Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
“கண்டி மாவட்டத்தின் நிலைபேண்தகு அபிவிருத்தி” என்பதை இலக்காக வைத்தே, நான் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்த மாவட்டத்துக்கு, உட்கட்டமைப்பு வசதிகள் அதிக தேவையாக இருந்தாலும்கூட, தமிழர்களுக்கான அங்கிகாரமே, மிக முக்கியமாகக் காணப்படுகிறது. அந்த அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான தலைமைத்துவமாகச் சரியான இடத்தில் நான் இருக்கின்றேன். ஜீவன் தொண்டமானும் உள்ளார். கண்டி மாவட்டத் தமிழர் எனத் திமிராகக் கூறி, அந்தப் பலத்தை வைத்தே, ஓர் அங்கிகாரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே நுவரெலியா மாவட்டத்துடன் ஒப்பிடுகையில், கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு பாரிய பலம் இல்லாதவொரு சூழலில், அம்மாவட்டத்தில் போட்டியிடுவதை சவாலகக் கருதவில்லையா?
பதில்: அவ்வாறு கருதவில்லை. ஏனெனில், கண்டி மாவட்டதைப் பொறுத்தவரையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு ஆரம்பித்துள்ளது. இம்முறை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில், கண்டி மாவட்டத் தமிழ்மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.
இதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக உள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத் திறன் மற்றும் கொவிட் -19ஐ கட்டுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து, பெரும்பான்மையினச் சமூகத்தினர் மட்டுமன்றி, தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இம்முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்துவிட்டனர்.
இதேவேளை இன்று நாட்டில் எதிர்க்கட்சி பலமானதாக இல்லை. அதிகாரப் போட்டி, முரண்பாட்டு நிலை காரணமாக, நாட்டின் எதிர்க்கட்சியானது பலமற்றதாகக் காணப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சியை நம்பி வாக்களிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
இதனால், அரசாங்கத்துக்கு வாக்களிப்பதற்கு மக்கள் தயார் நிலையில் உள்ளனர். கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திலுள்ள ஒரே தமிழ் பிரதிநிதி நான் என்பதால், கண்டியிலுள்ள பெரும்பாலான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்களும்கூட எனக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். எனவே, கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதை நான் சவாலாகக் கருதவில்லை.
கே; அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதால், உங்களுக்கான பலம் அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றீர்கள். இம்முறை பொதுத் தேர்தலில், அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடாது, தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டிருக்குமாயின் இ.தொ.காவின் நிலை என்ன?
பதில்: அரசாங்கத்தின் மிகப் பெரிய பங்காளியே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே, இ.தொ.காவானது, இம்முறை கண்டி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகிறது. அத்துடன் இ.தொ.காவின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தீர்மானித்தபோது, பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அதாவது, சிறுபான்மையினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என கருத்துகளை முன்வைத்தனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில், ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் வாக்குவீதத்தை ஆராய்ந்து பார்த்தால், மலையகத்தில் வாழ்கின்ற பெரும்பாலான மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தனர்.
அத்துடன், இ.தொ.காவானது தனித்துப் போட்டியிடுகின்றபோது, புவியியல் ரீதியில் நுவரெலியா மாவட்டத்தில் அதற்கான வெற்றிவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில், தமிழர்கள் அதிகமாகவுள்ளனர். கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையினத்தவர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே, இவ்விரு மாவட்டங்களிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடும்போது, எமக்கான வெற்றிவாய்ப்புக் குறைவாகவே காணப்படுகிறது.
2013ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் நாங்கள் களமிறங்கினோம். அதன்போது, எனது தந்தை எஸ்.அருள்சாமியும் போட்டியிட்டார். 18,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொண்டோம். கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரை இ.தொ.கா பலமாகவே உள்ளது. பலமற்றவர்களாக இல்லை எனினும் அரசாங்கத்துடன் இணைந்துப் போட்டியிடுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நோக்கம். இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சிங்களவர்களும் முஸ்லிம்களும்கூட எனக்கு அதரவளிப்பதற்கு முன்வந்துள்ளனர். நல்லிணக்கத்துக்கான வாய்ப்பாகவே இதனைக் கருதுகின்றேன்.
கே; நீங்கள் உங்களது தந்ததையின் (அமரர் அருள்சாமி) மறைவுக்குப் பின்னரே, அரசியலுக்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் அரசியலுக்கு வந்து மூன்று வருடங்களே ஆகின்றன. இந்நிலையில், கண்டி மாவட்டத்தில், இ.தொ.காவின் சார்பில் சிரேஷ்ட உறுப்பினராக மதியுகராஜா உள்ளார். எனினும் அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாது உங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதால், இ.தொ.காவுக்குள் மனஸ்தாபங்கள், முரண்பாடுகள் எழவில்லையா?
பதில்: சகோதரர் மதியுகராஜா என்பவர், கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திவரும் அரசியல் பிரமுகர். 2018ஆம் ஆண்டு, மத்திய மாகாண சபை கலைக்கப்படும்வரை அவர், மாகாண சபையின் அவைத்தலைவராகச் செயற்பட்டு வந்துள்ளார். இ.தொ.காவானது இரண்டாம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதை அடுத்தக்கட்ட இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதால், அமரர் ஆறுமுகன் தொண்டமான் இரண்டாம் தலைமுறையினரில் ஒருவரான எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சகோதரர் மதியுகராஜா அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் அவர் இன்றுவரை எனது வெற்றிக்காகப் பக்கபலமாக இருந்து செயற்பட்டு வருகிறார்.
அதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் போது, இ.தொ.காவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக மதியுகராஜா, சட்டத்தரணி பெ.இராஜதுரை ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. இ.தொ.காவின் வேட்பாளர் தெரிவில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை, சிரேஷ்ட உறுப்பினர்கள், இரண்டாம் தலைமுறையினருக்கு வழிசமைத்துக்கொடுத்தனர்.
கே: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவம் யாருக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: இ.தொ.காவின் தலைமைத்துவம் தொடர்பில் அதன் உயரிய சபையும் பொதுமக்களும் தீர்மானிப்பர்.
கேகண்டி மாவட்டத்தில், இதுவரை எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: நான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்த நிறுவனத்தினூடாக, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நிதிஒதுக்கீட்டினூடாக, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வேலைத்திட்டங்களை அண்மைக்காலத்தில் செய்துள்ளோம். ஆரம்பக் காலக்கட்டங்களில், கண்டி ரஜவல இந்து தேசிய கல்லூரி, இந்து சீனியர் கல்லூரி உள்ளிட்ட பல தமிழ் பாடசாலைகள், கோவில்கள், பல தோட்டங்களுக்கு, இ.தொ.காவினூடாக செய்யப்பட்ட சேவைகள் பல. நாங்கள் செய்த தவறு என்னெவில், இ.தொ.காவல் செய்யப்பட்ட மக்கள் சேவைகளைப் பொதுவெளியில் கூறவில்லை. அபிவிருத்தித் திட்டங்களுக்கு அப்பால், கல்வித்துறை, கலை, கலாசாரம், விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.
பெருந்தோட்ட மனித அபிவிருத்தித் தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர், 1,500 வீடுகள், மலையக மக்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தன. அதில், ஆரம்பக்கட்டமாக 500 வீடுகளை கண்டி மாவட்ட மக்களுக்கு அமைத்துக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்தல் முடிந்ததன் பின்னர் அதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
நாவலப்பிட்டிய, கலஹா, தெல்தொட்ட, மடுல்கல, கெலாபொக்க, உனுகங்க, புஸ்ஸல்லாவ, கம்பளை ஆகிய பகுதிகளில், 500 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவே, எதிர்காலத்தில் சிறந்த வீட்டுத்திட்டங்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக, அமரர் ஆறுமுகன் தொண்டமான், அதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார். அதற்கான அனுமதி கிடைத்தவுடன், இந்த வீட்டுத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.
1994ஆம் ஆண்டுக்குப் பிறகு, இ.தொ.காவின் சார்பில், கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவர்கூட தெரிவு செய்யப்படாத சூழலிலும் இ.தொ.காவின் தொழிற்சங்கப் பிரிவானது கண்டி மாவட்டத்தில், பலம்பொருந்தியதாகவே காணப்படுகிறது. கண்டி மாவட்டத்தில், அதிகளவான தொழிற்சங்க உறுப்பினர்கள், இ.தொ.காவிலேயே உள்ளனர்.
கே; நீங்கள் கூறுவதைப் போன்று, கண்டி மாவட்டத்தில், இ.தொ.கா பலம்பொருந்திய தொழிற்சங்கமாக இருந்தால், கடந்த பொதுத் தேர்தலில், உங்களது தந்தையால் வெற்றிபெற முடியாமல் போனது ஏன்? இ.தொ.காவின் பலவீனமாக இதனைக் கருதலாமா?
பதில்: 2015ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில், நாம் சேவல் சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும்கூட, “நல்லாட்சி” என்ற அலை நாடெங்கிலும் பரவத்தொடங்கியிருந்தது. ராஜபக்ஷக்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அலை எழுந்திருந்தது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யார், யாரெல்லாம் போட்டியிட்டார்களோ அவர்கள் அனைவரும் நல்லாட்சி என்ற அலை காரணமாக வெற்றிபெற்றார்கள். நல்லாட்சி என்ற அலைதான் அவர்களது வெற்றிக்குக் காரணமே தவிர, இ.தொ.கா பலவீனமனதால் தேர்தலில் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லை.
கே; தேர்தலில் வெற்றிபெற்றவுற்றவுடன் உங்களது அடுத்தக்கட்ட வேலைத்திட்டங்கள் எவை?
பதில்: “கண்டி மாவட்டத்தின் நிலைபேண்தகு அபிவிருத்தி” என்பதை இலக்காக வைத்தே, நான் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். கண்டி மாவட்டத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் அதிக தேவையாக இருந்தாலும்கூட, தமிழர்களுக்கான அங்கிகாரமே, மிக முக்கிய விடயமாகக் காணப்படுகிறது. அந்த அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான தலைமைத்துவமாக சரியான இடத்தில் நான் இருக்கின்றேன். ஜீவன் தொண்டமானும் உள்ளார். கண்டி மாவட்டத் தமிழன் என திமிராகக் கூறி, அந்தப் பலத்தை வைத்தே ஓர் அங்கிகாரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
நிலைபேண்தகு அபிவிருத்தியில், நான்கு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது, கல்வி அபிவிருத்தி. கல்வி அபிவிருத்தி என்று வரும்போது வெறுமனே பாடசாலை கட்டடங்களை அமைத்துக்கொடுப்பதை மட்டும் கருத்திற்கொள்ளாது, கற்பித்தல் முறைகளை டிஜிட்டல் மயமாக்குவது. நகர்புற பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாது, பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களும் பயன்பெறும் வகையில், இணையத்தளக் கல்வியை அனைத்துப் பாடசாலைகளிலும் ஊக்குவித்து பெறுபேறு மட்டத்தை அதிகரிப்பதே எமது இலக்காகும்.
உதவி ஆசிரியர்களாக இருப்பவர்களை நிரந்தர ஆசிரியராக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
கல்வி அபிவிருத்தியில் இரண்டாவதாக, தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஒரு கிளையை, கண்டி மாவட்டத்திலும் நிறுவுவதற்கு உள்ளேன். இதனூடாக, கண்டி மாவட்டத்தில், பின்தங்கிய தோட்டங்கள், தோட்டங்களை அண்மித்துள்ளப் பகுதி மாணவர்களை, தொழில்நுட்ப கல்லூரியில் வினைத்திறன்மிக்கவர்களாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனூடாக,மாணவர்கள் பொறியிலாளர்களாகவோ, தொழில்நுட்ப உதவியாளர்களாகவோ உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறான புதுமையான விடயங்களைக், கல்வி அபிவிருத்திக்குள் உள்வாங்குவதற்கு உள்ளோம்.
இரண்டவாதாக, “சமூக பொருளாதார அபிவிருத்தி” என்ற ஒன்றை உருவாக்கவுள்ளோம். இதனூடாக தோட்டங்கள், தோட்டங்களை அண்மித்துள்ள கிராமங்களிலுள்ள அனைவரும் பொருளாதார ரீதியில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்பதே, எமது இலக்கு. ஒவ்வொரு தோட்டங்களிலுமுள்ள தரிசு நிலங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளித்து, விவசாயம், வேளாண்மை, பண்ணை வளர்ப்பை அதிகரிக்கவுள்ளோம்.
அதேபோன்று, கிராமங்களிலுள்ள வளங்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய சிறுகைத் தொழில் ஊக்குவிப்பு வலயங்களை ஊக்குவிக்கவுள்ளோம். இதன்மூலம் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த முடிவதுடன், தொழில்வாய்ப்பின்றி இளைஞர், யுவதிகள் வெளிமாவட்டங்களுக்கு புலம்பெயர்வதைத் தடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரை, எங்களுடைய இருப்பு இந்த மாவட்டத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். அடுத்ததாக வீட்டுத் திட்டம். சகல வசதகளையுமுடைய வீட்டுத் திட்டங்களை தனது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது, எமது தலைவரின் கனவு. எனவே அவரது கனவை மெய்படுத்த தனிவீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
மூன்றாவது விடயமாக கலை, கலாசார துறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். கண்டி மாவட்டத்தில், பல கலைஞர்கள் உருவாகிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு முறையான மேடை இல்லை. எனவே அத்தகைய கலைஞர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று, ஆன்மீக ரீதியாக உதாரணமாக யோகா, தியானம் போன்றவற்றை தோட்டப்புறங்களுக்கும் கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். பெருந்தோட்டங்களிலுள்ள வணக்கஸ்தலங்கள், உரியமுறையில் பதியப்படவில்லை. எனவே மதவாரியத்தினூடாக அவற்றைப் பதிந்து, ஒப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பெருந்தோட்டப் பகுதிகளில், அறநெறி பாடசாலைகளை தரம்வாய்ந்த பாடசாலைகளாக உயர்த்துவதற்கான நடவடிக்களையும் மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன், கலாகேந்திரா போன்றதொரு நிலையத்தை அமைத்து, கலைத்துறையில் சாதிக்க நினைப்பவர்களை ஊக்குவிக்கவுள்ளோம். அதில் ஓர் அங்கமாக வெளிநாட்டு வளவாளர்களை வரவழைத்து அவர்களுக்கூடாக சிறந்த பயிற்சிகளை வழங்கி கண்டி மாவட்ட கலைஞர்களையும் சர்வதேச ரீதியிலான கலைஞர்களாக உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
நான்காவதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி. விளையாட்டு என்று வரும்போது வழமைபோன்று விளையாட்டு வீரர்களுக்கு, துடுப்புமட்டை பந்துகளை மட்டும் வழங்காது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வுள்ளோம். விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, அதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே நோக்கம்.
கண்டி மாவட்டத்தில் ஒரு பாடசாலையைத் தெரிவுசெய்து சகல வசதிகளையும் உடைய பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளோம்.
கண்டி மாவட்டத்தில் முன்னணி பாடசாலைகள் இருந்தாலும்கூட, பெருந்தோட்டங்களிலும் கிராமபுரங்களிலும் பின்தங்கிய பாடசாலைகளே அதிகம் உள்ளன. எனவே ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பாடசாலையைத் தெரிவுசெய்து அந்தப் பாடசாலையை சகல வசதிகளுமுடைய பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளோம். எனது தந்தை மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது கண்டி மாவட்டத்தில் தனித்தமிழ் பாடசாலை ஒன்றை உருவாக்குவதற்காக முழுமூச்சுடன் செயற்பட்டார். எனவே, இவ்விடயத்தில் நான் முழு மூச்சாக நின்று செயற்படுவேன்.
இந்த நான்கு விடயங்களை அடிப்படையாக வைத்து நான் எனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கின்றேன். கண்டி மாவட்டத் தமிழ் மக்களுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே, எனது இலக்கு. அந்த அடையாளத்தை நான் கட்டாயம் ஏற்படுவேன்.
கேதேர்தலில் வெற்றிபெற முடியாது போனாலும் எதிர்காலத்தில் இவ்வாறானத் திட்டங்களை முன்னெடுப்பீர்களா?
பதில்: நிச்சியமாக. தற்செயலாக என்னால் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும்கூட, கண்டி மாவட்டத் தமிழ் மக்களின் அடையாளத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.
(கண்டியில் மொட்டு சின்னத்தில் இலக்கம் 4இல் பாரத் போட்டியிடுகிறார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago