Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜூலை 12 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இல. அதிரன்
மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தல், தவித்த முயல் அடித்தல், காற்றுள்ளபோது தூற்றல், தனக்கு வந்தால்தான் தலைவலியும் காய்ச்சலும், தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்னுதாம் இதெல்லாம் பழமொழிகள்தான். ஒன்றுக்கொன்று தொடர்பும் இல்லாதவைகள் தான்.
ஆனால், அண்மைய சம்பவங்களைப் பார்க்கும்போது இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இலங்கையின் இனப்பிரச்சினையும் வடக்கு கிழக்கும், சிறுபான்மை மக்களின் நிலைகளும் இவை எல்லாவற்றுக்கும் பொருத்தமானதுதான்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் கடந்த புதன்கிழமை (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது “சில தமிழ் அரசியல் கைதிகள், கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் பல தமிழ் சகோதரர்கள் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அக்கருத்து வரவேற்கத்தக்கதொன்று. தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானது. ஆதரவான குரல் என்று குறிப்பிட்டளவு தமிழர்கள் மகிழ்ந்தாலும், இது உண்மையான கருத்து தானா, தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையால் வந்ததா என்று நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் அதன் தொடர்ச்சியாகச் சில விடயங்கள் நடைபெற்றுவிடும். அதில் முக்கியானது அவருடைய மாவட்டத்தின் கல்முனை தமிழ்ப் பிரிவு விவகாரம்.
அவருடைய கருத்து உண்மையில், பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பத்தியுதீனுடைய விடுதலையை நோக்காகக் கொண்டதே தவிர, தமிழ் மக்கள் மீதான அக்கறை கொண்டதல்ல என்பது இதில் முக்கியமானது. இதற்குத்தான், ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்’ என்று சொல்வார்கள்.
ஒன்றை அனுபவிக்கும் போது மட்டுமே, அதனால் ஏற்படுகின்ற வலியை நாம் உணர முடியும். இலங்கையின் வரலாற்றில் காலங்காலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவாகவே கை உயர்த்திய தரப்பாக இருக்கின்ற முஸ்லிம் தரப்பு, இப்போது தம்முடையவர்களுக்கெதிராக அது திரும்பியிருக்கின்றபோது, அதனை வேண்டாமென்று ஆதரவளிக்கின்ற தன்மை இருக்கின்றது. காற்றுள்ளபோதெல்லாம் தூற்றிக் கொண்டே வாழ்ந்து, காலம் கடந்தபின் ஞானம் வந்தென்ன செய்வதென்பதுதான் இதற்குப் பதில். ஆனாலும் காலம் கடக்கும் போதும் அதன் பயனை அனுபவிக்கவே, துடிக்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாகவும் கொள்ளலாம்.
நாட்டின் உயரிய சபையில் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது போன்ற ஒரு மாயையைக் காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் நடைபெறும் ஒருகோரமுகத்துடனான அடக்குமுறையை எவ்வாறு நாம் பார்க்கலாம் என்பதே, இக் கட்டுரையின் கேள்வி.
காலங்காலமாகப் பற்றிஎரிந்து கொண்டிருக்கும் கல்முனைத் தமிழ்ப்பிரிவு உப பிரதேச செயலகம், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்புதான் தரம் இறக்கப்பட்டது. தரம் உயர்த்துவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்துக்குக் கை உயர்த்தி பெற்றுக் கொண்ட வெகுமதிகளில் ஒன்றாக அது இருந்தது.
சிறுபான்மை மக்கள் தங்களுடைய உரிமைகளை தமக்குள்ளேயேயே பகிர்ந்து கொள்ளத்தயாரில்லாத நிலைமைக்கு கல்முனை தமிழ்ப்பிரிவு நல்லதோர் உதாரணமாகும். நிலத் தொடர்பில்லாத பிரதேச செயலகங்கள், நிலத் தொடர்பில்லாத கல்வி வலயங்கள் கிழக்கில் காணப்படுகின்றன. நிலத்தொடர்பில்லாத மாவட்டம், மாகாணம் கூட உருவாகலாம் என்று முயற்சிகள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் இருந்து வந்ததை, இருப்பதை அனுமதிப்பதில் சிரமம் இருக்கிறது. அதற்குக் கல்முனை நல்ல சாட்சி.
நம்மவர்களுக்கு நன்கு தெரிந்த வாசகம், ‘அரசன் கொடுத்தாலும் மந்திரி கொடான்’; ‘கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரிதான் பிரச்சினை’ இது போன்றதுதான் கல்முனை தமிழ்ப் பிரிவு விவகாரம். அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தாலும் அதனைத் தடுப்பதற்கு அரசியல் இருக்கிறது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம், 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி, 1993ஆம் ஆண்டு முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதிவளம் அற்றதாக இயங்கும் இப்பிரதேச செயலகத்துக்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ தமிழர் அரசியலில், சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை, நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்ரர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக்குழப்பம் உள்ளிட்ட பல அதைக் குழப்பியடித்தன.
ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து, அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர், பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று. முஸ்லிம்களின் அரசியல் பலம் காரணமாக, நிகழ்கின்ற அடக்கு முறையான பல்வேறு செயற்பாடுகள் குறித்து, பல்வேறு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கல்முனை தமிழ்ப் பிரிவு 30 வருடங்களை தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள்; காலத்தையும் கடத்துகிறார்கள்; மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை.
அந்தவகையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் இவ்வாறான அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள், தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது.
நடைபெற்ற உண்ணாவிரதங்களும் அறிக்கைகளும் போராட்டங்களும், உத்தரவாதங்களும் இதுவரையில் எதையும் சாதித்துவிடவில்லை.
அதன் தொடர்ச்சியாகத்தான், கல்முனையில் கடந்த சில வாரங்களாக, காணி அபகரிப்புகள் தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. இது தொடர்பில், கல்முனை தமிழ் இளைஞர் சேனை என்ற அமைப்பு, தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களையும் இனவாத செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டு தடுக்கப்படுவதும், கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள பொதுக்காணிகள் ஏனையோரால் அபகரிக்க முயற்சிப்பதும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை மேலும் மேலும் வளர்க்கவே வழிகோலும்.இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளும் அரசாங்கமும் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்வங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி, மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்வெளிப்பாடு இன்னமும் இந்த விவகாரம் பற்றிக்கொண்டிருக்கிறது என்பதாகும்.
அடிக்கடி ஒரு பொறி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று வெளியில் பொது வெளியில் பேசிக்கொண்டு, உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு, கிழக்கில் தமிழ்- முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவாகும்.
இலங்கையில் இனப்பிரச்சினை உருவான வேளை சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இருதுருவங்களானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள்; முயற்சி செய்கிறார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற, முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப்பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்குவரும் என்பது நிறைவேற வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது இப்போதும் இருக்கின்ற கடந்த கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரை வார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டு தீராமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஓன்று கல்முனை தமிழ்ப்பிரிவு.
மக்களின் ஏமாற்றம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், தமிழ் அரசியல் கைதிகள் மீது ஏற்பட்ட கருணை தமிழ் மக்கள் மீதும் ஏற்பட வேண்டும். கல்முனை தமிழ்ப்பிரிவு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் என்றே நம்புவோம். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸினுடைய நாடாளுமன்ற உரையின் பயன் நப்பாசைதானா?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago