா என அனைத்து முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் எம்.பி.க்கள் ‘பெயில்' ஆகியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் எம்.பிக்களின் நிலையும் இதுதான்.
தேசிய அரசியலில் கோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ஷர்கள் மக்கள் மனங்களில் இருந்து தூரமானதை விட, முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லம் சமூகத்தின் மனங்களில் இருந்து அதிக தூரம் சென்று விட்டனர்.
எனவே அவர்கள் அடைந்த பெயிலை விட இவர்கள் மிக மோசமாக பெயில் அடைந்துள்ளனர்.
அரசியல் என்பது எல்லாக் காலத்திலும், அனைத்து களநிலைமைகளிலும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு தொழிலாகும். இதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் மறந்து செயற்படுவது ஒன்றும் புதிதல்ல.
தேர்தல் காலங்களில் உயிரோட்டமாக இருந்து விட்டு, அதற்குப் பின்னரான காலங்களில் அதிகாரக் கதிரைகளில் அப்படியே ஓர் அரசியல் ஜடத்தைப் போல இருந்து கொண்டு காலத்தைக் கடத்தி விடுவது பழகிப்போன சங்கதிதான்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், கொரோனா பொருளாதார நெருக்கடிகள் நமது வழக்கமான இயங்குநிலையை குறிப்பாக முஸ்லிம்களின் செயற்பாட்டை பாதித்தது.
ஆனால், மறுபுறுத்தில் இந்த சந்தர்ப்பங்களில் சமூகத்திற்கான அரசியலைச் செய்வதற்கான பல வாய்ப்புக்கள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக கொவிட் வைரஸ் பரவிய காலத்திலும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிச் சூழலிலும் மக்களுக்கு நெருக்கமாகச் சென்று சேவை செய்வதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் கிடைத்தன.
ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனச் சொல்லப்படுவோர் பெரும்பாலும், கொழும்பில் முடங்கிக் கிடந்தமையாலும், காலை வேளைகளில் நேரம்பிந்தி கண்விழித்தமையாலும் மக்களின் தொலைபேசி அழைப்புக்களை தட்டிக் கழித்தமையாலும், அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.
இதனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தால்தான் இதனைச் செய்து முடிக்க முடியும் என்ற நிலைமை மாறியிருக்கின்றது. எல்லாம் நடக்கின்றபடியே நடந்து கொண்டு போகும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தமது கல்லாப் பெட்டிகளில் மட்டும் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்றால், அப்படியொரு அரசியல் முறைமை நமக்குத் தேவைதானா?! என்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க தொடங்கியுள்ளதாக தெரிகின்றது.
இது இப்படியே தொடர்ந்தால், முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளைச் சார்ந்தியங்கும் அரசியல் அணிகள் அடுத்தடுத்த தேர்தல்களில் தமது கோட்டைகளை இழக்கும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் அதற்கான முதலாவது அக்கினிப் பரீட்சையாக அமையும் எனலாம்
இனிமேல் ராஜபக்ஷர்கள் குறிப்பாக கோட்டபாய அரசியலில் ஈடுபட முடியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்களை விட அதிகமாக, மக்கள் சார்பு அரசியல் தோல்வியுற்றது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் என்பதை மறக்க முடியாது.
இதனை மக்கள் சரியாக மனதில் வைத்து வாக்களித்தால் கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற தேர்தல் தோல்விகளை விட பலமான தோல்விகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் சந்திக்க நேரிடும்.
முஸ்லிம் அரசியலின் மகாராஜாக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பலர் தமது கோட்டைகளை, மட்டுமல்ல கோவணத்தையும் இழக்க வேண்டி ஏற்படலாம். (30.08.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago