Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 06 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஐயூப்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, அவர் மீண்டும் கூட்டினால், அதன் மூலம், தமிழர்கள் தமிழீழத்தை அடைய முடியுமா? அவ்வாறானதொரு கருத்து, அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது முன்வைக்கப்பட்டது. தற்போது நாடு, அரசமைப்பு நெருக்கடியொன்றை எதிர்நோக்கி இருப்பதால், அந்த நிலைமையை மாற்றி, சீர்செய்வதற்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
அதேவேளை, “ஜனாதிபதி நாடாளுமன்றத்தை, சட்டப்படி கலைத்த நாளிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கலைப்பு செல்லுபடி அற்றதாகி விட்டுள்ளது” எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். அதன் மூலம், பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என்பதே, அவரது வாதமாகியது.
சுமந்திரன், இந்த வாதத்தை முன்வைத்திருந்த நிலையில், அரசாட்சி தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஏப்ரல் 24ஆம் திகதி, தம்மை ஆதரிக்கும் மூத்த பிக்குகளை, தமது அலுவலகத்துக்கு ஜனாதிபதி அழைத்து இருந்தார். அப்போது, அங்கிருந்த சகல பிக்குகளும், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கருத்தைக் கண்டித்தனர். சிலர், அதைப் பிரிவினைவாதக் கருத்தாக வர்ணித்தனர். சிங்கள மக்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார் எனவும் ஜனாதிபதியும் சில பிக்குகளும் அங்கு குறிப்பிட்டனர்.
நாட்டில், அரசியல் நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் சரியானதே. ஜனாதிபதி, மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்ததனால், அதிலிருந்து மூன்று மாதத்துக்குள், அதாவது, ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதற்காக, நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை, வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். அதற்குள், மார்ச் 11ஆம் திகதி. இலங்கையில் முதலாவது கொவிட்-19 தொற்றாளரைப் பற்றித் தெரியவந்தது.
அதையடுத்து, தொடர்ந்து ஒவ்வொரு நாளும், கொவிட்-19 தொற்றாளர்களைப் பற்றிய செய்திகள் வரலாயின. அந்தநிலையில், சட்டப்படி தமக்குத் தேவையான காலஅவகாசம் கிடைக்கவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையகம் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்றும் அதற்கான திகதியைப் பின்னர் அறிவிப்பதாகவும் கூறியது.
பின்னர், ஏப்ரல் 20ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகம், தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதென முடிவு செய்தது. இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தை ஜூன் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதாவது, வசதியான ஒரு நாளில் தேர்தலை நடத்தி, அதன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டலாம் என்பதே, அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. அவ்வாறெனில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்துக்குள், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று அரசமைப்பில் குறிப்பிட்டு இருக்கத் தேவையில்லை. அரசமைப்பில் இருப்பதைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்றால், அரசமைப்பே தேவையில்லை.
நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி, பொதுத் தேர்தலுக்கும் ஒரு நாளைக் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, தேர்தல் ஆணையகம் தேர்தலை நடத்தியிருந்தால், ஒரு சிக்கலும் ஏற்பட்டு இருக்காது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஜனாதிபதி குறிப்பிட்டிருந்த நாளில், தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்குப் புதிய திகதியைக் குறித்தது, அதுதான் ஜூன் 20.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் படியே, தேர்தல் ஆணையகம் அந்நாளைத் தேர்தலுக்காக ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசமைப்பின்படி தேர்தலுக்கான திகதி ஜூன் 2ஆம் திகதிக்கு முந்திய திகதியொன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஜூன் 2ஆம் திகதி, சட்டப்படி புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டமானது, அரசமைப்புக்குக் கீழ்ப்பட்ட சட்டமாகும். அச்சட்டத்துக்கு அரசமைப்பை மீற முடியாது. எனவே, தேர்தல் ஆணையகம் அரசமைப்புக்கு முரணாகவே, ஜூன் 20ஆம் திகதி, தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது என வாதிடலாம்.
அந்த அடிப்படையிலேயே. முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகன் சரித்த மைத்திரி குணரத்ன, தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு, ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதென அறிவிக்கும் வரை, ஜூன் 2ஆம் திகதி, புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது போகலாம் என்ற சந்தேக நிலையே இருந்தது. ஆனால், தேர்தலுக்கான புதிய திகதி நிர்ணயிக்கப்பட்ட உடன், ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
எனவே, ஜூன் 2ஆம் திகதி, புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி செல்லுபடியற்றதாகி விட்டது என்பதே சுமந்திரனின் வாதமாகும்.
பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டி, வரப்போகும் அரசமைப்பு நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, இந்த வாதம் பலப்படுத்தியது. எனவேதான், சிலர் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான கோரிக்கையை, பிரிவினைவாதக் கோரிக்கையாக வர்ணிக்க முற்பட்டனர்.
அதேவேளை, அவ்வாறு வர்ணிப்பதன் மூலம், பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டுக்கான, பெரும்பான்மை மக்களின் ஆதரவை அதிகரித்துக் கொள்வதும் மற்றொரு நோக்கமாகும்.
இந்த வருடத்துக்காக வரவு - செலவுத் திட்டமொன்று நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இவ்வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரைக்குமான அரச செலவுகளுக்காக இடைக்கால வரவு - செலவுத் திட்டமொன்று, கடந்தாண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனவே, ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர், அரச செலவுக்காக, அரச ஒருங்கிணைந்த (திரட்டிய) நிதியிலிருந்து, ஜனாதிபதி பணத்தைப் பெற முடியாது என்றும் சில எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டியே, பணத்துக்கான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், தாம் அதை எதிர்க்கப் போவதில்லை என்றும் அக்கட்சிகள் கூறுகின்றன.
ஆனால், அரசாங்கம் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்கிறது. எனினும், எதிர்க்கட்சிகளின் நெருக்குவாரம் அதிகரிக்கவே, ஜனாதிபதி அதை எதிர்கொள்வதற்காக, மகா சங்கத்தினரைக் கூட்டி, அவர்கள் மூலம் மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப முயன்றார். அதேவேளை, திங்கட்கிழமை (04), பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பழைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்து, கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்தார்.
மக்கள் விடுதலை முன்னணியும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியும் அதைப் பகிஷ்கரிக்கவே, அந்தக் கூட்டத்துக்கு, 2010ஆம் ஆண்டு தெரிவான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையும் பிரதமர் அழைத்தார்.
ஐக்கிய தேசிய கட்சி, முதலில் அக்கூட்டத்துக்குப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், அரசாங்கத்தை எதிர்க்கும் மக்கள், தம்மிடமிருந்து மேலும் விலகலாம் என்ற பயத்தினாலோ என்னவோ, 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையும் அழைப்பதை ஏற்க முடியாது என்று கூறி, அக்கட்சியும் பின்னர் பிரதமரின் கூட்டத்தைப் பகிஷ்கரித்தது.
பழைய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்று அடம்பிடித்து வந்த அரசாங்கம், இந்தக் கூட்டத்தைக் கூட்டியதன் மூலம், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் கூறலாம்.
சரியோ பிழையோ, பழைய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் வாதங்கள், சட்ட ரீதியாக ஆராய வேண்டிய பாரதுரத்தன்மையுள்ள விடயங்களாக இருக்கின்றன. ஆனால், அந்த விடயம் தொடர்பாக, அரச தரப்பினர் முன்வைக்கும் வாதங்கள், வெறும் அரசியல் விதண்டாவாதங்களாகவே காணப்படுகின்றன. உதாரணமாக, “கலைக்கப்பட்ட நாடாளுமன்றமொன்றை மீண்டும் கூட்ட முடியாது, அது இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்புவதற்குச் சமன்” என, அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருந்தார். ஆனால், அவசர நிலைமைகளில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டலாம் என, அரசமைப்பின் 70ஆவது அத்தியாயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறும் எதிர்க்கட்சியினரின் நோக்கம், அவர்களுக்கு அதில் இருந்த பெரும்பான்மையைப் பாவித்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பறிப்பதாகும் என்றும், பெரும்பான்மையைப் பாவித்து, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றுவதாகும் என்றும் அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ஐ.தே.க விரும்பியே, ஆட்சியை பொதுஜன பெரமுனவிடம் கையளித்தது.
ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் முன், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையால், ஓய்வூதியத்தை இழந்த எம்.பிக்களின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதே, எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்றும் அரச தரப்பினர் கூறுகிறார்கள்.
அவ்வாறாயின், கடந்த நவம்பர் மாதம், அவர்கள் ஏன் ஆட்சி அதிகாரத்தை, பொதுஜன பெரமுனவிடம் கையளித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, வேண்டும் என்றால், ஜனாதிபதி தற்போதைய அவசர நிலையைக் குறிப்பிட்டு, பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டி, அரசியல் நெருக்கடியைத் தவிர்த்து, கொவிட்-19 தொற்று தடுப்புக்குத் தேவையான புதிய சட்டங்களையும் நிதி தொடர்பான சட்டப் பிரமாணங்களையும் நிறைவேற்றிக் கொண்டு, ஒரு சில நாள்களில் மீண்டும் நாடாளுமன்றம் தாமாகக் கலையும் வகையில், அவசரநிலை முடிந்துவிட்டது என அறிவிக்கலாம். அப்போதும், ஓய்வூதியத்தை இழந்தவர்கள் எந்த நன்மையையும் அடையப் போவதில்லை.
“கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, ஒரு மீற்றர் இடைவெளி விட்டு ஆசனங்களை வைக்க வேண்டும் என்பதால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதாக இருந்தால், பல கிலோமீற்றர் நீளமான அறையொன்று தேவைப்படும்” என, அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியிருந்தார். ஆனால், பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமன்றி, அதற்கு முந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையும் பிரதமர் தமது கூட்டத்துக்கு அழைத்து இருந்தார்.
ஆனால், ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர், ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஜனாதிபதி நிதியைப் பெற முடியாது என்று, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம், பிழையானது என்றே தெரிகிறது.
அரசமைப்பின் 150ஆவது அத்தியாயத்தின்படி, “நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட முன்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கின்ற விடத்து, நாடாளுமன்றம் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தாலொழிய, புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கென நிர்ணயிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்கள் கொண்ட ஒரு காலப்பகுதி முடிவடையும் வரை, பகிரங்க சேவைகளுக்கு அவசியமானவை என ஜனாதிபதி கருதக்கூடிய அத்தகைய பணத் தொகைகளைத் திரட்டு நிதியத்திலிருந்து வழங்குவதற்கும் செலவிடுவதற்கும் ஜனாதிபதி அதிகாரமளிக்கலாம்”
உண்மையிலேயே, பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி, தற்போதைய அரசமைப்பு நெருக்கடியைத் தவிர்க்கலாம். கொரோனா வைரஸ் தொற்று, உண்மையிலேயே அதற்கான அவசர நிலையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், தற்போது இந்த விடயம் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago