2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஐ.நா வரைபு: ‘ஆப்பிழுத்த குரங்கு’கள்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன. 

குறிப்பாக, ஈழத்தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ‘புலம்பெயர் புத்திசாலி’களை நினைக்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.  

இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை அரசாங்கம் ஏற்று அனுசரணை வழங்கிய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இம்முறை, இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி, தமிழர்களுக்குத் தீர்வைத் தரும். இதுவே, இப்போதும் முன்சொன்ன புத்திசாலிகளின் வாதமாக இருந்து வருகிறது. 

இதே வாதத்தையே, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, இவர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால், ஜெனீவாவில் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்தும் வந்திருக்கிறார்கள். அணுகுமுறையும் மாறவில்லை; நம்பிக்கையும் போகவில்லை. வேலைத்திட்டமோ, மக்கள் மீதான நியாயமான அக்கறையோ இல்லாதவர்களிடம், எதிர்பார்க்க அதிகம் இல்லைத்தான். 

இந்தப் புத்திசாலிகளை, ஓர் அரங்காடிகளாக வைத்திருக்க, ஐ.நாவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் விரும்புகின்றன. ஏனெனில், இவர்களின் அலப்பறைகள், இலங்கை அரசாங்கத்துக்குக் கொஞ்சம் கடுப்பூட்டும்; மேற்குலகின் மீதான, தமிழ் மக்களின் நம்பிக்கைகள் குறையாமல் இருக்கும். இந்தக் களத்துக்கு வெளியே போராடுவது பற்றி, தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருப்பதை, இந்தப் புத்திசாலிகள் பார்த்துக் கொள்வார்கள். எனவே, இந்தப் புத்திசாலிகளும் தங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சும்விதமாக, சில நடவடிக்கைகள் நடந்தேறும். 

அப்படிப்பட்ட ஒன்றுதான், அண்மையில் வெளியான ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கை. அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கதையாடல்கள் ஏற்படுத்திய நம்பிக்கைகள், ‘ஜெனீவாத் திருவிழா’வைத் தொடக்கி வைக்கப் போதுமானவையாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக, இலங்கை பற்றிய மையக் குழு என்றழைக்கப்படும் பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மொன்டினிக்ரோ, வட மசிடோனியா ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை முன்வைக்க இருக்கின்றன.  

இந்தப் பின்புலத்தில், இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடந்த உரையாடல்கள், எழுதப்பட்ட கட்டுரைகள், அனைத்தையும் ஒருகணம் மீட்டுப் பாருங்கள். இலங்கை தண்டிக்கப்படப்போகிறது; யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்படப் போகின்றன; இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் பாரப்படுத்தப் போகிறார்கள் என்பனவெல்லாம், பிரதான பேசுபொருள்களாக இருந்தன. 

அதேவேளை, இந்த மைய நாடுகள், இலங்கையின் இணக்கமோ ஒப்புதலோ இன்றி, ஒரு தீர்மானத்தை முன்வைக்கப் போகின்றன என்பது மேலதிக நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கை, நீண்டகாலம் நிலைக்கவில்லை. கடந்தவாரம், இலங்கை மீதான தீர்மானத்தின் முதல்வரைவு வெளியானது. அது, இந்த நம்பிக்கைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. இவ்வரைபு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதைக் காட்டப் போதுமானது. 

அவர், “இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஆரம்ப வரைபு, கடும் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது, குறித்த முதல் வரைபு, குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதும் ஒன்றுதானா? தமிழர்கள்தான், அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்; அல்லது, நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இவ்விடத்தில், இலங்கை இராணுவம் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்துகள் மனங்கொள்ளத்தக்கவை. “பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என, நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்புப் படைப்பிரிவுகளுக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை. அதேவேளை, இலங்கைப் படையினரை, சமகால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றுவதில், இலங்கைக்கு உதவுவது குறித்து, அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று கூறியிருப்பது, தமிழருக்கு வேண்டியதும் சர்வதேச சமூகம் வேண்டுவதும் ஒன்றல்ல என்பதை, விளக்கப் போதுமானது. 

இனி, ‘ஆப்பிழுத்த குரங்கு’களின் கதைக்கு வருவோம். இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளது. அதேவேளை, 2015ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதையே கடந்த தேர்தல்களில், தமது வாக்குகளின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்ற வாதத்தையும் முன்வைக்கிறது. 

இந்த வாதங்களை முன்வைத்துப் பேசிய, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து இயங்கத் தயாராக இருப்பதாகவும், அதேவேளை, பிறநாடுகளின் நலன்களுக்காக இலங்கை போன்ற நாடுகள், பலிக்கடாவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். 

இது, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ள நாடுகளுக்கு, மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று புறந்தள்ளியுள்ளது.மறுபுறம், ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது, மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பை, இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது. 

செவ்வாய்க்கிழமை (23) பேரவைக்கு, இலங்கையின் வெளிநாட்டமைச்சர்  ஆற்றிய உரையில், முன் வைக்கப்பட்ட வாதங்களின் மூலம், தாம் பழிவாங்கப்படுகிறோம் என்ற துரும்புச்சீட்டை, இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இப்போது, இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரத் தயாராக உள்ளவர்கள் முன்னுள்ள சவால், கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பானது. இரண்டு வழிகள் அவர்கள் முன்னுள்ளன. 

முதலாவது, ஆணையாளரின் அறிக்கையை மையப்படுத்தி, கடுமையான ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம். ஆனால், அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான ஆதரவைத் திரட்டுவது, மிகக் கடுமையாக இருக்கும். குறிப்பாக, அமெரிக்கா அங்கத்துவம் வகிக்காத நிலையில், தேவையான நாடுகளின் ஆதரவைப் பெறுவது கடினமானது. இவ்வாறு, கடினமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்படுமாயின், அது இலங்கை அரசாங்கத்துக்குப் பெருவெற்றியாக அமைந்து விடும். 

இரண்டாவது வழி, நாடுகளின் ஆதரவைப் பெறத்தக்க மென்மையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், இலங்கையை தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவைக்குப் பொறுப்பாளியாக்குவதுடன், இலங்கையைத் தோற்கடித்த ஓர் இராஜதந்திர வெற்றியை உறுதிப்படுத்துவது.

இதில், தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போகிறோம் என்று அச்சுறுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கம் விட்டுக்கொடுப்புகளைச் செய்யும் என்று எதிர்பார்த்தே, மைய நாடுகள் அதை அறிவித்தன. ஆனால், இலங்கை அரசாங்கம் வேறுவகையில் எதிர்வினையாற்றி உள்ளது.

இலங்கை அரசாங்கமும் தீர்மானத்தைக் கொண்டுவர நினைப்பவர்களும், ‘ஆப்பிழுத்த குரங்கின்’ நிலையிலேயே இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்ளூரில் வீரவசனங்களைப் பேசினாலும், உலக அரங்குகளில் தனிமைப்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. எனவே ‘பாதிக்கப்பட்டவன்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறது. 

மறுபுறம், “தீர்மானத்தைக் கொண்டுவருவோம்” என்று சொல்லியாயிற்று; இனிப் பின்வாங்கவும் முடியாது. கொண்டுவருகிற தீர்மானத்தில் தோற்கவும் முடியாது என்ற நிலையில் மைய நாடுகள் உள்ளன. இப்போது அவர்கள் குறி, வெற்றிபெறக் கூடிய ஒரு தீர்மானம். நிறைவேற்றப்படும் தீர்மானமானது,இப்போது உள்ள முதல் வரைபிலிருந்து, நீர்த்துப்போன ஒன்றாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். கடந்த சில மாதங்களாக, சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கையேந்தி நின்ற தமிழ்த்தேசியவாதத் தலைவர்கள், இப்போது வெளியாகியுள்ள முதல் வரைபை இட்டு, மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

தமிழ் மக்கள், ஜெனீவாவின் பெயரால் ஏமாற்றப்படுவது, இது முதன்முறையன்று. ஆனால், இன்னமும் சர்வதேச சமூகத்திடம் தீர்வு, ஐ.நாவிடம் நீதி என்ற புலம்பல்கள் தொடர்கின்றன. இப்போது, புலம்பெயர் தேசங்களில் ஜெனீவாவை நோக்கிய கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. வருடம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு, ஜெனீவாக் கூட்டத்தொடரில், இலங்கை பேசப்படுகிறது என்றவுடன், நடக்கும் இந்தப் போராட்டங்கள், எந்த வகையிலும் பயன் விளைவிக்க மாட்டா. உண்மையான ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் இவைதான். 

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது நெடியது; தொடர்ச்சியான ஊடாட்டத்தையும் பங்குபற்றலையும் வேண்டுவது. புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசுகளுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதென்பது, விக்கலுக்கு தண்ணீர் குடிப்பதல்ல.  இராஜதந்திரச் செயற்பாட்டின் அடிநாதம்; தொடர்ச்சியான ஊடாட்டம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .