Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
இலங்கையை கொரோனா வைரஸின் பிடியில் சிக்கவைத்த முதலாவது செய்தி 2020 மார்ச் 11ஆம் திகதி, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஊடாக வௌிப்படுத்தி இருந்தது. ‘அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளி, அங்கொடை ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 52 வயதான இவர், சுற்றுலா வழிக்காட்டி எனவும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுற்றுலா வாயிலாக, உலகத்தின் தரிசனங்களை நேரில் பார்த்து, கற்றுக் கொள்ள முடிகிறது.
புதியபுதிய இடங்களைக் காண்பதால், மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மலைகள், நீர்வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.
ஆனால், இவற்றை எல்லாம் கட்டிப்போட்டு, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கொரோனா வைரஸ். உலகளாவிய ரீதியில், கொவிட்-19 மிகவும் தாக்கம் செலுத்திய துறை சுற்றுலாத்துறை ஆகும்.
கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாசார சுற்றுலா எனப் பல வகைகள் சுற்றுலாவில் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை போன்றன உள்ளன.
உலகம் முழுவதும் இன்றைக்கு சுற்றுலா தொழிலில் மட்டும் இரண்டு கோடியே 31 இலட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா மூலமாகவே பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன. இலங்கை உள்பட பல நாடுகளில், உணவுத் தொழில் செழித்து வளர, சுற்றுலா துறையும் ஒரு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சுற்றுலா என்பதை வரைவிலக்கணப்படி நோக்கின், தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்கப் பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில், சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
குறிப்பாக, வசதிபடைத்த மேற்குலக நாட்டினரும் ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும் சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விவரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும் போது, பண்கை்காலம் முதலே தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா செல்வது இருந்துள்ளது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு. விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கையைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலை தூக்கியதும் படைவீரர்கள், வணிகர்கள், சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டுப் பிற இடங்களுக்கு செல்லவேண்டிய தேவை உருவானது.
வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர், உணவுக்காவும் உறையுளுக்காகவும் வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி, அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நவீன காலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹோட்டல், உணவு, பானங்கள் உட்பட இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு, காடுகள், வனாந்திரம், வன ஜீவராசிகள், பறவைகள், கடற்கரைகள், சுண்ணக் கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள் (Crystala) மலைத்தொடர், நீர்வீழ்ச்சி, மாணிக்கம், தோட்டங்கள், பூஞ்சோலைகள், அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துகள் ஆகும்.
சுற்றுலாவுக்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று, நேரம் மற்றையது பணம் என்று பசுபிக் ஏசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால கூறுகின்றார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை; பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்றும் மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால், உயர்மட்ட செல்வத்தை அடையும் அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு, நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்தப் புதிய செல்வந்தர்கள், இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம், ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.
கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில், எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.
நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால், சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும் பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத, கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் கழிவுகள், நீர்மாசமடைதல், சட்டவிரோத குடிசைகளும் விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா, கடற்கரைச் சிறுவர்கள், போதைவஸ்து பாவனையும் கடத்தலும், அந்நியரின் அரைநிர்வாணப்பவனி, கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன.
இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும் சமூக விழிப்புணர்வும் அவசியமாகும்.
இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ரொக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களைச் செலுத்தி, கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகள், முன் பதிவு செய்து கொள்ள முடியும்.
கொவிட்-19 சாவால்களுக்கு மத்தியில், சுற்றுலாத்துறையை தூக்கிநிறுத்த, அரசாங்கம் பல வழிகளில் முயன்று வருகின்றது. சுற்றுலாப் பயணிகளைக் கவர பல சலுகைகளை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. எதிர்காலத்தில் நிலைமை முன்னேற்றமடைய உள்ளூர், வௌயூர் சுற்றுலாப் பயணிகள், மீண்டும் புதுஉத்வேகத்துடன் சுற்றுலா செல்வதற்குத் தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நாமும் சுற்றுலாத் துறை ஈடேற எம்மாலான பங்களிப்புகளை வழங்குவோம்; சுற்றுலாப் பயணிகளை மதிப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago