Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 மே 12 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
‘அட்டைக்கு ஆயிரம் கண்கள்; முட்டைக்கு மூன்று கண்கள்; நான் பெற்ற பிள்ளைக்கு ஒரேயொரு கண், அது என்ன?’ என விடுகதையை வீட்டிலிருக்கும் தாத்தாமார், பாட்டிமார்கள் கேட்டு, மூளையையே குழப்பிவிடுவர்.
அட்டைக்கு இரண்டு கண்கள்தான் இருக்கும்; முட்டைக்கு கண்களே இருக்காது; ஒன்றைக் கண்ணைக் கொண்ட பிள்ளை பிறந்ததை கேள்விப்படவே இல்லையே, விடை என்னவாக இருக்குமென, யோசித்து யோசித்துப் பார்த்து, முடியாமல் போனதன் பின்னர், தாத்தா, பாட்டிக்கு வெற்றிலையை இடித்துகொடுத்து விடையை அவர்களிடமே கேட்டறிந்திருப்போம்.
சிறிய வயதுகளில் கேள்விப்பட்ட கடிக்கும் அட்டை, தனக்குத் தேவையான இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு, விழுந்து வெடித்துச் செத்துப்போய்விடும். அதிலிருந்து சிதறும் குஞ்சுகள் மீண்டும், இரத்தத்தை உறியும்.
அட்டைக்கடிக்கு ஆகக் கூடுதலாக இலக்காகி இருப்பவர்கள், மலையகத்தில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஆனால், அம்மக்களின் வாழ்க்கைக்கு எப்போதுதான் முழுமையான விடுதலை கிடைக்கப்போகிறது என்பதெல்லாம், விடை இல்லாத கேள்வியாகும்.
அட்டைக்கடிக்கு இலக்காகினால், காயங்கள் ஏற்படும். மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஆறிவிடும். ஆனால், ‘கறக்கும் அட்டை’களால் ஏற்படும் மனக்காயங்களுக்குத் தீர்வே காணமுடியாது. அந்தளவுக்கு மிக நாசுக்காகக் கறக்கப்படுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக, ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுத்துவிட்டதாகப் பலரும் மார்த்தட்டுகின்றனர். அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், ஆயிரம் ரூபாவை வைத்து, பல்லாயிரம் ரூபாய்களைக் கம்பனிகள் சுரண்டிவிடாமல், வேலியமைப்பதற்கு மார்த்தட்டிக்கொள்ளுபவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடான விடயமாகும்.
ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது பிரித்தோ வழங்கப்படுகின்றன. ஆனால், கூட்டொப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட சலுகைகள் உள்ளிட்டவை இல்லாமற்செய்யப்பட்டுள்ளன. இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, பெருந்தோட்டத்துறைக்கே விழுந்த பேரிடியாகும்.
உலகவோட்டத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு சமூகமும் மாறவேண்டும் என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கான வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நவீன உலகில் வீடுகளுக்கு உள்ளிருந்தே சகல கொடுப்பனவுகளையும் செலுத்திவிடலாம். அதற்காகப் பல அட்டைகள் (பணத்தை மீளப்பெறும் கார்ட்) இருக்கின்றன.
ஆயிரம் ரூபாய் விவகாரத்துக்குப் பின்னர், ஒவ்வொரு தோட்டங்களிலும் தான்தோன்றித்தனமாகக் கெடுபிடிகள் தாண்டவமாடுகின்றன. ஆனால், ஆயிரம் ரூபாயில் கறக்கும் செயற்பாடுகளை சில தோட்ட நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
கேகாலை மாவட்டத்தில், ஐலா, லெவன்ட், பனாவத்த உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கே, ஏ.ரி.எம் (ATM) அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவொரு நல்ல விடயம். ஆனால், அவர்களுக்கான மாதாந்தச் சம்பளத் துண்டு வழங்கப்படுவதில்லை.
தாங்கள் எத்தனை நாள்கள் வேலை செய்தோம், எத்தனை கிலோ கிராம் இறப்பர் பால் கறந்தோம், தேயிலை பறித்தோம், மொத்தச் சம்பளம் எவ்வளவு, கழிவுகள் என்ன? போன்ற விடயங்கள் எவையும் தெரியாமலே, ஏ.ரி.எம் அட்டைகளுடன் நகரத்துக்கு தொழிலாளர்கள் செல்கின்றனர்.
தன்னுடைய பிள்ளைகளை வைத்து சிலர், அட்டையிலிருக்கும் மிகுதியை அறிந்துகொள்கின்றனர். இன்னும் சிலர், வேறொருவரிடம் அட்டையைக் கொடுத்து, கடவுச்சொல்லையும் கொடுத்து, ஏமாந்துவிடுகின்றனர்.
கடனட்டைகளை வைத்து பலகோடி ரூபாய்களைச் சுருட்டுவோர் இருக்கும் நிலையில், கடவுச்சொல்லை கார்ட்டுடன் வைத்திருப்போரிடம் சுருட்டுவதற்கு எவ்வளவு நேரமெடுக்கும்.
பொதுவாகத் தோட்டத் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சுவது அட்டை மாத்திரமல்ல. அவர்களின் உழைப்பைச் சுரண்டும் நிர்வாகங்கள், சந்தா என்ற பெயரில் மறுபுறம் சுரண்டும் தொழிற்சங்கங்களையும் ‘இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்’ எனக் கூறினால் மிகையாகாது.
இதனால் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், கொஞ்ச நஞ்சமல்ல. வயதானவர்கள் வங்கிக்குச் சென்றால், உரியமுறையில் பணத்தை மீளப்பெறுவதில் சிக்கல்; சரி படிவத்தை நிரப்பியாவது பணத்தை, வங்கிப் புத்தகம் ஊடாக எடுக்க முயன்றாலும், கொரோனா தொற்றால் யாரும் இவர்களுக்கு உதவுவதற்கு முன்வருவதில்லை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
முன்பெல்லாம் சம்பளத்துக்கு முன்னரே சம்பளத்துண்டு வழங்கப்படுவதால், அது தொடர்பில் ஏதாவது சிக்கல் இருந்தால், சம்பளம் வழங்குவதற்கு முன்னரே திருத்திக்கொள்ளலாம்.
இன்னும் சில தோட்டங்களில், வண்ணான், முடி திருத்துநர் இல்லை, எனினும், அவர்களுக்காகவும் சம்பளத்தில் கழிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பணத்தை மீளப்பெறுவதற்காக வங்கிக்குச் சென்று, தமது அட்டையில் பணமே இல்லாமல் பல முதியவர்கள் வெறுங்கையுடன் திரும்பியுள்ள பல சம்பவங்கள், மேற்குறிப்பிட்ட தோட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
எனவே, உலக மாற்றம் சமூக மாற்றத்துக்கு அமைய, தொழிலாளர்களும் மாறத் தான் வேண்டும். ஆனால், மாற்றமென்பது படிபடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பெருந்தொகை பணத்தைத் தோட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாலேயே தொழிலாளர்களுக்கு வங்கி அட்டையை விநியோகித்ததாக சுயஇலாபத்துக்காக, தமது தரப்பு நியாயத்தை தோட்ட நிர்வாகங்கள் முன்வைத்துள்ளன.
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், ஒரு தடவைக்கு பல தடவை சிந்தித்து,தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தாத வகையில் தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவது அவசியமாகும்.
அதேபோல, ஏற்கெனவே வழங்கியதைப் போல, சம்பளத்துக்கு இரண்டொரு நாள்களுக்கு முன்னர், சம்பளத் துண்டை வழங்கினால், பிரச்சினைகள் ஏற்படாது. அதனைவிடவும், வேலை வழங்கும் நாளன்று வேலைக்குச் சென்றால் மட்டுமே, அன்றைய நாளுக்குரிய சம்பளம் கிடைக்கும்.
எனினும், பெருந்தோட்டங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கும் வந்துசெல்வது கடும் சிரமமாகும். வருகைதரும் அந்தநாளில் தன்னியக்க இயந்திரத்தில் பணம் இல்லை; இன்றேல் செயலிழந்து இருந்தால் திண்டாட்டம்தான்.
அதனால்தான் என்னவோ, எங்களுடைய மூதாதையர், ‘அட்டைக்கு ஆயிரம் கண்கள்’ எனப் பழமொழியிலேயே சொல்லி இருக்கின்றனர். அந்த பழமொழியின் விடை, அட்டைக்கு ஆயிரம் கண்கள் என்றால், மா சலிக்கும் அரிக்கனாம். நல்லதை சலித்துக்கொண்டு குப்பைகளைத் தந்துவிடும், தொழிலாளர்களுக்கு வழங்கும் தேயிலைத்தூளும் அப்படிதான் இருக்கிறது.
முட்டைக்கு மூன்று கண்கள் என்றால் தேங்காயின் கண்களாம்; உடைத்துப்பார்த்தால்தான் தேங்காய் நல்லதா, கெட்டுவிட்டதா? என்பது தெரியும். அதுபோலதான் சம்பள துண்டு இல்லாமல், சுரண்டப்படுகின்றது.
நான் பெற்ற பிள்ளைக்கு ஒரேயொரு கண்; அதனை ஊசி என்பர். மிகக் கூர்மையானது. தோட்ட நிர்வாகங்களில் பல, தொழிலாளர்களிடமிருந்து உழைப்பை மட்டுமன்றி வேதனத்தையும் உறிஞ்சுவதிலேயே குறியாக இருகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அட்டை கடியிலிருந்து தப்பி, அட்டை கறக்காமல் இருக்கவேண்டுமாயின், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் கற்றவர்கள் உருவாக வேண்டும். இல்லையேல் ‘கடி’யிலிருந்தும் தப்பமுடியாது; கறப்பதிலிருந்தும் தப்பிக்கவே முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago