Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2021 மே 26 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்;
ஓர் ஆலமரம் சாய்ந்ததே,
அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’
என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது.
தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின் போதெல்லாம், ‘தம்பி சேர்’ இருக்கிறார் என்ற தென்புடன், புளகாங்கிதத்துடன் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்க்கையில், அந்நாள் இருண்ட நாளெனக் கூறுவதில் தவறில்லை.
நேர்மை, தட்டிக்கேட்டல், தட்டிக்கொடுத்தல், இராஜதந்திரம் இவை எல்லாவற்றிலுமே கைதேர்ந்து, அரசியல் காய்களை, மிகச் சரியாகவும் சாதுரியமாகவும் நகர்த்தும் வல்லமையைக் கொண்டிருந்த பெருந்தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார்.
‘தம்பி சேர்’, எம்மையெல்லாம் விட்டு மறைந்து, இன்றுடன் (மே 26) ஓராண்டு நிறைவடைந்துவிட்டது என்பதை, நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு, அவருடைய செயற்பாடுகளின் நினைவலைகள் எம் கண்முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.
கம்பீரமான தோற்றம்; தலைமைத்துவப் பண்பை வெளிக்காட்டும் வீறுகொண்டநடை; தன்னைச் சுற்றி எம்.பிகள் பரிவாரங்களுடன் சபைக்குள் (பாராளுமன்றத்துக்குள்) வந்து, மிரட்டிவிட்டுச் செல்லும் திமிரான நடை உள்ளிட்ட காட்சிகள், இன்றுமே கண்களை விட்டகலவில்லை.
தனக்குக் கீழிருந்தவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து, பதவிகளைப் பெற்றுக்கொடுத்தமையால், அவர்களில் பலர், ஆறுமுகன் தொண்டமானை இடைநடுவில் கைவிட்டுச் சென்றுவிட்டனர். அத்தனை துரோகங்களை எல்லாம் தாங்கி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற விருட்சத்தைக் கட்டிக்காத்த மாமனிதர் அவராவரார்.
ஊடகங்களை இலகுவில் சந்திக்கமாட்டார். சந்தித்தாலும் அவரது இராஜதந்திர ரீதியிலான பதில்கள், சிரிக்காதவர்களைக் கூட சிரிக்கவைத்துவிடும். இப்படிதான் சம்பள உயர்வு கூட்டொப்பந்த பேச்சுக்குப் பின்னர், ஊடங்களை ஆறுமுகன் தொண்டமான் ஒருமுறை சந்தித்தார். உதாரணங்கள் பலவிருந்தாலும், அதில் சிலவற்றைத் தருகின்றோம்.
“நீங்கள் கேட்கும் தொகையை விடக் கூடுதலான தொகையைப் பெற்றுக்கொடுக்கலாம் என, மாற்றுத் தரப்பினர் கூறுகின்றனரே?” எனக் கேட்டதற்கு, “அப்படியானால், அவர்களை வாங்கி கொடுக்கச் சொல்லு” என முகத்தில் அறைந்தாற் போல பதிலளித்திருந்தார்.
மலையகத்தில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்பட்டதன் பின்னர், அதன் ஆயுட்காலம் தொடர்பில் வினவப்பட்ட போது, “இப்பதான் புள்ள பொறந்திருக்கு” என மக்களின் மனங்களை சுண்டியிழுக்கும் பதில்களை, பட் படென அளிப்பதில் ஆறுமுகன் தொண்டமானுக்கு நிகர் ஆறுமுகன் தொண்டமானே! ஆக, மக்களுக்கு புரியும் மொழியை பேசும் தலைவன் அவராவார்.
வழிபாடுகள் செய்வதையும் மதத்தலங்களுக்குச் செல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கும் ஆறுமுகன் தொண்டமான், ஐயப்பன் சுவாமிக்கு மலை அணிந்துகொண்டால், அதற்கே உண்டான பக்தியும் அவரிடத்தில் குடிகொண்டுவிடும். அவரிடமிருந்த பண்புகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
மலையகம் வாழ், ஒட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் ஏகோபித்த சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெருந் தலைவரும் மலையகத் தந்தையென போற்றப்பட்டவருமான சௌமிய மூர்த்தி தொண்டமானின் (ஐயா) வாரிசு வழி வந்த தலைவர் அமரர் ஆறுமுகம் ஆவார்.
‘மலையகத் தந்தை’யென போற்றப்படுபவரான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்தான் அமரர் ஆறுமுகம் தொண்டமான். 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான், தமிழகத்தின் ஏற்காட்டில் பள்ளிப் படிப்பையும் கொழும்பு ரோயல் கல்லூரியில், கல்லூரிப் படிப்பையும் பயின்றுள்ளார்.
1990ஆம் ஆண்டு முதல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் காலடி எடுத்துவைத்து, தனது தாத்தாவின் வழியில் பயணித்தார்.
1993ஆம் ஆண்டு, காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
1994 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 74,000 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியுடன் பாராளுமன்றம் சென்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், 1999ஆம் ஆண்டு காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர், 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் சமூக வலுவூட்டல், கால்நடை அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார்.
தமிழக அரசியல்வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான நட்பைப் பேணி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்துக்கும் அழைத்துச்சென்று, தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தார்.
இந்திய அரசாங்கம் வழங்கிய முதற்கட்ட 4,000 தனி வீட்டுத் திட்டத்துக்குச் சிபார்சு பெற்றவரும், மூவாயிரம் ஆசிரியர்கள் நியமனம், உள்ளிட்ட அரசாங்கத் தொழில்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை இணைக்க சிபாரிசு பெற்றவரும் இவர்தான்.
இலங்கைக்கான இந்திய தூதுவராக பதவியேற்ற கோபால் பால்கேயை, 2020 மே 26 அன்று சந்தித்து, மலையக சமூக அபிவிருத்தி, இருதரப்பு ஒத்துழைப்பு, தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு ஆகியன தொடர்பாகக் கலந்துரையாடி விட்டுத் திரும்பியுள்ளார்.
அதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்குச் சென்று, தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தையும் நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டு கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். தலங்கம மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி அன்றிரவு ஒன்பது மணியளவில் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் நோர்வூட் மைதானத்தில் மே 31ஆம் திகதி நடைபெற்றன.
மனதுக்கு பிடித்த தலைவர்; அவருக்குப் பிடித்தவர்கள் எவராக இருந்தாலும் தோளில் கைபோட்டு அரவனைத்து, தன்னருகில் வைத்து வளர்த்தெடுப்பவர். அவரின் பேச்சு சுருக்கமானது; செயல்கள் பரந்து காணப்படும்; சொல்லுக்கும் செயலுக்கும் மாறாக, எவர் செயற்பட்டாலும் இவருக்கு வரும் கோபம் சொல்லில் அடங்காதது.
வறியவர்கள், செல்வந்தர்கள் என்ற ஏற்ற தாழ்வு இவரிடத்தில் காணப்பட்டதில்லை. அனைவரின் அன்புக்கும் அடிமையானவர்; அடங்காதவர்களை அடக்கும் ஆற்றல் இவரிடத்தில் உண்டு.
எதற்கும் எவருக்கும் சளைத்தவர் இல்லை, தொழிலாளர்களுக்கோ சமூகத்துக்கோ ஏதேனும் பிரச்சினைகளை அதிகாரிகள் கொடுத்தால், சொல்லூடாகத் தண்டிப்பார்; மீறும் பட்சத்தில், வார்த்தைகள் மௌனமாகும்.
சிறுவர்கள் மீது அதீத அன்பு கொண்டவர். அவர்களுடன் ஆடிப்பாட ஆசைப்படுவார். அதிக இரக்க குணம் இவரிடத்தில் உண்டு. கல்விக்கு முதலிடம் வழங்குவார். தொழிலாளர், பெண்கள் ஆகியோருக்கு கண்ணியமான மரியாதை வழங்குவார்; சகஜமாக பேசிப் பழகக் கூடியவர்.
பொல்லாங்கு, புறம் பேசுபவர்களைப் பிடிக்காது; தனக்கு எது சரியென்று படுகிறதோ, அதைச் சட்டென்று செய்துவிடுவார். இவர் பிரிந்து ஆண்டுகள் ஒன்றானாலும், அனைவரினதும் மனதிலும் கொலுவீற்றிருக்கும் தலைவராக இடம்பிடித்து விட்டார்.
ஆ.ரமேஸ்
ramesarumukam@gmail.com
(கட்டுரையாளர்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
28 minute ago
38 minute ago