Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 31 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிணாமமடையாது காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் இயற்கையோடும் விலங்குகளோடும் இணைந்து வாழப் பழகி இருந்தான். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. நாகரிகமான வாழ்க்கை முறையும் நவீன தொழில்நுட்பங்களும் இயற்கைக்கும் சூழல் சமநிலைக்கும் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.
மத்திய மலை நாட்டில் காணப்படும் ஒரு சவாலான நிலைமைதான், குளவி மற்றும் சிறுத்தைகளின் ஊடுருவலும் அவற்றால் ஏற்படும் பேராபத்துகளும். தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காவதும் சிறுத்தைகளின் தேவையற்ற மரணங்களும் நாம் இன்று ஊடகங்களில் அடிக்கடி காணக்கூடிய செய்தியொன்றாக அமைகின்றது.
ஆரம்ப காலத்தை காட்டிலும் கடந்த சில வருடங்களிலேயே இந்த துரதிஷ்டவசமான நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. குளவிக்கொட்டால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இன்று கணிசமான அளவு அதிகரித்துள்ளது. பல்வேறு தோட்டங்களில் இப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், இன்றும் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை என்பதே தொழிலாளர்களின் உள்ளக்குமுறல் . தோட்டப்புறங்கள் பராமரிப்பின்றி காடுகளாக மாற்றம் பெறுவதாலும் மறுபுறம் காடுகள் அழிக்கப்பட்டு வர்த்தக நோக்கிலான முயற்சிகள் செய்யப்படுவதோடு சேனைப்பயிர்ச்செய்கை காரணமாகவும் இவ்வாறான ஆபத்தான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் இடம்பெயர்வும் ஊடுருவலும் இடம்பெறுகின்றன.
குளவி
தோட்டத் தொழிலாளர்களுக்கு இலகுவாக மற்றும் விரைவாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பூச்சியினமே குளவியாகும். இலங்கையில் நான்கு வகையான தேனீ இனங்கள் காணப்பட்டாலும், மலையக பகுதிகளில் அடையாளம் காணக்கூடிய வெள்ளை புள்ளிகளைக் கொண்ட விஷத்தன்மையுடைய தேனீ இனமே குளவி என்று அழைக்கப்படுகின்றது.
ஜனவரி, மார்ச், ஏப்ரல் காலங்களில் அதுவும் கடுமையான வறட்சியான காலங்களில்தான் குளவிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும். குளிர், மழைக்காலங்களில் கூடு கட்டுவதற்கான வாய்ப்பு குறைவு. குளவிகள் நாடு முழுவதும் சுற்றித் திரியும் என்பதால் இவைகளை அப்புறப்படுத்துவதும் இலகுவானதல்ல. ஊவா மாகாணங்களில் ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பூக்கும் பூக்களை தேடியும், அநுராதபுரம் பகுதிகளில் வேம்பு மற்றும் பூக்கள் பூக்கும் காலங்களிலும், தேயிலை மற்றும் இறப்பர் தளிர்களை நாடி வருடம் முழுவதும் குளவிகள் சுற்றி திரிகின்றன.
குளவிகளின் வாழிடமும் தொழிலாளர்களின் வேலைக்களமும் ஒன்று என்பதாலேயே அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகின்றனர். இதனால் தொண்டை, முகம், உதடுகள் வீக்கமடைவதோடு ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு, மூச்சுத்திணறல், தலைச்சுற்று மற்றும் உணர்விழப்பு ஏற்படுகின்றது. உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க முடியாமல் போவதால் விளைவுகள் வீரியம் அடைவதாலேயே மரணங்களும் ஏற்படுகின்றன.
விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பூச்சிகளால் பறிபோவது மலையகத்திலேயே அதிகம். உரிய நேரத்தில் முதலுதவி செய்ய முடியாமை, தோட்டத்திலிருந்து தொலை தூரத்தில் வைத்தியசாலை அமைந்துள்ளமை மற்றும் தோட்ட வைத்தியசாலை பெயரளவில் மாத்திரம் இயங்குகின்றமை போன்ற காரணிகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடுகின்றன. குறித்த விடயம் தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை தேவையற்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
அறிவுக்கு எட்டிய சில தீர்வுகளை நாம் இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். குளவி மற்றும் தேனீ இனங்களை முற்றாக அழிக்க முடியாது. அத்தோடு அவற்றை அழிப்பது அதற்கான சிறந்த தீர்வாகவும் அமையாது. சூழல் சமநிலை மற்றும் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் பங்களிப்பு செய்யும் இப்பூச்சி இனத்தை தொழிலாளர்களுக்கு இடையூறின்றி அப்புறப்படுத்துவது மாத்திரமே சாத்தியமாகக் கூடிய செயல். இதற்காக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையோடு கலந்துரையாடி ஒவ்வொரு தோட்ட நிர்வாகத்தின் கீழும் குறைந்தது 5 இளைஞர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கி இயற்கை முறையில் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.
தேயிலை மலைகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கு முன்னர் அவர்களால் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் 2020 ஜூன் மாதம் தொழிலாளர்களை குளவிக் கொட்டிலிருந்து பாதுகாப்பதற்காக கவச உடை ஒன்று sustainable development network srilanka என்ற அமைப்பினூடாக அறிமுகம் செய்யப்பட்டது. இவைகள் போதுமான தீர்வாக அமைந்தாலும் எல்லா தோட்டங்களிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறைந்தபட்ச நன்மையேனும் பெற முடியும்.
தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நிர்வாகங்களின் கட்டாய கடமை. குளவி கொட்டும் நேரங்களில் மறைவான இடங்களில் பதுங்கி கொள்ள வேண்டும், மாறாக,பயந்து ஓடுவதால் அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். அத்தோடு விழுவதற்க்கான வாய்ப்பும் அதிகம். அதிக ரத்த அழுத்தமே சிகிச்சை பலனின்றிப் போவதற்கான முக்கிய காரணமாகும். ஆகவே, போதிய தகவல்களையும் உயிர்காக்கும் வழிமுறைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பதற்றமான சூழ்நிலைகளை கையாள்வது தொடர்பான விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறுத்தை
இலங்கைக்கே உரிய சிறுத்தை இனம் ‘அருகிய இனம்’ என பட்டியலிட்டுள்ளது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம். வனவிலங்கு வர்த்தகம், மனித- விலங்கு முரண்பாடு காரணமாக இவைகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஒரே சமயத்தில் 1 முதல் 4 வரையான குட்டிகளை ஈன்றாலும் அதிகபட்சம் ஒரு குட்டி மாத்திரமே பிழைத்து வாழ்கின்றது. ஆனால் தேவையற்ற காரணங்களால் மரணிக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகம். அண்மையில் அழிவடைந்து விட்டதாக நம்பப்பட்ட இலங்கை கருஞ்சிறுத்தை இனத்தில் ஒரு சிறுத்தை சுருக்கு தடத்தில் சிக்கி கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தது. காட்டுப்பன்றி, மான், மரை போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக வைக்கப்படும் கம்பி மற்றும் சுருக்கு தடங்களில் சிக்கி கடந்த சில வருடங்களில் மட்டும் 30 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன.
உணவுக்கான பற்றாக்குறை மற்றும் வாழிடம் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களினாலேயே ஆபத்தான விலங்குகள் குடியேற்றங்களை நோக்கி நகருகின்றன. மான், மரை போன்ற விலங்குகள் காடழிப்புகளினால் இடம்பெயர்வது மற்றும் வேட்டையாடப்படுவதால் சிறுத்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆகவே வளர்ப்பு நாய்கள் மற்றும் கால்நடைகள் இவற்றுக்கு உணவாக இன்று மாறிவிட்டன. கடந்தகால ஆய்வுகளின்படி சிறுத்தையின் மலத்தில் 40 தொடக்கம் 50 வீதமானவை நாய்களின் உடல் எச்சமாகும் என கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழப்பு மற்றும் பாரிய அசம்பாவிதங்கள் அதிகளவாக சிறுத்தைகளால் இடம்பெறாவிட்டாலும் அச்சுறுத்தல் என்றுமே இருக்கத்தான் செய்கிறது. கால்நடைகளுக்கும் மற்றும் தேயிலை செடிகளுக்கு அடியில் சிறுத்தைகள் அடிக்கடி இனங்காணப்பட்டதால் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற பயம் தொழிலாளர்களுக்கும் உள்ளது. உயிர் பயத்தில் சிலநேரங்களில் மக்களாலேயே சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சிறுத்தையின் பெயரிலான பயத்தால் சில சமயங்களில் அதைக்காட்டிலும் வீரியம் குறைந்த ஆனால் தோற்றத்தில் ஒத்த மீன்பிடி பூனைகளும் காரணமின்றி கொல்லப்படுகின்றன
சிறுத்தையொன்றின் தாக்குதலுக்கு மனிதன் இலக்காகும்போது கடி மற்றும் கீறல் பட்ட இடங்களில் கிருமித் தொற்று ஏற்படுவதோடு காயங்களில் அதிக இரத்த வெளியேற்றம் ஏற்பட்டு இறக்க நேரிடும். அதேபோல் சுருக்கு தடங்களில் சிக்கும் சிறுத்தையொன்று அதிலிருந்து மீள முயற்சிப்பதால் மேலும் இறுக்கம் அதிகரிக்கும். கழுத்தில் இறுக்கம் ஏற்பட்டால் மூச்சு திணறலும் இடுப்பு பகுதியில் இறுக்கம் ஏற்பட்டால் நரம்பு மற்றும் இரத்த தொடர்பு அறுபட்டு சிறுநீரக செயலிழப்பும் ஏற்படும். இதனாலேயே இவைகளுக்கு சிகிச்சையும் உரிய பலனை தருவதில்லை. இலங்கைக்கு உரித்தான சிறுத்தைகளை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமைதான். மரபுரிமை கூறுகளில் ஒன்றான உள்நாட்டு ஜீவராசிகள் என்றுமே பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago