Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 02 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பண்டா - செல்வா உடன்படிக்கை ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில், அதற்கெதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தன முன்னெடுத்த கண்டி யாத்திரையானது பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு மிக நெருக்கமான அரசியல்வாதியான எஸ்.டி.பண்டாரநாயக்கவின் தலைமையில் பொதுமக்களின் பேராதரவுடன் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு சிங்கள முற்போக்கு சக்திகள் இவ்வுடன்படிக்கையைத் தக்கவைக்க தம்மாலானதைச் செய்த வண்ணமிருந்தனர். மறுபுறம் உடன்படிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கத் தமிழ் தரப்பினரின் முழுமையான ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை.
தமிழ் மக்களின் மொழியுரிமைக்கும் பிரதேச உரிமைக்குமான சில குறைந்தபட்ச உத்தரவாதங்களை நிலை நிறுத்தத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. சிங்கள பேரினவாதிகள் தென்னிலங்கையில் பண்டா-செல்வா உடன்படிக்கையை இல்லாதொழிக்க முயன்ற வேளையில், வடக்கில் தமிழ் காங்கிரஸ் அந்த உடன்படிக்கையைத் தீவிரமாக எதிர்த்தது.
தமிழரசுக் கட்சித் தலைமை ஓரளவு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய அந்த வேளையில், பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறித்த பஸ்களை அனுப்ப முடிவெடுத்ததால், வடக்கில் ‘ஸ்ரீ’ என்ற எழுத்துப் பொறித்த அனைத்து இலக்கத் தகடுகளிலும் அச்சிங்கள எழுத்தின் இடத்தில் தமிழ் எழுத்தைப் பொறிக்கும் போராட்டமொன்று அக்கட்சிக்குள் ஒரு கட்சியாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு குழுவால் எடுக்கப்பட்டு 1958 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பயனாக ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதமாகத் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டது. இந்தச் சிறுபிள்ளைத்தனத்திற்கு நாடும் தமிழரும் கொடுத்த விலை பெரிது.
இக்காலப்பகுதியில் பண்டாரநாயக்க மீது செலுத்தப்பட்ட பேரினவாத அழுத்தங்கள் வலுத்தன. பண்டாரநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டுவரப் பிரசாரம் செய்த பிக்குமாரின் நெருக்குவாரத்தின் முன் பணிந்துபோன பண்டாரநாயக்க பண்டா-செல்வா உடன்படிக்கையைச் செல்லுபடியற்றதாக்குவதாக அறிவித்தார். இது சுதந்திர இலங்கையில் பிக்குமாரின் முதலாவது அரசியல் தலையீடு என்று கொள்ளத்தக்களவு முக்கியமானது.
இதைத் தொடர்ந்தே தேசிய அரசியலில் பிக்குகளின் தலையீடும் செல்வாக்கும் அதிகரிக்கத் தொடங்கின. ஆட்சியிலும் நிர்வாகத்திலும் கொள்கை முடிவுகளிலும் இறுதியான தாக்கத்தைச் செலுத்த முடியும் என்று பிக்குகள் நம்பத் தொடங்கியது பண்டா-செல்வா உடன்படிக்கையை வெற்றிகரமாக வறிதாக்கியதன் பின்பே, இது இலங்கை அரசியல் எதிர்காலத்திற்குத் தவறான ஒரு முன்னுதாரணத்தைக் கொடுத்தது.
இந்த உடன்படிக்கையின் முடிவில் தாக்கம் செலுத்திய காரணிகளில் முதன்மையானது பண்டாரநாயக்கவின் உறுதியின்மை. அவரது அரசாங்கத்திற்குள் இவ்வுடன்படிக்கைக்கு குறிப்பிடத்தக்களவு செல்வாக்கு இருந்தது. இதை நடைமுறைப்படுத்தி இதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க பண்டாரநாயக்கவின் மக்கள் ஐக்கிய முன்னணியில் ஜனநாயக, முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் தயாராகவே இருந்தார்.
ஆனால், நாட்டின் எதிர்காலத்தை விட தனது அரசியல் அதிகாரம் மீது பண்டாரநாயக்கவின் அக்கறை இருந்தது. மறுபுறத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற நடத்தையும் பங்களித்தது எனலாம்.
CEYLON என்ற பெயரில் இருந்த ஆங்கில எழுத்துகளில் O தவிர்ந்த ஏனைய இரண்டு எழுத்துக்களைக் கொண்டே வாகனங்களுக்கு இலக்கமிடும் முறை நடைமுறையில் இருந்தது. இவ்வகையில் CE எழுத்துக்கள் முடிவுக்கு வந்த நிலையில், அரசாங்கம் ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலான ஸ்ரீலங்காவில் உள்ள ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை வாகன இலக்கத் தகடுகளில் பயன்படுத்த முடிவு செய்தது. இங்கு இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்.
முதலாவது ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையைத் தொடர்ந்திருக்க முடியும், ஏனெனில் இன்னும் சில ஆண்டுகளுக்கு மிகுதி ஆங்கில இலக்கக் கலவைகளுடன் வாகனங்களுக்கு இலக்கங்களை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அதற்கு அப்பால் என்ன செய்வது என்பது குறித்து ஆழமாக யோசிக்கவில்லை. இரண்டாவது தனிச்சிங்களச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில காலத்திலேயே ஸ்ரீ எழுத்தைப் பாவிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது, இயல்பான கோபாவாசத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியது.
இதற்கான எதிர்ப்பை வெகுஜனத் தளத்தில் முன்னெடுப்பதற்கான பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால், உணர்வுபூர்வமான மனநிலையில் சரியான முடிவுகள் எட்டப்படுதல் மிகக்குறைவு. அதேபோலவே இவ்விடயத்திலும் நடந்தது. தமிழரசுக் கட்சி இலக்கத்தகடுகளில் ஸ்ரீ அறிமுகம் செய்யப்பட்டமையானது தமிழ்மொழியை ஒழிக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி என்று தவறுதலாக விளக்கியது. உணர்வுப்பூர்வமான தமிழ் மக்கள் ஆதரவுக்கு இது உதவியதே தவிர இது மக்களின் மொழி உரிமைக்கான போராட்டத்தின் பகுதியாகவில்லை.
மறுபுறம் தமிழர்களைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் பணியையே அரசாங்கம் முன்னெடுத்தது.
இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைப்பதன் CL அரசியல் இலாபம் காண்பது தேசியவாதிகளின் நோக்காக இருந்தது. மறுபுறம் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை வெறுமனே ஒரு இனவாதக் கண்ணோட்டத்திலேயே தமிழரசுக் கட்சி நடத்தியது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் கிளம்பத் தொடங்கின. இது குறித்து தமிழரசுக் கட்சி அக்கறை கொள்ளவில்லை. ஆனால், இவ்வகையான ஒரு எதிர்பபுணர்வு தோற்றம் பெற்றமைக்கான பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்பது மறுக்கப்பட முடியாதது.
ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழரசுக் கட்சி நடத்திய விதம் இங்குக் கவனிக்கத்தக்கது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியாகச் செயற்படத் தவறிய முக்கிய சந்தர்ப்பம் இது. சிறுபிள்ளைத்தனமான அரசியல் நடத்தைகளின் CL தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை அஸ்தமிக்க வைக்கும் எண்ணற்ற செயல்களைத் தமிழரசுக் கட்சி செய்துள்ளது.
அதில் முன்னோடியான நிகழ்வுகளில் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் தலையாயது. ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவது பற்றி தமிழரசுக் கட்சியின் செயற்குழுவோ அல்லது பாராளுமன்ற குழுவோ முடிவு செய்யவில்லை. இதை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று யாருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் சில தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் எடுத்த முடிவையொட்டி யாழ்ப்பாணத்தில் இலக்கத் தகடுகளில் இருந்த ஸ்ரீ எழுத்துக்குப் பதிலாகத் தமிழின் ஸ்ரீ எழுத்து (உண்மையில் வடமொழி) பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தவர் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்திற்கு வெளியே இப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் சிங்கள ஸ்ரீ எழுத்து இருந்த இடத்தில் அதற்குப் பதிலாகத் தமிழில் ஸ்ரீ எழுத்து பொறிக்கப்பட்டது. மன்னாரில் சிங்கள ஸ்ரீ எழுத்துக்குப் பக்கத்தில் தமிழ் ஸ்ரீ எழுத்து சேர்க்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் மும்மொழிகளிலும் ஸ்ரீ என்ற எழுத்து பொறிக்கப்பட்டது. கிழக்கில் இதற்குப் போதிய ஆதரவு இருக்கவில்லை. மன்னாரிலும் இப்போராட்டம் வெற்றி பெறவில்லை. சாதாரண மக்களிடம் இருந்தவை மிஞ்சிப் போனால் சைக்கிள்களே.
ரிக்சாக்களும், மாட்டுவண்டிகளும் இலக்கத் தகடுகள் இல்லாமலே ஓடியதால் அவையும் போராட்ட இயக்கத்தில் இறங்க முடியவில்லை. எனவே, போராட்டம், தொடங்கியதிலும் வேகமாக முடிவுக்கு வந்தது. அரசாங்கத்தின் சட்ட ரீதியான பொறுப்பை நிறைவேற்றும் தேவை கருதிப் பொலிஸார் வாகன இலக்கத் தகடுகளைச் சேதமாக்கிய குற்றத்திற்காகப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் கைதாகி விடுதலையாகினர்.
சிங்கள ஸ்ரீ இலக்கம் பொறித்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்பதும் தமிழரசுக் கட்சியின் உணர்வுபூர்வமான பிரசாரமாக இருந்தது. இதனால் நீண்டகாலத்திற்கு புதிய வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. குறிப்பாக புதிய அரச பஸ்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படவில்லை. பழைய ஆங்கில எழுத்துப் பதித்த பஸ்களிலேயே சாதாரண மக்கள் நீண்டகாலம் பயணம் செய்ய நேர்ந்தது.
படுதோல்வியில் முடிந்த ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஒரு சுயவிமர்சனத்தைத் தமிழரசுக் கட்சி மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து ஏற்படப் போகும் மிக மோசமான தோல்விகளுக்கு இது கட்டியங் கூறியது. ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஒரு பயனற்ற அல்லது தவறான போராட்டம் என்பதை இன்றுவரை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. அது போக, அது தோல்வியடைந்து விட்டது என்ற உண்மையை ஏற்கவும் அவர்களுக்கு நீண்ட காலம் எடுத்தது.
தென்னிலங்கையில் இது ஏற்படுத்திய உணர்வு பற்றி தமிழரசுக் கட்சி அக்கறை கொள்ளவில்லை. தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களது தொழிலையும், சொத்துக்களையும் சிதைக்கவும், பறிக்கவும் காத்திருந்த ஒரு சிங்கள இனவாத முதலாளித்துவக் கும்பலுக்கும் ஸ்ரீ எதிர்ப்பு போன்ற செயல்கள் வசதி செய்தன. தென்னிலங்கையில் பெயர்ப் பலகையின் தமிழைத் தார் பூசி அழிக்கும் இயக்கத்தின் தொடர்ச்சியாகவே தமிழர் மீது 1958இல் வன்முறை தொடங்கியது.
2023.11.24
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago