2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

காஷ்மீரும், கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதமும்

Editorial   / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர், இந்திய துணைக்கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். 1947ல் இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இது இருந்து வருகிறது.  

இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக காஷ்மீரை தங்கள் சொந்த பிரதேசமாக உரிமை கோரி வருகின்றன. இரண்டு நாடுகளுக்கிடையிலான இந்த முரண்பாடு பல மோதல்களுக்கு வழிவகுத்தது. 

காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. அரசியல் நோக்கங்களுக்காக காஷ்மீரில் விதைக்கப்பட்டுள்ள இந்த வன்முறை கலாசாரம்  பிராந்தியத்தில் அமைதியின்மையையும்,  அழிவுகளையும்  ஏற்படுத்தி வருகிறது.

காஷ்மீர் மோதலின் வரலாறு 1947 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடங்குகிறது.

 

அன்றைய ஜம்மு மற்றும் காஷ்மீர் சமஸ்தானத்திற்கு,  புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு நாடுகளில் ஒன்றுடன் சேர அல்லது சுதந்திரமாக இருக்க விருப்பம் வழங்கப்பட்டது. அப்போதைய காஷ்மீா் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்த, மகாராஜா ஹரி சிங், ஆரம்பத்தில் சுதந்திரமாக இருப்பதை தேர்ந்தெடுத்தார். இருப்பினும், பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக, அவர் இந்தியாவுடன் சேர ஒப்புக்கொண்டு, இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

 

1947ல் இடம்பெற்ற  இந்தியப் பிரிவினையின் "முடிவடையாத நிகழ்ச்சி நிரல் தான் காஷ்மீர்" என்பது பாகிஸ்தானால் பரப்பப்பட்டு வரும் முக்கிய பொய்களில் ஒன்றாகும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.  முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட  ஜம்மு காஷ்மீர் மாநிலம், அப்போது ஒரு இந்து மன்னரால் ஆளப்பட்டு வந்தது.  பாகிஸ்தான், முஸ்லிம்களின் தாயகமாக பிரிக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானுடன் காஷ்மீா்  இணைந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உரிமைக் கோரி வருகிறது.

அது மட்டுமல்லாமல், காஷ்மீர் பிரச்சினையை ஒரு மத ரீதியிலான பிரச்சினையாக பாகிஸ்தான் வெளியுலகிற்கு காட்டவும் முயற்சி செய்து வருகிறது. காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள்  இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற கதையை பாகிஸ்தான் பரப்பி வருகிறது.  காஷ்மீரின் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்கள் என்பது உண்மையாக இருந்த போதிலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உருவாகியிருப்பது  ஒரு பிராந்திய பிரச்சனையாகவே பாா்க்கப்பட வேண்டும்.

காஷ்மீரின் மக்கள் தொகை வேறுபாடுகளைக் கொண்டது, பல இன மற்றும் மத குழுக்களை உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள், ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களும் அங்கு வாழ்ந்து வருகின்றனா். 

இந்த பன்முகத்தன்மையே பிராந்தியத்தின் நிகழ்காலத்தை வடிவமைத்துள்ளது. பாகிஸ்தானை போலல்லாது, இந்திய அரசியலமைப்பு மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.  மேலும் இந்திய அரசியலிலும் நிா்வாகத்திலும் முஸ்லிம்களின் வகிபாகம் முக்கியமானதாக இருக்கிறது.  இந்திய அரசில் பல உயர்மட்ட பதவிகளை வகித்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. 

ஆனால், பாகிஸ்தானின் நிலையோ இதற்கு நேரெதிரானது. சிறுபான்மை இனங்களின் மத உரிமைகள் தொடா்பான பேச்சுகளுக்கே அங்கு இடமில்லை. அந்த நாட்டிலுள்ள மத சிறுபான்மையினா் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனா். சொந்த இனமான பங்காளி முஸ்லிம்களை மொழி ரீதியாக பாகுபாடு காட்டி துவம்சம் செய்து கொடுமைப் படுத்திய வரலாறு பாகிஸ்தானுக்கு இருக்கிறது. 

தனது ஆளுகையின் கீழ் இருந்த கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம்கள் மீது பாகிஸ்தான் அரசு அடக்குமுறையை பிரயோகித்ததன் காரணமாக அந்த மக்கள் பங்களாதேஷ் என்ற  தனி நாட்டை உருவாக்கிக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம்கள் மீது பாகிஸ்தான் அரசு திணித்த அடக்குமுறைகளையும், கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் யாராலும் மறந்து விட முடியாது.  அன்று, கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம் மக்களின் மொழியுரிமையை மறுத்து அவா்கள்  மீது அராஜகத்தையும், அரச பயங்கரவாதத்தையும்  கட்டவிழ்த்து விட்ட பாகிஸ்தான்,  இன்று காஷ்மீா் முஸ்லிம்களுக்காக மத அடையாளத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு நீலிக் கண்ணீா் வடித்துக்கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது.

காஷ்மீா் விவகாரம் தொடா்பாக இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையிலான இந்த முரண்பாடு பல ஆண்டுகளாக தொடா்ந்து வரும் நிலையில்,  கடந்த நான்கு  தசாப்தங்களாக இந்த முரண்பாடு வன்முறையாக மாறியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.  இரு நாடுகளும் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், தூண்டுவதாகவும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வந்த போதிலும், காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தானின் வகிபாகம் முக்கியமானதாக இருக்கிறது.

பாகிஸ்தான் தனது சொந்த மூலோபாய அரசியல் நலன்களை மேம்படுத்துவதற்காக காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, ஆதரித்து வருவதாக  அந்த நாட்டின் மீது நீண்ட காலமாக ஒரு குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 1980 களில், பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (Inter-Services Intelligence - ISI) காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்கு  தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தும்,  ஆயுதங்கள் வழங்கியும் உதவியது. 

பாகிஸ்தானின் பங்கபளிப்புடன், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளின் அனுசரணையுடன் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட  மத தீவிரவாதத்தை, பாகிஸ்தான் முற்று முழுதாக காஷ்மீா் விவகாரத்திலும்  பயன்படுத்தியது. 

கடந்த காலங்களில், பாகிஸ்தானின் பெஷாவா் நகரை மையமாக வைத்து போஷித்து வளா்க்கப்பட்ட  மத தீவிரவாதம், பாகிஸ்தானின் பிராந்திய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பாகிஸ்தானால் தாலாட்டி வளா்க்கப்பட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தினர்.  இதில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக  2001 ம் ஆண்டு இடம்பெற்ற  இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை குறித்துக் காட்டலாம்.  இது கிட்டத்தட்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முழு அளவிலான முறுகளுக்கும், பாரிய விரிசலுக்கும்  வழிவகுத்தது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba - LeT) தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது.

காஷ்மீரில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed- JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களையும் ஆதரவையும் பாகிஸ்தான் வழங்கி வருவதாக இந்தியா தொடா்ந்தும் குற்றம் சாட்டி வருகிறது. 2019ம் ஆண்டு  40 இந்திய பாதுகாப்புப் படை  வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதல் உட்பட, இந்திய பாதுகாப்புப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் இடம்பெற்ற  பல தாக்குதல்களுக்கு இந்த தீவிரவாத குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன.

இருந்த போதிலும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும்  குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தொடா்ந்தும் மறுத்து வருகிறது. என்றபோதிலும்,  காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதிலும் தூண்டுவதிலும் அதன் ஈடுபாட்டைக் காட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் இந்திய தரப்பால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் உளவுத்துறை இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்து செயற்படுவது பலமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும், காஷ்மீரில் நடந்து வரும்  வன்முறைகளில்  பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களின் பங்களிப்பு தொடா்பான முறைப்பாட்டை  ஐக்கிய நாடுகள் சபை வரை இந்தியா கொண்டு சென்றது. பாகிஸ்தானின் பயங்கரவாத சக்திகளுக்கு சாா்பாக சீனா ஐ.நா சபையில் குரல் கொடுத்தது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதிலும் தூண்டுவதிலும் பாகிஸ்தானின் தொடரான ஈடுபாடு, இந்தியாவின் இறையாண்மை மட்டுமல்லாது, பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுவதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் மற்றும் பாதுகாப்புக்கும்  அச்சுறுத்தலாக இருப்பதாக  இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய செயற்பாடுகள் பிராந்தியத்தில் அர்த்தமுள்ள தீர்வு முயற்சிகளைத் தடுப்பதோடு, பிராந்தியத்தில் வன்முறையையும் மற்றும் உறுதியற்ற தன்மையையும் நிலைநிறுத்தியுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தான் கொண்டுள்ள பங்கு, காஷ்மீர் மக்களுக்கு பெரும் பாதிப்பையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில்  அமைதியான தீர்வுக்கான எந்த முன்னேற்றத்தையும் இந்த செயற்பாடு தடுக்கிறது. 

காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படுவதற்கு, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் செயற்பாட்டை பாகிஸ்தான் நிறுத்திவிட்டு, இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

எவ்வாறாயினும், இந்த பயங்கரவாத குழுக்களுடன் பாகிஸ்தானுக்குள்ள  நட்பு சர்வதேச அளவில்  ஆய்வுக்கு உட்பட்டும் இருக்கிறது. பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக செயற்படும் அமைப்பான Financial Action Task Force (FATF), பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பணமோசடி  முயற்சிகள் குறித்த செயற்பாடுகளை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானை அதன் "சாம்பல் பட்டியலில்" பலமுறை சேர்த்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் காட்டும் ஆதரவு முற்றிலும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது. இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உற்பத்தியாகும் சிந்து நதி  உட்பட இயற்கை வளங்கள் மீதான ஆா்வத்தையும், சொந்த மூலோபாய அரசியல் நலன்களையுமே பாகிஸ்தான் கொண்டுள்ளது.

காஷ்மீரின் இந்திய நிர்வாகப் பகுதியில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருந்தாலும், இப்பகுதியில் குறிப்பிடத்தக்க இந்து மற்றும் பௌத்த மக்கள் வாழ்கின்றனா். சிறுபான்மை சமூகத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவது உட்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.

இருப்பினும், காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் பிரிவினைவாதத்தை ஆதரிப்பதில்லை, 2019 இந்தியப் பொதுத் தேர்தல்களின் போது, இப்பகுதியில் வாக்களிப்பு விகிதம் 40% க்கும் அதிகமாக இருந்ததை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.  இது இந்தியாவின் பிற பகுதிகளோடு ஒப்பிடும் போது சிறந்த மாற்றமாக கருதப்படுகிறது. இந்திய ஜனநாயகம் மற்றும் ஆட்சியில் பங்கேற்பதில் ஆா்வம் கொண்ட  மக்கள் கணிசமான பகுதியினர் காஷ்மீரில் இருப்பதை இது குறிக்கிறது.

காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டும் செயற்பாடு, பிராந்தியத்தின் அரசியலில் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. பிரிவினைவாத, தீவிரவாத இயக்கங்களைக் கையாள்வதில் இந்திய அரசாங்கம் அதன் கடுமையான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க இராணுவப் பலத்தைப் பயன்படுத்தியதற்காக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்ததோடு மற்றும் சில காஷ்மீரிகளிடையே இந்திய எதிர்ப்பு உணர்வை தூண்டுவதற்கு காரணமாகியும் இருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினை ஒரு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு அமைதியான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தேவை, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் தவறான செயற்பாடுகளும், தவறான கதையாடல்களும் பதற்றங்களை அதிகரிக்கவும், ஒரு தீர்வை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கவுமே உதவும்.  நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஒன்றின் மூலமே காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .