Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 மார்ச் 15 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
“ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்பதே அதன் பெயராகும். வெளிநாட்டு சதியொன்றின் மூலமே தாம் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சதிக்குத் தலைமை தாங்கிய அந்த வெளிநாட்டுச் சக்தி எது என்பதை அவர் அதில் குறிப்பிடவில்லை.
அதேவேளை, தம்மையும் தமது அரசாங்கத்தையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அவர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை குறை கூறியிருக்கிறார். தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் முற்றாக சீரகுழைந்தமையே தமது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
அத்தோடு, தாம் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவிலேயே பதவிக்கு வந்ததாகவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று ஆறு மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையிலேயே அவர் தமது புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.
எனவே, அத்தேர்தலில் அவரது குடும்ப கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மக்களிடம் அனுதாபத்தைத் தேடிக் கொடுக்கும் முயற்சியாகப் பலர் இப்புத்தக வெளியீட்டைக் கருதுகின்றனர்.
குறிப்பாகத் தாம் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதை அதனால் தான் அவர் குறிப்பிடுகிறார் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சில விந்தையான கருத்துக்களும் இதில் அடங்கி இருக்கிறது.
தாம் பதவியிலிருந்து தூக்கி எறியப்படும் போது தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைந்து இருந்ததாக அவர் கூறுவதே அதிலும் மிகவும் விந்தையான கருத்தாகும்.
‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்திய குண்டுத் தாக்குதலை அடுத்து அப்போதைய அரசாங்கம் தேசியப் பாதுகாப்பையும் புலனாய்வு இயந்திரத்தையும் சீர் குழைத்தமையே அத்தாக்குதல்களுக்குக் காரணம் என்று பொதுஜன முன்னணியும் கோட்டாபயவும் கூறினர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் மிகப் பலமாக இருந்ததாகவும் கூறினர்.
அத்தாக்குதல் இடம்பெற்று ஆறு நாட்களில் கோட்டா, தாம் அதே ஆண்டு நடைபெறவிருந்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். அதனையடுத்து அவரும் அவரது கட்சியினரும் பயங்கரவாத தாக்குதலைப் பாவித்து முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் இனவாதத்தைத் தூண்டியும் மஹிந்தவும் கோட்டாவும் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் என்றும் மக்களை உசுப்பேற்றி ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.
தாம் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்குக் காரணம் தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைத்தது என்று இப்போது கோட்டா கூறுவதாக இருந்தால், அப்போது பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர். அவரே பாதுகாப்புப் படைகளின் பிரதம கட்டளைத் தளபதியும் ஆவார்.
அவ்வாறாயின், தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைந்தமைக்கு ஜனாதிபதியாக இருந்த கோட்டாவே தான் பொறுப்பை ஏற்க வேண்டும். பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் அதற்காகக் குறை கூறமுடியாது.
அவர்கள் களத்துக்குப் போகக் கூடியவர்களாயினும் இறுதிப் பொறுப்பை ஜனாதிபதியே தான் ஏற்க வேண்டும்.
அவ்வாறில்லை என்றால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றிக்கும் மஹிந்த உரிமை கோர முடியாது.
அவ்வுரிமையை முழுமையாகவே அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்செகாவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் 2022 ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தை பலத்தை உபயோகித்து அடக்காதமையே அன்று தமக்கு நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்படக் காரணம் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
ஆனால், அவர்கள் அதனைச் செய்யாவிட்டால் முப்படைகளின் பிரதம கட்டளைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி அதற்கு உத்தரவைப் பிறப்பித்திருக்க வேண்டும்.
ஒரு வருடத்துக்கு முன்னர் அதாவது 2021இல் ஆசிரியர்கள் ஆரப்பாட்டம் நடத்தியபோது, அவர்களைத் தாக்கி ஆர்ப்பாட்டத்தை அடக்க வேண்டும் என்று அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.
ஆனால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சந்தேகிக்கப்படுவோர் மீது வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தாமும் அந்தப் பட்டியலில் சேரக்கூடும் என்ற அச்சத்தில் கோட்டா இருந்துள்ளார்.
எனவே, ஆசிரியர்களை தாக்குவதைக் கோட்டா விரும்பவில்லை. எனக்கு வெளிநாடொன்றுக்காவது போக முடியாத நிலையை ஏற்படுத்தப் போகிறீரா என்று அப்போது கோட்டா சரத் வீரசேகரவிடம் கேட்டதாக அந்நாட்களில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.
ஜனாதிபதி பதவிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல அவர் உத்தேசித்திருந்தமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே கோட்டா அன்று முதலில் மாலைத்தீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்று அங்கிருந்தே தமது இராஜினாமாக் கடிதத்தை சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.
அந்த ஆர்ப்பாட்டம் வெளிநாட்டுச் சதியின் காரணமாக ஏற்பட்டதா அல்லது பொருளாதார சுமையைத் தாங்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்தார்களா என்பதைக் கோட்டா இன்னமும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அவர் அரசியல் குழந்தை என்றே கூற வேண்டும். அவர் 2019 ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு மாதத்தில் அவர் பெருமளவில் வரிகளைக் குறைத்தார்.
அதனால் அரச வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான பணத்தை அரசாங்கம் இழந்தது. இதனையடுத்து, கொவிட் தொற்று நாட்டை தாக்கியதில் கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அது இலங்கை நாணயத்தின் பெறுமதியை மேலும் குறைத்தது. இதற்கிடையே கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாக்கவென அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்தது.
அதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படவே வெளிநாட்டுச் செலாவணியைச் செலவழித்தே உணவுப் ப�ொருட்களை இறக்குமதி செய்ய நேரிட்டது.
இவ்வாறு வெளிநாட்டுச் செலாவணித் தொகை கரைந்து கொண்டு போகவே ரூபாவின் பெறுமதி முன்னொருபோதும் இல்லாதவாறு குறைந்தது. ரூபாவின் பெறுமதியைக் குறையாது தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் கையிருப்பிலிருந்த டொலர்களை சந்தையில் கொட்டியது.
அது தற்காலிக ஆறுதலை வழங்கினாலும் கையிருப்பில் டொலர் இல்லாத காரணத்தால் சில நாட்களில் ரூபாவின் பெறுமதி மேலும் குறைந்தது.
இறக்குமதி பொருட்களின் விலையும் ஏறியது. பொருட்களை இறக்குமதி செய்யக் கையிருப்பில் டொலரும் இல்லாமல் போய்விட்டது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அது மின்சாரம் உள்ளிட்ட சகல துறைகளையும் பாதித்தது. விலைவாசி வானலவாக உயர்ந்தது.
எரிபொருட்களுக்காகவும் எரிவாயுவுக்காகவும் மக்கள் நாட்கணக்கில் கியூ வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெறிகொண்டு கிளர்ந்தெழுந்தனர். அவர்கள் 2022 ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் அலுவலகத்தின் முன்னால் நிரந்தரமாகத் தங்கியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒரு மாத காலமாக அப்போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து வந்த மக்கள் ஆயிரக் கணக்கில் அதில் பங்குபற்றினர்.
ஆனால், மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஆரப்பாட்டக்காரர்களை தாக்கியதையடுத்து, நாடெங்கிலும் வன்செயல்கள் வெடித்தன. அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன.
அன்றே பிரதமர் பதவி விலக வேண்டிய நிலைமை உருவாகியது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அவரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்தார். ஜூலை 9ஆம் திகதி நாடெங்கிலும் இருந்து மக்கள் இலட்சக் கணக்கில் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் கோட்டா தப்பிச் செல்ல நேரிட்டது.
இந்நிகழ்ச்சித் தொடரில் எந்த இடத்தில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட்டன என்பதைக் கோட்டா தமது புத்தகத்தில் குறிப்பிடவில்லை. எனவே இது சதியல்ல, இது நிர்வாகத் திறமையற்ற ஆட்சியின் விளைவாகும்.
13.03.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago