Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனகன் முத்துக்குமார்
ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் இடையே கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 13ஆம் திகதி அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுடனான உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள அதே நேரத்தில், மேற்குக் கரையில் 30 சதவீதத்தை இணைப்பதற்கான தனது திட்டத்தை நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், எகிப்து, ஜோர்தானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலை ஏற்றுக்கொண்ட மூன்றாவது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது. இந்த சமீபத்திய வளர்ச்சி மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது ஒரு புறமிருக்க, ஐக்கிய அரபு அமீரகமானது இஸ்ரேலுடனான தனது உறவை ஏன் இயல்பாக்கியது, இந்த ஒப்பந்தத்தின் பின்னராக, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, ஈரானுக்கான எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்கிறது இப்பத்தி.
பலஸ்தீன காரணத்தைத் தவிர்த்து, இவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பின் எழுச்சி என்பது மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில் இரண்டு நாடுகளும் ஈரானை பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்குரிய காரணியாக கருதுகின்றன. ஈரானின் இராணுவத் திறனானது ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலோபாய ஆர்வத்துக்கு கடுமையான எதிர்ப்பாக தொடர்ச்சியாக இருந்துவரும் இந்நிலையில், இவ்வொப்பந்தம், ஈரானைத் தாண்டி, வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பில் இரண்டு நாடுகளும் இணங்கி செயல்பட வழிவகுத்துள்ளது.
வரலாற்று ரீதியாக, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளும் எந்தவொரு போரிலும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் விரோதப்போக்கானவை என்று கூட கோடிட்டுக் காட்ட முடியாது. இஸ்ரேல் 2015ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் ஒரு இராஜதந்திர அலுவலகத்தை திறந்திருந்தது. மறுபக்கத்தில் அந்நாட்டின் டுபாய் உலகக் கண்காட்சி 2020 இல் பங்கேற்க இஸ்ரேல் அழைக்கப்படும் இருந்தது. இந்த நிகழ்ச்சிக் குறிப்புகள் அனைத்துமே ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் சமாதான இயல்பாக்கம் நோக்கி நகர்ந்திருப்பது ஆனது இரு நாடுகளினதும் வெளிநாட்டு விவகார அட்டவணையில் தொடர்ச்சியாகவே இருந்துள்ளது என்பதை காட்டுகின்றது.
பலஸ்தீனத்தைப் பொருத்தவரை, ஐக்கிய அரபு அமீரகம்-பலஸ்தீன உறவுகள் ஏற்கெனவே சீரற்ற மந்த நிலையை அடைந்துவிட்டதால், ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கெனவே பலஸ்தீனியத்தை மத்திய கிழக்கு சமாதான உடன்படிக்கைக்கான ஒரு காரணமாக நிலை நிறுத்துவதை விட்டுவிட்டது. றமல்லாவைத் தளமாகக் கொண்ட பலஸ்தீனிய அரசாங்கத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் எந்த பணத்தையும் அனுப்பவில்லை, ஆனால் கொவிட் -19 க்கு இடையில் பலஸ்தீனத்துக்கு மருத்துவப் பொருட்களை அனுப்ப முயன்றபோது, பொருட்கள் முதலில் இஸ்ரேலின் டெல் அவிவில் தரையிறக்கப்பட்டன என காரணம் காட்டி அப்பொருட்களை பலஸ்தீனம் நிராகரித்துவிட்டது.
மேலும், ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அங்கிகரிக்கப்பட்டபோது, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என்பது இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக உறவுகளை இயல்பாக்க ஒரு காரணமாயிற்று. மேலும், 600,000 இஸ்ரேலியர்கள் மேற்குக் கரையில் ஏற்கெனவே குடியேறியுள்ளமை - மேற்குக் கரை ஒரு அரசியல் பிரச்சனை என விவாதிக்கவேண்டிய தேவையையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொடுக்கவில்லை.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கான ஒரு பெரிய வெளிவிவகார வெற்றியின் முதல்படி - அதாவது – மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை சீராக்க முயலும் செயல்பாட்டுக்கு கிடைத்த தொடர்ச்சியான வெற்றியாகும். மேலும், இந்த அமைதி ஒப்பந்தம் எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெறாத நேரத்தில் இஸ்ரேலுக்கு நேரடியாக கிடைத்த ஒரு இலாபகரமான வெளிவிவகார நகர்வாகும். கடந்த காலத்தில், எகிப்துடனான உறவைப் பொறுத்தவரை, 1979 ஆம் ஆண்டில் இஸ்ரேல் காம்ப் டேவிட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது உறவை வலுப்படைசெய்யவேண்டிய நிலையில் இருந்திருந்தது. 199ஆம் ஆண்டில் ஜோர்தானுடனான உறவை வலுப்பெறுகையில், இஸ்ரேல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் இப்போது, எந்த ஒரு மோதலும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட இந்த சமாதான ஒப்பந்தம் ஆனது, மத்தியகிழக்கில் பல பிராந்திய வல்லரசுகள் இஸ்ரேலுடன் நெருக்கமாக செயல்பட வழிவகுக்கும் ஒன்றாக அமையப்போகிறது.
மறுபுறத்தில், இந்த ஒப்பந்தம் ஈரானிய நலன், ஈரானின் பிராந்திய ஆதிக்கத்துக்கு பாதகமானது என்ற போதிலும், இந்த ஒப்பந்தம் ஈரானை நோக்கியதாக இல்லஇ என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறுகின்றது. இந்த ஒப்பந்தம் பிராந்திய சமன்பாடுகளில் ஒரு விளையாட்டு மாற்றியாக செயல்படும், ஏனெனில் இப்பகுதி ஒரு புவிசார் அரசியல் இடமாகும். இதன் காரணமாகவே, ஈரானிய உயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி, இந்தச் செயலை ஒரு “துரோகச் செயல்” என்று கூறியிருந்ததுடன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வெளியே பாரிய வெகுஜன எதிர்ப்புப்போராட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அரேபிய வளைகுடாவில், ஈரான் - ஐக்கிய அரபு அமீரக உறவுகள், பி 5 + 1 இலிருந்து ஐக்கிய அமெரிக்கா விலகிய பின்னர் - குறிப்பாக, ஈரானுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கை மட்டுப்படுத்த பின்னராக ஒரு மந்தகதிக்கு சென்றது எனலாம். இது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் நலன்களுடன் அதன் ஆர்வத்தை இணைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், ஈரானை பொறுத்தவரை, அதன் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பத்தர் இதுபற்றி கூறுகையில், "பாரசீக வளைகுடாவில் ஈரானின் ஆர்வம் சேதமடைந்தால், ஐக்கிய அரபு அமீரகத்துடனான எங்கள் உறவு மாறும். இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தத்தின் அடிப்படையிலான எந்தவொரு செயலும் ஈரானிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும் ஆயின் அது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஈரானின் மோசமான நடவடிக்கைகளை அதிகரிக்க வழிவகுக்கும்" என்றும் கூறியிருந்தார்.
இதனடிப்படையிலேயே, குறித்த இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் இராணுவ மற்றும் பாதுகாப்பு களங்களில் ஒத்துழைப்பை ஆராயும் விடயம் ஆழ்ந்து பார்க்கப்படவேண்டியதாகும். அண்மையில் இஸ்ரேஸில் உளவுத்துறையான மொஸாட்டின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்துள்ளமை அதன் பின்னராக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறைவிரிவடைதல் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமையும். ஈரானின் ஏவுகணை ஆயுதங்களை எதிர்கொள்ளக்கூடிய அயன் டோம் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலிடம் இருந்து பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வமாக இருக்கின்றது. மேலும், எஃப் -35 - முன்னேறிய போர் விமானத்தை கையகப்படுத்தும் மத்திய கிழக்கில் இரண்டாவது நாடாக மாற ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ச்சியாகவே விரும்புவதுடன், குறித்த இந்த ஒப்பந்தம் அதனை அடைவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு பிராந்திய முறுகலுக்கான அடிப்படை கோட்டை ஆழமாகவே கீறியிருக்கிறது இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago