2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கின்றனவா?

Freelancer   / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லம் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அவர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது அதற்காக மாதாந்தம் 46 இலட்சம் ரூபா வாடகை செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதே அதற்குக் காரணமாகும்.

ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளை அரசாங்கம் பராமரிப்பதில்லை என்பதே ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். அது நாளை அக்கட்சியின் தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் அமுலாகும் என்றே அக்கட்சியினர் கூறுகின்றனர்.
ஆயினும், இப்போதைக்கு அக்கொள்கையை அவ்வாறே அமுலாக்க அரசாங்கம் முன்வரவில்லை போலும். எனவே, தற்போதைய சட்டப்படி ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பொருத்தமான ஒரு வீடு அல்லது அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான ஒரு தொகை வீட்டு வாடகையாக வழங்குவதாகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு- விஜயராம வீதியில் தான் இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. அவர் பொதுப் பணத்தில் 47 கோடி ரூபாய் செலவில் அருகிலிருந்த மேலும் இரண்டு அரச விடுதிகளையும் அதனுடன் இணைத்துக் கொண்டுள்ளார். எனவே, தற்போது அவ்வீட்டின் பரப்பளவு 30,500 சதுர அடியாகும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
ஒரு ஏக்கர் அரச காணியில் அமைந்துள்ள இந்த வீட்டின் பெறுமதி மட்டும் 350 கோடி ரூபாய் என மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. காணி இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அதனை வாடகைக்கு விடுவதாக இருந்தால் மாத வாடகை 
46 இலட்சம் ரூபாவாக வேண்டும் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
இந்த விடயத்தில் மக்கள் எடுக்கும் நிலைப்பாடு தமது உரிமையைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவின் அளவை காட்டுகிறது. ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்குச் சொந்த வீடு இருந்தாலும், அவருக்கு அரசாங்கம் வீடொன்றை வழங்க வேண்டுமா? ஆம் என்றால், அதன் பெறுமதி எவ்வளவாக இருக்க வேண்டும்? அதன் பெறுமதி பல நூறு கோடி ரூபாவாக இருந்தாலும், அவர் மேலும், ஓரிரு வீடுகளை அவ்வீட்டோடு இணைத்துக்கொள்வதை அனுமதிக்க முடியுமா? இவை அனைத்துக்கும் ஆம் என்று பதிலளிப்பதாயின், அது எமது அடிமை மனப்பான்மையையேகாட்டுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வென்றவர் என்றும் அவரது நடவடிக்கையினாலேயே இன்று நாம் அச்சமின்றி வீதியில் இறங்கிச் செல்கிறோம் என்றும், எனவே அவருக்கு அவ்வாறானதோர் வீட்டை வழங்குவதில் தவறில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது என்ன சட்டம்? என்ன நீதி?
மஹிந்தவின் காலத்தில் தான் போர் முடிவடைந்தது என்பது உண்மை தான். ஆனால், அந்த போர் வெற்றிக்காக மஹிந்த எடுத்த ஒரு முடிவையாவது எவராலும் கூற முடியுமா? போர் வெற்றிக்கான சகல நடவடிக்கைகளையும் சகல உத்திகளையும் போர் தந்திரங்களையும் வகுத்தவர், அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே.
அத்தோடு, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கடலில் இல்லாமல் தரையில் மட்டும் அமுலாகும் படியே தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் கடற்படையினர் புலிகளின் 10 ஆயுதக் கப்பல்களை அழித்து விட்டனர். எனவே, 2007ஆம் முதல் வெளிநாடுகளிலிருந்து ஒரு பனடோல் வில்லையாவது கொண்டு வர முடியாது போய்விட்டது என்று அக்காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்களை  வழங்கிய குமரன் பத்மநாதன் (கே.பி) டெய்லி மிரர் பத்திரியுடன் நடத்திய நேர்காணல் 
ஒன்றில் கூறியிருந்தார்.

எனவே, போர் வெற்றி ஒரு பெருமை என்றால், அதற்கு மஹிந்தவை விட பொன்சேகாவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உரிமை கூற முடியும். போர் வெற்றியின் மொத்தப் பெருமையும் மஹிந்தவுக்கே உரியது என்று வைத்துக்கொண்டாலும், அதற்காக பொதுப் பணத்தில் அவரை பராமரிக்க வேண்டுமா? அது சட்டமா? அது பதவியில் யார் இருந்தாலும் அவரது பொறுப்பாகும்.
போர் வெற்றிக்காக பொதுப் பணத்தில் சன்மானம் வழங்க வேண்டும் என்றால், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? மஹிந்த, கோட்டாபய, பசில் ஆகிய மூன்று சகோதரர்கள் உட்பட சிலரே அதற்குப் பொறுப்பாளர்கள் என்று உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, அரசியல்வாதிகளை பொதுப் பணத்தில் பராமரிக்க வேண்டும் என்பது ஊழலுக்கே இட்டுச்செல்கிறது.
இப்போது மஹிந்தவுக்கு அந்த வீட்டை வழங்க வேண்டும் என்று ஏனைய எதிர்க்கட்சிகளும் கூறத் தொடங்கியுள்ளன. எவ்வாறாயினும்,அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். ஆனால், அதன் மூலம் அவர்கள் ஊழல் பேர்வழிகளைப் பாதுகாக்கிறார்கள்.

மஹிந்தவின் இரண்டாவது மகன் யோஷித்த, மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இரத்மலானையில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணியொன்றை விலைக்கு வாங்கியிருந்தார். 2015ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த போது, பொலிஸார் அவருக்கு அந்த காணியை விலைக்கு வாங்கப் பணம் எங்கிருந்து கிடைத்தது என்று விசாரணை ஆரம்பித்தது. தமது பாட்டியே தமக்குப் பணம் வழங்கினார் என்று அவர் பொலிஸாரிடம் கூறினார். பொலிஸார் பாட்டியிடம் பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்த போது, தெரியாத ஒரு நபர் தமக்கு மாணிக்கக்கல் பொதியொன்றை வழங்கியதாக அவர் கூறியிருந்தார்.
இப்போது, அந்த காணிக்கு உரிமையாளர் இல்லாத நிலையில், உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போன்றதோர் சம்பவம் மல்வானையிலும் இடம்பெற்றது. 
பசில் ராஜபக்‌ஷ மல்வானையில் 
16 ஏக்கர் காணியில் பெரியதோர் வீட்டைக் கட்டினார். அதற்குப் பணம் எங்கிருந்த வந்தது என்று நல்லாட்சி காலத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பசில், அந்த வீட்டுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி விட்டார்.

கதிர்காமத்திலும் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியொன்றில் அவ்வாறானதோர் வீடு கைவிடப்பட்டுள்ளது. அதற்கான மின்சாரம் ஜீ.ராஜபக்‌ஷ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  
கோட்டாபயவின் காலத்திலும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும் இவை தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த போது பொலிஸார் மீண்டும் அந்த வழக்குகளை விசாரணையை ஆரம்பித்தனர். இப்போது, பலர் இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்றனர். விந்தை என்னவென்றால், இந்த வழக்குகளை ஆரம்பித்த நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களும் அவ்வாறு கூறுவதேயாகும்.
ஊழலைப் பற்றிப் பேசுவதை விட அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பலர் வாதிடுகின்றர். அரசாங்கம் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றைத் தயாரித்துக் கடமையாற்றுவதாக இருந்தால் இந்த வாதம் சரியானதேயாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செய்ய முடியாது.

ஊழலை முறியடிப்பதற்கு பொலிஸாரும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும் இருக்கின்றன. வாழ்க்கைச் செலவைக் குறைக்க வர்த்தக அமைச்சு நிதி அமைச்சு போன்ற நிறுவனங்கள் இருக்கிறன. நிதி அமைச்சு வாழ்க்கை செலவு பிரச்சினை தீர்த்ததன் பின்னரே பொலிஸார் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், முன்னுரிமை பட்டியல் தயாரிக்க முடியாது. அந்தந்த நிறுவனம் தத்தமது பணியைச் செய்ய வேண்டும். அப்போது சிலவேலை பொது மக்களுக்கு முக்கியமானது ஆரம்பத்தில் நடைபெறாதிருக்கலாம்.
அரகலய என்று பொதுவாக அழைக்கப்படும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுமக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் போது, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் கூடாரமிட்டு இருந்த ஆர்ப்பாட்டமாகக் காரர்களைத் தாக்கி விரட்டினர். இதன் காரணமாக நாடெங்கிலும் அப்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. பல எம்.பிக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதை அனுமதிக்க முடியாது தான். ஆயினும், இந்த எம்பிக்கள் இதையும் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தமது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தித் தாக்கப்பட்ட தமது வீடுகளுக்காகப் பெருமளவில் நட்டஈடு பெற்றுக்கொண்டுள்ளனர். சில வீடுகளுக்கு 9 கோடி ரூபாவுக்கு மேல் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நட்டஈடு பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஒருவர் அவ்வாறு 9 கோடி ரூபாய் நட்டஈடு பெற்றிருந்தால், அதன் அர்த்தம் அவரது வீட்டின் பெறுமதி 9 கோடி ரூபாவுக்கு அதிகமாகும் என்பதாகும். அதனை அவர்கள் தமது சொத்து விவர அறிக்கையில் தெரித்துள்ளார்களா? 
என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.
இந்த நட்டஈடு பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டதையும் சில எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. அதாவது, ஊழலை வெளியிடக் கூடாது என்றே அவர்கள் கூறுகின்றனர். இது ஊழல் பேர்வழிகளைப் பாதுகாக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தப் போக்கை எவ்வாறு விவரிக்கலாம்? அரசாங்கத்தை விமர்சிக்க எத்தனையோ விடயங்கள் இருக்க, அரசாங்கம் செய்யும் அத்தனையும் எதிர்ப்பதன் மூலம் மக்களை வென்றெடுக்க முடியுமா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓரிரு மாதங்களில் வரப்போரும் உள்ளுராடசிமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை போலும்.

எம்.எஸ்.எம்.ஐயூப்

11.02.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .