Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனகன் முத்துக்குமார்
சர்வதேச நீதிமன்றத்தின் முன் அதன் விண்ணப்பத்தில், காம்பியாவை முறையாக ஆதரிப்பதாக நெதர்லாந்து, கனடா கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தன. இது தொடர்பில் இவ்விரு நாடுகளும் வெளியிட்டிருந்த அறிக்கையில், பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
“காம்பியாவின் பிராது மியான்மாரில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தலை - குறிப்பாக, மியான்மாரின் பாதுகாப்புப் படைகள் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக இலக்கு, முறையான அட்டூழியங்களைச் செய்தமைக்கான சான்றுகளை காட்டுகின்றது. குறிப்பாக வெகுஜனக் கொலை, பாலியல் வன்முறை, சித்திரவதை, கட்டாய இடம்பெயர்வு, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை மறுப்பது போன்ற முறையான, பரவலான மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை செய்தமையை குறித்த பிராது காட்டுகின்றது.
இனப்படுகொலைக்கு எதிரான சமவாயம், இனப்படுகொலையின் குற்றத்தைத் தடுப்பதற்கான பொறுப்பான உறுதிமொழியைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த விண்ணப்பத்தை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு வருவதில், காம்பியா ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கையை எடுத்தது. கனடாவும் நெதர்லாந்தும் இந்த முயற்சிகளை ஆதரிப்பது நமது கடமையாக கருதுகின்றன”
குறித்த இந்த நடவடிக்கையின் அடிப்படையில் கனடாவின் உள்நாட்டு அரசியல் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதை இப்பத்தி ஆராய்கின்றது.
1. சர்வதேச ரீதியில் சரிந்துவரும் கனடாவின் பங்கை மீளக் கட்டியெழுப்புதல்: இவ்வாண்டு நடைபெற்றிருந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு தெரிவுசெய்யப்படும் 10 தற்காலிக நாடுகளுக்கான போட்டியில் கனடா பங்குபற்றியிருந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு, கனடாவின் பிரதமரே நேரடியாக கனடாவின் வேட்புமனு தொடர்பாக தொடர்ச்சியாக பேசியிருந்தார். தீவிரமான இராஜதந்திர உந்துதல் இருந்தபோதிலும், கனடா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உறுப்புரிமைக்கான போட்டியில் நோர்வே மற்றும் அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை பெற்றிருந்தது. இது பற்றி கருத்துரைத்த பல சர்வதேச ஆய்வாளர்கள், குறித்த தோல்வி - கனடா சர்வதேசத்தில் தனது விட்டுக்கொடுத்தமைக்கான ஒரு தோல்வியாகவும், சர்வதேச அரசியலில் கனடா ஒரு செயற்பாட்டாளராக தன்னை வரித்துக்கொண்ட தன்மை போதாது என்றும் பேசியிருந்தார். அதுவே உண்மையாகவும் இருந்திருந்தது.
கனடாவின் துணைப்பிரதமாரான கிறிஸ்டியா பிரீலாண்ட் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது கடந்த 2017ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றில் ஒரு முக்கியமான உரை ஒன்றை ஆற்றியிருந்தார். அதில், கனடா எவ்வாறாக சர்வதேச அரசியலில் ஒரு தலைமைத்துவ நாடாக மாறவேண்டும் என்றும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான காலப்பகுதியில் கனடா சர்வதேச அரங்கில் மேற்கொண்ட சர்வதேச இராஜதந்திர மற்றும் சமாதான செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கும் நிகழ்ச்சிநிரலை ஏன் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சித்திரித்திருந்தார். குறித்த உரை கனடாவின் அரசியல் மட்டத்தில் ஒரு பேசுபொருளாக இருந்ததுடன், அதுவே கிறிஸ்டினா பிரீலாண்டை சர்வதேச மட்டத்தில் ஒரு நிலையான தலைவராகவும் காட்டியிருந்தது.
எது எவ்வாறாக இருந்தபோதிலும், கனடாவின் சர்வதேச நிலைப்பாட்டில் பெருமளவான மாற்றங்கள் ஏற்படவில்லை. கனடா சர்வதேச அரசியல் விவகாரங்களை பொறுத்தவரை ஒரு இரண்டாம் நிலைத் தலைவராகவே தன்னை தொடர்ச்சியாக பார்த்திருந்து. ஒரு புறம் ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைகளுக்கு முரண்படாத கொள்கைகளை பேணவேண்டிய அவசியத்தில் இருந்த கனடா, மனித உரிமை - போருக்கு பிந்திய கட்டமைப்புக்களில் உதவுதல் என்பவற்றில் மட்டுமே பெருமளவில் தமது செல்வாக்கை செலுத்தியிருந்தது. காலநிலை மாற்றம் தொடர்பில் கூட, கனேடிய அரசாங்கம் பெருமளவில் பேசினாலும் கூட, கனேடிய உள்நாட்டு அரசியல் நிரலில் தம்மை நிலைநிறுத்துவதற்காக கனடா ஒரு நிலையான செயற்பாட்டை எடுக்க அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் இடம்கொடுக்கவில்லை.
இந்நிலையிலேயே, பாதுகாப்புச் சபை தோல்விக்கு பின்னராக தம்மை ஒரு சர்வதேச அரசியல் ஆளுமையாக காட்ட கனடா முற்படுவதும், அதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கில் தலையிட முடிவெடுத்தமையும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
2. தொடர்ச்சியான சீன எதிர்ப்பு கொள்கையில் இரண்டாம் நிலையை அடைதல்.
சீனா - கனடா பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை கனடாவில் கைது செய்தமையை தொடர்ந்து உச்சம் பெற்றுள்ள இந்நிலையில், கனடாவும் சீனாவும் குறித்த அரசியல் பொருளாதார நிலைமைகளை சீர்செய்வதற்கு பெரிதும் நாட்டமெடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம், சீனாவுக்கு எதிரான கொள்கையை பெரும்பாலும் எல்லா மேற்கத்தேய நாடுகளும் கொண்டுள்ளமையும் அதன் நிகழ்ச்சி நிரலில் கனடா தனித்திருக்க விரும்பாமையும் ஆகும். இந்நிலையில், தொடர்ச்சியாக சீனாவின் ஆதரவில் இருக்கும் மியன்மாரின் அரசுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிடுதல், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்ட தாய்வான் மற்றும் ஹொங்கொங் பிரச்சினைகளை சர்வதேசம் கையிலெடுக்க ஒரு துருப்பாக அமையும் என கனடா கருதுகின்றது. தாய்வான் மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்களிலிருந்து பெருமளவான மக்கள் கனடாவில் குடிபுகுந்துள்ள இந்நிலையில், கனடா சீனாவுக்கு எதிரான ஒரு மறைமுகமான நடவடிக்கையை மேற்கொள்ளுதல், உள்நாட்டில் குடிபுகுந்தவர்களின் வாக்குக்களை வருகின்ற தேர்தலில் பெற்றுக்கொடுக்கும் என ஆளும் லிபரல் கட்சி நம்புகின்றது.
3. கனடாவின் உள்நாட்டு நிலைமை.
லிபரல் கட்சி தனிப்பெரும்பான்மை இன்றி இருக்கும் இந்த அரசாங்கம் ஒரு நிலையான அரசாங்கமாக இருக்கும் என லிபரல் கட்சி உட்பட ஒருவரும் நம்பவில்லை. கனேடிய நாடாளுமன்ற தேர்தல் எப்போதும் நடக்கலாம் என்ற இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் கனடா மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கையை மக்களுக்கு காட்டுவதற்கு குறித்த வழக்கில் பங்காளியாக மாறுதல் ஒரு சரியான விடயமாக இருக்கும் என கனடா நம்புகின்றது. அதில் உண்மையும் இருக்கின்றது. கனேடிய மக்கள், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து கரிசனை உடையவர்கள் என்ற ரீதியில், குறித்த வழக்கில் பங்காளிகளாக மாறுதல் உண்மையில் கனேடிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எது எவ்வாறாக இருந்தாலும், ஒரு வழக்கில் பங்காளியாக இருப்பது மட்டும் சர்வதேசத்தில் அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும் என்று கனடா நம்புவதற்கு இல்லை. மாறாக, இது கனடாவின் மாற்றம் பெரும் வெளிவிவாக நடவடிக்கையில் ஒரு சிறிய நிகழ்ச்சி நிரலாக்க இருக்கும் என்பதே தற்போதைய கணிப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago