2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

எதிர்வுகூறல்களின் முடிவு

Mayu   / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகள் எவ்வாறு அமையும் என பரவலாகப் பேசப்படுகின்றது. இம்முறை எவரும் எதிர்பார்க்காத வகையில், 
50 சதவீத வாக்குகளை எந்த ஒரு வேட்பாளரும் பெறப்போவதில்லை என கணிசமாகப் பேசப்படுகின்றது. ஆயினும், ஒரு சில தரப்பிலிருந்து அனுரகுமார, அந்த 50 சதவீத வாக்கைப் பெற்றுத் தெளிவான வெற்றியைப் பெறுவார் என எதிர்வு கூறப்படுகிறது. இது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது உறுதிப்படாதிருக்கிறது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மூவருமே 50 சதவீதம் பெற மாட்டார்கள் என்பது சஜித் அணியினருக்கும் அனுரகுமார அணியினருக்கும் ரணில் அணியினருக்கும் புரியும்.

எனவேதான், அவர்கள்  வட, கிழக்கு நோக்கி தங்கள் கரிசனையைச் செலுத்தினார்கள். ஆயினும், தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இவர்களில் பகிரங்கமாக சஜீத்தைத் தவிர வேற எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆயினும், நாமல் ராஜபக்‌ஷ எந்தவித அதிகார பரவலாக்கலுக்கும், குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் சாத்தியமற்றது என்று என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்.
இத்தகைய சூழ்நிலையில், இலங்கை முழுவதும் சிங்கள தேசியக் கட்சிகளின் சார்பில் சஜித், அனுர, ரணில் என மும்முனைப் போட்டிகள் நடக்கின்ற பொழுது, வடக்கு, கிழக்கை அங்கத்துவப்படுத்தி தமிழ் அணியினர் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றனர்.

இந்த சூழல், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் உரிமைகளையும் சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு குறியீடாக இது காட்டப்படுகின்றது. உண்மையில் சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலையில், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருப்பது என்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் மக்களுடைய மனநிலை, வரி சுமைகள் இவற்றுக்கு மேலாக உரிமையா? சலுகையா? என்ற கோஷத்தில் தமிழ் 
தரப்பு உரிமை என்ற விடயத்தைப்  பேசி இருக்கின்றது.

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை. மேலும், ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் வேட்பாளர் பொருத்தமான ஒருவராக அமையவில்லை என்பது தமிழ் தரப்பில் உள்ள மிகப்பெரிய பலவீனமாகும். இரண்டாவது விடயம், தமிழ் தரப்பு தங்கள் பிரச்சினைகளை அரசியல்வாதிகளிடம் பேசுவதைத் தவிர்த்து, இந்தத் தேர்தல் சந்தர்ப்பத்திலாவது சிங்கள மக்களுக்கு சிங்கள பிரதேசங்களுக்குச் சென்று தெளிவுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. ஏனெனில், ஜனாதிபதி என்று சொல்பவர், இலங்கை தீவு முழுவதற்கும் சென்று தங்கள் கருத்தைத் தெரிவிக்க உரிமை உண்டு. இதனைச் சிங்களத் தரப்பு செய்திருக்கின்றது. தமிழ் தரப்பு அதைச் செய்யவில்லை.

சிங்கள மக்களுக்குத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தெளிவுபடுத்தக்கூடிய 
சூழல் இச்சந்தர்ப்பத்தில் கிடைத்த பொழுதும், சிங்களப் பகுதிகளில் எந்த ஒரு பிரசார தெளிவுபடுத்தல் கூட்டத்தினையும், ஒன்றுகூடல்களையோ கூட தமிழ் தரப்பு செய்யவில்லை.
எனவே, தமிழர்களுடைய பிரச்சினை தொடர்பாகச் சிங்கள அரசியல்வாதிகள் முன்வைக்கின்ற கருத்துக்களையே அறிந்து கொண்ட சிங்கள மக்கள், உண்மையில் தமிழர் தரப்பு பிரச்சினையை அறிவதற்கான வாய்ப்பை தமிழர் தரப்பு செய்து கொடுக்கவில்லை. இது ஒரு வரலாற்றுத் தவறு.

இதே போன்று, முஸ்லிம் பகுதிகளிலும் தமிழ் தரப்பு செய்திருக்க வேண்டும். வெறுமனே வாக்குக்காக அல்லாமல் கருத்தியல் தெளிவுக்காக இதைச் செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் வேட்பாளர் அணிக்கு இருந்தது. அதை அவர்கள் செய்யாது தவறவிட்டிருக்கிறார்கள்.

சிங்கள தரப்பினர் தமிழ் பிரதேசங்களுக்கு வந்து பேசுகின்றது பிரசாரக் கூட்டங்களை நடத்துகின்றனர் என்ற இனவாத கருத்தியலையே வெளிப்படுத்தியிருந்தனர்.

தவிர சிங்கள மக்கள் இலங்கையை முழு நாடாகக் கருதி, இந்த நாட்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலை மதிக்கின்ற பொழுது, தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவர்கள் உரிமைக்காகப் பேசுதல் என்பதில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் தங்கள் பிரச்சினையைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருந்தது.

இந்த வகையில், தமிழ்த் தேசியத் தரப்பு தங்களுடைய எதிர்கால திட்டம் தொடர்பாக சிங்கள மக்களுக்குச் சொன்ன செய்தி என்ன? முஸ்லிம் மக்களுக்குச் சொன்ன செய்தி என்ன? என்பவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின் குறியீடாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது மாத்திரம் நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் குறி காட்டியாக அமைகின்ற விடயம்  சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்துகின்ற விடயமாக அமையுமா என்பதே கேள்வி, கடந்த காலங்களில் இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷ, சரத் பொன்சேகா போன்றவர்களைத் தமிழ் மக்கள் ஆதரிக்கும்படி தமிழ் அரசியல் கட்சிகள் கூறி, அதன்படி, வட,கிழக்கில் பெரும்பான்மையான தமது வாக்குகளை சரத் பொன்சேகா அவர்களுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் வழங்கியிருந்தார்.

இவர்களாலேயே தான் தமிழ் மக்கள் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டார்கள். அவ்வாறான நேரத்தில், இவர்களை ஆதரித்த தமிழ் கட்சிகள் இன்று அவர்களால் எந்த பயனும் இல்லை.

இந்த சிங்கள தேசியவாதத்தால் எந்த உரிமையும் வழங்கப்படப் போவதில்லை என்று சொல்லி தமிழ் வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் ஆதரவளிக்காத நிலை உருவானால், இதன் மறுதலை சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக முடிவுகள் அமையும்.

ஏனெனில், ஒடுக்கு முறையைச் செய்த கடந்த இரண்டு தலைவர்களையும் ஆதரித்தவர்கள் தங்களுடைய பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கின்ற தமிழ் தலைவர் ஒருவரை ஆதரிக்காமல் இருப்பதன் மூலம் நிரூபணம் ஆகும். 

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இதன் காரணமாக அதிகரித்த சுமை, பொருளாதார நலிவு, ஏற்றுமதி இன்மை, உற்பத்தியின்மை இவ்வாறான பல்வேறு காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீட்க எந்த ஒரு கட்சியின் தலைவர்களும் முன்வரவில்லை. நாடு நடுத்தெருவிலிருந்தது.

அப்பொழுது தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றார். அவருடைய திறன்கள் காரணமாக இந்த நாட்டை மீட்டெடுத்தார். உற்பத்தியும் ஏற்றுமதியும் இல்லாத சூழ்நிலையில், வரிகளை அதிகரித்து ஐ.எம்.எவ். இடம் கடனைப் பெற்று இந்த பொருளாதார சுமையிலிருந்து கடன் காலத்தை பின் தள்ளி, இந்த நாட்டை மீட்டெடுத்திருக்கின்றார்.

மீட்டெடுத்த சூழலில், வரிச் சுமையைத் தாங்க முடியாமல் குறிப்பாக அரச உத்தியோகத்தர்களும் தனியார்த் துறையினரும் பாமர மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஒரு நிலையில், இரண்டாவது கட்ட உதவியில் நாடு ஒரு மாற்றத்தைக் கண்டு வந்த 
சூழலில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.

இப்பொழுது பொறுப்புகளை ஏற்கத் தயங்கிய தலைவர்களெல்லாம் தேர்தல் குறித்து ரணிலுக்கு எதிரான விமர்சனங்களைச் சொல்கின்றனர். அதேபோல, திருடர் கூட்டத்துக்குப் பின்னால் ரணில் இருக்கின்றார் என்று நிராகரிக்கப் போகின்ற மக்களும் மாற்றம் ஒன்று தேவை என்று விரும்பி அனுரவை ஆதரிக்கின்றவர்களும் சஜித்தை ஆதரிக்கின்றவர்களும் இருக்கின்றனர். உண்மையில் மாற்றம் ஒன்று காண இதுதான் பொருத்தமான காலம் என்றாலும், ஏற்படப்போகும் மாற்றம் கொடுக்கப்போகின்ற வலியைத் தாங்குவதற்கு நாம் தயாராகித்தானாக வேண்டும்.

ஏனெனில், நாட்டில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டால், அதற்கு முனைந்தால், ஏற்கெனவே அபாயத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கையில், மிக மோசமான அபாய கட்டத்துக்குச் செல்லும். அந்த நிதர்சனம் தெரிய வேண்டும். 

இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் கிழித்து எறிய முடியாதவை. எனவே, மாற்றம் ஒன்றைக் கேட்டு மாற்றத்தை ஏற்படுத்தி மாற்றம் ஒன்றைச் செய்ய முடியாத சூழலில், நாடு மீண்டும் ஒரு நெருக்கிச் சந்திக்கும் என்பதே நிதர்சனம்.

இன்றைய தேர்தல் சூழ்நிலை பங்குச்சந்தையில் தளம்பலை இப்போதை ஆரம்பித்து விட்டது. இலங்கையின் அரசியல் தளம்பல் காரணமாகவே இந்தநிலை.

பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டால், அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தல் உட்பட இரண்டு தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதற்கு நிதியீட்டம் தேவை. அவ்வாறான நிலை மீண்டும் கோட்டா யுகத்துக்கு கொண்டுசெல்லும். இதற்கு எதிர்வு கூறல்களை விடவும் தீர்மானகரமான  மக்களின் தீர்ப்பே தேவையானது.

16.09.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X